இதே தேதி... முக்கியச் செய்தி: விண்வெளியிலிருந்து இறங்கிவந்த ஆப்கானியர்!

அப்துல் அஹாத் மொமந்த்
அப்துல் அஹாத் மொமந்த்

இரண்டாவது முறையாக தாலிபான்களின் ஆளுகைக்கு வந்துவிட்ட ஆப்கானிஸ்தான் இன்றைக்கு எந்த அளவுக்குச் சிதிலமாகிக்கிடக்கிறது என உலகம் ஓரளவு தெரிந்துவைத்திருக்கிறது. கணக்கில் வராத கண்ணீர்க் கதைகள் ஏராளம். வேலையிழந்து வருவாய் தொலைத்து வாழ்க்கையை ஓட்ட முடியாமல் அவல நிலையில் இருக்கிறார்கள் ஆப்கானியர்கள்.

ஒருகாலத்தில் ஆப்கானிலிருந்து ஒருவர் விண்வெளிக்குச் சென்றுவந்தார் என்றால் நம்ப முடிகிறதா?

ஆம், அப்துல் அஹாத் மொமந்த் எனும் ஆப்கானியர்தான் விண்வெளிக்குச் சென்று சாதனை படைத்தவர். சோவியத் ஒன்றியத்தின் மிர் விண்வெளி நிலையத்துக்குச் சென்று 9 நாட்கள் தங்கியதன் மூலம் ஆப்கனின் வரலாற்றில் இடம்பிடித்தவர் அவர்.

1959-ல் ஆப்கானிஸ்தானின் கஜினி மாகாணத்தின் ஆந்தார் மாவட்டத்தில் உள்ள சர்தே பாந்த் எனும் நகரில் பஷ்தூன் இனக் குழுவின் மொமந்த் பிரிவைச் சேர்ந்த குடும்பத்தில் அப்துல் அஹாத் மொமந்த் பிறந்தார். காபூல் பாலிடெக்னிக் பல்கலைக்கழகத்தில் பயின்ற அவர் உடல் உறுதியும் புத்திக்கூர்மையும் மிக்கவராக இருந்தார். ஓராண்டுக்குப் பின்னர் ராணுவத்தில் சேர்ந்தார். விமானம் ஓட்டும் பயிற்சிக்காக அவர் சோவியத் ஒன்றியத்துக்கு அனுப்பப்பட்டார்.

க்ராஸ்னடோர் விமானப் படைப் பள்ளியிலும், கீவ் (தற்போது உக்ரைன் நாட்டின் தலைநகர்) நகரில் உள்ள விமானப் படைப் பொறியியல் பள்ளியிலும் அவர் பயிற்றுவிக்கப்பட்டார். 1981-ல் ஆப்கானிஸ்தான் திரும்பிய அவர் அடுத்தடுத்து பல உயர்வுகளை அடைந்தார். தலைமை விமானி ஆனார்.

1984-ல் மீண்டும் சோவியத் ஒன்றியம் சென்ற அவர் ககாரின் விமானப் படை அகாடமியில் பயிற்சி பெற்றார். 1987-ல் பயிற்சி முடிந்து வெளியே வந்ததும், ‘இன்டர்காஸ்மோஸ்’ திட்டத்தில் பங்கேற்கும் விண்வெளி வீரராகத் தேர்வானார். அந்தக் காலகட்டத்தில் ஆப்கானிஸ்தானின் முஜாஹிதின்களுக்கும் சோவியத் படைகளுக்கும் இடையில் யுத்தம் நடந்துகொண்டிருந்தது. ஆப்கன் மண்ணை ஆக்கிரமித்திருப்பதாக ரஷ்யப் படைகளை எதிர்த்துப் போரிட்ட முஜாஹிதின்களின் பின்னணியில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் இருந்தது தனி வரலாறு. அப்படியான ஒரு சூழலில், ஒரு நல்லிணக்க முயற்சியாக இதை சோவியத் அரசு செய்ததாக நம்பப்படுகிறது.

