ஏனெனில்-8: விரும்பக்கூடியதா விளிம்புநிலை வாழ்வு?

ஏனெனில்-8: 
விரும்பக்கூடியதா விளிம்புநிலை வாழ்வு?

தமிழில் வெளிவரும் சிற்றிதழ்கள் கதை, கவிதைகளின் ஆதிக்கத்திலிருந்து சற்றே விடுபட்டு, கட்டுரைகளின் மீதும் சிறப்புக் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கின்றன. தீவிர இலக்கிய வாசகர்கள் இலக்கியம் தவிர்த்த இதர அறிவுத் துறைகளிலும் போதிய அறிமுகம் பெற்றால்தான், இலக்கியப் படைப்புகளையும்கூட வெவ்வேறு கோணங்களிலிருந்து அணுகும் வாய்ப்பைப் பெற முடியும்.

அக்டோபர் மாத இதழ்களில் எனக்குப் பிடித்த சில கட்டுரைகளை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

காலனியர்களின் உணவுக் கலாச்சாரம் குறித்த ஆய்வுகள் பெரிதும் வீட்டுத்தலைவியரின் நாட்குறிப்புகளையே ஆதாரங்களாகக் கொண்டுள்ளன.

உணவும் சாதியும்

‘காக்கைச் சிறகினிலே’ இதழில் வெளிவந்துள்ள ‘உணவும் சாதியும்’ என்ற கட்டுரை, சென்னை மாகாணத்தின் பங்களாப் பணியாளர்கள் பற்றியது. ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக வரலாற்றுத் துறை பேராசிரியரான சொ.குணசேகரன் எழுதியது. மாட்டு, பன்றி இறைச்சி உண்பவர்களாக இருந்த ஆங்கிலேயர்கள், பெரிதும் சமூகத்தின் அடித்தட்டிலிருந்த பிரிவினரையே தங்களது சமையல்காரர்களாக அமர்த்திக்கொண்டார்கள். காரணம், அவர்கள் இருவருக்கும் அவை பொது உணவாக இருந்தன என்பதோடு, பெருந்திரளான மக்கள் சமூகத்தால் விலக்கிவைக்கப்பட்ட உணவாகவும் இருந்தன. காலனியர்களின் உணவுக் கலாச்சாரம் குறித்த ஆய்வுகள், பெரிதும் வீட்டுத்தலைவியரின் நாட்குறிப்புகளையே ஆதாரங்களாகக் கொண்டுள்ளன.

ஆங்கிலேயர்களின் வீட்டுக்கு விருந்துக்கு வரும் இந்தியர்கள், பெரும்பாலும் பங்களா உணவைச் சாப்பிடுவதில்லை என்றும் தெரிகிறது. ஆனால், மசாலா தூக்கலான சென்னைக் கறி லண்டன் வரையில் பிரபலமாகிவிட்டது. இங்குள்ள மிளகு ரசம், அங்கு சூப் வடிவம் எடுத்தது. பங்களாக்களில் பெரும்பாலும் ஆண்கள்தான் சமையல்காரர்களாகப் பணிபுரிந்துள்ளனர். ஒரு பங்களாவில் குறைந்தபட்சம் 22 பணியாளர்கள் பணிபுரிந்துள்ளனர். அவர்களைக் கண்காணிக்கும் பொறுப்பில் பட்லர் இருந்துள்ளார்.

நிறத்தின் அடிப்படையில் ஆங்கிலேயர்களுக்கும் அவர்களது பணியாளர்களுக்கும் இடையில் பாகுபாடுகள் நிலவினாலும் அவை இந்தியச் சாதியமைப்பின் அடிப்படையில் நிலவவில்லை.

அனைவரிலும் குழந்தைகளுக்குப் பாலூட்டும் தாயம்மார்களே செல்வாக்குப் பெற்றவர்களாக இருந்துள்ளனர். குழந்தைகளைப் பராமரிக்கும் ஆயாக்கள், ஆங்கிலக் குடும்பங்களுடன் கடற்பயணங்களிலும் கூடவே சென்றுள்ளனர். இங்கிலாந்துக்குச் சென்று, அங்கேயே நிரந்தரமாகத் தங்கியவர்களும் உண்டு. கைவிடப்பட்ட நிலையில் வேலைதேடி அலைந்தவர்களும் உண்டு. ஆயாக்களின் பழக்கத்தால், குழந்தைகளிடம் அறிமுகமான இந்தியத் தன்மைகள் குறித்து ஆங்கிலேயர்களிடம் அச்சமும் நிலவியுள்ளது.

நிறத்தின் அடிப்படையில் ஆங்கிலேயர்களுக்கும் அவர்களது பணியாளர்களுக்கும் இடையில் பாகுபாடுகள் நிலவினாலும் அவை இந்தியச் சாதியமைப்பின் அடிப்படையில் நிலவவில்லை. அதற்கு உணவுக் கலாச்சாரமும் ஒரு முக்கியக் காரணம். ஒடுக்கப்பட்டவர்களின் சமூக எழுச்சிக்கான வாய்ப்பும் இந்த பங்களா வேலைகளால் சாத்தியமானது என்கிறார் சொ.குணசேகரன். தொடர்ந்து அவர் தமிழிலும் எழுத வேண்டும்.

பழங்குடி மருத்துவம்

‘பேசும் புதிய சக்தி’ இதழில் வெளிவந்திருக்கும் ஆட்டனத்தியின் ‘பழங்குடி மக்களின் நோய்களும் மருத்துவமும்’ என்ற கட்டுரை, அவர் வனத் துறைப் பணியிலிருந்தபோது, இருளர்களுடன் பழகி அறிந்துகொண்ட அவர்களது மருத்துவ முறைகளைப் பதிவுசெய்துள்ளது. பாம்புக் கடி வைத்தியத்திலிருந்து சுகப் பிரசவம் வரையில் அனைத்துக்கும் அவர்கள் மூலிகைகளையே சார்ந்துள்ளனர். வேம்புதான் அவர்களின் தெய்வம்.

