இதே தேதி... முக்கியச் செய்தி: அலட்சியம் காட்டிய ஆண்கள்; வரலாறு படைத்த எம்மா!

டெலிபோன் ஆபரேட்டராகப் பணிபுரிந்த எம்மா நட்டும், அவரது தங்கை ஸ்டெல்லாவும்...
டெலிபோன் ஆபரேட்டராகப் பணிபுரிந்த எம்மா நட்டும், அவரது தங்கை ஸ்டெல்லாவும்...

தொலைபேசியைக் கண்டுபிடித்த அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல், அந்தப் பெண்ணின் திறமையை ஆச்சரியப்பட்டுப்போனார். எம்மா நட் எனும் பெயர் கொண்ட அந்தப் பெண், ஏராளமான தொலைபேசி எண்களை நினைவில் வைத்திருக்கக்கூடியவர். அவரது குரலில் இருந்த பணிவும் கிரஹாம் பெல்லை மிகவும் கவர்ந்தன. பாஸ்டன் நகரில் தந்தி அலுவலகத்தில் பணிபுரிந்துவந்த எம்மா ‘டெலிபோன் ஆபரேட்டர்’ வேலைக்குப் பொருத்தமானவர் என முடிவுக்கு வந்தார் கிரஹாம் பெல். அப்படித்தான், உலகின் முதல் பெண் டெலிபோன் ஆபரேட்டர் எனும் பெருமை எம்மாவுக்குக் கிடைத்தது. எம்மாவின் வரவின் பின்னணியில் இன்னொரு முக்கியத் தகவலும் உண்டு. அது - ஆண்கள் காட்டிய அலட்சியம்!

1876-ல் அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் கண்டுபிடித்த தொலைபேசி வெற்றிகரமாக சோதித்துப் பார்க்கப்பட்டதைத் தொடர்ந்து, தொலைத்தொடர்புத் துறையின் முன்னேற்றம் தொடங்கியது. அடுத்த சில ஆண்டுகளில் அமெரிக்காவில் தொலைபேசி நிறுவனங்கள் வெற்றிகரமாகச் செயல்படத் தொடங்கின. அந்தக் காலகட்டத்தில் தொலைபேசி அழைப்புகள் டெலிபோன் ஆபரேட்டர்களின் உதவியால்தான் சாத்தியமாகின. அழைப்பாளர் சொல்லும் எண்ணுக்கு அழைத்து, ஸ்விட்ச்போர்டில் சரியான கேபிளைச் செருகி, தொலைபேசி உரையாடல்களுக்கு ஆபரேட்டர்கள் வழிவகுத்தனர்.

டெலிபோன் ஆபரேட்டர்களாக ஆரம்பத்தில் ஆண்கள் மட்டுமே பணிபுரிந்தனர். புதிய தொழில்நுட்பத்தைத் துரிதமாகப் புரிந்துகொண்டு நன்றாகப் பணியாற்றினர். எனினும் அந்தப் பணியில் இருந்த இளைஞர்கள் பலர் அலட்சிய மனோபாவம் கொண்டிருந்ததுடன், வாடிக்கையாளர்களிடம் மரியாதைக் குறைவாக, கடுமையாகப் பேசினர். பணியிடத்தில் அரட்டை அடித்தபடி இருந்தனர். இதனால், நிறைய புகார்கள் வந்தன.

எம்மா நட்
எம்மா நட்

அந்தச் சமயத்தில்தான், பெண்களுக்கு அந்தப் பணியை வழங்கலாம் எனும் யோசனை பலருக்கு வந்தது. கிரஹாம் பெல் அந்தப் பணிக்கு எம்மா நட்டைத் தேர்வுசெய்தார். மசாசூஸெட்ஸ் மாநிலத்தின் பாஸ்டன் நகரில் இயங்கிவந்த எட்வின் ஹோம்ஸ் டெலிபோன் டிஸ்பாட்ச் கம்பெனியில் (பாஸ்டன் டெலிபோன் டிஸ்பாட்ச் கம்பெனி என்றும் இது அழைக்கப்படுகிறது) அவரைப் பணியில் சேர்த்துவிட்டார். 1878 செப்டம்பர் 1-ம் தேதி முதல் அந்நிறுவனத்தின் டெலிபோன் ஆபரேட்டராக எம்மா பணிபுரியத் தொடங்கினார். தன் மீது கிரஹாம் பெல் வைத்திருந்த அபார நம்பிக்கைக்கு நியாயம் சேர்க்கும் வகையில் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்தார்.