மூன்று பேர் பயணிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட சோயுஸ் டிஎம்-6 விண்கலத்தில் அப்துல் அஹாத் மொமந்த், கமாண்டர் விளாதிமிர் லியாக்கோவ், விண்கலப் பொறியாளர் வாலேரி பாலியாகோவ் ஆகியோர் செல்வது எனத் தீர்மானிக்கப்பட்டது. பயிற்சிகள் முடிந்ததும், 1988 ஆகஸ்ட் 29-ல் அந்த விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது.

அது மிர் விண்வெளி நிலையத்தை அடைந்ததும் அங்கு 9 நாட்கள் அந்தக் குழு தங்கியிருந்தது. மிர் விண்வெளி நிலையத்துக்குச் சென்ற மகிழ்ச்சியில் அங்கிருந்து தனது தாய்நாட்டைப் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார் அப்துல் அஹாத் மொமந்த். விண்வெளி சார்ந்த ஆய்வுப் பணிகளிலும் ஈடுபட்டார்.

என்னதான் சிறந்த விண்வெளி வீரர் என்றாலும் அவரும் ஒரு தாய்க்கு மகன் தானே! தன் மகன் பத்திரமாக பூமிக்குத் திரும்புவானா எனும் கவலை அவரது தாய்க்கு ஏற்பட்டது. அதை அறிந்த அப்போதைய ஆப்கன் அதிபர் நஜிபுல்லா அந்தத் தாயை அதிபர் மாளிகைக்கு அழைத்து, அப்துல் அஹாத் மொமந்துடன் பேசச் செய்தார். அப்போது பஷ்தோ மொழியில் தாயும் மகனும் உரையாடிக்கொண்டனர். இதன் மூலம் விண்வெளியில் பேசப்பட்ட ஐந்தாவது மொழியாக பஷ்தோ மொழி இடம்பெற்றது.

ஆராய்ச்சிகளை முடித்துக்கொண்டு செப்டம்பர் 7-ம் தேதி அந்தக் குழு பூமிக்குத் திரும்பியது. இடையில் சின்ன தொழில்நுட்பப் பிரச்சினை ஏற்பட்டாலும் அது ஒருவழியாகச் சரிசெய்யப்பட்டது.

அதேநாளில் ‘சோவியத் ஒன்றியத்தின் நாயகன்’ எனும் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார் அப்துல் அஹாத் மொமந்த். பின்னாட்களில் ஆப்கன் விமானப் போக்குவரத்துத் துறையின் துணை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார். ஆனால், இதெல்லாம் நீண்ட காலத்துக்கு நீடிக்கவில்லை. தாலிபான்கள் 1992-ல் ஆப்கன் ஆட்சியைப் பிடித்ததும், பலர் அச்சத்தில் நாட்டைவிட்டு வெளியேறினர். அவர்களில் அப்துல் அஹாத் மொமந்தும் ஒருவர். தஞ்சம் கேட்டு ஜெர்மனியிடம் கோரிக்கை விடுத்தார். அது செவிசாய்க்கப்பட்டதும் ஜெர்மனிக்குச் சென்ற அவர் அந்நாட்டின் குடியுரிமை பெற்று அங்கேயே வசித்துவருகிறார்.

ஜெர்மனியில் அவரது விண்வெளிப் பணி தொடரவில்லை. அச்சுத் துறையில் பணிபுரிந்த அவர் தற்போது கணக்காளராகப் பணியாற்றுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தாலிபான்களின் ஆட்சி அகற்றப்பட்ட பின்னர் ஆப்கன் திரும்பலாம் என்று அவர் நினைத்திருந்தார். ஆனால், கடந்த ஆண்டு அமெரிக்கப் படைகள் ஆப்கன் மண்ணிலிருந்து வெளியேறியதைப் பயன்படுத்திக்கொண்டு தாலிபான்கள் மீண்டும் ஆட்சிப் பொறுப்பை அதிரடியாகக் கைப்பற்றிவிட்டனர். இதையடுத்து அவரது அந்தக் கனவும் தகர்ந்துபோனது.

விண்வெளிக்குச் சென்றுவந்த முதல் ஆப்கானியரும் அவர்தான்; இன்றைய சூழலில் - கடைசி ஆப்கானியரும் அவர்தான். இனி அப்படி ஒரு வாய்ப்பு ஆப்கன் குடிமக்களுக்கு அமையுமா என்பது மிகப் பெரிய கேள்விக்குறி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in