இதே தேதி... முக்கியச் செய்தி: சுதந்திரத்துக்கு முந்தைய இந்திய அரசு!

இதே தேதி... முக்கியச் செய்தி: சுதந்திரத்துக்கு முந்தைய இந்திய அரசு!

நவீன உலக வரலாற்றில் இந்திய சுதந்திரப் போராட்டத்துக்கு இணையாக எந்த ஒரு போராட்டமும் இல்லை என நிச்சயமாகச் சொல்லலாம். மகாத்மா காந்தி, ஜவாஹர்லால் நேரு தொடங்கி மகத்தான தலைவர்களின் வழிகாட்டுதலில் மக்கள் இறுதிவரை போராடி அகிம்சை மூலம் வென்ற சுதந்திரம் நம்முடையது. வன்முறைச் சம்பவங்கள் நடந்திருந்தாலும் காந்திய வழியிலான அகிம்சையே நமக்கு விடுதலை பெற்றுத் தந்த ஆயுதமானது.

1947 ஆகஸ்ட் 15-ல் இந்தியா சுதந்திரமடைந்தது என்றாலும், அதற்கு முன்பே இந்தியாவின் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுவிட்டது. 1946 செப்டம்பர் 2-ல் பதவியேற்றுக்கொண்ட இந்த அரசுதான் சுதந்திர இந்தியாவுக்கான கட்டமைப்பின் அஸ்திவாரத்தை அமைக்கத் தொடங்கியது. இந்த அரசு பிரிட்டிஷ் ஏகாதிபத்திய கட்டமைக்குக்கும், ஜனநாயகக் கட்டமைப்புக்கும் இடையிலான ஒரு தற்காலிக ஏற்பாடாக உருவாக்கப்பட்டது.

இரண்டாம் உலகப்போரின் முடிவும் இந்த அரசு அமைவதற்கு ஒரு முக்கியக் காரணம். வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் கைதுசெய்யப்பட்ட அரசியல் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

1945-ல் பிரிட்டன் பிரதமராகப் பொறுப்பேற்ற க்ளெமன்ட் அட்லீ எடுத்த முடிவுகளும் இதில் முக்கியப் பங்கு வகித்தன. பிரிட்டிஷ் ஆட்சியால் இந்தியாவின் வளர்ச்சிக்கான சமூக மற்றும் பொருளாதாரச் சீர்திருத்தங்களை நிறைவேற்ற முடியவில்லை எனும் கருத்து கொண்டிருந்த அட்லீ, இந்தியாவுக்கு டொமினியன் அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்று விரும்பினார். இந்தியாவின் சுதந்திரத்தில் அக்கறை கொண்டிருந்த அவரது ஆட்சிக்காலத்தில்தான், இடைக்கால அரசு அமைப்பதற்கான முயற்சிகள் நடந்தன.

இந்த அரசில் ஜவாஹர்லால் நேரு துணை ஜனாதிபதியாகப் பதவியேற்றுக்கொண்டார். ஒரு பிரதமருக்குரிய அனைத்து அதிகாரங்களும் அவருக்கு வழங்கப்பட்டன. சுதந்திரத்துக்குப் பின்னர் வைஸ்ராய் பதவியைத் தவிர அனைத்துப் பதவிகளிலும் முழுக்க முழுக்க இந்தியர்களே பொறுப்பேற்பது எனும் முடிவும் எடுக்கப்பட்டது.

தேர்ந்தெடுக்கப்பட்ட அரசமைப்புச் சட்டமன்றத்தின் மூலம் இந்த அரசு நிறுவப்பட்டது. இதற்காகத் தனியாகத் தேர்தல் நடத்தப்படவில்லை. மாறாக, மாகாண சட்டமன்றங்கள் மூலம் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதன்படி, இந்திய தேசிய காங்கிரஸுக்கு 208 இடங்கள் (69 சதவீதம்) கிடைத்தன. முஸ்லிம் லீக் கட்சிக்கு 73 இடங்கள் கிடைத்தன. தனி நாடு வேண்டும் எனும் கோரிக்கையில் உறுதியாக இருந்த முகமது அலி ஜின்னா, இந்த அரசில் தனது முஸ்லிம் லீக் கட்சியினர் இடம்பெறுவதை ஆரம்பத்தில் விரும்பவில்லை. எனினும், பாகிஸ்தான் எனும் இலக்கை அடைவதற்கான முதல் படியாக இந்த அரசில் இடம்பெறச் சம்மதிப்பதாக ஜின்னா பின்னர் தெரிவித்தார்.

அமைச்சரவையில் இரண்டாவது முக்கியப் பொறுப்பு சர்தார் வல்லபாய் படேலுக்குக் கிடைத்தது. நாட்டின் உள் துறை அமைச்சரானார் படேல். ராஜாஜிக்குக் கல்வி மற்றும் கலைத் துறை ஒதுக்கப்பட்டது. முஸ்லிம் லீக் கட்சியில் அங்கம் வகித்த பட்டியலினச் சமூகத் தலைவர் ஜோகேந்திரநாத் மண்டல், சட்டத் துறைக்குப் பொறுப்பேற்றார். முஸ்லிம் லீக் சார்பில் லியாகத் அலிகான் நிதியமைச்சராகப் பொறுப்பேற்றார். முதலில் அந்தப் பொறுப்பு காங்கிரஸின் ஜான் மத்தாய்க்கு வழங்கப்பட்டிருந்தது. முஸ்லிம் லீக் வெளிப்படுத்திய அதிருப்தியின் விளைவாக, 1946 அக்டோபர் 15-ல் அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இப்படிப் பல்வேறு உள்முரண்கள், சிக்கல்களுக்கு நடுவே அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கும் பணிகளும் இந்த அரசின் ஆட்சிக்காலத்தில் தொடங்கின. எனினும் அரசமைப்புச் சட்டத்தை உருவாக்குவதில் பங்காற்றுவது யார் எனும் கேள்வி காங்கிரஸ் - முஸ்லிம் லீக் இடையில் கருத்து வேறுபாடுகளை உருவாக்கியது. தேசப்பிரிவினை, இந்து - முஸ்லிம் கலவரம் போன்ற பல அசம்பாவிதங்கள் நிகழ்வதற்கு அந்தக் கருத்து வேறுபாடு முக்கியக் காரணமாக அமைந்தது.

அதேசமயம், காங்கிரஸ் - முஸ்லிம் லீக் கூட்டணி அரசு, உப்பு வரி நீக்கம், ஐஎஃப்எஸ் அதிகாரிகள் நியமனம் உள்ளிட்ட பல முக்கிய முடிவுகளை எடுத்தது. பின்னாட்களில் இந்தியாவின் வளர்ச்சிக்கு உறுதுணை புரிந்த ஐந்தாண்டு திட்டத்துக்கான முதல் படியும் இந்த ஆட்சியின்போதுதான் ஏற்படுத்தப்பட்டது. அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளுடனான தூதரக உறவையும் இடைக்கால அரசு ஏற்படுத்திக்கொண்டது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in