கானம் பாடிய வானம்பாடிகள் -1: பட்டம்மாள் எனும் பாட்டம்மாள்!

இசைப் பேராளுமைகளைப் பேசும் புதிய தொடர்
டி.கே.பட்டம்மாள்
டி.கே.பட்டம்மாள்

எண்ணற்ற இசை வாணர்களாலும் சாகித்யகர்த்தாக்களாலும் நிறைந்த புண்ணிய பூமி இந்தியா. பக்தியை, நிலப்பரப்பின் பெருமைகளை, பண்பாட்டை வாழையடி வாழையாகப் பாடிக் கொண்டாடிவரும் பாணர் மரபின் வழித்தோன்றல்களான பாடகர்களை கர்னாடக இசை, இந்துஸ்தானி இசை, திரை இசை என்னும் எல்லைகளைக் கடந்து பாராட்டி அவர்களின் சாதனைகளை இளைய தலைமுறையினருக்கு எடுத்துச் சொல்வதே இந்தத் தொடரின் முதன்மை நோக்கம். அந்த வரிசையில் இதோ சுதந்திர இந்தியாவின் காற்றில் ஜெயபேரிகையைக் கொட்டிய கான சரஸ்வதி டி.கே.பட்டம்மாள் பற்றிய பதிவு உங்கள் முன்!

பட்டம்மாள்: சுதந்திர இந்தியாவின் முதல் குரல்!

1947 ஆகஸ்ட் 14 அன்று நள்ளிரவில் 12 மணிக்கு நமது பாரத தேசம் சுதந்திரம் அடைந்த தருணத்தில் தேசிய - தேச பக்திப் பாடல்களைப் பாடி பாரத மாதாவிற்கு அஞ்சலி செலுத்தினார் டி.கே.பட்டம்மாள் எனும் தாமல் கிருஷ்ணசாமி பட்டம்மாள். சுதந்திர இந்தியாவில் வானொலியில் ஒலித்த முதல் குரல் அவருடையதுதான். இசைக்காகக் குடும்பத்தையும் குடும்பத்துக்காக இசையையும் இறுதிவரை விட்டுக்கொடுக்காமல் இரண்டையும் அரவணைத்தவர்; கர்னாடக இசையின் உன்னதத்தையும் உறவுகளின் மாண்பையும் தேசப்பற்றையும் போற்றிப் பெருவாழ்வு வாழ்ந்தவர் டி.கே.பட்டம்மாள்.

ராஜபாட்டையில் பட்டம்மாள்

மேடையில் பெண்கள் பாடுவதற்குப் பலத்த எதிர்ப்புகள் இருந்த காலத்தில் ஆச்சாரமான குடும்பத்திலிருந்து வந்த பட்டம்மாள், பாடுவதற்காக மேடையேறி இசைத் துறையில் பல பெண்களுக்கு முன்னுதாரணமாக விளங்கினார். அந்த வகையில் மேடையில் பெண்கள் பாடுவதற்கான ராஜபாட்டையைப் போட்டுத்தந்த பெருமையும் அவரையே சேரும்!

காஞ்சிபுரம் அடுத்த தாமல் என்ற ஊரில் பிறந்தவர் பட்டம்மாள். திருப்பதி வெங்கடாசலபதியை வேண்டிப் பிறந்த குழந்தை என்பதால் `அலமேலு’ என்ற பெயரை அவரின் தந்தை கிருஷ்ணசாமி தீட்சிதர் வைத்தார். சிறு வயதிலேயே மகளுக்கு சம்ஸ்கிருத ஸ்லோகங்கள், முகுந்த மாலை, சியாமளா தண்டகம், கிருஷ்ண கருணாம்ருதம் போன்றவற்றைக் கற்றுத்தந்தார். அலமேலுவைச் செல்லமாக ‘பட்டா’ என்றே அனைவரும் அழைத்தனர். அந்தப் பெயரே அவருக்கு நிலைத்துவிட்டது. நான்கு வயதிலேயே மிகவும் அரிதான சம்ஸ்கிருதப் பாடல்களை பாடத் தொடங்கினார் பட்டம்மாள். “என் மகளின் இசைத் திறமை சுடர் விட்டுப் பிரகாசிப்பதற்கு, அவளை 3 மாதக் குழந்தையாக இருந்தபோது ரமணரிடம் அழைத்துச் சென்றதும், ரமணர் குழந்தையின் நாக்கில் தேன் தடவி ஆசிர்வதித்ததுமே காரணம்” என்பாராம் பட்டம்மாளின் தந்தை கிருஷ்ணசாமி தீட்சிதர்.

