கானம் பாடிய வானம்பாடிகள் - 3: எம்.கே.டி எனும் மூன்றெழுத்து இசை!

எம்.கே.தியாகராஜ பாகவதர்
எம்.கே.தியாகராஜ பாகவதர்

'மன்மத லீலையை வென்றார் உண்டோ', 'தீன கருணாகரனே நடராஜா', 'சொப்பன வாழ்வில் மகிழ்ந்தே', 'வதனமே சந்திரபிம்பமோ'... இப்படி காலத்தால் அழிக்க முடியாத பாடல்களை மூச்சுவிட முடியாத நிலையிலும் உங்களின் வீட்டில் ஒரு முதியவர் முணுமுணுக்கிறார் என்றால் அவர் அந்தக்கால பாகவதரின் அக்மார்க் ரசிகர் என்று அர்த்தம்.

’அம்பிகாபதி’ திரைப்பட படப்பிடிப்பு
’அம்பிகாபதி’ திரைப்பட படப்பிடிப்பு

தமிழ்த் திரைப்பட வரலாற்றில் வாழும் போதும் வாழ்க்கைக்குப் பிறகும் கொண்டாடப்படும் கலைஞர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனால், வசீகரம், நடிப்பாற்றல், பாடும் திறமை இப்படி அனைத்தையும் தன்னகத்தே கொண்டவராக, கலையின் ஒட்டுமொத்த உருவமாக தமிழ்த் திரையுலகில் கோலோச்சிய நட்சத்திர அந்தஸ்து பெற்ற ஒரே கலைஞர் என இன்றைக்கு இருப்பவர்களும் கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொள்ளும் ஒரே கலைஞர் எம்.கே.தியாகராஜ பாகவதர்.

வழிகாட்டிய இசையும் நடிப்பும்

அன்றைக்கு இருந்த புகழ்பெற்ற கலைஞர்களைப் போலவே எம்.கே.டி-க்கும் நாடகத்தின் வழியாகவே கலைத் துறைக்குள் நுழையும் வாய்ப்பு வந்தது. இயல்பிலேயே மிகவும் காத்திரமான குரல் வளம் அவருக்கு வாய்த்திருந்தது. நடேசன் அய்யர் திருச்சியில் நடத்திவந்த நாடக சபாவில் அரங்கேற்றிய `அரிச்சந்திரா' நாடகத்தில் அரிச்சந்திரனின் மகன் லோகிதாசனாக எம்.கே.டி நடித்ததுதான் அவரது முதல் நாடகப் பிரவேசம்.

அந்த நாடகத்தைப் பார்க்க வந்திருந்த பிரபல வயலின் வித்தகர் பொன்னு அய்யங்கார், உச்ச ஸ்தாயியிலும் பிசிறுதட்டாமல் பாடிய தியாகராஜனின் குரல் வளத்தைப் பாராட்டினார். அவருக்கு முறையாகக் கர்னாடக இசையை கற்றுத் தந்தார். ஒருபுறம் வயலின் கலைஞரின் இசைப் பயிற்சி, இன்னொரு புறம் பிரபல நடராஜ வாத்தியாரிடமிருந்து நடிப்புப் பயிற்சி என இரண்டும் ஒருசேர பாட்டிலும் நடிப்பிலும் தன்னுடைய திறமையைப் படிப்படியாக மெருகேற்றிக்கொண்டார் தியாகராஜன். பாட்டிலும் நடிப்பிலும் தலைசிறந்தவராக தியாகராஜன் எதிர்காலத்தில் பிரகாசிப்பார் என்று வாழ்த்திய நடேச அய்யர் வழங்கிய பாகவதர் பட்டமே, தியாகராஜனின் பெயரோடு இறுதிவரை பயணித்தது.

‘சத்தியசீலன்’ திரைப்படத்தில்...
‘சத்தியசீலன்’ திரைப்படத்தில்...

1926-ல் அரங்கேற்றப்பட்ட `பவளக்கொடி' நாடகத்தில்தான் நாயகனாக முதன்முதலாக எம்.கே.டி தோன்றி நடித்தார். டி.பி.ராமகிருஷ்ணன் என்பவர் இந்த நாடகத்தில் ஸ்திரீபார்ட் வேடமேற்று நாயகியாக தோன்றினார். இதே பவளக்கொடி நாடகத்தில் பின்னாளில் நாயகியாக எஸ்.டி.சுப்புலட்சுமி நடித்தார். அந்தக் காலத்தில் ரசிகர்களின் மனங்கவர்ந்த நாடக ஜோடிகளாக எம்.கே.டி - எஸ்.டி.சுப்புலட்சுமி ஒரு பக்கமும், எஸ்.ஜி.கிட்டப்பா - கே.பி.சுந்தராம்பாள் இன்னொரு பக்கமும் வலம் வந்தனர். பின்னாளில் எஸ்.ஜி.கிட்டப்பா, கே.பி.சுந்தராம்பாள் தம்பதிகளாக நடித்தனர்.

எம்.கே.டி-யின் ஸ்பெஷல்

அந்நாளில் புகழ்பெற்ற நாடக நடிகர்கள் ஏதாவது ஒரு சபாவில் மாதச் சம்பளம் வாங்கும் கம்பெனி ஆர்ட்டிஸ்ட்களாக இருந்தனர். ஆனால், அப்போதே எம்.கே.டி எந்தவொரு நாடக சபாவிலும் தன்னை முழுநேர நடிகனாக்கிக்கொள்ளவில்லை. அதனாலேயே அந்த நாளில் அவர் நடிக்கும் நாடகங்கள் `ஸ்பெஷல் நாடகம்' எனும் அந்தஸ்தைப் பெற்றன.

