இதே தேதி... முக்கியச் செய்தி: உக்ரைனின் சுதந்திரத்தை இன்றும் உருக்குலைக்கும் ரஷ்யா!

உக்ரைன் சுதந்திரம் அடைந்ததைக் கொண்டாடும் மக்கள்
உக்ரைன் சுதந்திரம் அடைந்ததைக் கொண்டாடும் மக்கள்

இன்று உக்ரைனின் சுதந்திர தினம். ஆனால், சுதந்திர தினத்தைக் கொண்டாட வேண்டாம் என்று அந்நாட்டின் அதிபர் ஸெலன்ஸ்கி உத்தரவிட்டுவிட்டார். ரஷ்யாவின் ஆதிக்கத்திலிருந்து வெளியேற போராடுவது என்பது உக்ரைனின் தலைவிதியாகவே எழுதிவைக்கப்பட்டுவிட்டது போலும். இதோ பிப்ரவரி 24 முதல் ரஷ்யா தொடுத்திருக்கும் போரில் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கிறார்கள் உக்ரைனியர்கள். இந்தத் தருணத்தில் சோவியத் ஒன்றியத்திலிருந்து உக்ரைன் சுதந்திரம் பெற்ற வரலாற்றை நினைவுகூரலாம்!

சுதந்திர உணர்வின் வரலாறு

1790-கள் முதல் ரஷ்யப் பேரரசில் அங்கம் வகித்தது உக்ரைன். 1917-ல் நடந்த ரஷ்யப் புரட்சிக்குப் பின்னர், 1918-ல் உக்ரைன் சுதந்திரச் செயல்பாட்டாளர்கள் அரசியல் ரீதியான சுதந்திரப் பிரகடனத்தை அறிவித்தனர். இதையடுத்து உக்ரைன் தனி நாடாக மாறியது. 1921 வரை அந்த நிலை தொடர்ந்தது. போல்ஷ்விக்குகள் சோவியத் ஒன்றியத்தை நிறுவிய பின்னர் உக்ரைனின் கிழக்குப் பகுதி அதன் அங்கமாகச் சேர்த்துக்கொள்ளப்பட்டது. இரண்டாம் உலகப்போர் சமயத்தில் மிச்சம் இருந்த பகுதிகளும் சோவியத் ஒன்றியத்தின் அங்கமாகின.

அதன் பின்னர் சோவியத் ஒன்றியத்திலிருந்து சுதந்திரம் வேண்டி பல ஆண்டுகள் காத்திருந்த உக்ரைனியர்கள், 1991-ல் சோவியத் ஒன்றியம் சிதறுண்டபோது உக்ரைனைத் தனி நாடாக அறிவித்துக்கொண்டனர். 1991 ஆகஸ்ட் 24-ல் அதன் சுதந்திரப் பிரகடனத்தை சோவியத் நாடாளுமன்றம் அங்கீகரித்தது. இதையடுத்து ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 24-ம் தேதியை சுதந்திர தினமாகக் கொண்டாடிவருகிறது உக்ரைன்.

சுதந்திர உக்ரைனின் முதல் அதிபர் லியோனிட் க்ராவ்சுக்
சுதந்திர உக்ரைனின் முதல் அதிபர் லியோனிட் க்ராவ்சுக்

வாக்கெடுப்பில் வெற்றி

அப்போது ரஷ்யக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் இதை முறியடிக்க முயற்சித்தனர். எனினும், நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் 360 உறுப்பினர்களில் 321 பேர் உக்ரைன் சுதந்திரப் பிரகனடத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர். 2 பேர் மட்டுமே எதிராக வாக்களித்தனர். 6 பேர் வாக்களிக்காமல் புறக்கணித்தனர்.

1991 டிசம்பர் 1-ல், இதற்காக ஒரு கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் உக்ரைனின் 84 சதவீத வாக்காளர்கள் பங்கேற்று வாக்களித்தனர். 90 சதவீதத்துக்கும் அதிகமானோர் உக்ரைன் சுதந்திரத்தை ஆதரித்தனர். அது மட்டுமல்ல, அதே நாளில் அதிபர் தேர்தலும் நடத்தப்பட்டது. அதில் போட்டியிட்ட 6 வேட்பாளர்களும் உக்ரைன் சுதந்திரமடைந்ததை ஆதரித்தனர்.

