ஏனெனில்-7: ராஜேந்தரின் வசந்தும் பாக்யராஜின் வசந்தியும்!

ஏனெனில்-7: ராஜேந்தரின் வசந்தும்
பாக்யராஜின் வசந்தியும்!

டி.ராஜேந்தரின் ‘ரயில் பயணங்களில்’, பாக்யராஜின் ‘அந்த 7 நாட்கள்’ 2 படங்களும் வெளியாகி 40 ஆண்டுகள் ஆகின்றன. 1981-ல் வெளிவந்த திரைப்படங்களில் இளையராஜா இசையமைத்தவை தவிர்த்து, பிரபலமான வேறு படங்கள் என்று பார்த்தால் இந்த 2-ம்தான் முதன்மையானவை. எம்.எஸ்.வி. இசையமைத்த மற்ற படங்களும் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. சங்கர்-கணேஷ் இரட்டையர்களும் அப்போது களத்தில் இருந்தார்கள் என்றாலும், ‘கடலோடு நதிக்கென்ன கோபம்’ (அர்த்தங்கள் ஆயிரம்) போன்று ஒன்றிரண்டு பாடல்கள்தான் இன்றும் கவனத்தை ஈர்க்கின்றன.

‘ஒருதலை ராகத்தின்’ தொடர்ச்சியாகவே ‘ரயில் பயணங்களில்’ இருக்கிறது. காதலை உணர்ந்தும் அதை ஏற்றுக்கொள்ள முடியாத சோகம் ‘ஒருதலை ராகம்’ என்றால், ‘ரயில் பயணங்களில்’ தயங்கித் தயங்கி சொல்லி முடிப்பதற்குள் விதியின் விளையாட்டு குறுக்கிடுகின்ற கதை.

‘ரயில் பயணங்களில்’ நாயகன் வசந்த் பிரபலப் பாடகர் என்றால், ‘அந்த 7 நாட்கள்’ நாயகன் பாலக்காட்டு மாதவன் திரைப்பட வாய்ப்புக்காகக் காத்திருக்கும் இசையமைப்பாளன். 2 படங்களிலும் பாடல்கள் சிறப்பாக அமைந்ததற்கு அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். 2 நாயகர்களுக்கும் இடையிலான ஒற்றுமை இசைவயப்பட்டவர்கள் என்பது மட்டுமல்ல; காதல்வயப்பட்டு கைகூடிவரும் வேளையில், அதைப் பறிகொடுத்தவர்கள் என்பதும்தான். காதலியை வேறொருவன் மனைவியாகச் சந்திக்கும் காட்சிகள்தான் 2 படங்களிலுமே உச்சக்காட்சி.

‘ஒருதலை ராகத்தின்’ தொடர்ச்சியாகவே ‘ரயில் பயணங்களில்’ இருக்கிறது. காதலை உணர்ந்தும் அதை ஏற்றுக்கொள்ள முடியாத சோகம் ‘ஒருதலை ராகம்’ என்றால், ‘ரயில் பயணங்களில்’ தயங்கித் தயங்கி சொல்லி முடிப்பதற்குள் விதியின் விளையாட்டு குறுக்கிடுகின்ற கதை. ‘அந்த 7 நாட்க’ளின் வசந்திக்குத் தயக்கமில்லை. மாதவனும் ஒரு கட்டத்தில் தனது தயக்கத்தை உதறச்செய்கிறான். ஆனால், அவர்களின் காதலை வசந்தியின் குடும்பத்தினர் அனுமதிக்கவில்லை. வாழ்வில் குறுக்கிட்ட விதியை காதலர்கள் ஏற்றுக்கொள்கிறார்களா, மீறுகிறார்களா என்ற கேள்விதான் ‘ரயில் பயணங்களு’க்கும் ‘அந்த 7 நாட்க’ளுக்கும் இடையில் முடிச்சுப் போடுகிறது.