‘ஹரிதாஸ்’
‘ஹரிதாஸ்’

நாடகத்தில் எம்.கே.டி-யை நாயகனாக உயர்த்திய `பவளக்கொடி'யே லேனா செட்டியாரால் திரைப்படமாக எடுக்கப்பட்டது. அதிலும் எம்.கே.டி-யே நாயகனானார். தமிழ்த் திரைப்பட உலகில் திருப்புமுனை ஏற்படுத்திய கே.சுப்பிரமணியம் இயக்கத்தில் இந்தப் படம் 1934-ல் வெளியானது. ஏறக்குறைய 25 ஆண்டுகால எம்.கே.டி-யின் திரை வாழ்க்கையில் அவர் பதினைந்து, பதினாறு திரைப்படங்களில்தான் நடித்திருப்பார். ஆனால், அவற்றில் பெரும்பாலான படங்கள் படைத்திருக்கும் சாதனையை இன்று வரை எந்தத் திரைப்படமும் முறியடிக்கவில்லை. எம்.கே.டி நடித்த ‘ஹரிதாஸ்’ திரைப்படம் மூன்று தீபாவளிகள் கடந்து சென்னை, பிராட்வே திரையரங்கில் புரிந்திருக்கும் சாதனை வரலாறாகியிருக்கிறது.

தேச சேவை

தொழிலில் திறமையோடு இருப்பது, சூழல்களுக்கு ஏற்ப பொருந்திப்போவது, கலையின் பல நுட்பங்களையும் தெரிந்துகொள்வது, தொடர்ந்து பயிற்சிகள், புதுப்புது முயற்சிகளில் தன்னுடைய திறனை மெருகேற்றிக்கொள்வது போன்றவற்றில் எல்லாம் சிறந்து விளங்குவதைத் தாண்டி, தான் வாழும் காலத்தில் தேசப்பற்று மிகுந்தவராகவும், தன்னுடைய கலைச் சேவையின் மூலம் சுதந்திரப் போராட்டங்களுக்கான நிதிகளைச் சேர்ப்பதில் ஆர்வமுள்ளவராகவும் இருந்தார் எம்.கே.டி.

தன்னுடன் சம காலத்தில் வாழ்ந்த கலைஞர்களுடனும் பிற துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள், கலைஞர்களுடன் இணக்கமான நட்பு கொண்டிருந்தார். கலை வாழ்வில் மனிதநேயமிக்க மனிதராகவும் எம்.கே.டி-யை எதிர்காலத் தலைமுறை அடையாளம் கண்டுகொள்ளும் எண்ணற்ற சம்பவங்கள் நடந்திருக்கின்றன.

மனித நேயத்தின் வடிவம்

புகழின் உச்சியில் எம்.கே.டி இருந்த காலத்தில் அவர் நடித்த `சிவகவி' திரைப்படம் வெளிவந்தது. இந்தப் படத்தில் ஜி.ராமநாதனின் இசையில் ரதிபதிப்ரியா எனும் அபூர்வ ராகத்தில் `மனம் கனிந்தே' என்னும் பாடலையும் அதியற்புதமாக எம்.கே.டி. பாடியிருப்பார். ஆனால், அந்தப் படத்தின் ஒலிப் பேழையில் இந்தப் பாடல் இடம்பெற்றிருக்கவில்லை. காரணம், அதே அபூர்வ ரதிபதிப்ரியா ராகத்தில் ஒரு பாடலைப் பாடி வெளியிடும் யோசனையில் தண்டபாணி தேசிகர் இருந்தார்.

’சிவகவி’ திரைப்படத்தில்...
’சிவகவி’ திரைப்படத்தில்...

“தங்களின் `சிவகவி' ரெக்கார்டில் இதே ராகத்தில் அமைந்த பாடல் வெளிவந்தால், என்னுடைய பாடல் எடுபடுமா?" என்ற சந்தேகத்தை பாகவதரிடம் தேசிகர் தெரிவித்திருக்கிறார். அதில் இருக்கும் நியாயத்தை உணர்ந்த எம்.கே.டி, `சிவகவி' ரெக்கார்டில் ரதிபதிப்ரியா ராகத்தில் அமைந்த அந்தப் பாடலை மட்டும் தவிர்க்கும்படி கேட்டுக்கொண்டார். இதைத் தொடர்ந்து அந்தப் பாடல் தவிர்க்கப்பட்டது. சக கலைஞரின் வேண்டுகோளை ஏற்ற எம்.கே.டி-யின் பெருந்தன்மையான முடிவால், தண்டபாணி தேசிகரின் ரதிபதிப்ரியா ராகத்தில் அமைந்த `ஜகத் ஜனனி சுகபாணி கல்யாணி' எனும் ஒலிப் பேழை மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றது.

தியாகராஜ பாகவதருடன் ராஜா சாண்டோ
தியாகராஜ பாகவதருடன் ராஜா சாண்டோ

தன்னுடைய வெற்றியை மட்டுமே நினைக்காமல் சக கலைஞரின் வெற்றிக்காகவும் வாழ்ந்த எம்.கே.டி எனும் மூன்றெழுத்து இசை, ரசிகர்களின் மனத்தில் என்றென்றைக்கும் நிலைத்து நிற்கும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in