ஏனெனில்-2: அமானுல்லாவின் கனவு நிறைவேறாமல் போகாது!

ஏனெனில்-2: 
அமானுல்லாவின் கனவு
நிறைவேறாமல் போகாது!
தனது மனைவி சொராயா தர்ஸியுடன் அமானுல்லா கான்படம்: தி இந்து ஆவணக் காப்பகம்

ஆப்கானிஸ்தானில் பெண் கல்வியை அனுமதிப்போம் என்று தாலிபான்கள் சொல்கிறார்கள். ஆனால், மாணவிகளுக்கு ஆசிரியைகளைக் கொண்டு மட்டுமே பாடங்கள் நடத்தப்படும், மாணவிகள் ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு வர வேண்டும் என்று ஏகப்பட்ட கட்டுப்பாடுகளையும் விதிக்கிறார்கள். கல்லூரிகளில் இருபாலர் வகுப்பு நடந்தால் நடுவில் திரை வைக்கப்பட வேண்டும் என்பது மற்றொரு கட்டுப்பாடு.

1950-களில் ஆப்கன்

அசாமிய மொழிக் கவிஞரும் பொருளியலாளரும் வரலாற்று ஆசியருமான அமலேந்து குஹா, 1950-களில் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் ஆப்கானிஸ்தான் சென்றுவந்த அனுபவங்களைத் தனிப் புத்தகமாகவே எழுதியிருக்கிறார். அதிலொரு அனுபவம்: “1957-ல் பெண்களுக்கென தனியே 2 நாடகக் கொட்டகைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. அவற்றை மட்டும்தான் பெண்கள் பயன்படுத்த முடியும். கணவனும் மனைவியும் சேர்ந்து ஒரு கொட்டகைக்குள் செல்ல முடியாது. கணவன் மருத்துவமனையில் சிகிச்சை பெறும்போது மனைவி முக்காட்டுடன் அவனைச் சென்று பார்க்கலாம். ஆனால் அதே நிலையில் மனைவி இருந்தால் கணவனால் மனைவியைச் சந்திக்கவே முடியாது.”

1998 மே 24-ல் அமலேந்து குஹா (வலது) எழுதிய ‘நேதாஜி சுபாஷ்: ஐடியாலஜி அண்ட் டாக்ட்ரைன்’ புத்தகத்தை வெளியிடுகிறார் முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமன்.
1998 மே 24-ல் அமலேந்து குஹா (வலது) எழுதிய ‘நேதாஜி சுபாஷ்: ஐடியாலஜி அண்ட் டாக்ட்ரைன்’ புத்தகத்தை வெளியிடுகிறார் முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமன்.படம்: தி இந்து ஆவணக் காப்பகம்

ஆப்கானிஸ்தான் கடந்து வந்திருக்கும் வரலாறு இப்படியாகத்தான் இருக்கிறது. ஆனால், அடுத்தடுத்த ஆண்டுகளில் அந்தக் காட்சிகள் மாறிப் போனதையும் அமலேந்து குஹாவின் பயணக் குறிப்புகளிலிருந்து அறிந்துகொள்ள முடிகிறது. இந்தியா முழுவதும் சுற்றுப்பயணங்கள் செய்த அவர், சோவியத் ரஷ்யாவுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் பயணம் செய்து விரிவான பல நூல்களை எழுதியவர். அவரது ‘ஆப்கானிஸ்தான்’ நூலின் தமிழாக்கத்தை 1966-ல் தென்மொழிகள் புத்தக டிரஸ்ட் சார்பில் குயிலன் பதிப்பகம் வெளியிட்டது. ஆங்கிலம் தெரியாதவர்க்கும் அனைத்துத் துறை நூல்களையும் கொண்டுசேர்க்க வேண்டும் என்பது அந்த அறக்கட்டளையின் நோக்கம். தனிப்பட்ட பதிப்பாளர்கள் யாரும் பாதிக்கக் கூடாது என்பதற்காக நிதி நல்கை அளித்து பதிப்பகங்களின் வாயிலாகவே அந்நூல்கள் பதிப்பிக்கப்பட்டன. முதற்பதிப்பிலேயே மூவாயிரம் புத்தகங்கள் வரை வெளியிட்டிருக்கிறார்கள் என்பது இன்றைய பி.ஓ.டி காலத்தில் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

ஏறக்குறைய 100 ஆண்டுகளுக்கு முன்பே ஆப்கானிஸ்தானில் பெண் கல்விக்கான விதைகளை ஊன்றியவர் அமானுல்லா. அவரது காலத்தில்தான் பெண்களுக்கான கல்விக்கூடம் முதன்முதலாகத் தொடங்கப்பட்டது.

