ஏனெனில்-6: ஏழு முடிந்து எட்டு...

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

மோடி பிரதமராகப் பதவியேற்று ஏழாண்டுகள் நிறைவுபெற்றதையொட்டி, தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் கே.அண்ணாமலை ஒரு கட்டுரை எழுதியுள்ளார். ‘நாட்கள் ஏழு, கடல்கள் ஏழு, மலைகள் ஏழு, உலகங்கள் ஏழு, வண்ணங்கள் ஏழு, சுரங்கள் ஏழு...’ என்று தொடங்குகிறது அந்தக் கட்டுரை. ‘அன்புக்கு மூன்றெழுத்து, அறிவுக்கு மூன்றெழுத்து, காதலுக்கும் மூன்றெழுத்து...’ என்று வார்த்தைகளில் விளையாடும் பாரம்பரிய திமுகவினருக்குப் போட்டியென்று எண்ணுகிறாரோ என்னவோ.

பிறப்புகள் ஏழு, முனிவர்கள் ஏழு என்று இப்படி தொகுத்து எழுதுவதை விளக்கிட தமிழ் அகராதிகளின் பின்னிணைப்பாகத் தொகையகராதிகளை இணைப்பது வழக்கம். அந்தத் தொகையகராதியையும் ஒரு படைப்பிலக்கியமாக மாற்றியிருக்கிறார் நாஞ்சில்நாடன். எண்தொகைகள் குறித்த இலக்கியச் சொல்லாட்சிகளை எடுத்துக்காட்டும் அவரது எண்வழிக் கட்டுரைகளை ‘நவம்’ என்ற தலைப்பில் கோவை விஜயா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. “ஒரு கணித மாணவன் எனும் விதத்தில் எல்லா எண்களுமே கவித்துவமானவை எனக்கு. எண்கள் முன்னால், பாவை நோன்பு நோற்கும் பருவப்பெண் நான்” என்கிறார் நாஞ்சில்நாடன்.

நாஞ்சில்நாடன்
நாஞ்சில்நாடன்

‘சப்த கன்னிகள், சப்த தாண்டவம், சப்த பதி, சப்த தாளம், சப்த மேகங்கள், எழுவகைப் பெண்டிர்...’ என்று நீள்கிறது ஏழினைப் பற்றிய நாஞ்சில்நாடனின் கட்டுரை. ஏழிலைக் கிழங்கான மரவள்ளியைப் பற்றிய ஒரு குறிப்பும் உண்டு. திருவிதாங்கூர் ராஜ்ஜியத்தில் பெரும்பஞ்சம் வந்த காலத்தில், மன்னர் விசாகம் திருநாள், 1883-ல் இதை வரவழைத்துப் பயிர்செய்தார். ‘கப்பை’ என்று அழைக்கப்படும் இந்தக் கிழங்குதான், இன்றும் கேரளத்தின் பிரதான உணவு. நாடாண்டவர்களில் சிலர் இப்படி நல்லவர்களாகவும் இருந்திருக்கிறார்கள்.

நாஞ்சில்நாடனின் புனைவெழுத்துகளைப் போலவே அவரது கட்டுரைகளும் முக்கியமானவை. அவரது விரிந்து பரந்த வாசிப்பை மிகவும் குறிப்பாக மரபிலக்கிய வாசிப்பை எடுத்துக்காட்டுபவை. அவர் எழுதிய ஒரு சிறுகதை, இன்றைய அரசியல் சூழலில் மீண்டும் மீண்டும் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை. அது, தாம் எழுதியதில் அவருக்கே மிகவும் பிடித்த கதையும்கூட. தலைப்பு, ‘யாம் உண்பேம்’.

எல்லோருக்குமான உணவைத் தனது உழைப்பிலிருந்து விளைவிக்கும் விவசாயியால், ‘எனக்குப் பசிக்கிறது, பிச்சை போடுங்கள்’ என்று எப்படி கையேந்தி நிற்க முடியும்? அந்தச் சந்திப்புதான் பின்பு ‘யாம் உண்பேம்’ என்ற தலைப்பில் சிறுகதையானது.

