கானம் பாடிய வானம்பாடிகள் - 4: செந்தமிழ் தேன்மொழியான்!

கானம் பாடிய வானம்பாடிகள் - 4: செந்தமிழ் தேன்மொழியான்!

தமிழ்த் திரை உலகில் கோலோச்சிய நடிகர்களில் மிகவும் முக்கியமான ஆளுமை டி.ஆர்.மகாலிங்கம். அந்தக்கால நடிகர்களுக்குப் பாட்டையும் நடிப்பையும் ஒழுங்கையும் கண்டிப்பையும் சொல்லிக்கொடுத்த பாய்ஸ் கம்பெனியின் பட்டறையில் உருவான ரத்தினம்தான் டி.ஆர்.மகாலிங்கம்.

மதுரை சோழவந்தான் கிராமத்தைப் பூர்விகமாகக் கொண்டிருந்த மகாலிங்கத்துக்குப் படிப்புக்குப் பதில் பாட்டுதான் மிகவும் நன்றாக வந்தது. மிகவும் சிறிய வயதிலேயே நாடக கம்பெனிகளில் பாடுவதற்கும் நடிப்பதற்கும் தன்னைத் தயார் செய்துகொண்டார். பாய்ஸ் கம்பெனியின் நாடகம் ஒன்றில் 12 வயதில் பாடியபடி நடித்த அவரின் திறமையைப் பாராட்டி வியந்தவர் தீரர் சத்தியமூர்த்தி. நாடகத்தைப் பார்த்தோம் போனோம் என்றில்லாமல், சிறுவன் மகாலிங்கத்தின் திறமையை மெச்சி அவரின் பிஞ்சுக் கைவிரலில் மோதிரத்தை அணிவித்து அவர் அழகு பார்த்தார்.

தோல்வியில் தொடங்கிய வெற்றி

நாடகக் கொட்டகைகளிலேயே பெரும்பாலும் தங்கியிருந்த மகாலிங்கம், ஒருமுறை ஏவி.மெய்யப்ப செட்டியாரின் கவனத்துக்கு வந்தார். காத்திரமான குரலில் பாடும் திறமை கொண்டிருந்த மகாலிங்கத்தைக் கண்டு வியந்த அவர், அப்போது தான் எடுத்துக் கொண்டிருந்த `நந்தகுமார்' படத்தின் நாயகனாக்கினார். முதல் படத்திலேயே கிருஷ்ணன் வேடம். `யுக தர்ம முறையே' எனும் அந்தப் படத்தின் பாடலைப் பாடியபடி முதல் காட்சியில் தோன்றிய மகாலிங்கத்துக்கு அந்தப் படம் நல்லதொரு தொடக்கமாக அமையவில்லை. தொடர்ந்து அவர் நடித்தும் பாடியும் வெளியான ‘பக்த பிரகலாதா’, ‘சதிமுரளி’, ‘பரசுராமர்’, ‘பூலோக ரம்பை’ ஆகிய திரைப்படங்களும் அவருக்குத் தோல்விப் படங்களாகவே அமைந்தன.

கிட்டப்பாவின் மறுவுரு

1945-ல் ஏவி.மெய்யப்ப செட்டியார் `ஸ்ரீவள்ளி' எனும் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை அவரின் பாடும் திறமைக்காகவே மகாலிங்கத்திற்கு அளித்தார். அந்தப் படத்தின் நாயகியாக குமாரி ருக்மணி நடித்தார். `ஸ்ரீவள்ளி' நாடகத்தில் எஸ்.ஜி.கிட்டப்பா தன்னுடைய உச்ச ஸ்தாயியில் பாடிய `காயாத கானகத்தே நின்றுலாவும்' பாடலை, அதே ஐந்தரை கட்டை ஸ்ருதியில் மகாலிங்கம் பாடி, முருகனாக திரைப்படத்தில் நடித்ததை ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். மிகவும் இள வயதில் மறைந்துவிட்ட கிட்டப்பாவின் இடத்தை அவரின் தீவிரமான ரசிகர்கள் மகாலிங்கத்துக்கு அளித்தனர்.

