இதே தேதி... முக்கியச் செய்தி: ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் தொடங்கிய முதல் வானொலி நிலையம்!

இதே தேதி... முக்கியச் செய்தி: ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் தொடங்கிய முதல் வானொலி நிலையம்!

அமெரிக்காவின் வளர்ச்சியில், ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் என அழைக்கப்படும் கறுப்பின மக்களின் கடும் உழைப்புக்குப் பிரதான இடம் உண்டு. ஆப்பிரிக்காவிலிருந்து கொண்டுவரப்பட்டு வெள்ளையினத்தவர்களின் பண்ணைகளில் அடிமைகளாக நடத்தப்பட்ட கறுப்பின மக்கள், பல வலிகளுக்கு மத்தியில் தங்கள் கலாச்சார வேர்களைப் புதுப்பித்து பல கலைவடிவங்களை உருவாக்கினர். அவை அமெரிக்காவின் பொதுச் சமூகத்திலும் தாக்கம் செலுத்தி உலகம் முழுவதும் பரவியது வரலாறு.

கல்வி உரிமை, வாக்குரிமை, ஏன்... பேருந்தில் வெள்ளையர்களுக்குச் சமமாகப் பயணிக்கும் உரிமை என அனைத்தையும் போராடித்தான் வென்றனர் கறுப்பின மக்கள். தங்கள் உழைப்பு மற்றும் திறமை மூலம் வேறு சமூகத்தில் பிற அங்கீகாரங்களையும் அவர்கள் வென்றெடுத்தனர். அந்த வகையில், கறுப்பின மக்கள் தங்களுக்கென ஒரு வானொலி நிலையத்தைத் தொடங்கிய தினம் இன்று!

ஆம், வெர்டு (WERD) எனும் வானொலி நிலையம், 1949 அக்டோபர் 3-ம் தேதி ஜியார்ஜியா மாநிலத்தின் அட்லான்டா நகரில் தொடங்கப்பட்டது. முதன்முறையாக கறுப்பினத்தவர்களே நடத்திய, கறுப்பினத்தவர்கள் மட்டுமே பணிபுரிந்த வானொலி சேவை அதுதான். அதற்கு முன்னர் மெம்ஃபிஸ் நகரில் டபிள்யூ.டி.ஐ.ஏ எனும் வானொலி நிலையத்தில் கறுப்பினத்தவர்கள் மட்டுமே பணிபுரிந்துவந்தனர். 1947 முதல் இயங்கிவந்த அந்த வானொலி சேவை, ஆப்பிரிக்க அமெரிக்க சமூகத்தினர் மத்தியில் பரவலான கவனத்தை ஈர்த்தது. அந்தச் சமூகத்தைச் சேர்ந்த பல திறமைசாலிகள் அந்த வானொலி மூலம் அமெரிக்க சமூகத்தினர் மத்தியில் பிரபலமாகினர். தொழில்நுட்பக் கலைஞர்களும் கறுப்பினத்தவர்கள்தான். ஆனால், அந்த வானொலி நிலையத்தின் உரிமையாளர்களான ஜான் பெப்பர், பெர்ட் பெர்குஸன் இருவரும் வெள்ளையினத்தைச் சேர்ந்தவர்கள். கறுப்பினத்தவர்களே சொந்தமாகத் தொடங்கிய முதல் வானொலி நிலையம் வெர்டு தான்.

வங்கியாளரும், அட்லான்டா பல்கலைக்கழகப் பேராசிரியருமான ஜெஸ்ஸி பி.பிளேய்ட்டன் சீனியர், 1949-ல் 50,000 டாலருக்கு இந்த வானொலி நிலையத்தை வாங்கினார். முழுக்க முழுக்க கறுப்பினத்தவர்களே பணிபுரியும் வகையில் வானொலி நிலையத்தை வடிவமைத்தார். அவரது மகன் ஜெஸ்ஸி ஜூனியர் வானொலி நிலைய மேலாளராகப் பணியமர்த்தப்பட்டார். 1951-ல் வெர்டு வானொலி நிலையத்தில் சேர்ந்த ‘ஜாக்கி’ ஜாக் கிப்ஸன், பின்னாட்களில் அட்லான்டாவின் மிகப் பிரபலமான ரேடியோ ஜாக்கியாக உருவானார். டெட்டோனா பீச்சைச் சேர்ந்த கென் நைட் என்பவர், இந்த வானொலி நிலையத்தின் முதல் நிகழ்ச்சி இயக்குநராக நியமிக்கப்பட்டார்.

அட்லான்டா நகரின் ஆபர்ன் அவென்யூ பகுதியில் உள்ள பிரின்ஸ் ஹால் மஸோனிக் டெம்பிள் எனும் கட்டிடத்தில் இந்த வானொலி நிலையம் இயங்கத் தொடங்கியது. அதே கட்டிடத்தில்தான், மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் தொடங்கிய தெற்கு கிறிஸ்தவ தலைமை மாநாடு எனும் அமைப்பும் இயங்கிவந்தது. அந்தக் காலகட்டத்தில் ஜிம் க்ரோ எனும் கொடூரமான சட்டம் அமெரிக்காவில் அமலில் இருந்தது. கறுப்பின மக்களுக்குப் பல்வேறு வகைகளில் கட்டுப்பாடுகளை விதித்த அந்தச் சட்டத்தின்படி, கறுப்பினத்தவர்கள் பங்கேற்கும் வானொலி நிகழ்ச்சிகள், மாலைக்குப் பின்னர் ஒலிபரப்பப்படக் கூடாது. ஆனால், வெர்டு வானொலி நிலையம் அதையெல்லாம் மீறி, கறுப்பினத்தவர்களின் குரல்களை இரவு முழுவதும் ஒலிக்கச் செய்தது.

‘ஜாக்கி’ ஜாக் கிப்ஸன் 1968-ல் இந்த வானொலி நிலையத்தை இயக்கும் உரிமையை பிளேய்ட்டனிடமிருந்து வாங்கினார். ஃபுளோரிடா மாநிலத்தின் ஜாக்ஸன்வில்லே நகரிலிருந்து வெர்டு வானொலி நிலையத்தை இயக்கிவந்தார். 1973-ல் அவர் மறையும் வரை அந்த வானொலி நிலையம் இயங்கிவந்தது.

அதேசமயம், அட்லான்டாவின் ஹால் மஸோனிக் டெம்பிள் கட்டிடத்தில் வெர்டு வானொலி நிலையத்தைப் புனரமைக்கும் பணிகள் நடந்துவருகின்றன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in