அமானுல்லாவின் முற்போக்கு நடவடிக்கைகள்

அமலேந்து குஹாவின் ஆப்கானிஸ்தான் பயணத்தில் அவர் விரும்பிப் பார்க்கச் சென்ற இடங்களில் ஒன்று ஜலாலாபாத். காபூலிலிருந்து 90 மைல் தொலைவிலுள்ளது அந்நகரம். சுதந்திர ஆப்கானிஸ்தானின் முதலாவது மன்னர் அமானுல்லா கானின் கல்லறை அங்குதான் உள்ளது. அவர் முன்னெடுத்த விடுதலைப் போராட்டத்தால்தான் பிரிட்டிஷ் ஆதிக்கத்திலிருந்து ஆப்கானிஸ்தான் 1919-ம் ஆண்டிலேயே விடுதலை பெற முடிந்தது. பத்தாண்டுகள் கழித்து, கொள்ளைக்காரர்களின் தாக்குதலைத் தாக்குப்பிடிக்க முடியாமல் நாட்டைவிட்டுத் தப்பியோடிய அவர், சுவிட்ஸர்லாந்தின் ஸூரிச் நகரத்தில் வாழ்ந்து 1960-ல் மறைந்தார். அவரது விருப்பத்தின்படி, அவரது உடல் ஜலாலாபாத் கொண்டுவரப்பட்டு அவரது தந்தையின் கல்லறை அருகில் புதைக்கப்பட்டுள்ளது.

ஏறக்குறைய 100 ஆண்டுகளுக்கு முன்பே ஆப்கானிஸ்தானில் பெண் கல்விக்கான விதைகளை ஊன்றியவர் அமானுல்லா. அவரது காலத்தில்தான் பெண்களுக்கான கல்விக்கூடம் முதன்முதலாகத் தொடங்கப்பட்டது. ஒரே நேரத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை அவர் மேற்கொள்ள வேண்டியிருந்ததால், விவசாயிகளின் மீதான வரிச்சுமை அதிகரித்தது. கடைசியில், அந்தச் சுமையானது சமூகச் சீர்திருத்த முயற்சிகளுக்கு எதிரான கோபமாக மாறியது. பெண்கள் முக்காடு அணியும் முறையை அகற்றிவிட்டு, ஐரோப்பிய முறையில் ஆடை அணிய வேண்டும் என்று அவர் கொண்டுவந்த மாற்றத்தை மக்கள் ஆதரிக்கவில்லை.

1929-ல், பாச்சா-இ-சேக்கோ என்ற கொள்ளைக்காரனால் காபூல் நகரம் கைப்பற்றப்பட்டது. அந்தச் சூழலில் மக்களின் கோபத்தைத் தணித்து ஆட்சியைக் கைப்பற்றிக்கொள்ள நினைத்த அமானுல்லா, ஒரே பிரகடனத்தின் மூலம் தன்னுடைய அனைத்து சீர்திருத்த நடவடிக்கைகளையும் திரும்பப் பெற்றுக்கொண்டுவிட்டார். கல்விப் பயிற்சிக்காகத் துருக்கிக்கு அனுப்பப்பட்ட பெண்கள் திரும்ப அழைத்துக்கொள்ளப்பட்டனர். மாதர் சங்கங்கள் கலைக்கப்பட்டன. ஐரோப்பிய பாணியில் பெண்கள் ஆடையணியும் முறைக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. அமானுல்லாவின் இந்த முயற்சிக்கு வெற்றி கிடைக்கவில்லை. அரசியல் நிலை கைமீறிப் போய் அவர் நாட்டைவிட்டு வெளியேறும்படியாகிவிட்டது.

