இதே தேதி... முக்கியச் செய்தி: ஆப்பிளுக்கு வலிமை சேர்த்த டிம் குக்!

டிம் குக்
டிம் குக்

ஒவ்வொரு காலகட்டத்திலும் மனிதகுலம் அடைந்துவரும் மேம்பாடுகளின் பின்னணியில், அசாதாரணமான மனிதர்களின் அசாத்தியமான உழைப்புக்கு முக்கிய இடம் உண்டு. இன்று நவீனத் தொழில்நுட்ப மேம்பாட்டை உலகம் அடைந்திருப்பதன் பின்னணியில் இருக்கும் மிகப் பெரிய ஆளுமைகளில் ஒருவர் டிம் குக். ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாகப் பணியாற்றும் டிம் குக்கின் பணிவாழ்க்கை, சாதிக்கத் துடிக்கும் இளைஞர்கள் அறிந்துகொள்ள வேண்டிய முக்கியப் பாடம்!

டிம் குக்கின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த தகவல்களைவிடவும் தொழில்சார்ந்த அவரது செயல்பாடுகள் குறித்த தகவல்கள்தான் பொதுவெளியில் அதிகம் பேசப்படுகின்றன. 1960 நவம்பர் 1-ல் அலபாமா மாநிலத்தின் ராபர்ட்ஸ்டேல் நகரில் பிறந்தவர் டிம் குக்.

கல்வியில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் டிம் குக். கடும் உழைப்பும், கூர்மையான அறிவுத் திறனும் கொண்ட டிம் குக்குக்கு உயர்வுகள் இயல்பாகவே கைவரப்பெற்றன. ஆபர்ன் பல்கலைக்கழகத்தில் தொழில் துறைப் பொறியியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பின்னர் டியூக் பல்கலைக்கழகத்தின் ஃபுகுவா ஸ்கூல் ஆஃப் பிசினஸ் கல்லூரியில் எம்பிஏ படித்தார்.

ஐபிஎம் நிறுவனத்தில் 12 ஆண்டுகள் பணியாற்றிய பின்னர், இன்டெலிஜென்ட் எலெக்ட்ரானிக்ஸ், காம்பேக் போன்ற நிறுவனங்களில் பணியாற்றினார். டிக் குக்கை ஸ்டீவ் ஜாப்ஸ் சந்தித்த காலகட்டத்தில் ஆப்பிள் நிறுவனம் அதலபாதாளத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. அந்நிறுவனத்தின் பங்குதாரர்கள் வெளியேறும் முடிவை ஏற்கெனவே எடுத்திருந்தனர்.

வேலைவாய்ப்பு முகவரான ரிக் டிவைன் மூலம்தான் ஆப்பிள் நிறுவனரும் அதன் அப்போதைய சிஇஓ-வுமான ஸ்டீவ் ஜாப்ஸைச் சந்தித்தார் டிம் குக். கலிபோர்னியாவின் பாலோ ஆல்ட்டோ நகரில் நேர்காணல் நடந்தது. ஸ்டீவ் ஜாப்ஸிடம் ஒரு சிறப்பம்சம் உண்டு. நேர்காணலுக்காக வந்திருக்கும் நபரின் பயோடேட்டாவைப் பார்த்து முடிவெடுப்பதைவிடவும், அந்த நபரை நேரில் பார்த்துப் பேசும்போதே ஆள் திறமைசாலியா என்பதைத் தெரிந்துகொள்வார். அந்த வகையில் டிம் குக்கைப் பார்த்த நொடியிலேயே, தான் தேடிக்கொண்டிருக்கும் நபர் அவர்தான் எனும் முடிவுக்கு வந்துவிட்டார் ஸ்டீவ் ஜாப்ஸ்.

ஸ்டீவ் ஜாப்ஸ்
ஸ்டீவ் ஜாப்ஸ்

டிம் குக்கும் அப்படியானவர்தான். அவருக்கும் தான் பணிபுரியவிருக்கும் நிறுவனம், அங்கிருக்கும் சூழல் குறித்தெல்லாம் நிறைய எதிர்பார்ப்புகள் உண்டு. நல்ல சம்பளத்துடன் கூடிய வேலையில் இருக்கும்போது, தள்ளாடிக்கொண்டிருக்கும் நிறுவனத்தில் சேர்வதா என அவரும் சற்றே தயங்கினார். காம்பேக் நிறுவனத்தில் அவருடன் பணியாற்றிய நண்பர்களும் இதே காரணத்தைச் சொல்லி அவரை அறிவுறுத்தினர். நீண்ட யோசனைக்குப் பின்னர் அந்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டார். அப்படித்தான், 1998-ல் ஆப்பிளின் சர்வதேச சேவையின் முதன்மைத் துணைத் தலைவராகப் பணியில் சேர்ந்தார்.

இருவருக்கும் இடையிலான கெமிஸ்ட்ரி ஒத்துப்போனது ஆப்பிள் நிறுவனத்துக்கு மட்டுமல்ல, நவீனத் தொலைத்தொடர்பு சாதனங்களின் வளர்ச்சிக்கும் ஒரு பெரும் திறப்பாக அமைந்தது. டிம் குக்கின் வருகைக்குப் பின்னர் ஆப்பிள் மளமளவென வளரத் தொடங்கியது. பின்னாட்களில், ‘டிம் ஆப்பிள்’ என முன்னாள் அதிபர் ட்ரம்ப் ஒரு நிகழ்ச்சியில் குறிப்பிடும் அளவுக்கு அந்நிறுவனத்துடனான நெருக்கமான உறவைப் பேணிவருகிறார் டிம் குக். பிரபலங்களின் பெயர்களை வழக்கமாகத் தவறுதலாக உச்சரிக்கும் பழக்கம் கொண்டவர்தான் ட்ரம்ப். எனினும், இந்த முறை அது சரியாகவே பொருந்திப்போனது தனிக்கதை!

