கானம் பாடிய வானம்பாடிகள் - 2: இசை அரசி எம்.எஸ்!

கானம் பாடிய வானம்பாடிகள் - 2: இசை அரசி எம்.எஸ்!

பயிற்சியும் முயற்சியும் இருந்தால் எவராலும் எந்தத் துறையிலும் சாதிக்க முடியும் என்பதற்கு எளிய உதாரணமாகத் திகழ்ந்தவர் எம்.எஸ்.சுப்புலட்சுமி எனும் மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி. அன்னை சண்முகவடிவே சுப்புலட்சுமியின் முதல் குரு. பின்னாளில் செம்மங்குடி சீனிவாசய்யரிடம் பயிற்சி பெற்றார். பல பிரபல வித்வான்களிடமிருந்து பல உருப்படிகளை இசை முறைமைகளைக் கற்றுக்கொண்டு தன்னுடைய கலையைத் தானே வளர்த்துக்கொண்ட சுயம்பு எம்.எஸ்.சுப்புலட்சுமி.

உச்சரிப்பில் நேர்த்தி

பாடப்படும் பாடல் அருணகிரியாரின் திருப்புகழாக இருந்தாலும் சரி, `அபங்' ஆக இருந்தாலும் சரி, முத்துசுவாமி தீட்சிதரின் சம்ஸ்கிருத கீர்த்தனையாக இருந்தாலும் சரி, தியாகராஜர், அன்னமாச்சார்யா கீர்த்தனைகளாக இருந்தாலும் சரி, ஜெயதேவரின் அஷ்டபதியாக இருந்தாலும் சரி, அதற்கு நூறு சதவீதம் உண்மையாக இருந்த கலைஞர் எம்.எஸ்.சுப்புலட்சுமி. அவருக்கு இயல்பிலேயே தாய்வழியில் வந்திருந்த சொத்தான ஸ்ருதி ஞானத்தால், இசையின் எந்தப் பாணியை அவர் தொட்டாலும் துலங்கியது.

புரட்சியான கதாபாத்திரம்

வாழ்க்கைத் துணையாக வந்தவர் சரியில்லாமல் போக, அதிலிருந்து மீண்டு எழும் ஒரு பெண், சமூக சேவையைப் பிரதானமாகக் கொண்டு வீறுகொண்டு எழும் கதைக்களத்தை அடிப்படையாகக் கொண்டு 1938-லேயே திரையில் புரட்சி ஏற்படுத்திய திரைப்படம் `சேவா சதனம்'.

கே.சுப்பிரமணியம் இயக்கிய அந்தப் படத்தில் பாபநாசம் சிவன் இசையில் `என்ன செய்வேன்', `குஹ சரவணா', `உன்னுருவம்', `ஆதரவற்றவர்க்கெல்லாம்', `நீது சரணா', `மா ரமணன்', `சியாம சுந்தரா', `ஒரு நாளும் இந்த உடலை' ஆகிய பாடல்களை எம்.எஸ்.சுப்புலட்சுமி பாடினார். அந்தப் படத்தில் அவரே கதாநாயகியாக நடித்தும் இருந்தார். அப்படத்தின் பாடல்கள் அவருக்குப் பெரும் புகழை ஈட்டித்தந்தன. அப்படத்துக்காக அவர் பாடிய பல பாடல்களில் இரண்டு, கச்சேரியிலும் திரும்பத் திரும்பப் பாடப்பட்டன. ஒன்று, சிம்மேந்திர மத்தியம் ராகத்திலான ‘இகபரமெனும்’. இரண்டாவது, ஹிந்தோளத்தில் ‘மாரமணன்’. இரண்டும் பாபநாசம் சிவன் எழுதிய பாடல்கள்.

மீராவாகிப்போன எம்.எஸ்!

தன்னியல்பில் இறை பக்தியும் சிரத்தையும் கொண்டிருந்த எம்.எஸ், 'மீரா' திரைப்படத்தில் மீரா கதாபாத்திரத்தில் பாந்தமாகப் பொருந்தினார். அந்தப் படத்தின் மூலம் மீரா பஜன்கள் தென்னாட்டிலும் செல்வாக்கு பெறுவதற்கு காரணமாக இருந்தார். அந்தப் படத்தில் அவர் பாடிய ‘அரங்கா உன் மகிமையை’, ‘பிருந்தாவனத்தில்’, ‘தேவிகா தமிழ் நாட்டினிலே’, ‘எனதுள்ளமே’, ‘எங்கும் நிறைந்தாயே’, ‘கிரிதர கோபாலா’, ‘ஹே ஹரே’ போன்ற பாடல்கள் வடக்குக்கும் தெற்குக்கும் பாலம் அமைத்தன.

‘சாவித்திரி’ என்ற படத்தில் நாரதர் வேடம் அணிந்து, மேகக் கூட்டத்தோடு உலாவியபடி ‘புரூஹி முகுந்தேதி’ என்று பாடிக்கொண்டு திரையில் எம்.எஸ்.சுப்புலட்சுமி பிரவேசித்தது. அந்நாளில் பெரிய புரட்சியாகப் பேசுபொருளானது.

