இதே தேதி... முக்கியச் செய்தி: ‘வரலாறு என்னை விடுதலை செய்யும்!’

இதே தேதி... முக்கியச் செய்தி: ‘வரலாறு என்னை விடுதலை செய்யும்!’

சில வார்த்தைகள், வாசகங்கள் வரலாற்றின் கல்வெட்டில் அழிக்கவே முடியாத வகையில் பொறிக்கப்பட்டுவிடும். ஆழமான, அழுத்தமான காரணங்கள் அதன் பின்னே இருக்கும். கியூபாவின் மறைந்த முன்னாள் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ நீதிமன்றத்தில் தனக்காக வாதாடியபோது முன்வைத்த ‘வரலாறு என்னை விடுதலை செய்யும்’ எனும் வாசகம் அப்படியானதுதான்.

அடிப்படையில் ஒரு தேசியவாதியான ஃபிடல் காஸ்ட்ரோ, ஒருகட்டத்தில் கம்யூனிஸத்தால் ஈர்க்கப்பட்டார். கம்யூனிஸம் குறித்து அவருக்கு அறிமுகம் செய்தது அவரது தம்பி ரவுல் காஸ்ட்ரோ. சே குவேராவை அவருக்கு அறிமுகம் செய்துவைத்ததும் ரவுல் காஸ்ட்ரோதான். 1959-ல் ஃபிடல் காஸ்ட்ரோ, ரவுல் காஸ்ட்ரோ, சே குவேரா உள்ளிட்டோர் இணைந்து பாடிஸ்டா அரசை வீழ்த்தி ஆட்சியமைத்தது வரலாறு. ஆனால், அதற்கு முன்பாகவே ஒரு புரட்சி செய்தார் ஃபிடல் காஸ்ட்ரோ. அது தோல்வியடைந்ததும், அவர் உட்பட பலர் சிறை சென்றதும் அவரது வாழ்க்கையில் மட்டுமல்ல, கியூப வரலாற்றிலும் முக்கியமான தருணங்கள்.

அமெரிக்க ஆதரவு நிலைப்பாடு கொண்ட பாடிஸ்டா, 1940-களில் கியூபாவின் அதிபராகப் பதவிவகித்தவர். ராணுவப் பின்னணி கொண்ட பாடிஸ்டா, தனது பதவிக்காலத்துக்குப் பின்னர் அமெரிக்காவுக்குச் சென்று நீண்ட காலம் தங்கியிருந்தார். அதன் பின்னர் கியூபாவுக்குத் திரும்பிய அவர், 1952 ஜூன் 1-ல் அதிபர் தேர்தல் நடக்கவிருந்த நிலையில் ராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைப் பிடித்தார்.

அவரது அரசு சட்டபூர்வமானது அல்ல என்று பெரும்பாலான கியூப மக்கள் கருதினர். அவரை எதிர்த்துப் புரட்சி செய்ய முடிவெடுத்தார் ஃபிடல் காஸ்ட்ரோ. அவருடன் சேர்ந்து சுமார் நூற்று சொச்சம் பேர், சான்டியாகோ டி கியூபா நகரில் இருந்த மொன்காடா ராணுவக் குடியிருப்பு மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டனர். அங்கு வைக்கப்பட்டிருந்த ராணுவத் தளவாடங்களைக் கைப்பற்றுவது, அங்கிருந்து செயல்பட்டுவந்த வானொலி நிலையத்தைக் கைப்பற்றி பாடிஸ்டா அரசுக்கு எதிராக அணிதிரள கியூப மக்களுக்கு அழைப்பு விடுவது என முஸ்தீபுகள் பலமாக இருந்தன.

எனினும், 1953 ஜூலை 26-ல் நடந்த அந்தத் தாக்குதல், சரியான திட்டமிடல் இல்லாத காரணத்தால் சொதப்பியது. சுதாரித்துக்கொண்ட ராணுவத்தினர் பதில் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் மொத்தம் 15 ராணுவ வீரர்கள், 3 காவலர்கள் கொல்லப்பட்டனர். புரட்சியாளர்கள் தரப்பில் 11 பேர் உயிரிழந்தனர். பிடிபட்ட 52 பேருக்குப் பிற்பாடு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. ஃபிடல் காஸ்ட்ரோ, ரவுல் காஸ்ட்ரோ உள்ளிட்டோர் கைதுசெய்யப்பட்டனர். அவர்களில் மூவரைத் தவிர மற்றவர்கள் தங்கள் சார்பில் வாதிட மொத்தம் 24 வழக்கறிஞர்களை நியமித்துக்கொண்டனர். அந்த மூவரில் ஒருவர் ஃபிடல் காஸ்ட்ரோ. காரணம், அடிப்படையில் அவரே ஒரு வழக்கறிஞர்தான்.

