இதே தேதி... முக்கியச் செய்தி: ஹைதராபாத் விடுதலையடைந்த தினம்!

இதே தேதி... முக்கியச் செய்தி: ஹைதராபாத் விடுதலையடைந்த தினம்!

பிரிட்டிஷாரிடமிருந்து இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னரும் சில சமஸ்தானங்கள் இந்தியாவுடன் இணைய சற்று அவகாசம் பிடித்தது. ஹைதராபாத் நிஜாம் மீர் உஸ்மான் அலி கான் பாகிஸ்தானுடன் ஹைதராபாத் சமஸ்தானத்தை இணைக்க விரும்பினார். அன்றைய ஹைதராபாத் சமஸ்தானத்தில் இன்றைய தெலங்கானா பகுதி, கர்நாடகத்தின் கலபுரகி, பெல்லாரி, ராய்ச்சூர், யாத்கிர், கொப்பல், விஜயநகரம், பீதர் போன்ற பகுதிகளும், மகாராஷ்டிரத்தின் மராட்வாடா பகுதியும் அடக்கம். நிஜாமுக்கு ஆதரவாகக் களமிறங்கிய ரஸாக்கர்கள், ஹைதராபாத் சமஸ்தான மக்கள் மீது கடும் அழுத்தத்தை ஏற்படுத்தியிருந்தனர்.

ஹைதரபாத் சமஸ்தானத்தில் இந்துக்கள் பெரும்பான்மையினராக இருந்தபோதிலும், பாகிஸ்தானுடன் இணைய உஸ்மான் அலி கான் விரும்பியது நேரு தலைமையிலான இந்திய அரசை அதிருப்தியில் ஆழ்த்தியது. அந்தக் காலகட்டத்தில் இந்துக்கள் மட்டுமல்ல, சாமானிய முஸ்லிம்கள் முதல் இஸ்லாமிய பத்திரிகையாளர்கள் வரை பலரும் ரஸாக்கர்களை எதிர்த்து நின்றனர். உருது பத்திரிகையாளர் ஷோய்புல்லா கான் போன்றோர் இதற்காக உயிர்த் தியாகம் செய்தனர்.

ஷோய்புல்லா கான்
ஷோய்புல்லா கான்

அந்தக் காலகட்டத்தில் நாட்டின் முதல் உள் துறை அமைச்சரான சர்தார் வல்லபாய் படேல், ‘ஆபரேஷன் போலோ’ நடவடிக்கையைத் தொடங்கினார். இதற்கிடையே, சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலான மவுண்ட்பேட்டன் பிரபு, இதுகுறித்துப் பேச்சுவார்த்தை நடத்த டெல்லி வருமாறு உஸ்மான் அலி கானுக்கு அழைப்பு விடுத்தார். ஆனால், மாறிவரும் சூழலைப் புரிந்துகொள்ளாமல் பழைய நிஜாம் ஆட்சியாளர்களின் மனநிலையிலேயே இருந்த உஸ்மான் அலி கான், மவுண்ட்பேட்டனை ஹைதராபாதுக்கு அழைத்தார். மவுண்ட்பேட்டன் பிரபு தனக்குப் பதிலாகத் தனது செய்தித் தொடர்பாளரும் பத்திரிகையாளருமான ஆலன் கேம்பல் ஜான்ஸனை ஹைதராபாதுக்கு அனுப்பிவைத்தார். எதிர்பார்த்தது போலவே பேச்சுவார்த்தை சுமுகமாக அமையவில்லை.

இந்திய ராணுவத்தின் வலுவான தாக்குதல்களாலும், பொருளாதார ரீதியிலான முடக்கங்களாலும் வேறு வழியின்றி உஸ்மான் அலி கான் சரணடைய முடிவுசெய்தார். 1948 செப்டம்பர் 17-ல் ஹைதராபாத் இந்திய ராணுவத்திடம் சரணடைந்தது. ஆனால், அந்த தினத்திலிருந்தே இந்திய ஒன்றியத்தின் ஓர் அங்கமாக ஹைதராபாத் மாறியதாகச் சொல்லப்படுவது முழுமையான உண்மை அல்ல. அடுத்தடுத்த நிகழ்வுகளின் தொடர்ச்சியாக ஹைதராபாத் முறைப்படி இந்தியாவுடன் இணைந்தது 1950 ஜனவரி 26-ல் தான். அதுவரை ஹைதராபாதில் ஆங்காங்கு வன்முறைச் சம்பவங்கள் நடக்கவே செய்தன.

இன்றைக்கு ஹைதராபாத் விடுதலை தினம் அரசியல் களத்தின் முக்கிய விவாதப் பொருளாகியிருக்கிறது. தெலங்கானா ஆளுங்கட்சியான தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதியும், எதிர்க்கட்சியான பாஜகவும் இவ்விஷயத்தில் எதிரும் புதிருமாகப் பேசிவருகின்றன. பாஜக தலைமையிலான மத்திய அரசு, இந்த தினத்தை ‘ஹைதராபாத் விடுதலை தின’மாகக் கொண்டாடுகிறது. ஆனால், கே.சந்திரசேகர் ராவ் தலைமையிலான தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி அரசு, இதை ’தேசிய ஒருமைப்பாட்டு தின’மாகக் கொண்டாடுகிறது.

பாகிஸ்தானுடன் இணைய முஸ்லிம் ஆட்சியாளர்கள் மேற்கொண்ட முயற்சியைச் சுட்டிக்காட்டும் பாஜகவினர், முஸ்லிம்களின் அதிருப்தியைச் சம்பாதித்துக்கொள்ளக் கூடாது என்பதற்காகவே ஹைதராபாத் விடுதலை தினம் பெரிதாகக் கொண்டாடப்படுவதில்லை என விமர்சிக்கின்றனர். ஆனால், ஹைதராபாத் விடுதலைப் போராட்டத்தில் இந்துத்துவ அமைப்புகள் பெரிதாகப் பங்கெடுக்கவில்லை என வரலாற்றாய்வாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

எது எப்படி இருந்தாலும், பாகிஸ்தானுடன் இணையவிருந்த ஹைதராபாத் சமஸ்தானம் இந்திய மண்ணுடன் இணைப்பதற்கு வழிவகுத்த இந்த தினத்தை அனைத்துச் சமூகத்தினரும் இணைந்தே கொண்டாடுவோம்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in