ஸ்டீவ் ஜாப்ஸ் புற்றுநோய் பாதிப்பால் 2011அக்டோபர் 5-ல் காலமானார். தனக்குப் பின்னர் ஆப்பிள் நிறுவனத்தைக் கட்டிக்காக்கக்கூடியவர் டிம் குக்தான் என்பதில் ஸ்டீவ் ஜாப்ஸுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது. காரணம், வழக்கமான விஷயங்களைத் வித்தியாசமான முயற்சி எடுப்பதில் ஆர்வம் கொண்டவர் டிம் குக். அதுமட்டுமல்ல, ஒரு தவறு நேர்ந்துவிட்டால் அதற்குப் பொறுப்பேற்கவும் அவர் தயங்கியதில்லை. எனவே, அவரைவிட நம்பிக்கையான ஒரு நபர் கிடைக்கப்போவதில்லை என்று ஸ்டீவ் ஜாப்ஸ் தீர்மானித்தார். சொல்லப்போனால் உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக, ஸ்டீவ் ஜாப்ஸ் 2009-ம் ஆண்டுவாக்கிலேயே தனது செயல்பாடுகளைக் குறைத்துக்கொண்டுவிட்டார். அப்போது டிம் குக்தான் முன்னின்று எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டார். அந்தப் பொறுப்புணர்வு டிம் குக் மீதான ஸ்டீவ் ஜாப்ஸின் நம்பிக்கையை மேலும் அதிகரித்தது.

ஸ்டீவ் ஜாப்ஸ் மரணமடைவதற்கு முன்பு, 2011 ஆகஸ்ட் 24-ல் ஆப்பிள் நிறுவனத்தின் சிஇஓ-வாகப் பொறுப்பேற்றுக்கொண்டார் டிம் குக். 2011-ல் அவரது ச்ம்பளம் 378 மில்லியன் டாலர். உலகிலேயே அதிகமாக சம்பளம் வாங்கும் சிஇஓ எனும் பெருமை அவருக்குக் கிடைத்தது. தனது சம்பாத்தியத்தில் கணிசமான தொகையை தானமாக வழங்குவது டிம் குக்கின் இன்னொரு சிறப்பு. 2011-ல் 153.3 பில்லியன் டாலராக இருந்த ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மதிப்பை 2020-ல் 2 ட்ரில்லியன் டாலராக உயர்த்திக் காட்டினார்.

தனக்கென்ன ஒரு அறநெறியை வகுத்துக்கொண்டு அதன்படி வாழ்பவர் டிம் குக். தனித்துவமான தலைமைத்துவம் அவரது மிகப் பெரிய பலம். தன்னைச் சுற்றி இருப்பவர்கள் மீது நம்பிக்கை கொண்டிருப்பவர். தனது செயல்பாடுகள் மீது அபாரமான நம்பிக்கை கொண்டவர். அதேசமயம், தவறுகள் சுட்டிக்காட்டப்பட்டால் அதை ஏற்றுக்கொள்ளத் தயங்காதவர். மிக முக்கியமாக, வெளிப்படையானவர்.

ஆனால், தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து செய்திகள் வெளியாவதில் அவருக்கு விருப்பம் இருந்ததில்லை. அதற்கு அவரது பாலினத் தேர்வும் ஒரு முக்கியக் காரணமாக அறியப்படுகிறது. ஆம், டிம் குக் ஒரு தன்பாலீர்ப்பு ஆண் (Gay). ஒரு கட்டத்தில் அதைப் பற்றி மறைமுகமாக உணர்த்தவும் செய்தார்.

2014 ஜூன் மாதம் சான் பிரான்சிஸ்கோவில் நடந்த மூன்றாம் பாலினத்தவர் பேரணியில் கலந்துகொண்டார். சில மாதங்களுக்குப் பின்னர் தான் ஒரு தன்பாலீர்ப்பு ஆண் என பகிரங்கமாக அறிவித்தார். ஃபார்ச்சூன் இதழில் உலகின் 500 முன்னணி சிஇஓ-க்களின் பட்டியலில் இடம்பெற்ற டிம் குக், தன்பாலீர்ப்பு ஆண் எனும் தகவல் பொதுவெளியில் பகிரப்பட்டது மிக முக்கியமான விஷயமாகப் பார்க்கப்படுகிறது. பொதுவாக, தனது அந்தரங்க வாழ்க்கை குறித்து அதிகம் வெளியே பேசாத டிம் குக், தனது பாலினத் தேர்வு குறித்து பொதுவெளியில் பகிர்ந்துகொள்ள முக்கியக் காரணம், எல்ஜிபிடி சமூகத்தினர் நம்பிக்கை பெற வேண்டும் என்பதுதான்.

அதனால்தான் தொழில், சம்பாத்தியம், புகழ் என அனைத்தையும் தாண்டி உலகம் போற்றும் ஆளுமைகளின் பட்டியலில் டிம் குக்கும் இடம்பிடிக்கிறார்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in