இதே தேதி... முக்கியச் செய்தி: ஆப்பிரிக்க நாடுகளுக்குத் தோட்டத் தொழிலாளர்களாகச் சென்ற இந்தியர்கள்

மொரீசியஸுக்குச் சென்ற இந்தியத் தொழிலாளர்கள்
மொரீசியஸுக்குச் சென்ற இந்தியத் தொழிலாளர்கள்நன்றி: சுயாஷ் திவிவேதி

மனிதகுலம் தோன்றிய காலத்திலிருந்தே இடப்பெயர்வு தொடங்கிவிட்டது. பல்வேறு தேவைகளுக்காக இடம்விட்டு இடம் கூட்டமாகக் குடிபெயர்வது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நடைபெற்றது. நாகரிகம் தோன்றிய பின்னர் நிலையாக ஓரிடத்தில் வசிக்கத் தொடங்கிய மக்களும் பிழைப்புக்காக, தொலைதூரப் பிரதேசங்களுக்குச் செல்ல வேண்டிய நிலை உருவானது. பெரும்பாலும் நிர்ப்பந்தத்தின் காரணமாகவே பெரும்பாலான இடப்பெயர்வுகள் நிகழ்ந்தன.

ஆப்பிரிக்க தேசங்களிலிருந்து கறுப்பினத்தவர்களை அடிமைகளாகப் பிடித்துச் சென்ற அமெரிக்கர்கள் போல, ஆப்பிரிக்க நாடுகளுக்கு இந்தியர்களை ஒப்பந்தத் தொழிலாளர்களாக அழைத்துச் சென்றனர் பிரிட்டிஷ்காரர்கள். இந்தியர்களில் பெரும்பாலானோர் ஆப்பிரிக்க நாடுகளில் கரும்பு, காப்பி, தேயிலை, ரப்பர் போன்ற பயிர்களின் தோட்டங்களில் வேலை செய்தனர். அமெரிக்காவின் வளர்ச்சிக்கு ரத்தமும் வியர்வையுமாக உழைத்த கறுப்பினத்தவர்களைப் போலவே, தென்னாப்பிரிக்கா, டிரினிடாட், பிஜி தீவுகள், ஜமைக்கா, கயானா போன்ற ஆப்பிரிக்க நாடுகளின் வளர்ச்சிக்கு இந்தியர்களும் கடுமையாக உழைத்தனர்.

இந்தியர்களின் வருகையால் தங்கள் நாடுகளுக்குக் கிடைத்த பலனை அந்நாடுகள் மறந்துவிடவில்லை. அதனால்தான், கப்பல்கள் மூலம் இந்தியர்கள் அந்நாடுகளுக்கு முதன்முதலாகச் சென்று இறங்கிய தினங்கள் ‘இந்திய வருகை தின’மாக இப்போதும் கொண்டாடப்படுகின்றன. அந்த வகையில் மொரீசியஸ் நாடு இன்று (நவ.2) இந்திய வருகை தினத்தைக் கொண்டாடுகிறது. இந்த நிகழ்வைக் கொண்டாடுவதற்காகவே அந்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் இந்நாளில் தேசிய விடுமுறை விடப்படுகிறது.

இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு அம்சமும் இருக்கிறது. ஆப்பிரிக்க நாடுகளை ஆக்கிரமித்து ஆட்சி செய்த ஐரோப்பியர்கள் அங்கு வசித்த பூர்வகுடி கறுப்பின மக்களை அவர்களது சொந்த நிலத்திலேயே அடிமைகளாக்கி அவர்களின் உழைப்பைச் சுரண்டினர். மொரீசியஸைப் பொறுத்தவரை பிரெஞ்சு காலனியாதிக்கத்தின் கீழ் அந்நாடு இருந்தபோது, அங்குள்ள கரும்புத் தோட்டங்களில் வேலை செய்ய கிழக்கு ஆப்பிரிக்காவிலிருந்து கறுப்பின மக்கள் கொண்டுவரப்பட்டனர். 1810-ல் பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தின்கீழ் மொரீசியஸ் வந்தபோது, அந்நாட்டின் மக்கள்தொகையில் 80 சதவீதம் பேர் கொத்தடிமைகளாக இருந்தனர்.

