இதே தேதி... முக்கியச் செய்தி: பெரியம்மைக்கு முடிவுரை

இதே தேதி... முக்கியச் செய்தி: பெரியம்மைக்கு முடிவுரை

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கரோனா பெருந்தொற்று உலகை உலுக்கியது. இன்றும் அந்த வைரஸின் திரிபுகளும் துணைத் திரிபுகளும் தொற்று அபாயம் குறித்த அச்சத்தை ஏற்படுத்திக்கொண்டே இருக்கின்றன. இதற்கு முன்னரும் பெருந்தொற்றுக்கள் கோடிக்கணக்கான உயிர்களைப் பறித்துச் சென்றிருக்கின்றன. அவற்றில் ஒன்று - பெரியம்மை. கரோனாவைப் போலவே பெரியம்மைக்கும் உரிய மருந்துகள் இல்லை; தடுப்பூசி மூலம் இந்நோய் வராமல் தடுக்க முடியும். இப்படியான சூழலில், மனிதகுலத்தைக் காப்பாற்ற மருத்துவ உலகம் எடுத்த முயற்சிகளால் இந்த நோய் ஒழிக்கப்பட்டுவிட்டது. மனிதர்களுக்கு இடையிலான தொற்றுநோய்களின் பட்டியலில் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிட்ட நோய் இது மட்டும்தான்.

சோமாலியாவின் மெர்கா நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் சமையல் பணியாளராக இருந்த அலி மாவ் மாலினுக்கு 1977 அக்டோபர் மாதம் பெரியம்மை தொற்று கண்டறியப்பட்டது. பெரியம்மை தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த உலக சுகாதார நிறுவனத்தின் பெரியம்மை ஒழிப்புக் குழுவில் அவர் அவ்வப்போது பங்களித்துவந்தார். மருத்துவப் பணியாளர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்வது கட்டாயம் என்றபோதிலும் ஏனோ அவர் தடுப்பூசி செலுத்திக்கொண்டிருக்கவில்லை. தடுப்பூசி தொடர்பாகத் தனக்கு அச்சம் இருந்ததாகப் பின்னாட்களில் அவர் குறிப்பிடிருக்கிறார்.

1977 ஆகஸ்ட் மாதம், சோமாலியாவைச் சேர்ந்த நாடோடிக் குழு ஒன்றைச் சேர்ந்த 20 குடும்பங்களுக்குப் பெரியம்மை தொற்று ஏற்பட்டது. அவர்களை தனிமைப்படுத்துதல் முகாமுக்கு அழைத்துச் சென்ற குழுவில் மாலினும் இடம்பெற்றிருந்தார். அந்த முகாமில் அவர்களைக் கண்காணித்துவந்த குழுவிலும் இடம்பெற்றிருந்தார். அந்த முகாமில் இருந்த ஒரு சிறுமி பெரியம்மை பாதிப்பால் உயிரிழந்தார். எனினும், மற்றவர்கள் அதிலிருந்து மீண்டுவிட்டனர். பெரியம்மை நோய் மனிதர்களுக்கு இடையே எளிதில் பரவக்கூடியது என்பதால், விரைவில் மாலினும் தொற்றுக்குள்ளானார்.

பெரியம்மை தொற்றுக்குள்ளான மாலின்
பெரியம்மை தொற்றுக்குள்ளான மாலின்

காய்ச்சல், தலைவலி உள்ளிட்ட அறிகுறிகள் அவரிடம் தென்பட்ட நிலையில், அவருக்கு மலேரியாவுக்கான சிகிச்ச்சையும், சின்னம்மைக்கான சிகிச்சையும் தரப்பட்டன. காரணம், அவருக்குப் பெரியம்மை தடுப்பூசி செலுத்தப்பட்டுவிட்டது என்று நம்பிய மருத்துவர்கள், அவருக்கு அந்தப் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என ஊகிக்கவில்லை. இதனால் சின்னம்மைக்கான சிகிச்சைக்குப் பின்னர் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

எனினும், அவரது உடலில் பெரியம்மை நோய்க்கான அறிகுறிகள் தொடர்ந்தன. அவரும் அதை உணரத் தொடங்கினார். தடுப்பூசியைப் போலவே தனிமைப்படுத்துதல் முகாம் குறித்தும் அவருக்கு அச்சம் இருந்தது. எனவே, அதைப் பற்றி அவர் வெளியே சொல்லவில்லை என்று கருதப்படுகிறது.

இதற்கிடையே, பெரியம்மை ஒழிப்பு நடவடிக்கையில் சிறப்பாகச் செயல்பட்டதற்காக அவருக்கும் வெகுமதி வழங்கப்படும் என சக பணியாளர் ஒருவர் அவரிடம் தெரிவித்தார். இப்படியாக தற்செயலாகவே மாலின் தனிமைப்படுத்துதல் முகாமுக்கு அனுப்பப்பட்டார். அங்கு அவரது உடலில் பெரியம்மைக்கான அறிகுறிகள் இருப்பது அக்டோபர் 26-ம் தேதி கண்டறியப்பட்டது. எனினும், அவருக்குப் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படவில்லை. நவம்பர் மாதம் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

விஷயம் அத்துடன் முடிந்துவிடவில்லை. தனிப்பட்ட முறையில் அவர் செய்த தவறுகள், பெரியம்மை விஷயத்தில் சில முக்கியத் தகவல்களுக்கு வழிவகுத்தன. ஆம், தொற்றுக்குள்ளாகியிருந்த நேரத்தில் அவர் தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளுக்குச் சென்றுவந்தார். இடையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோதும் பிற நோயாளிகளிடமும் உரையாடிவந்தார். அந்தக் காலகட்டத்தில் அவர் சந்தித்தவர்களில் பெரும்பாலானோர் பெரியம்மை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள். மனிதரிடமிருந்து மனிதருக்குத் தொற்றிக்கொள்ளும் பெரியம்மை நோய், அவர் பலரிடம் நேரடியான தொடர்பில் இருந்தபோதும் அவர்களிடம் தொற்றை ஏற்படுத்தவில்லை. மாலினையும் அவருடன் தொடர்பில் இருந்தவர்களையும் தொடர்ந்து கண்காணித்துவந்த மருத்துவர்கள் இந்த அம்சத்தைக் கண்டறிந்தனர். இது அவர்களுக்குப் பெரும் உற்சாகத்தை அளித்தது.

தடுப்பூசி மூலம் பெரியம்மை பரவலைத் தடுக்க முடியும் என்பது நிரூபணமானது. இதையடுத்து, மாலின் தான் பெரியம்மை தொற்றுக்குள்ளான கடைசி நபர் என உலக சுகாதார நிறுவனம் முடிவுக்குவந்தது.

உலகம் முழுவதும் பெரியம்மை பரவல் முடிவுக்கு வந்ததாக 1979 அக்டோபர் 26-ல் உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது.

அதன் பின்னர் மாலின் மருந்துகள், தடுப்பூசிகள் போன்றவற்றை விற்பனை செய்துவந்தார். பல்வேறு நோய்களுக்கான தடுப்பூசிகள் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்திவந்தார். எனினும், 2013-ல் மலேரியா பாதிப்புக்குள்ளான மாலின், ஜூலை 22-ல் மரணமடைந்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in