இசைத்தட்டில் சாதனை

ஆலாபனை, பாட்டு, ஸ்வரம் பாடுவது, தனி ஆவர்த்தனம் இத்தனையையும் செய்து முடிப்பதற்கு மேடையில் குறைந்தது 30 நிமிடங்களாவது தேவை. ஆனால் எம்.எஸ்., 78 ஆர்.பி.எம். இசைத் தட்டில் ‘கண்ணெடுத்தாகிலும் காணீரோ’ எனும் தனிப்பாடலை ஆறே நிமிடங்களில் ஒரு கச்சேரியில் பாடப்படும் விறுவிறுப்புக்கு சற்றும் குறைவில்லாமல் பாடி சாதனை படைத்தார்.

இசைத்தட்டில் பக்கத்திற்கு மூன்று நிமிடங்களாக ஆறு நிமிடங்கள். இந்த ஆறு நிமிடங்களில் ராக ஆலாபனை, பாட்டு, சங்கதி, ஸ்வரம், மிருதங்க தனி ஆவர்த்தனம் எல்லாவற்றையும் முடித்துவிட்டார் எம்.எஸ்!

ஏழைக்கு இரங்கும் குணம்

இறை பக்தியில் ஈடுபாடு காட்டிய அளவுக்கு, சக மனிதர்களிடத்தில் கருணையைக் காட்டினார் எம்.எஸ். கஸ்தூரிபா அறக்கட்டளைக்காகவும் ஆதரவற்ற ஏழைக் குழந்தைகளின் கல்வி, மருத்துவத்துக்காகவும் நாடு முழுவதும், உலகம் முழுவதும் எண்ணற்ற நிகழ்ச்சிகளை நடத்தி நிதி திரட்டி அளித்திருக்கிறார். பணிவு, தன்னடக்கம், நேர்மை, பெருந்தன்மை ஆகிய குணங்களின் சிகரமாகத் திகழ்ந்தார்.

GRJGM

இதயத்தைத் தொடும் இசை

உலக அமைதியை வேண்டி காஞ்சி பரமாச்சாரியர் அருளிய `மைத்ரீம் பஜத' பாடலை ஐக்கிய நாடுகள் சபையில் அரங்கேற்றிய சமாதானப் புறா நம்முடைய எம்.எஸ்.சுப்புலட்சுமி.

எம்.எஸ் பாடிய பாடல்களை ரசிப்பதற்கு இசையின் நுணுக்கங்கள், விதிகள், கணக்கு வழக்குகள், இலக்கணங்கள் எல்லாம் தெரிந்திருக்க வேண்டும் என்று அவசியமில்லை. அவரின் இசை கேட்டமாத்திரத்தில், நம்முடைய இதயத்தைத் தொடும் வல்லமை கொண்டது. அதனால்தான் அவரது பாடல்கள் தேச எல்லைகளைக் கடந்து அமெரிக்கா, ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா என பரவியது. உலகத்தின் எந்த மூலையில் இருக்கும் ரசிகர்களுக்காகவும் `வைஷ்ணவ ஜனதோ' பாடலைப் பாடிக்கொண்டே இருந்தார்.

15-ம் நூற்றாண்டுக் கவிஞரான அன்னமாச்சாரியரின் பாடல்களை பாடி அவற்றின் புகழ் பரப்பினார் எம்.எஸ். அருணகிரிநாதர், கோபாலகிருஷ்ண பாரதி, தாகூர், கபீர், சூர்தாஸ், ஜெயதேவர், துளசிதாசர், சைதன்ய மகாபிரபு ஆகியோரின் பாடல்களையும் அதிகம் பாடினார். இசையின் மூலம் உலக மக்களுக்கு இறைவனின் அருளையும் அமைதியையும் கிடைக்கச் செய்த எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு பத்ம விருதுகளும் நாட்டின் உயரிய விருதான `பாரத் ரத்னா' விருதும் மதிப்பு செய்து பெருமைப்படுத்தின.

(வானம்பாடிகள் வருவார்கள்...)

பெட்டிச் செய்தி:

இசை அரசியின் வாழ்க்கைப் பயணம்!

1916 செப்டம்பர் 16-ல் பிறந்தார்.

1938 ‘சேவாசதனம்’ படத்தின் கதாநாயகி.

1940 ஜூலை 10 டி.சதாசிவத்தை மணந்தார்.

1966 ஐக்கிய நாடுகள் சபையில் பாடினார்.

1968 மியூசிக் அகாடமியில் ‘சங்கீத கலாநிதி’ விருது பெற்றார்.

1974 பொதுத் தொண்டுக்காக ‘மகசேசே’ விருது பெற்றார்.

1998 இந்தியாவின் மிக உயரிய விருதான ‘பாரத ரத்னா’ விருது பெற்றார்.

2004 டிசம்பர் 11-ல் மறைந்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in