மாணவியின் திறனைக் கண்டுணர்ந்த ஆசிரியை

முறையான பயிற்சி இல்லாததால் பட்டம்மாளை மேடையில் பாடவைப்பதற்கு பெரிதும் தயங்கினார் அவருடைய தந்தை. ஆனால், பட்டம்மாளின் இசைத் திறமையின் மீது முழு நம்பிக்கை வைத்திருந்தார் அவர் படித்த பள்ளியின் தலைமை ஆசிரியை அம்முகுட்டி அம்மாள். அவர்தான் பட்டம்மாளின் திறமை குறித்து எடுத்துக் கூறி மேடையில் பாடுவதற்குச் சம்மதிக்க வைத்த பெருமைக்கு உரியவர். பட்டம்மாள் மேடையேறுவதற்கு ஊக்கம் தந்த இன்னொரு பிரமுகர் டாக்டர் பி.எஸ்.சீனிவாசன் அய்யர். இவர்கள் அமைத்துத் தந்த அடித்தளத்தால் பத்து வயதிலேயே `காம்பவுண்ட் ரேடியோ’வில் பாடிவிட்டார் பட்டம்மாள்.

கற்பூர புத்தி

முறையாகக் கர்னாடக இசை கற்க வாய்ப்பு இல்லாவிட்டாலும் ஒருவர் ஒருமுறை பாடும் பாடலையும் ராகத்தையும் கேட்டு அதைப் பாடிப் பார்த்து பழகிக்கொள்வார்களாம் பட்டம்மாளும் அவருடைய சகோதரர்களும். அப்படித்தான் கச்சேரிகளில் பிரபல பாடகர்கள் பாடும் பாடல்களைக் கேட்டே திறமையை வளர்த்துக்கொண்டார் பட்டம்மாள். குறிப்பாக, காஞ்சிபுரம் நாயனா பிள்ளையின் கச்சேரிகள் அவருக்கு மிகப் பெரிய உத்வேகத்தை அளித்தன. அரியக்குடி ராமானுஜ அய்யங்கார் பாடும் பாடல்களையும் பாடாந்தரம் செய்வார். அதிகாலை நாலரை மணிக்கு எழுந்து, விடாமுயற்சியுடன் சாதகம் செய்வார்.

பட்டம்மாளின் சகோதரர்களும் சிறந்த பாடகர்கள். பின்னாளில் பாபநாசம் சிவனிடம் கீர்த்தனைகளைக் கற்றுக்கொண்டார் பட்டம்மாள். கோடீச்வர அய்யரிடமும் பயிற்சி பெற்றார். அய்யாதுரை ஆச்சாரியாரிடம் திருப்புகழ் கற்றுக்கொண்டார். அம்பி தீட்சிதரிடம் முத்துசுவாமி தீட்சிதரின் கிருதிகளைப் பாடுவதற்குக் கற்றுக்கொண்டார். இந்தப் பாடாந்தரத்தால்தான் பாடல்களை எழுதிவைத்துப் பார்த்து பாடாதவர் பட்டம்மாள் எனும் புகழை அவருக்குத் தந்தது.

மகாத்மாவிடம் கிடைத்த மகத்தான பாராட்டு

காந்திஜி, காஞ்சிபுரம் வந்தபோது, 16 வயதில் பாரதியாரின் `வீரசுதந்திரம் வேண்டி’ பாடலைப் பாடி அவரின் பாராட்டைப் பெற்றார் பட்டம்மாள். 1929-ல் முதன்முறையாக வானொலியில் பாடினார். 1932-ல் எழும்பூர் மகளிர் மன்றத்தில் அவரது முதல் கச்சேரி அரங்கேறியது. காங்கிரஸ் கூட்டங்களில் தேசபக்திப் பாடல்களைப் பாடினார். தமிழ்க் கீர்த்தனைகளைப் பிரபலமடையச் செய்தார். அவரது பாடல்கள் இடம்பெற்ற கிராமஃபோன் தட்டுகள் ஏராளமாய் விற்றன.

முன்னணி ஆனதன் பின்னணி

பட்டம்மாளின் பிறந்த வீட்டைப் போன்றே அவருக்கு அமைந்த புகுந்த வீடும் அவரின் திறமையைக் கொண்டாடி மகிழ்ந்தது. பட்டம்மாளின் திறமையை முழுமையாக உணர்ந்த அவருடைய கணவர் ஈஸ்வரன் அய்யர், தான் பார்த்துவந்த அரசுப் பணியிலிருந்தும் தன்னை விடுவித்துக்கொண்டு, மனைவிக்கு உறுதுணையாக நின்றார்; எந்தத் துன்பமும் வராமல் பார்த்துக்கொண்டார். இன்றைக்கு நான்காவது தலைமுறையாக இசை அந்தக் குடும்பத்தில் தழைக்கிறது என்றால் அதற்குப் பட்டம்மாளின் இசையைப் போற்றி முழு ஆதரவளித்த ஈஸ்வரன் அய்யரின் உறுதுணை ஒரு முக்கியக் காரணம்.

