இதே தேதி... முக்கியச் செய்தி: இந்தியப் பொறியியலின் புரட்சியாளர்

இதே தேதி... முக்கியச் செய்தி: இந்தியப் பொறியியலின் புரட்சியாளர்

ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் உருவாகும் இன்ஜினியர்களின் எண்ணிக்கை சராசரியாக 15 லட்சம். இவர்களில் அனைவருக்கும் நல்ல வேலை கிடைத்துவிடுகிறது எனச் சொல்லிவிட முடியாது. சொல்லப்போனால் அவர்களில் 3 சதவீதம் பேருக்குத்தான் உரிய சம்பளத்துடன் கூடிய பணிவாய்ப்பு கிட்டுகிறது. பெரும்பாலானோர் படிப்புக்குத் தொடர்பில்லாத வேறு பணிகளைச் செய்ய வேண்டிய நிலை. இப்படி இன்றைக்கு இந்திய இன்ஜினியர்களின் நிலைமை சற்றே கவலைக்குரியதாக இருந்தாலும், இந்தியாவின் இன்ஜினியர்களுக்கு உலக அளவில் எப்போதே நல்ல பெயர் இருக்கத்தான் செய்கிறது. குறிப்பாக, குறைபாடுகளைக் கண்டறிந்து நிவர்த்தி செய்வதில் நம்பகமானவர்கள் எனப் பெயர் வாங்கியிருக்கிறார்கள் நம்மவர்கள்.

பொறியியல் துறையில் இந்தியர்களுக்கு உத்வேகம் தந்த முன்னோடியாக இருந்தவர் மோக்‌ஷகுண்டம் விஸ்வேஷ்வரய்யா. ‘நவீன மைசூருவின் தந்தை’ என்றும் அவர் அழைக்கப்படுகிறார்.

1861 செப்டம்பர் 15-ல் அன்றைய மைசூர் மாகாணத்தின் முதனஹள்ளி கிராமத்தில் ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர் விஸ்வேஷ்வரய்யா. சம்ஸ்கிருத அறிஞரும் ஆசிரியருமான அவரது தந்தை ஸ்ரீனிவாச சாஸ்திரி, அவரை நன்கு படிக்க வைக்க தீர்மானித்தார். எனினும், விஸ்வேஷ்வரய்யா 15 வயது சிறுவனாக இருந்தபோதே அவரது தந்தை காலமானார். லட்சியத்திலிருந்து விலகிவிடாத விஸ்வேஷ்வராய்யா, பிற மாணவர்களுக்கு டியூஷன் வகுப்புகள் நடத்தி அதில் கிடைத்த வருமானத்தில் தனது கல்வியைத் தொடர்ந்தார். பின்னர் பெங்களூருவுக்குச் சென்று கல்வியைத் தொடர்ந்த விஸ்வேஷ்வரய்யா, 1881-ல் மத்திய கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்தார். அதன் பின்னர் புணே நகரில் உள்ள பொறியியல் கல்லூரியில் பயின்றார். அவரது அறிவுத் திறனைக் கண்டு ஆசிரியர்கள் வியப்பில் ஆழ்ந்தனர். அதிக மதிப்பெண்களுடன் சிவில் இன்ஜினியராக வெளியில் வந்தார்.

விஸ்வேஷ்வரய்யா
விஸ்வேஷ்வரய்யா

1884-ல் பாம்பே அரசில் பொதுப்பணித் துறையில் தனது பணியைத் தொடங்கினார். பின்னர் இந்திய நீர்ப்பாசன ஆணையத்தில் சேர அவருக்கு அழைப்பு வந்தது. தனது பொறியியல் அறிவை இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்குப் பகிர்ந்தளித்தார். மைசூருவில் உள்ள கிருஷ்ண ராஜ சாகர் அணை கட்டுமானப் பணியில், தலைமை இன்ஜினியராகப் பணிபுரிந்தார். ஹைதராபாத் நகரை வெள்ளப் பேரழிவிலிருந்து காக்கும் திட்டத்தை வகுத்து கொடுத்தார். 1906-07-ல் பிரிட்டிஷ் இந்திய அரசு குடிநீர் விநியோகம், வடிகால் அமைப்பு ஆகியவை குறித்து மேலும் கற்றறிந்துவர அவரை ஏமன் நாட்டுக்கு அனுப்பியது. தனக்குக் கிடைத்த வாய்ப்புகள் அத்தனையையும் மிகச் சிறப்பாகப் பயன்படுத்தி மனிதகுலத்தின் வசதிக்கும் பாதுகாப்புக்கும் அடித்தளமிட்டார் விஸ்வேஷ்வரய்யா.

மைசூருவில் உள்ள கிருஷ்ண ராஜ சாகர் அணை கட்டுமானப் பணியில், தலைமை இன்ஜினியராகப் பணிபுரிந்தார். ஹைதராபாத் நகரை வெள்ளப் பேரழிவிலிருந்து காக்கும் திட்டத்தை வகுத்து கொடுத்தார். பிஹாரில் மொகாமா பகுதியில் கங்கை ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்க வழிகாட்டினார். பாலம் கட்டுமானம், கழிவுநீர் மேலாண்மை, நீர்ப்பாசனம் எனப் பல்வேறு தளங்களில் அவரது பணி இந்தியாவை வளப்படுத்தியது.

மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் அவருக்கு ‘நைட்’ பட்டம் வழங்கி கெளரவித்தார். தான் பிறந்த மைசூருவின் திவானாக 1912-ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1955-ல் அவருக்கு பாரத் ரத்னா விருது வழங்கி பெருமைப்படுத்தியது இந்திய அரசு. பல்வேறு விருதுகள், பாராட்டுகள், அங்கீகாரங்களைப் பெற்றுப் பெருவாழ்வு வாழ்ந்த விஸ்வேஷ்வரய்யா 1962-ல் காலமானார்.

முதனஹள்ளியில் அவர் பிறந்த வீட்டுக்கு அருகிலேயே அவரது நினைவிடம் அமைக்கப்பட்டிருக்கிறது. அவரது பிறந்ததினம் இந்தியாவின் இன்ஜினியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. அயராத உழைப்பும் அர்ப்பணிப்பும் கொண்ட அவரது வாழ்க்கை இந்திய இளைஞர்களுக்கு ஒரு பாடமாக அமையட்டும்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in