இதே தேதி... முக்கியச் செய்தி: தொடங்கியது இன அழிப்புக்கான ‘கண்காட்சி’!

இதே தேதி... முக்கியச் செய்தி: தொடங்கியது இன அழிப்புக்கான ‘கண்காட்சி’!

வெறுப்புப் பேச்சுக்கள்தான் கலவரத்துக்கும் இன அழிப்புக்கும் முதல் புள்ளி என்பார்கள். அந்த வகையில் யூதர்கள் மீதான இன அழிப்புக் கொடூரத்தைத் தொடங்குவதற்கான அச்சாரங்களில் ஒன்றாக, ஜெர்மனியின் நாஜி படையினர் நடத்திய ஒரு கண்காட்சி அமைந்தது. மூன்று மாதங்கள் நடந்த அந்தக் கண்காட்சியில், ஜெர்மானியர்களின் பின்னடைவுக்கு யூதர்கள்தான் காரணம், ஜெர்மனியை கம்யூனிஸப் பிடிக்குள் கொண்டுவர யூதர்கள் முயற்சிக்கிறார்கள் என்றெல்லாம் பல பொய்யான சித்தரிப்புகளை வெற்றிகரமாகக் கட்டமைத்தனர் நாஜிக்கள். அதன் மூலம் யூதர்கள் கொல்லப்பட வேண்டியவர்கள் எனும் எண்ணத்தை சாமானிய ஜெர்மானியர்களிடம் விதைக்க முயன்றார்கள்.

‘தி எடெர்னல் ஜூ’ எனும் பெயரில் 1937 நவம்பர் 8-ம் தேதி, மியூனிக் நகரில் உள்ள ஜெர்மன் அருங்காட்சியகத்தில் உள்ள நூலகத்தில் அந்தக் கண்காட்சி தொடங்கியது. பொய்ப் பிரச்சாரத்துக்குப் பெயர் பெற்ற ஜோசப் கோயபெல்ஸ் தான் அந்தக் கண்காட்சிக்கு நிதிவழங்கியவர். ஹிட்லரின் ஆட்சியில் பிரச்சாரத் துறை அமைச்சராக இருந்த கோயபெல்ஸ் பரப்பிய கட்டுக்கதைகள் ஏராளம். யூத எதிர்ப்புச் சிந்தனை கொண்ட அவர், யூதர்களின் கடைகளைப் புறக்கணிக்குமாறு ஜெர்மானியர்களைத் தூண்டினார். பின்னர் யூத எழுத்தாளர்கள் உள்ளிட்டோர் எழுதிய புத்தகங்களை எரிக்க உத்தரவிட்டார். யூதர்களின் வழிபாட்டுத் தலங்களைத் தரைமட்டமாக்குமாறு வெறியைத் தூண்டினார். இதன் தொடர்ச்சியாக ஏராளமான யூதர்கள் கொல்லப்பட்டனர். 1933-ல் நாஜிக்கள் ஆட்சிக்கு வந்த வேகத்தில் அரங்கேறத் தொடங்கிய இந்தக் கொடூரங்கள், நாளுக்கு நாள் அதிகரித்தன.

அப்படித்தான் அந்தக் கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. அதில், யூதர்கள் மீது கொலைவெறி ஏற்படும் வகையிலான சித்தரிப்புகள் இடம்பெற்றன. கிழக்கத்திய நாடுகளைச் சேர்ந்த யூதர் ஒருவர் தலையில் கஃப்தான் எனும் தலைப்பாகையை அணிந்து, ஒரு கையில் தங்கக் காசுகளையும் இன்னொரு கையில் சாட்டையையும் வைத்திருப்பது போல் வரையப்பட்ட ஓவியம் ஒன்று பிரதானமாக இடம்பெற்றது. அதில் கம்யூனிஸ சின்னமும் வரையப்பட்டிருந்தது. ஜெர்மனியைச் சேர்ந்த யூதரான ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் உள்ளிட்ட பல யூதப் பிரபலங்களின் புகைப்படங்களும் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. வழக்கமாகவே இதுபோன்ற வெறியர்களிடம் தென்படும் அடையாளச் சிக்கல், அந்தக் கண்காட்சியிலும் வெளிப்பட்டது. ஆம்! நடிகர் சார்லி சாப்ளினையும் ஒரு யூதராகக் கருதிய நாஜிக்கள் அவரது படத்தையும் அந்தக் கண்காட்சியில் வைத்தனர்.