ஐம்பது வாரங்களைக் கடந்து ஓடிய `ஸ்ரீவள்ளி' திரைப்படம் மகாலிங்கத்தை நட்சத்திர நடிகராக்கியது. அதைத் தொடர்ந்து இன்னொரு வெற்றிப் படம் 1948-ல் வெளிவந்த `ஞான சௌந்தரி' மகாலிங்கத்தைப் புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றது. அந்தக் காலத்திலேயே ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கிய நடிகராக உயர்ந்தார் மகாலிங்கம்.

தேசப்பற்றின் குரல்

தேசபக்தியைப் பிரதானமாகக் கொண்டு ஏவி.எம் எடுத்த `நாம் இருவர்' வெளியானது. அன்றைக்கு அந்தப் படத்தில் ஒலித்த பாரதியாரின் தேசபக்திப் பாடல்களைப் பற்றித்தான் மக்கள் பேசிக்கொண்டனர். மிகப் பெரிய எழுச்சியை அந்தப் படத்தில் மகாலிங்கத்தின் குரலில் ஒலித்த ‘சோலை மலரொளியோ’, ‘வாழிய செந்தமிழ்’, ‘வெற்றி எட்டுத் திக்கும் கொட்ட’, ‘விட்டு விடுதலையாகி’ போன்ற பாரதியார் பாடல்கள் ஏற்படுத்தின.

மதுரை திரையரங்கிற்கு டி.ஆர்.மகாலிங்கம் வந்தபோது, ரசிகர்கள் தங்களின் தோள்களில் அவரைத் தூக்கிவைத்துக் கொண்டு நடனமாடினார்கள். ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்ட மகிழ்ச்சி ஒருபக்கம் இருந்தாலும், டி.ஆர்.மகாலிங்கத்தின் குரலுக்கும் அந்த மகிழ்ச்சியில் பெரும் இடம் இருந்தது. இதே நிறுவனத்தின் ‘வேதாள உலகம்’ படத்திலும் ஏராளமான பாரதியார் பாடல்கள் இடம்பெற்றிருந்தன. ‘செந்தமிழ் நாடென்னும் போதினிலே’, ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’ போன்ற பாடல்கள் டி.ஆர்.மகாலிங்கத்தின் குரலில் அந்நாளில் பெரும் வரவேற்பைப் பெற்றன.

சொந்தப்பட மோகம்

இந்தச் சமயத்தில்தான் எல்லா திரை நட்சத்திரங்களும் செய்யும் மாபெரும் தவறை மகாலிங்கமும் செய்வதற்குத் துணிந்தார். 1950-ல் ‘ஸ்ரீசுகுமார் புரொடக்‌ஷன்ஸ்’ என்னும் பெயரில் சொந்தமாகத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார். `மச்சரேகை' என்ற படத்தைத் தயாரித்து நடித்தார். தொடர்ந்து அவர் தயாரித்து நடித்த `சின்னத்துரை', `விளையாட்டு பொம்மை' போன்ற படங்களில் `நிலவே நீதான்', `தீர்த்தக்கரையினிலே' போன்ற பாடல்கள் இன்றும் பேசப்பட்டாலும், அன்றைக்கு அவை தோல்விப் படங்களாகவே முடிந்தன. 1950-களில் பெரிய செல்வந்தராக வகை வகையான கார்கள், பங்களா என இருந்தவர், அடுத்தடுத்த தோல்விகளால் ‘மஞ்சள் நோட்டீஸ்' கொடுக்கும் நிலைக்கும் தள்ளப்பட்டார்.

கைகொடுத்த கவியரசு

தோல்வி தந்த வலியாலும் பொருளாதார ரீதியாகவும் எதிர்காலமே கேள்விக்குறியாகி துவண்டிருந்த மகாலிங்கத்துக்கு வாய்ப்பு கொடுத்து தூக்கி நிறுத்தியவர் கவியரசு கண்ணதாசன்.