கொட்டமுத்து எனப்படும் ஆமணக்கும் அதிலிருந்து பெறப்படும் விளக்கெண்ணெய்யும் இருளர்களின் முக்கிய மருந்துகள். தோல் பாதுகாப்பு, தலைமுடி வளர்ச்சி, பொடுகுத் தொல்லை நீக்கம் என்று ஏகப்பட்ட பயன்பாடுகள் அதற்கு உண்டு. அப்புறம் எதற்கு, ‘விளக்கெண்ணெய்’ என்பது இன்றும் ஒரு வசைச்சொல்லாக நீடிக்கிறது என்பது தெரியவில்லை. மூலிகைகள் மட்டுமின்றி ஊர்வன, பறப்பனவற்றின் இறைச்சிகள் உலர்த்தப்பட்டு அவற்றையும் மருந்தாகப் பயன்படுத்துகின்றனர். அவர்கள் பாம்புக் கடியைப் போலவே நாய்க் கடிக்கும் மிகவும் அஞ்சுகின்றனர் என்கிறார் ஆட்டனத்தி. 3 பக்கங்களில் மிகச் சுருக்கமாக எழுதப்பட்ட கட்டுரை என்றாலும் அதன் பின்னணியில், பல்லாண்டு கால கள ஆய்வு அனுபவங்கள் இருப்பதை உணர முடிகிறது. நூலாக விரிவுபெறத்தக்க உள்ளடக்கம் இது.

நந்தினி சேவியர்

இலக்கியத்துக்கான இருமாத இதழான ‘தலித்’ செப்-அக் இதழில், அண்மையில் மறைந்த இலங்கைத் தமிழ் எழுத்தாளர் நந்தினி சேவியரைப் பற்றிய அஞ்சலிக் கட்டுரையும் அவரது சிறுகதையொன்றும் வெளியாகியுள்ளன. 2003-ல் ‘தலித்’ இதழுக்கு அவரளித்த நேர்காணல் ஒன்றும் மறுபிரசுரமாகியுள்ளது. இலங்கை, தமிழ்நாட்டு எழுத்தாளர்களிடையே நிலவிவந்த தொடர்பு இடைவெளிகள் இப்போது குறைந்துவிட்டன என்றாலும்கூட, இன்னும் பல முக்கியமான ஈழ எழுத்தாளுமைகள் தமிழ்நாட்டில் போதிய அறிமுகம் பெறவில்லை. நந்தினி சேவியரும் அவர்களில் ஒருவர். சிறுகதையாளராக அறியப்படும் அவர் நாவல், கட்டுரைகள், பத்தி எழுத்து என பல வடிவங்களிலும் எழுதியவர். இடதுசாரி அரசியல் செயல்பாட்டாளர். அவரது படைப்புகள் பெரிதும் சமூகப் பிரச்சினைகளையே அடிப்படையாகக் கொண்டவை. தமிழ்நாட்டின் முன்னோடி எழுத்தாளர்கள் மூவரைப் பற்றி நந்தினி சேவியர் எழுதிய ஒப்பீட்டுக் கட்டுரையிலிருந்து, ஒரு பகுதியைத் தனது அஞ்சலியில் குறிப்பிட்டிருக்கிறார் செல்லத்துரை சுதர்சன்.

‘ஜி.நாகராஜனின் கதைகளில் விளிம்புநிலை மக்களின் வாழ்வு ரத்தமும் சதையுமாக வெளிப்பட்டது. அவர் கதைகளில் அவ்வாழ்வின் அருவருப்புகள் அனைத்தையும் மிக வெறுப்போடு படைப்பாக்கினார். வாசகனிடத்தில் அவ்வாழ்க்கையின் மீதான கொடூரத்தனங்களை அருவருப்போடு அம்பலமாக்கினார். ஒருவிதத்தில், இது புதுமைப்பித்தனை அண்மித்த கைங்கரியம். ஜெயகாந்தனிடம் இது மறுதலையாக வெளிப்பட்டது. விளிம்புநிலை மக்களது வாழ்வு, அவர்களது சுற்றுச்சூழல் என்பன மிகவும் அழகியலுடன் வெளிப்பட்டு அவ்வாழ்வு வெறுப்புக்குரியதல்ல, விருப்புக்குரியதென வாசகர்களை நம்பவைத்து அவர்களது வாழ்வு மாற்றப்பட வேண்டும் எனும் தார்மீகக் கோபத்தை எழுப்பத் தவறிய பெரும் தவறை அவரது சிறுகதைகள் செய்திருக்கின்றன.’ (நந்தினி சேவியர், தினக்குரல், 12.11.2006)

ஜெயகாந்தனை ‘இந்திய முற்போக்கு அழகியலின் முகம்’ என்றும் ஜி.நாகராஜனை ‘நவீனத்துவ ஒழுக்கத்தின் குரல்’ என்றும் அடையாளப்படுத்திய ‘பெருநாவலாசிரியர்களால்’ இப்படியொரு அவதானிப்பின் நிழலைக்கூட நெருங்கிவர முடியவில்லை. இலக்கியங்கள் எழுத்தாற்றலை எடுத்துக்காட்டக்கூடியதுதான் என்றாலும் உண்மையான சமூக அக்கறை உள்ளவர்களால் மட்டுமே, அதன் முக்கியத்துவத்தை உணரவும் உணர்த்தவும் முடிகிறது.

(வெள்ளிக்கிழமை சந்திப்போம்)

Related Stories

No stories found.