இதே தேதி... முக்கியச் செய்தி: முதல் ஜெராக்ஸ் காப்பி!

இதே தேதி... முக்கியச் செய்தி: முதல் ஜெராக்ஸ் காப்பி!

இன்றைக்கு ஏதாவது திரைப்படப் பாடல், முன்பே வெளிவந்த இன்னொரு பாடலை நினைவுபடுத்துவதுபோல் இருந்தால், ‘அப்படியே ஜெராக்ஸ் எடுத்ததுபோல காப்பி அடித்திருக்கிறார்கள்’ என்று ரசிகர்கள் சலித்துக்கொள்வது உண்டு. நகலெடுக்கும் விஷயத்துக்கு ஜெராக்ஸ் எனும் பதம் பொதுவாகவே புழக்கத்தில் இருந்துவருகிறது. உண்மையில், ‘போட்டோகாப்பி’ எடுப்பது என்பதுதான் இதன் சரியான பதம். அதுசரி, ஜெராக்ஸ் எனும் பதம் எப்படி பொதுப் பதமாக ஆனது? வாருங்கள் பார்க்கலாம்!

இப்போதெல்லாம் எந்த ஆவணத்தையும் ஒரு சில நொடிகளில் நகலெடுத்து நம் கையில் கொடுக்க, போட்டோகாப்பி இயந்திரங்கள் கொண்ட கடைகள் நம் வசிப்பிடத்துக்கு அருகிலேயே இயங்கிவருகின்றன. ஆனால், அப்படி ஒரு சாதனம் கண்டறிவதற்கு முன்பு ஆவணங்களை நகலெடுப்பது என்பது மிகப் பெரிய சவாலாக இருந்தது. சொல்லப்போனால் உரிய தொழில்நுட்பம் இல்லாமல் அது சாத்தியமாகாமலேயே இருந்தது. 1770-களில் ஜெர்மனியைச் சேர்ந்த இயற்பியலாளரான ஜார்ஜ் கிறிஸ்டோப் லிச்டென்பெர்க், நிலைமின்னியல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நகலெடுக்கும் இயந்திரத்தைக் கண்டுபிடித்தார். இன்றைய நவீன போட்டோகாப்பி இயந்திரத்துக்கு அது அடிப்படையான அம்சமாக அமைந்தது. எனினும், வணிகப் பயன்பாட்டுக்கான நகலெடுக்கும் சாதனம் உருவெடுக்க இன்னும் பலரின் உழைப்பு தேவைப்பட்டது.

அமெரிக்காவைச் சேர்ந்த செஸ்டர் கார்ல்ஸன் என்பவர் ஆவணங்களை நகலெடுக்கும் சாதனத்தைக் கண்டறிவதில் பல ஆண்டுகளாக ஈடுபட்டுவந்தார். இயற்பியலாளர் - வழக்கறிஞர் என இருவேறு துறைகளில் ஈடுபட்டு வந்த அவர், தனது நண்பரும் பொறியியலாளருமான ஓட்டோ கோர்னேயின் துணையுடன் நகலெடுக்கும் சாதனக் கண்டுபிடிப்பில் முனைப்புடன் இயங்கிவந்தார். ஹங்கேரியைச் சேர்ந்த பால் செலனி எனும் இயற்பியல் அறிஞர் இதுதொடர்பாக ஏற்கெனவே ஆராய்ச்சி செய்திருந்தார். அந்த ஆராய்ச்சிப் புத்தகத்தை வாசித்த செஸ்டர் கார்ல்ஸன் அதிலிருந்து பல முக்கிய நுணுக்கங்களை அறிந்துகொண்டார்.

பேட்டெல் நினைவு நிறுவனத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி, 1944-ல் இருவரும் முதன்முதலாக ஒரு நகலெடுக்கும் சாதனத்தைக் கண்டுபிடித்தார்கள். 1947-ல் அதன் உரிமத்தை ஹாலோய்டு எனும் நிறுவனத்துக்கு அவர்கள் விற்றுவிட்டனர்.

1949-ல் முதன்முதலாக வணிகப் பயன்பாட்டுக்கான போட்டோகாப்பி சாதனத்தை ஹாலோய்டு நிறுவனம் அறிமுகப்படுத்தியது. ‘ஜெராக்ஸ் மாடல் ஏ’ எனப் பெயரிடப்பட்டிருந்த அந்த சாதனம் மேலும் மேம்படுத்தப்பட்டது. 1958-ல் அது ஹாலோய்டு ஜெராக்ஸ் எனும் பெயர் அதற்கு வைக்கப்பட்டது.

அதேசமயம், போட்டோகாப்பி சாதனம் முதன்முதலாக ஒரு வணிக சாதனமாக வெற்றிகரமாக உலகத்துக்கு அறிமுகப்படுத்தப்பட்டது 1959 செப்டம்பர் 16-ல்தான். நியூயார்க்கின் ஷெர்ரி - நெதர்லாந்து ஹோட்டலில் அந்த சாதனத்தின் செயல்பாடு நிகழ்த்திக் காட்டப்பட்டது. அந்த சாதனத்தின் பெயர் ‘ஜெராக்ஸ் 914’. அடுத்தடுத்த ஆண்டுகளில் அதன் மேம்படுத்தப்பட்ட வடிவங்கள் சந்தைக்கு வந்தன. அதன் பின்னர் ஆவணங்களை நகலெடுப்பது என்பது மிக எளிமையான செயலாகிப்போனது.

எல்லாம் சரி, ஜெராக்ஸ் என்றால் என்ன அர்த்தம் என்கிறீர்களா? ‘ஜெராகிராஃபி’ (Xerography) எனும் கிரேக்க வேர்ச்சொல்லிலிருந்து உருவான பதம் அது. ஜெரா என்றால் உலர்ந்த என்றும், கிராஃபி என்றால் எழுத்து என்றும் அர்த்தம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in