அந்தத் தேர்தலில் வெற்றிபெற்று சுதந்திர உக்ரைனின் முதல் அதிபரானவர் லியோனிட் க்ராவ்சுக். சோவியத் ஒன்றியம் கலைக்கப்படுவதற்கான ஒப்பந்தத்தில் உக்ரைன் சார்பில் அவர்தான் கையெழுத்திட்டார்.

1991 டிசம்பர் 2-ல் போலந்து, கனடா ஆகிய நாடுகள் முதன்முதலில் உக்ரைனை ஒரு சுதந்திர நாடாக அங்கீகரித்தன. அதே நாள் மாலையில் ரஷ்யாவின் அப்போதைய அதிபர் போரிஸ் யெல்ட்ஸின் உக்ரைனை ஒரு சுதந்திர நாடாக அறிவித்தார். அதன் தொடர்ச்சியாக அமெரிக்காவும் பிற நாடுகளும் உக்ரைனின் சுந்திரத்தை அங்கீகரித்தன.

தொடரும் சோதனை

என்னதான் சுதந்திரம் பெற்றுவிட்டாலும், இறையாண்மையைத் தக்கவைக்க உக்ரைன் தொடர்ந்து போராடத்தான் வேண்டியிருந்தது. இவற்றுக்கிடையே, க்ரைமியா பகுதி யாருக்குச் சொந்தம் எனும் முரண் உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே தொடர்ந்தது. 2014-ல் உக்ரைனுக்குள் நுழைந்து க்ரைமியாவைக் கைப்பற்றியது ரஷ்யா. அதன் பின்னர் உக்ரைனின் கிழக்குப் பகுதியில் ரஷ்ய ஆதரவுப் பிரிவினைவாதிகள் அதிகம் வசிக்கும் டோனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பிராந்தியங்களில் ரஷ்யப் படைகள் நுழைந்தன. 2022-ல் உக்ரைன் மீது தாக்குதலைத் தொடங்குவதற்கு முன்னர் இந்தப் பிரதேசங்களை சுதந்திர நாடுகளாக புதின் அறிவித்ததும் நடந்தது.

‘வேண்டாம் கொண்டாட்டம்!'

இன்றைக்கு உக்ரைனின் பல்வேறு நகரங்கள் ரஷ்யாவின் இரும்புப் பிடியில் இருக்கின்றன. தெற்குப் பிராந்தியங்களை மீட்டெடுக்க பிரம்மப் பிரயத்தனம் செய்துவருகிறது உக்ரைன். இன்று உக்ரைனின் சுதந்திர தினத்தைக்கூட உக்ரைனியர்களால் கொண்டாட முடியவில்லை. இந்த நாளில் ரஷ்யா வேண்டுமென்றே பெரிய அளவில் தாக்குதல்கள் நடத்தக்கூடும் என்பதால் சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் வேண்டாம் என்று உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கியே உத்தரவிட்டுவிட்டார்.

உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கி
உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கி

இதுதொடர்பாக சமீபத்தில் வெளியிட்ட காணொலியில், “நாம் சுதந்திர தினம் கொண்டாடினால் ரஷ்யா ஏதேனும் செய்ய முயலும். குறிப்பாக, அசிங்கமான, தீங்கு தரும் செயல்களைச் செய்யும்” என்று ஆற்றாமையுடன் அவர் கூறினார்.

இத்தனைக்கும் 2021 ஆகஸ்ட் 24-ல் உக்ரைன் சுதந்திர தினக் கொண்டாட்டத்தின்போது தனது படைபலத்தையும் ஆயுத பலத்தையும் சுதந்திர தினப் பேரணியில் பெருமிதத்துடன் முன்வைத்தது. இன்றைக்கு அதெல்லாம் இருக்கும் சுதந்திரத்தைப் பாதுகாக்க, ரஷ்யாவிடமிருந்து மக்களைப் பாதுகாக்க போராடிக்கொண்டிருக்கின்றன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in