ஏனெனில்-5: நீதித் துறையின் காலனிய இருள்

ஏனெனில்-5: நீதித் துறையின் காலனிய இருள்

உச்ச நீதிமன்றத்திலும் உயர் நீதிமன்றங்களிலும் காலியாக உள்ள நீதிபதிகளின் இடங்களை நிரப்ப, தீவிர அக்கறை எடுத்துக்கொண்டிருக்கிறார் தலைமை நீதிபதி என்.வி.ரமணா. நீதிபதிகளுக்கான இடங்களில் பெண்களுக்கான விகிதாச்சார உரிமை பற்றி பேசுகிறார். நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படாமலேயே சட்டங்கள் இயற்றுவதால், பின்னாட்களில் வழக்கு விசாரணைகளின்போது குழப்பங்கள் நேரிடும் என்று நாகரிகத்துடன் சுட்டிக்காட்டுகிறார்.

நீதிபதிகளாகப் பணியாற்றுபவர்கள் பலரும் ஓய்வுபெற்ற பிறகே, நீதித் துறை குறித்த தங்களது சொந்தக் கருத்துகளைப் பற்றி பொதுவெளியில் பேசுவதற்கு வாய்திறக்கிறார்கள். நீதித் துறையின் தலைமைப் பொறுப்பில் இருக்கும்போதே, உள்ளும் வெளியிலுமாக என்.வி.ரமணா அதைச் செய்கிறார் என்பது பாராட்டுக்குரியது.

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா

சமீபத்தில் ஒடிசா மாநில சட்டப் பணிகள் மையத்தைத் திறந்துவைத்த தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதித் துறை தற்போது சந்தித்துவரும் இருபெரும் சவால்களைக் குறிப்பிட்டுள்ளார். முதலாவது, இந்திய நீதித் துறை இந்திய மயமாக்கப்பட வேண்டும் என்பது. சாதாரண மனிதர்கள் நீதிமன்றத்தை அணுகவே அஞ்சுகிறார்கள். மற்றொன்று, சமூக மாற்றங்களை உள்வாங்குவதில் நீதித் துறையின் தோல்வி. அது எதார்த்தத்துக்கு இயைந்ததாக இல்லை.

அந்நிய ஆதிக்கம் அகன்றுவிட்டாலும்கூட, இந்திய நீதித் துறையைச் சூழ்ந்திருக்கும் காலனிய இருள் இன்னும் நீங்கியபாடில்லை. தலைமை நீதிபதியின் இந்தக் கருத்தை இந்தியாவின் மாபெரும் சட்ட நெறியாளர்கள் பலரும் சுட்டிக்காட்டியபடியேதான் இருக்கிறார்கள். அவர்களில் முதன்மையானவர் பேராசிரியர் உபேந்திர பக்ஸி. டெல்லி பல்கலைக்கழகத்தின் சட்டத் துறை பேராசிரியராகவும் துணைவேந்தராகவும் பணிபுரிந்த பக்ஸி, பிரிட்டனின் வார்விக் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணியைத் தொடர்ந்தார். சட்டம், நீதி தொடர்பாக நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர். 80 வயதைத் தாண்டிய நிலையில், இப்போது ஓபி ஜிண்டால் சர்வதேசப் பல்கலைக்கழகத்தில் கல்விப் பணியைத் தொடர்கிறார். நீதித் துறை குறித்த ஆய்வுகளையும் அதே வேகத்தில் தொடர்கிறார். ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ மும்பை பதிப்பில், அவரது கட்டுரைகளை அடிக்கடி பார்க்க முடிகிறது.

சட்டத் துறை பேராசிரியர் உபேந்திர பக்ஸி
சட்டத் துறை பேராசிரியர் உபேந்திர பக்ஸி

1981-ல், உபேந்திர பக்ஸி எழுதிய ‘இந்திய சட்ட அமைப்பின் நெருக்கடிகள்’ (The Crisis of the Indian Legal System) என்ற புத்தகத்தைச் சட்டம் மற்றும் நீதித் துறையின் குறுக்குவெட்டுத் தோற்றம் என்று வர்ணிக்கலாம். நிலுவையிலுள்ள பெரும் எண்ணிக்கையிலான வழக்குகள், காவல் துறையின் வரம்பு மீறிய செயல்பாடுகள், சித்திரவதைக் கொடுமைகள், சிறைச் சாலை அவலங்கள், சட்டச் சீர்திருத்தங்களின் போதாமைகள் என்று சட்டத் துறையைப் பீடித்துள்ள சகல நோய்மைகளையும் பட்டியலிடும் உபேந்திர பக்ஸி அனைத்துக்கும் முன்பாக அதன் காலனியத் தன்மையைத்தான் பேசுகிறார்.

மக்கள் பிரதிநிதிகளால் இயற்றப்படுவதாகச் சொல்லப்பட்டாலும் அனைத்து சட்டங்களையும் உயர்குடி மக்கள்தான் தீர்மானிக்கிறார்கள் என்கிறார் உபேந்திர பக்ஸி. இது சட்டங்களின் தரத்தை மட்டுல்ல, சமூகத்துடனான தொடர்பு, பரவல், ஏற்றுக்கொள்ளும் தன்மை என அனைத்தையுமே பாதிக்கிறது என்கிறார் அவர்.

