ஏனெனில்-13: துக்ளக்... எத்தனை துக்ளக்!

ஏனெனில்-13: துக்ளக்... எத்தனை துக்ளக்!
கிரீஷ் கர்னாட் எழுதிய ’துக்ளக்’ நாடகத்திலிருந்து ஒரு காட்சி...

தமிழில், ‘துக்ளக்’ என்றதும் பத்திரிகையாளரும் திரைப்பட, நாடக நடிகருமான சோ ராமசாமியின் பெயர் நினைவில் வருவது இயல்பானது. அதே பெயரில், அவர் எழுதி நடித்த நாடகம் பின்பு படமும் ஆனது. அவர் தொடங்கிய பத்திரிகையின் தலைப்பும் ஆனது.

ஆங்கில இலக்கிய வாசகர்களுக்கு இந்தப் பெயர், நடிகரும் எழுத்தாளருமான கிரீஷ் கர்னாட்டை நினைவுக்குக் கொண்டுவரும். அவர் எழுதி பிரபலமான நாடங்களில் ‘துக்ளக்’ என்பதும் ஒன்று. 60-களில் வெளியான இந்நாடகத்தை ‘க்ரியா’ பதிப்பகத்தின் நிறுவனர்களில் ஒருவரான வி.ஜெயலெட்சுமி, கன்னடத்திலிருந்து தமிழில் நேரடியாக மொழிபெயர்த்துள்ளார். 1988-ல் அந்த மொழிபெயர்ப்பின் முதல் பதிப்பு ‘க்ரியா’ வெளியீடாக வெளியானது.

கிரீஷ் கர்னாட்
கிரீஷ் கர்னாட்

‘துக்ளக்’ நாடகத்தின் தமிழ் மொழிபெயர்ப்புக்கு முன்னுரை எழுதியிருக்கும் என்.சிவராமன், சோ ராமசாமியின் நாடகம் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது என்றும் கர்னாடின் நாடகம், அரசியல்- அரசியல்வாதிகள்- மக்களுக்கு இடையேயான பிணைப்பைப் புரிந்துகொள்ள உதவும் ஒரு கலைப்படைப்பு என்றும் ஒப்பீடு செய்துள்ளார். ‘துக்ளக்’ நாடகத்தின் முக்கியமான அம்சமாக அவர் கூறியிருப்பது, அதன் ‘தற்காலத்தன்மை’. இந்நாடகத்தின் “தற்காலத்தன்மை குறையாதவாறுதான் இன்றைய ஆட்சியாளர்களும், அரசியல்வாதிகளும், ஏன் மக்களும்கூட நடந்துகொண்டுவருகிறார்கள். அரசியலும் அரசியல் சூழ்ச்சிகளும் எப்படி மக்களின் துன்பங்களுக்குக் காரணமாக இருக்கின்றன என்பதைக் காட்டுவதில் இந்நாடகத்தின் தற்காலத்தன்மை இருக்கிறது” என்று எழுதியுள்ளார் என்.சிவராமன்.

துக்ளக் என்றாலே, கோமாளி போலவும் பைத்தியக்காரர் போலவும் கருதிக்கொள்ளும் ஒரு பொது அபிப்ராயம் நிலவுகிறது. விளைவுகளைக் கருதாமல் தோன்றிய எண்ணங்களை எல்லாம் உடனுக்குடன் செயல்படுத்தும் அவசரக்காரராகவும் சித்தரிக்கப்படுகிறார். அடிப்படையில், அவர் சுயநலம் பிடித்த அரசியல்வாதியல்ல. அவரது கனவுகள் அறிவுபூர்வமானவை. ஆனால், அதற்கான காலம் கனிவதற்கு முன்பே அதைச் செயல்படுத்த முனைந்ததுதான் அவரது தவறுகளுக்குக் காரணமாகிப்போனது. தலைநகர் மாற்றம் தொடங்கி நாணயங்களுக்கு மலிவான உலோகங்களைத் தேர்ந்தெடுத்தது வரை அவரது ஒவ்வொரு முடிவுக்கும் நியாயமான காரணங்களும் இருக்கின்றன. கனவுகள் நிறைவேறாத நிலையில்தான் அவர் கொடுங்கோலனாகிப் போனார்.