மகாராஷ்டிராவில் ஒரு ரயில் பயணத்தில் நாஞ்சில்நாடன் சில ரொட்டித் துண்டுகளையும் உருளைக்கிழங்கையும் சாப்பிட்டுக்கொண்டிருந்த சமயம், அவரது இருக்கைக்கு ஒரு விவசாயி வருகிறார். சோகமும் வலியும் விரவிக்கிடந்த முகம். விவசாயியின் கையிலிருக்கும் ஒரு பாலித்தீன் பையில் சில துணிகளும் ஒரு குடிநீர்ப் புட்டியும் மட்டுமே இருக்கின்றன. தயக்கத்தோடு நெருங்கிவந்த அந்த விவசாயி, “ஹமீ கானா…” என்றதும் நாஞ்சில்நாடன் அழுதேவிடுகிறார். அந்த வார்த்தைகளுக்கான அர்த்தம், ‘சேர்ந்து சாப்பிடுவோமா?’ என்பது. எல்லோருக்குமான உணவைத் தனது உழைப்பிலிருந்து விளைவிக்கும் விவசாயியால், ‘எனக்குப் பசிக்கிறது, பிச்சை போடுங்கள்’ என்று எப்படி கையேந்தி நிற்க முடியும்? அந்தச் சந்திப்புதான் பின்பு ‘யாம் உண்பேம்’ என்ற தலைப்பில் சிறுகதையானது. அந்தச் சிறுகதை அடங்கிய தொகுப்புக்குத்தான் நாஞ்சில்நாடனுக்கு சாகித்ய அகாடமி விருதும் கிடைத்தது.

விவசாயத்தையே வாழ்வாகக் கொண்டிருப்பவர்களிடம் பேசுவதற்கு அரசுக்கும் அதிகாரத்துக்கும் இன்னொரு மொழி தேவைப்படுகிறது. எதிர்பாராத வறட்சிக்கும் புயல் மழைக்கும் அசைந்துகொடுக்காத அவர்களது உள்ளம், அரசதிகாரத்துக்கு மிக எளிதாகக் கீழ்படிந்துவிடக்கூடும் என்று எதிர்பார்ப்பது அறியாமையன்றி வேறொன்றுமல்ல.

தொடங்கிய இடத்துக்கே வருவோம். ஏழினையடுத்து எட்டு குறித்து எழுதிய கட்டுரைக்கு ‘அட்டம்’ என்று தலைப்பிட்டுள்ளார் நாஞ்சில்நாடன். அட்டாங்க யோகம், அட்டதிக் கஜங்கள் என்று அங்கேயும் ஒரு பெரும்பட்டியல் உண்டு. எந்த எண்களின் மீதும் நாஞ்சிலார்க்கு விரோதமில்லை. ஆனால், அதற்கு முந்தைய ‘சப்தம்’ கட்டுரையில் இப்படி ஒரு குறிப்பு இருக்கிறது: ‘நாம் கிருஷ்ண ஜெயந்தி என்பதை வடவர் கோகுலாஷ்டமி என்றும் கிருஷ்ணாஷ்டமி என்றும் சொல்கிறார்கள். பிறகு எட்டின் மேல் ஏனிந்த வெறுப்பு?’

சமாதானம் என்னவோ நன்றாகத்தானிருக்கிறது. கிருஷ்ணன் என்றதும் கோகுலம், பிருந்தாவனம் என எல்லாம்தான் நினைவுக்கு வருகின்றன. ஆனால், அனைத்துக்கும் முன்னதாக அவனது தாய்மாமனின் நினைவும் அல்லவா வந்து தொலைக்கிறது?

(வெள்ளிக்கிழமை சந்திப்போம்)

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in