சுதந்திர இந்தியாவில் அதன் சட்ட அமைப்பின் தன்மையைக் குறித்தோ, எதிர்காலத்தைக் குறித்தோ விரிவான எந்த விவாதமும் நடைபெறவில்லை. அரசமைப்பு அவையில் விவாதிக்கப்பட்டதுகூட மேற்கத்திய நோக்கிலான சட்டங்கள் ஆசிய வேளாண் சமூகத்துக்குப் பொருந்திப் போகுமா என்பதாக மட்டுமே இருந்தது. அதைக்காட்டிலும், பிரிட்டிஷ் அதிகாரிகள் தங்களது சட்டங்களை இந்தியாவில் நடைமுறைப்படுத்துவதற்கு முன்பு நடத்திய விவாதங்கள் மேன்மையானவை என்பது உபேந்திர பக்ஸியின் முடிவு.

சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் மட்டுமல்ல, அதை இயற்றுவதிலேயே இன்னமும் நாம் காலனிய வழக்கங்களைத்தான் கடைப்பிடித்துக்கொண்டிருக்கிறோம். அனைத்து மக்களையும் கட்டுப்படுத்துவதற்கான சட்டங்கள் சட்டமியற்றும் அவைகளால் இயற்றப்படுவதாகச் சொல்லப்பட்டாலும், பெரிதும் அவற்றை அதிகாரிகள்தான் இன்னமும் முடிவுசெய்துகொண்டிருக்கிறார்கள். சில சமயங்களில், நாடாளுமன்றத்தின் தெரிவுக் குழுக்கள் பொதுமக்களிடமிருந்தும் ஆர்வமுள்ள குழுக்களிடமிருந்தும் கருத்துகளைப் பெறுகின்றன என்றபோதும் நிர்வாகத் துறையினர் தாங்களே இயற்றிக்கொள்ளும் விதிமுறைகளில் மக்களுடைய கருத்தோ பாதிக்கப்படுபவர்களின் கருத்தோ கேட்கப்படுவதில்லை. மக்கள் பிரதிநிதிகளால் இயற்றப்படுவதாகச் சொல்லப்பட்டாலும் அனைத்து சட்டங்களையும் உயர்குடி மக்கள்தான் தீர்மானிக்கிறார்கள் என்கிறார் உபேந்திர பக்ஸி. இது சட்டங்களின் தரத்தை மட்டுல்ல, சமூகத்துடனான தொடர்பு, பரவல், ஏற்றுக்கொள்ளும் தன்மை என அனைத்தையுமே பாதிக்கிறது என்கிறார் அவர்.

சட்டத் துறை சார்ந்த தகவல்களைப் பெறுவதில் தொடங்கி சட்டப் பணிகளைப் பெறுவதுவரைக்கும் சாதாரண மக்கள் அனுபவிக்க வேண்டியிருக்கும் வலிகளையும் துயரத்தையும் இந்நூலில் பேசுகிறார் உபேந்திர பக்ஸி. இன்னமும் பேசிக்கொண்டுதான் இருக்கிறார். நாற்பதாண்டுகளில் எந்த மாற்றமும் வந்துவிடவில்லை. இனிவரும் காலத்திலாவது மாற்றங்கள் நிகழக்கூடும் என்ற நம்பிக்கையை அளிக்கின்றன, தற்போதைய தலைமை நீதிபதி ரமணாவின் வார்த்தைகள்.

சாரு நிவேதிதா
சாரு நிவேதிதா

காலக் கண்ணாடி:

சாரு நிவேதிதாவின் ‘புதிய எக்ஸைல்’ நாவலில் கவனத்தை ஈர்த்த ஒரு பத்தி:

‘பிரதம மந்திரி போன்ற பெரிய அரசியல் தலைவர்களைக் கொன்றால்தான் இங்கே ஆயுள் தண்டனை, மரண தண்டனை எல்லாம் கிடைக்கும். அல்லது, கற்பழிப்புக்கும் கடும் தண்டனை உண்டு. மற்றபடி உங்கள் எதிரியையோ பக்கத்து வீட்டுக்காரரையோ தீர்த்துக்கட்டினால் - நேரடியாகவோ அல்லது கூலிப்படை வைத்தோ, இரண்டில் எதுவாக இருந்தாலும் சரி - ஒன்றிரண்டு ஆண்டுகளில் வெளியே வந்து உங்கள் வாழ்க்கையை சகஜமாக வாழ்ந்துகொண்டிருக்கலாம். வழக்கு பாட்டுக்கு நடந்துகொண்டிருக்கும். அதைப் பற்றி நமக்கென்ன? வக்கீல் பார்த்துக்கொள்வார். இதுதான் இந்தியாவில் மனித உயிரின் நிலை.’

Related Stories

No stories found.