இந்த உறுதுணையை தன்னுடைய மருமகளுக்கும் அளித்தார் பட்டம்மாள். அவருடைய மருமகள் லலிதா, புகழ்பெற்ற மிருதங்க மேதை பாலக்காடு மணி அய்யரின் மகள். பட்டம்மாள் தன்னுடைய மருமகளோடு இணைந்தும் மேடைகளில் கச்சேரி செய்திருக்கிறார். பொதுவாக பெண் கலைஞர்களுக்கு வாசிப்பதில்லை எனும் கொள்கையோடு இருந்த பாலக்காடு மணி அய்யர், தன்னுடைய சம்பந்தியும் இசைப் பேரொளியுமான பட்டம்மாளின் நிகழ்ச்சிக்குப் பக்கவாத்தியம் வாசித்தது, பட்டம்மாளின் மேன்மையை உணர்த்தும் நிகழ்வாகப் பேசப்பட்டது.

தேசப்பற்றே கொள்கை

1939-ல் புகழ்பெற்ற இயக்குநர் கே.சுப்பிரமணியம், தான் இயக்கிய ‘தியாக பூமி’ திரைப்படத்தில் பாபநாசம் சிவன் இசையில் `தேச சேவை செய்ய’, `ஆடு ராட்டே’ போன்ற பாடல்களைப் பட்டம்மாளைப் பாடவைத்தார். தொடர்ந்து `நாம் இருவர்’ படத்தில் `ஆடுவோமே பள்ளு பாடுவோமே’, `வெற்றி எட்டுத்திக்கும் எட்ட கொட்டு முரசே’ பாடல்களைப் பட்டம்மாள் பாடினார். `வாழ்க்கை’ படத்தில், `பாரத சமுதாயம் வாழ்கவே’, `தீராத விளையாட்டுப் பிள்ளை’ போன்ற பாரதியின் பாடல்களைப் பாடினார்.

Desikan_Krishnan

திரைப்படங்களில் பக்திப் பாடல்கள், தேசபக்திப் பாடல்களை மட்டுமே பாடுவது என்று தீர்மானமாக இருந்த பட்டம்மாள், தேச பக்திப் பாடல்களைப் பாடுவதற்கும் கச்சேரிகளைச் செய்வதற்கும் பணம் பெற்றுக்கொள்வதில்லை எனும் கொள்கை முடிவோடும் இருந்தார்.

தமிழிசைக்கு ஜெயபேரிகை

தமிழிசை இயக்கம் தொடங்குவதற்கு முன்பே தன்னுடைய நிகழ்ச்சிகளில் சம்பிரதாயமாகவோ, துக்கடாவாகவோ தமிழ்ப் பாடல்களைப் பாடாமல் பிரதானமாக எடுத்துப் பாடினார். திருப்புகழ், தேவாரம், திருப்பாவை, பன்னிரு திருமுறை, ஆழ்வார் பாசுரங்களும் பட்டம்மாளின் நிகழ்ச்சிகளில் மக்கள் கேட்கும் விருப்பப் பாடல்களாகின.

‘என்றைக்கு சிவகிருபை’ (நீலகண்ட சிவன்), ‘நான் ஒரு விளையாட்டு பொம்மையா’ (பாபநாசம் சிவன்), ‘வேலவா’ (கோடீச்வர அய்யர்), ‘சபாபதிக்கு வேறு தெய்வம்’ (கோபாலகிருஷ்ண பாரதி), ‘ராமநாடக கீர்த்தனை’ (அருணாசல கவிராயர்), ‘எப்படிப் பாடினரோ’ (சுத்தானந்த பாரதி), ‘சித்தம் எப்படியோ’ (வேதநாயகம் பிள்ளை), சுப்பிரமணிய பாரதியின் பாடல்கள் என தமிழ்த் தேனும் பாய்ச்சியவர் பட்டம்மாள்.

பட்டம்மாளின் குரல் ஒலிக்காத நாடுகளே இல்லை எனும் அளவுக்குப் பல நாடுகளுக்குச் சென்று இசைக் கச்சேரிகள் நிகழ்த்தினார். அவரது மாணவர்கள் உலகம் முழுவதும் உள்ளனர். தனது ஜப்பானிய சீடர் அகிகோ என்பவரை திருவையாற்றில் பாட வைத்த பெருமைக்கு உரியவர் பட்டம்மாள்.

பத்ம விபூஷண், பத்மபூஷண், கலைமாமணி, சங்கீத கலாநிதி, சங்கீத நாடக அகாடமி விருது, இசைப் பேரறிஞர், சங்கீத கலாசிகாமணி, காளிதாஸ் சம்மான் எனப் பல்வேறு விருதுகளைப் பெற்றிருந்தாலும் டைகர் வரதாச்சாரியார் அளித்த ‘கான சரஸ்வதி’ எனும் பட்டமே அவரின் பெயருக்கு முன்னால் இன்றளவும் நீடிக்கிறது. இந்தியாவின் தேசியக் குயிலாக மதிக்கப்பட்ட டி.கே.பட்டம்மாள், அரியக்குடி ராமானுஜ அய்யங்கார் சொன்னது போல் பட்டம்மாள் அல்ல பாட்டம்மாள்!

(வானம்பாடிகள் வருவார்கள்...)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in