காதல் கைகூடாதவள் இன்னொருவனுக்கு மனைவியானபிறகும் காதலனை மறக்க முடியவில்லை. காதலர்கள் நோக்கிலிருந்து பார்த்தால் அந்தக் காதல் உள்ளம் வணங்குதற்குரியதுதான். ஆனால், ‘முதலிரவில் தனது மனைவி இன்னொருவன் காதலி என்று தெரிந்தபிறகு, எந்த ஆம்பிளையாலும் நிம்மதியாக இருக்க முடியும் என்று நினைக்கிறீர்களா?’ என்று மருத்துவர் ஆனந்தன் கேட்கும் கேள்விக்கு, மாதவன்களால் பதில்சொல்லிவிட முடியாது.

மரணப்படுக்கையில் இருக்கும் தாயின் மனநிறைவுக்காகவே 2-வது திருமணத்துக்குச் சம்மதிக்கிறார் ஆனந்தன். திருமணத்தில் ஏற்கெனவே அவருக்கு விருப்பமில்லை. எனவே, புதிதாய் வந்து சேர்ந்தவளை உரியவனிடம் ஒப்படைத்துவிட தீர்மானித்துக்கொள்கிறார். அதே கருணையை ‘ரயில் பயணங்களில்’ தீபக் பாத்திரத்திடம், எப்படி எதிர்பார்க்க முடியும்? பெண்பித்தன், வந்தவளை வார்த்தைக்கு வார்த்தை கொல்லும் குரூரன் என்பது போன்ற குணக்கேடுகளே, அவனுக்கென்று நியாயங்களைப் பேசமுடியாமல் செய்துவிடுகிறது.

இரண்டு படங்களையும் ஒருசேர திரும்பிப் பார்க்கும்போது, காட்சியனுபவத்தில் ‘அந்த 7 நாட்’களே விஞ்சிநிற்கிறது.

திருமண உறவைத் தூக்கியெறிந்துவிட்டு, தனது முன்னாள் காதலனை அடைவதற்குப் பெண்கள் சம்மதிக்கமாட்டார்கள் என்பதுதான் 2 படங்களும் வந்து நிற்கும் கடைசிப் புள்ளி. நமது சமூக உளவியலின் பிரதிபலிப்பு இது. பாக்யராஜ், திருமாங்கல்யத்தைக் குறியீடாக்கி அந்த நாடகத்தை நிகழ்த்துகிறார். டி.ராஜேந்தர், ஒரு வல்லுறவுக் காட்சியால் அதை நேரடியாகவே அணுகிவிட்டார். எதிர்மறை நாயகனுக்கே உரிய வல்லுறவுக் காட்சியை நாயகனின்மீது சுமத்தியது எப்படியும் ஒரு துணிச்சல்தான்.

2 படங்களையும் ஒருசேர திரும்பிப் பார்க்கும்போது, காட்சியனுபவத்தில் ‘அந்த 7 நாட்’களே விஞ்சிநிற்கிறது. டி.ஆர் ரசிகனான என்னாலேயே, ‘ரயில் பயணங்களில்’ படத்தின் கல்லூரி வளாக நகைச்சுவைக் காட்சிகளைச் சகிக்கமுடியவில்லை. பாக்யராஜ், தன் படத்தில் காட்சிக்குக் காட்சி எதார்த்தத்தை மீறாமல் கதையை நகர்த்தியிருக்கிறார். டி.ராஜேந்தரின் படமோ அந்தரத்தில் மிதக்கும் கனவாகவே நிற்கிறது. அதனாலென்ன, காதலைச் சொல்லத் தயங்கும் கடைசி மனிதன் இருக்கும்வரை, டி.ராஜேந்தரின் பாடல்கள் காற்றில் தவழ்ந்துகொண்டுதான் இருக்கும்.