1953 செப்டம்பர் 21-ல் முதன்முறையாக நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அன்றுதான் தனது தரப்பு நியாயத்தை நீதிமன்றத்தில் அவர் முன்வைத்தார். பாடிஸ்டா அரசு சட்டத்துக்குப் புறம்பானது எனக் கூறிய அவர், கியூப மக்களின் நிலை குறித்தும் விரிவாகப் பேசினார்.

வேலைவாய்ப்பின்மை, கல்வியறிவின்மை, மருத்துவ வசதி, கல்வி வசதியில் முன்னேற்றமின்மை என கியூபா எதிர்கொண்டிருந்த இன்னல்களைப் பட்டியலிட்டார். தொழில் நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு லாபத்தில் பங்கு தர வேண்டும் என்று கோரினார். “என்னைக் கண்டியுங்கள். அது ஒன்றும் முக்கியமானதல்ல” என்றார்.

நான்கு மணி நேரம் நீண்ட அந்த உரை வெறுமனே காஸ்ட்ரோவின் தற்காப்பு வாதம் மட்டுமல்ல; கியூபாவின் எதிர்காலம் குறித்த கனவின் உரை வடிவம். உண்மையில், ‘வரலாறு இவை அனைத்தையும் சொல்லும்’ என்றே தனது வாக்குமூலத்தில் அவர் கூறினார்.

அதே உரையை, தனது சிறை அறையில் அமர்ந்தபடி எழுதியபோது ‘வரலாறு என்னை விடுதலை செய்யும்’ எனும் வாசகத்தை அதில் சேர்த்துக்கொண்டார் காஸ்ட்ரோ. அந்த உரை சிறையிலிருந்து வெளியே கடத்தப்பட்டது மற்றொரு சுவாரசியம். தனது உரையின் ஒவ்வொரு வாசகத்தையும் தீப்பெட்டியின் அட்டையில் எழுதிய காஸ்ட்ரோ, தனது ஆதரவாளரின் உதவியுடன் அதை வெளியே அனுப்பியதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக வெவ்வேறு கதையாடல்கள் உண்டு. அவரது உரை வாசகங்கள் அனைத்தும் தொகுக்கப்பட்டு எழுச்சி உரையாக உருவானது தனி வரலாறு.

என்னதான் உணர்வுபூர்வமாக நீதிமன்றத்தில் முழங்கினாலும், ஃபிடல் காஸ்ட்ரோவுக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ரவுல் காஸ்ட்ரோவுக்கு 13 ஆண்டுகள் சிறைத்தண்டனை கிடைத்தது. மற்றவர்களுக்கும் இதேபோல் சராசரியாக 10 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது நீதிமன்றம். இரண்டு ஆண்டுகள் சிறைவாசத்தைப் புரட்சியாளர்கள் அனுபவித்த நிலையில், அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என மக்கள் மத்தியில் குரல்கள் எழுந்தன. அந்தக் குரல்கள் வலிமையடைந்து அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டதால், வேறு வழியின்றி ஃபிடல் காஸ்ட்ரோ, ரவுல் காஸ்ட்ரோ உள்ளிட்டோரை பாடிஸ்டா அரசு 1955-ல் விடுதலை செய்தது. அங்கிருந்து மெக்ஸிகோவுக்கு அவர்கள் அனுப்பப்பட்டனர்.

எனினும், புரட்சியாளர்கள் தங்கள் தருணத்துக்காகக் காத்துக்கொண்டிருந்தனர். அரசின் ஆதரவுடன் அமெரிக்க நிறுவனங்களால் கூறுபோடப்பட்ட கியூபாவை நினைத்து கொந்தளித்துக்கொண்டிருந்தார் ஃபிடல் காஸ்ட்ரோ. தம்பி ரவுல் காஸ்ட்ரோ, அர்ஜென்டினாவைச் சேர்ந்த புரட்சியாளர் சே குவேரா உள்ளிட்டோருடன் இணைந்து கிரான்மா படகு மூலம் சியர்ரா மேஸ்ட்ரா கடற்கரையை 1956-ல் வந்தடைந்தார் ஃபிடல் காஸ்ட்ரோ. பல இழப்புகள், கடும் போராட்டம் என நீண்ட அவரது புரட்சிக் கனவு 1959 ஜனவரி 1-ல் நனவானது. அன்றுதான் பாடிஸ்டாவின் ஆட்சி வீழ்த்தப்பட்டது. 1959 பிப்ரவரி மாதம் கியூபாவின் பிரதமரானார் ஃபிடல் காஸ்ட்ரோ.

அந்தப் புரட்சிக்குப் பின்னர், “புரட்சி என்பது ரோஜாப் பூக்கள் நிரம்பிய படுக்கை அல்ல. புரட்சி என்பது எதிர்காலத்துக்கும் இறந்த காலத்துக்கும் இடையிலான போராட்டம்” என்று அவர் கூறியதும் புகழ்பெற்ற வாசகமாகப் பதிவானது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in