காபூல் நகரில் உள்ள பள்ளியில் மாணவர்களுக்குப் பாடம் நடத்தும் ஆசிரியர்...
காபூல் நகரில் உள்ள பள்ளியில் மாணவர்களுக்குப் பாடம் நடத்தும் ஆசிரியர்...படம்: ஏ.எஃப்.பி

சீர்திருத்தங்களின் பின்னே...

எந்தவொரு சமூகச் சீர்திருத்த நடவடிக்கை வெற்றி பெறுவதற்கும் அப்போதைய பொருளாதாரச் சூழலும் ஒத்துழைக்க வேண்டும். இந்தியா சுதந்திரம் பெற்றபோது, கடுமையான உணவுப் பற்றாக்குறையைச் சமாளிக்க வேண்டிய நெருக்கடிக்கு நடுவில்தான் நேரு, இந்து மதச் சட்டங்கள் நான்கை வெற்றிகரமாக நடைமுறைக்குக் கொண்டுவந்தார். நாடு முழுவதும் பின்பற்றப்பட்டுவந்த வழக்கங்களின் வேறுபாடுகளைக் களைந்து திருமணம், வாரிசுரிமை, இளவர் மற்றும் பாதுகாப்பாளர், மகவேற்பு மற்றும் பராமரிப்பு ஆகியவற்றுக்குப் பொதுவான சட்டங்களை அம்பேத்கரின் உதவியோடு இயற்றினார். இன்றைக்கும் அதுகுறித்து பலதரப்பட்ட விமர்சனங்கள் இருந்தபோதிலும் ஆப்கானிஸ்தான் வரலாற்றுடன் ஒப்பிடும்போது, அது எவ்வளவு பெரிய துணிச்சலும் சாமர்த்தியமும் நிறைந்த முயற்சி என்று வியக்காமலிருக்க முடியவில்லை.

ஆப்கானிஸ்தானில் 1939-ல் பெண்கள் உயர்நிலைப் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டாலும் மிகவும் எச்சரிக்கையாக, பாலர் பள்ளிகள் என்ற பெயரிலேயே அவற்றை அழைத்துள்ளனர். 1949-ல் உயர்தரப் பயிற்சி பெற்ற பெண்கள், முதல் முறையாக பெண்கள் பள்ளிகளில் பாடம் போதிக்கத் தொடங்கினர். அதைத் தொடர்ந்து 1959-ல் பர்தா முறையும் அகற்றப்பட்டது. இந்த மாற்றங்களை மதகுருக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. கிளர்ச்சி செய்யவும் அவர்கள் தயாராகினர். ஆனால், திடமான ராணுவ நடவடிக்கைகள் மூலமாக அவை அடக்கியொடுக்கப்பட்டன.

பனிப்போரின் ஆடுகளம்

60-களுக்குப் பின்பு, சோவியத் ஒன்றியத்துக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையிலான பனிப்போரின் ஆடுகளமாகவே ஆப்கானிஸ்தான் மாறிப்போய்விட்டது. பனிப்போர் முடிவுக்கு வந்தபோது, மத அடிப்படைவாதம்தான் கடைசியில் எஞ்சி நின்றது. இருபாலருக்கும் கல்வியளிக்க வேண்டும் என்ற அமானுல்லாவின் லட்சியக் கனவு நிறைவேறிவிடும் என்று எதிர்பார்ப்புகள் எழும்போதெல்லாம், அடிப்படைவாதிகள் ஆதிக்கம் பெற்று அதைத் தள்ளிப்போட்டுவிடுகிறார்கள். என்றாலும், இந்தக் காட்சிகளும் கடந்துபோகக் கூடும் என்பதற்கும் ஆப்கானிஸ்தானின் வரலாறே சாட்சியாக நிற்கிறது. அமானுல்லாவின் கனவு நிறைவேறாமல் போகாது!

(வெள்ளிக்கிழமை சந்திப்போம்)

Related Stories

No stories found.
x