1835-ல் மொரீசியஸில் அடிமை முறை நீக்கப்பட்டது. ஆனால், தோட்டத் தொழிலுக்கு ஆட்கள் வேண்டுமே! அப்போதுதான் இந்தியர்களை மொரீசியஸுக்கு வரவழைக்க முடிவுசெய்யப்பட்டது. அடிமை முறை முடிவுக்கு வருவதற்கு முன்பே அதற்கான மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

உண்மையில், அங்கு அழைத்துச் செல்லப்பட்ட இந்தியர்களும் ஆப்பிரிக்க அடிமைகளைப் போலத்தான் நடத்தப்பட்டனர். அவர்களையும் கசக்கிப் பிழிந்துதான் தோட்ட முதலாளிகள் வேலை வாங்கினர். இத்தனைக்கும் கொத்தடிமைகளாக அல்லாமல் சுதந்திர மனிதர்களாக நடத்துவோம் என்று உறுதியளித்தே அவர்களை அழைத்துச் சென்றனர். ஒரே ஒரு வித்தியாசம் இருந்தது. அடிமைகளைப் போல ஆயுள் முழுவதும் அங்கு கிடந்து அவதிப்பட வேண்டியதில்லை. ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்த காலம் வரை அங்கு வேலைசெய்தால் போதும். இதனால், குடும்பத்துடன் அங்கு ஏராளமான இந்தியர்கள் சென்று தோட்டத் தொழிலாளர்களாகப் பணியாற்றினர். பெரும்பாலும் கிழக்கு உத்தர பிரதேசம், பிஹார், சென்னை மாகாணம் போன்ற இடங்களிலிருந்துதான் அதிகமானோர் மொரீசியஸுக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.

மொரீசியஸைப் பின்பற்றி பிற காலனி நாடுகளும் இந்தியர்களை ஒப்பந்தத் தொழிலாளர்களை வரவழைத்து வேலை வாங்கத் தொடங்கின. இந்தியாவிலிருந்து சென்ற தொழிலாளர்கள் கூலிகள் என்றே அழைக்கப்பட்டனர். 1924-ல் மொரீசியஸில் ஒப்பந்தத் தொழிலாளர் முறை ஒழிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு பணிபுரிந்த இந்தியர்கள் அங்கேயே தொடர்ந்து வசிக்கத் தொடங்கினர். வெவ்வேறு வேலைகளில் ஈடுபட்டனர். கல்வி கற்றனர். அடுத்தடுத்த தலைமுறை உருவாகி, அங்கு நிலைபெற்றனர். பெரும்பாலும் இந்தியாவில் வறுமை, கொள்ளைநோய், அடக்குமுறை என மோசமான சூழலில் வாழ்ந்தவர்கள், மொரீசியஸில் வாழ்வாதாரத்துக்கு வழி கிடைத்ததும் அங்கேயே நிரந்தரமாக வசிக்க முடிவெடுத்ததாக வரலாற்றாய்வாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். இப்படி மொரீசியஸில் வாழத் தொடங்கிய இந்தியர்கள் - குறிப்பாக இந்துக்கள் மொரீசியஸின் கலாச்சாரத்துக்குச் செழுமை சேர்த்தனர். மொரீசியஸ் நாட்டின் மக்கள்தொகையில் பெரும்பான்மையாக உள்ளவர்கள் இந்துக்கள்தான். ஆப்பிரிக்க கண்டத்தில் இந்து மதத்தினர் அதிகமாக வசிக்கும் ஒரே நாடும் மொரீசியஸ்தான்.

இந்தியாவிலிருந்து வரும் தொழிலாளர்கள் தற்காலிகமாகத் தங்குவதற்காக, 1849-ல் மொரீசியஸ் தலைநகர் போர்ட் லூயிஸில் உள்ள ட்ரோ ஃபேன்ஃபரான் பகுதியில் குடியேற்ற முகாம் அமைக்கப்பட்டது. அங்கு இரண்டு நாட்கள் தங்கிய இந்தியத் தொழிலாளர்கள் பின்னர் மொரீசியஸின் பல்வேறு பகுதிகளில் இருந்த கரும்புப் பண்ணைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அதன் நினைவாக, 1989-ல் அந்த முகாம் ஆபரவாசி காட் எனும் நினைவுச் சின்னமாக மாற்றப்பட்டது. 2006-ல் அந்த இடம் யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரிய தலங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in