இதில், இன்னொரு விஷயமும் உண்டு. சாப்ளினை ஒரு யூதராகக் கருதி அவரது ‘கோல்டு ரஷ்’ திரைப்படத்தை நாஜிக்கள் தடை செய்தனர். அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ‘தி கிரேட் டிக்டேட்டர்’ (1940), படத்தில் நாஜி இனத்தைச் சேர்ந்த சிகையலங்காரக் கலைஞராக சாப்ளின் நடித்தார். உலகில் உள்ள அனைத்து யூதர்களுக்காகவும் அந்தப் படத்தை எடுத்ததாக அறிவித்தார். அதே படத்தில் அவர் உருவாக்கி நடித்த சர்வாதிகாரி ஹைங்கென் பாத்திரம் ஹிட்லரை நினைவூட்டும் வகையில் அமைந்திருந்தது. அந்தக் காலகட்டத்தில் நாஜி ஜெர்மனி அரசுடன் நல்லுறவைப் பேணிய அமெரிக்கா அதை ரசிக்கவில்லை என்பது தனிக்கதை!

1938 ஜனவரி 31 வரை மியூனிக் நகரில் நடந்த அந்தக் கண்காட்சியைக் கண்டுகளிக்க(!) தினமும் சராசரியாக 5,000-க்கும் மேற்பட்டோர் வந்தனர். மொத்தம் 4,12,300 பேர் அந்தக் கண்காட்சியைப் பார்வையிட்டனர். பின்னர் அதே கண்காட்சி, வியன்னா, பெர்லின் ஆகிய நகரங்களிலும் நடத்தப்பட்டது.

நாஜிக்கள் மேற்கொண்ட பொய்ப் பிரச்சாரம் நன்றாகவே எடுபட்டது. யூதர்கள் அவர்களது குடியிருப்புகளைவிட்டு வெளியேற்றப்பட்டனர். வதைமுகாம்களுக்கு அனுப்பிக் கொத்துக்கொத்தாகக் கொல்லப்பட்டனர். இரண்டாம் உலகப்போர் தொடங்கிய பின்னர், நாஜிக்களால் ஆக்கிரமிக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகளிலும் யூதர்களைச் சித்திரவதை செய்து கொன்றழிக்கும் வதைமுகாம்கள் அமைக்கப்பட்டன. யூதர்களைக் கொன்றழிப்பது ஆர்ய இனத்தைச் சேர்ந்த ஜெர்மானியர்களின் கடமை என வலியுறுத்தும் வகையில் பொய்கள் நிரம்பிய திரைப்படங்களையும் கோயபெல்ஸ் தலைமையிலான குழுவினர் எடுத்து வெளியிட்டனர்.

அந்த வகையில் ‘தி எடெர்னல் ஜூ’ எனும் தலைப்பில் 1940-ல் ஃப்ரிட்ஸ் ஹிப்லர் எனும் ஜெர்மானிய இயக்குநர் ஒரு திரைப்படத்தையும் எடுத்தார். கோயல்பெல்ஸின் நிதிப் பங்களிப்பில் உருவான இந்தத் திரைப்படத்தில், போலந்தின் வார்ஸா நகரில் அமைக்கப்பட்டிருந்த வதைமுகாமில் யூதர்களைப் பட்டினி போட்டு கொல்லும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. ஏனோ அந்தப் படத்தை ஜெர்மானியர்கள் ரசிக்கவில்லை. படம் தோல்வியடைந்தது.

இப்படி இனவெறியை, இன அழிப்பை திட்டமிட்டு அரங்கேற்றிய நாஜிக்களும் ஹிட்லரும் இரண்டாம் உலகப்போரில் வீழ்த்தப்பட்டது வரலாறு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in