ஸ்விட்ச்போர்டில் சரியான கேபிளைச் செருகுவதில் தொடங்கி, இனிமையான, அன்பான குரலில் பேசுவது வரை அந்தப் பணியில் எம்மா காட்டிய ஈடுபாடு வாடிக்கையாளர்களை வசீகரித்தது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் டெலிபோன் ஆபரேட்டர் என்றாலே பெண்கள்தான் எனும் அளவுக்குப் பெண்களுக்கு அந்தப் பணி வழங்கப்பட்டது. அதற்குத் ஆரம்பப் புள்ளி வைத்தவர் எம்மா தான். அவருக்கு மாதச் சம்பளமாக 10 டாலர்கள் வழங்கப்பட்டன. வாரத்துக்கு 54 மணி நேரம் எனும் அடிப்படையில் அவர் பணிபுரிந்தார்.

அதேசமயம், பல்வேறு சவால்களைக் கொண்ட அந்தப் பணியில் தொடர்ந்து நீடிப்பது பெண்களுக்குச் சிரமமாக இருந்தது. எம்மாவுக்குப் பின்னர் அந்தப் பணியில் சேர்ந்த பல பெண்கள் சில ஆண்டுகளில் அதிலிருந்து விலகினர். அவர்களுக்குப் பதிலாகப் புதிதாகப் பெண்கள் வேலைக்குச் சேர்ந்தனர். இவ்வளவு ஏன், எம்மாவின் தங்கை ஸ்டெல்லா, அதே செப்டம்பர் 1-ம் தேதி (எம்மா வேலைக்குச் சேர்ந்து சில மணி நேரம் கழித்து) டெலிபோன் ஆபரேட்டர் பணியில் சேர்ந்தார். ஆனால், இரண்டே ஆண்டுகளில் அந்தப் பணியிலிருந்து ஸ்டெல்லா விலகிவிட்டார்.

டெலிபோன் ஆபரேட்டர் பணி அப்படியொன்றும் சுலபமாகப் பெண்களுக்குக் கிடைத்துவிடவில்லை. அதற்குப் பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. 17 முதல் 26 வயதுள்ள பெண்களுக்கே முன்னுரிமை கொடுக்கப்பட்டது. குறிப்பாக, அவர்கள் திருமணமாகாதவர்களாக இருக்க வேண்டும் என்றே தொலைபேசி நிறுவனங்கள் விரும்பின. அது மட்டுமல்ல, ஸ்விட்ச்போர்டின் மேல் பகுதி வரை தொட்டு இயக்க வேண்டியிருக்கும் என்பதால் நல்ல உயரம் கொண்ட பெண்களுக்கே டெலிபோன் ஆபரேட்டர் வேலை வழங்கப்பட்டது. பின்னாட்களில் முதல் மற்றும் இரண்டாம் உலகப்போர்களின்போது டெலிபோன் ஆபரேட்டர் பணியில் இருந்த பெண்கள் செலுத்திய உழைப்பு தனி வரலாறு!

இதில் தொலைபேசி நிறுவனங்களின் இன்னொரு சூட்சுமமும் இருந்தது. ஆம். ஆண்களுக்கு வழங்கப்பட்ட சம்பளத்தில் பாதி அல்லது கால் பங்குதான் பெண்களுக்கு வழங்கப்பட்டது. லாபம் பார்ப்பதில் குறியாக இருந்த தனியார் நிறுவனங்கள் அதை நன்றாகப் பயன்படுத்திக்கொண்டன. தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் வளர்ச்சியின் பின்னணியில் இப்படி ஒரு வரலாறு இருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in