கிரீஷ் கர்னாட் எழுதிய ’துக்ளக்’ நாடகத்திலிருந்து ஒரு காட்சி...
கிரீஷ் கர்னாட் எழுதிய ’துக்ளக்’ நாடகத்திலிருந்து ஒரு காட்சி...

நாடகத்தில் முகம்மது பின் துக்ளக்கின் வார்த்தைகளாக அமைந்துள்ள ஒரு உரையாடல் பகுதி இது:

“நாம் செப்பு வெள்ளி பற்றி விவாதம் நடத்தவில்லை. நம் முன்னால் இருப்பது நாணயங்களின் பிரச்சினை. நாணயங்கள், கேவலம், விலையை அளப்பதற்கு ஒரு கருவி. அதற்குச் சொந்தமாக ஏது மதிப்பு? மதிப்புக் கிடையாது. அரசனின் பேச்சுக்கு, அவனுடைய அரச முத்திரைக்கு ஜனங்களுக்கு சுல்தானிடம் நம்பிக்கை இருந்தால் போதும்.”

பணவியல் பொருளாதாரத்தின் பாலபாடமே இதுதான். ஆனால், இந்த வார்த்தைகளைக் கேட்ட அமைச்சர்களில் ஒருவர், பக்கத்தில் இருப்பவரிடம் “நான் சொல்லவில்லையா, இவர் முழுப் பைத்தியக்காரர்” என்று முணுமுணுக்கிறார். அந்த அமைச்சரின் வார்த்தைகள் காலங்கள் கடந்த பின்னும் இன்னும் ஒலித்துக்கொண்டேதான் இருக்கின்றன.

ஐந்தாண்டுகளுக்கு முன்னால், இதே நவம்பர் 8 அன்றுதான் இந்தியாவில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கணக்கில் வராத கறுப்புப் பணத்தை முழுமையாக மீட்க முடிந்ததா, பயங்கரவாத நடவடிக்கைகளுக்கான நிதியாதாரங்களை முற்றிலுமாக முடக்க முடிந்ததா என்ற கேள்விகள் எல்லாம் தொடரத்தான் செய்கின்றன. அந்த திடீர் நடவடிக்கையால் பொருளாதாரத்தில் ஏற்பட்ட பின்னடைவுகள் இன்னும்கூட சரியாகவில்லை. அரசு நல்ல நோக்கத்தில் எடுக்கும் நடவடிக்கைகளும்கூட பரிதாபகரமான தோல்விகளைத் தழுவலாம். அதன் நோக்கங்கள் நிறைவேறாமல் போகலாம். அப்படியிருக்கையில், முகம்மது பின் துக்ளக் மட்டும் இறந்து 670 ஆண்டுகளைக் கடந்தபின்னும் ஏன் இன்னும் கேலிக்குரியவராகச் சித்தரிக்கப்படுகிறார் என்பது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

துக்ளக்கை ஒவ்வொருவரும் தங்களது நோக்கிலிருந்தே மதிப்பீடுகளைச் செய்கிறார்கள். சிலர் பாராட்டுகிறார்கள். சிலர் கேலிசெய்கிறார்கள். எனக்கு முகம்மது பின் துக்ளக்கைப் பிடித்துப்போனதற்கான காரணம், சுல்தானியர்களின் ஆட்சிக்காலத்தில், திவான்-இ-கோஹி என்ற பெயரில் வேளாண்மைக்கு என்று தனித் துறையை உருவாக்கிய முன்னோடி அவர்.

(வெள்ளிக்கிழமை சந்திப்போம்)

Related Stories

No stories found.
x