இந்த 2 படங்களுக்கிடையே இன்னொரு முக்கியமான வேறுபாடும் உண்டு. பாக்யராஜின் வசந்தி, காதலனின் நினைவுகளையும் உதற முடியாமல் கணவனின் கருணையையும் ஏற்றுக்கொள்ள முடியாமல் நிற்கிறாள். மொத்தக் கதையும் அந்த 3 கதாபாத்திரங்களையே மையமிட்டு நிற்கிறது. வசந்தோ, சாந்தியின் மீதான நிறைவேறாத காதலின் துயரங்களைச் சுமந்து திரிகிறான். அவன் மட்டுமல்ல, அவன் மீதான காதலைச் சுமந்துகொண்டு முறைப்பெண் சங்கீதாவும் வாடுகிறாள். அவனிடம் முன்பொரு தடவை காதலைச் சொன்ன கவிதாவும் அது நிறைவேறாத வருத்தத்தில்தான் இருக்கிறான்.

ரயில் பயணங்களில் வசந்தம் மட்டும் பாடிவரவில்லை. ஒரு வண்ணப் பறவை மன்னன் வரவை கண்டு மயங்கி நிற்கிறது. மலரும் நினைவில் மதுவின் சுவையாய் வசந்தமே என்று வரவேற்கிறது மற்றொன்று. தவிர, மல்லியரும்பு ஒன்றும் பூத்துக் குலுங்கியபடியிருக்கிறது. மூவரையுமே முன்வரிசையில் அமர்த்திக்கொண்டுதான் யாரோ பாடும் பின்பாட்டுக்கு நாயகன் கைத்தாளம் போட்டுக்கொண்டிருக்கிறான். தேடிவந்த காதலையெல்லாம் திருப்பியனுப்பிவைத்துவிட்டு, கிடைக்காத காதலுக்கு ஏங்கிக்கொண்டிருக்கிறான். அவன்தான் அப்படியென்றால், அவன் விரும்பியவளும் அப்படித்தானிருக்கிறாள். ஒருபக்கம், தான் விரும்பியதைச் சொல்ல முடியாமல் தவிக்கிறாள். இன்னொருபக்கம், தேடிவந்த விருப்பத்தை மறுதலிக்கிறாள். பின்னாளில், மணமுடித்தவனையும் சகித்துக்கொள்கிறாள். ஒற்றைத் தன்மையிலிருந்து விடுபட்டு இப்படி குறுக்கும் நெடுக்குமாய் பின்னப்பட்ட உறவுகள்தான் ‘ரயில் பயணங்க’ளை, அதன் அத்தனைப் பலவீனங்களையும் தாண்டி இன்றளவும் நினைவுகூர வைக்கிறது. உறவுகள் என்றாலே சிடுக்குகள்தானே!

டெய்ல்பீஸ்:

வசந்தியின் வீட்டுச் சுவரில் கா.கா.தே.கா தேர்தல் விளம்பரம். குமரி அனந்தன் ஆரம்பித்த ‘காந்தி காமராஜர் தேசியக் காங்கிரஸ்’ கட்சியின் பெயர்ச் சுருக்கம் அது. 1980 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் இணைந்து போட்டியிட்ட அக்கட்சி, சில தொகுதிகளிலும் வெற்றிபெற்றது. காங்கிரஸில் மீண்டும் குமரி அனந்தன் இணைந்த பிறகு, அந்தக் கட்சி கலைக்கப்பட்டுவிட்டது. ஒவ்வொரு மாநிலத்திலும் இப்படி காங்கிரஸிலிருந்து பிரிந்து மீண்டும் இணைந்துகொண்ட கட்சிகளைக் கணக்கிட்டாலே, அது ஒரு தனிப்பட்டியலாக மாறும். அந்தப் பட்டியல் இனிவரும் காலத்திலும் தொடரக் கூடும் என்பதையே, பஞ்சாப்பின் தற்போதைய நிலவரம் சொல்கிறது.

(திங்கள்கிழமை சந்திப்போம்)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in