அவர் முதன்முதலாக எடுத்த சொந்தத் திரைப்படம் `மாலையிட்ட மங்கை'. அந்தப் படத்தில் மகாலிங்கம் நடிப்பதைத் தடுக்க பலர் முயற்சித்தனர். ‘மகாலிங்கம் திரைத் துறையிலிருந்தே காணாமல் போய்விட்டார், அவர் அவ்வளவுதான்...அவரைப் படத்தில் நடிக்க வைக்காதீர்கள்’ எனப் பலரின் எச்சரிக்கைகளையும் பொருட்படுத்தாமல் மகாலிங்கத்தைக் கதாநாயகனாக்கினார் கண்ணதாசன். இசை: விஸ்வநாதன் - ராமமூர்த்தி. இந்தப் படத்தில் இன்றைக்கும் எல்லோரையும் கவர்ந்த ‘செந்தமிழ் தேன்மொழியாள்’ எனும் உச்ச ஸ்தாயியில் ஒலிக்கும் பாடலோடு, டி.ஆர்.மகாலிங்கத்தால் குறைந்த ஸ்தாயியிலும், `நானன்றி யார் வருவார்', `எங்கள் திராவிடப் பொன்னாடே' போன்ற பாடல்களைப் பாடவைத்தனர் மெல்லிசை மன்னர்கள். படம் மிகப் பெரிய வெற்றியை அடைந்தது. தொடர்ந்து 1959-ல் வெளியான ‘அமுதவல்லி’ படத்தில் பாடிய `ஆடை கட்டி வந்த நிலவோ' இன்றைக்கும் இசைப் போட்டிகளில் கவனம் ஈர்க்கும் பாடலாக அந்தஸ்தோடு இருக்கிறது.

ஜனரஞ்சகத்தையும் கைகொண்ட குரல்

1960-ல் வெளிவந்த ‘ஆடவந்த தெய்வம்’ படத்தில் மகாலிங்கம் பாடிய `மழை கொட்டு கொட்டு கொட்டுது பாரு இங்கே' பாடல் மிகப் பிரபலம். 1965-ல் ‘திருவிளையாடல்’ படத்தில் இடம்பெற்ற `இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை' போன்ற பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன. 1972-ல் ‘அகத்தியர்’ படத்தில் சீர்காழியோடு சேர்ந்து நடித்தார். இதில் `ஆண்டவன் தரிசனமே', `இசையாய் தமிழாய் இருப்பவனே', `தஞ்சை பெரிய கோயில் பல்லாண்டு வாழ்கவே' ஆகிய பாடல்கள் குன்னக்குடி வைத்தியநாதன் இசையில் பிரபலமாகின.

மீண்டும் ஏறிய மேடை

நாடக நடிகராகப் பாடி நடிப்பதையே தன் இறுதிமூச்சு வரை கொள்கையாக வைத்திருந்தார் மகாலிங்கம். திரைப்படத் துறையில் புராணகால படங்கள் குறைந்து சமூகப் படங்கள் அதிகம் எடுக்கப்பட்டன. புதிய இயக்குநர்கள், புதிய தொழில்நுட்பங்கள் திரைப்படத் துறையில் நுழைந்ததால் நிறைய மாற்றங்கள்.’நடிகர்களுக்குப் பாடும் திறன் இல்லாவிட்டால் பரவாயில்லை, அவர்கள் வாயசைத்தால் போதும்' எனும் போக்கை மகாலிங்கத்தால் இயல்பாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. ‘யாருக்கும் நான் பின்னணி பாடமாட்டேன்’ என்பதில் உறுதியாக இருந்தார்.

வெற்றி பெற்ற நாயகனாக வலம்வந்த மகாலிங்கம் இறுதி காலத்தில் மீண்டும் நாடகங்களில் நடித்தார். ஏறக்குறைய 40 ஆண்டுகாலத் திரை வாழ்வில் அவர் பாடிய பாடல்கள், இன்றைக்கும் அவரின் புகழை இசையாய், தமிழாய் பொழிந்துகொண்டே இருக்கின்றன!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in