ஏனெனில்-3:
மயிலே… மயிலே…

ஏனெனில்-3: மயிலே… மயிலே…

அவ்வப்போது நினைவுகளிலிருந்து மேலெழுந்து முணுமுணுக்க வைத்துக்கொண்டிருந்த பாடலை, அலெக்ஸாண்டர் பாபுவின் ‘வீட்டு வீடியோஸ்’ மீண்டும் சில தடவை கேட்கவும் பார்க்கவும் வைத்துவிட்டது. பாடலின் காட்சிகள் அவர் பயமுறுத்துவது போலில்லை. பொன்வானம் பன்னீர் தூவியதோடு ஒப்பிடுகையில் முகங்களின் அண்மைக் காட்சிகளில் சிவக்குமார் கிறக்கங்களின்றி இயல்பாகத்தான் இருக்கிறார். இந்தப் பாடலில் ஜென்ஸியின் அலட்சியக் குரல் குறித்த அலெக்ஸின் வார்த்தைகள்தான், சற்றே எல்லைமீறிவிட்டதாகத் தோன்றுகிறது. இயக்குநர்- தயாரிப்பாளர்களின் கற்பனை உரையாடலும் இழுவை.

அதே பாட்டு… அதே ஜென்ஸியின் குரல்... ‘குவாரன்டைன் ஃப்ரம் ரியாலிட்டி’ சுபஸ்ரீ தணிகாசலத்துக்குக் குழந்தைத்தனமாகவும் அப்பாவித்தனமாகவும் தோன்றுகிறது. பாடலைக் கேட்டால் அப்படித் தோன்றவும்கூடும். ஆனால், பாடலைப் பார்க்கும்போது சுமித்ராவின் இமையசைவுகளும் இதழசைவுகளும் இன்ன பிற அசைவுகளும்… அந்தக் குரலின் அப்பாவித்தனத்துக்குப் பொருந்துகிறதா என்ன?

சரி… காதல் கீதங்களில் நிலா, பூ, வசந்தம், தென்றல் ஆகியவற்றுடன் மயில்களும் நீக்கமற நிறைந்திருப்பது ஏன்? சங்க காலத்திலிருந்தே மயில் என்றால் பெரிதும் அது பெண்ணைத்தான் குறிக்கிறது. மகளிர் சாயலுக்கும் நடைக்கும் மயிலை உவமையாகச் சொல்வது மரபு. சங்க இலக்கியங்களில் அதிகம் பாடப்பட்ட பறவையும் மயில்தான். ஐங்குறுநூறில், கூடலும் கூடல் நிமித்தமும் பாடும் குறிஞ்சித் திணையில் மயிலுக்கென்றே தனியாக பத்துப் பாடல்களை இயற்றியுள்ளார் கபிலர். குறிஞ்சியும் முல்லைக்கும் பொதுவான புள்ளினம் என்றாலும் ஐந்து திணைகளிலும் பாடப்பட்ட பெருமை மயிலுக்கு மட்டுமே உண்டு.

மஞ்ஞை, தோகை, பீலி, அகவல், ஓசை என்று சங்க இலக்கியங்களில் மொத்தம் 171 இடங்களில் மயில் பற்றிய குறிப்புகள் உள்ளன. பீலிக்குக் கலவம், கலாவம் என்ற பெயர்களும் உண்டு. (காதோரமாய் பாம்பே ஜெயஸ்ரீயின் குரலில் ‘கலாபக் காதலா’ பாடல் கேட்பதாய் உணர்ந்தால் நீயும் என் சகோதரனே). சினிமா பாடல்களும் இலக்கியத்தின் ஒரு வகைதான் என்று ஏற்றுக்கொள்ள சிலர் தயங்கலாம். ஆனால், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான கவிதை மரபும் காட்சிகளும் குறியீடுகளும் அந்தப் பாடல்கள் வழியாகத்தான் எழுதப் படிக்கத் தெரியாதவர்களுக்கும் கடத்தப்பட்டுவருகிறது.

சங்கப் பாடல்களில், பொருளீட்டவோ போருக்காகவோ தலைவியைப் பிரிந்துசென்ற தலைவனுக்குக் கூடற்பொழுதான கார்காலத்தின் வருகையை மயிலின் தோகைவிரிப்பே நினைவூட்டுகிறது. அந்தக் காட்சியே தலைவிக்கு வேதனையையும் அளிக்கிறது. பருவம் தப்பிப் பெய்த மழையை மயில்கள் தவறாக எண்ணிவிட்டன என்று ஒருத்தி, தன் மனதைச் சமாதானப்படுத்திக்கொள்கிறாள். சேர்ந்திருந்தால் மகிழ்ச்சி, பிரிந்திருந்தால் துயரம் என இரண்டு நிலைகளுக்கும் மயிலே குறியீடாகி நிற்கிறது. தலைவியோடு இருக்கையில் அவளை விடுத்து, மயிலை ரசிப்பதாய் ஊடல் வளர்க்கும் தலைவன் ஒருவனைப் பற்றிய பாடல் பரிபாடலில் உண்டு. மயிலைக் காட்டிலும் எழில்மிகுந்தவள் அவளே என்று ஒப்பிட்டுச் சொல்லி ஊடல் தீர்ப்பதிலும் வல்லவனாய் இருக்கிறான் அவன்.

தோகை என்பது ஆண் மயிலுக்கு உரியதல்லவா, பெண்ணைப் பார்த்து தோகை எங்கே என்று பாடுவது சரியா என்ற கேள்வியும் எழலாம். தோகை என்ற வார்த்தைக்கு முந்தானை என்ற அர்த்தமும் உண்டு. பாடலில் முந்தானையைத் தோகையாய் விரித்து சுமித்ரா ஆடுவது அதனால்தான் போலும். (‘மாதவிப் பொன்மயிலாள் தோகை விரித்தாள்’ என்ற பாடலுக்கு, அவரவர் விருப்பம்போல அர்த்தம் எடுத்துக்கொள்ளும் அபாயமும் இருக்கத்தான் செய்கிறது.) எனக்கென்னவோ, மயிலும் தோகையும் கூடலின் குறியீடாய் மாறியதற்குச் சுடரென மின்னும் மயிற்கண்ணே காரணமாய்ப்படுகிறது. வள்ளுவன் சொன்ன பீலிபெய் சாக்காட்டை நான் பட்டினத்தாரின் வழியிலேயே பொருள்புரிந்துகொள்கிறேன்.

டெய்ல்பீஸ்: அண்ணாவின் புகைப்படங்களில் மயிலொன்றை அணைத்தபடி அவர் நிற்கும் படம் எனக்குப் பிடித்தமான ஒன்று. நேருவும் பின்பு அவர் மகள் இந்திராவும் புலிக்குட்டியுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட படங்கள் போல, மயிலுடனான அண்ணாவின் படத்துக்குத் தனியழகு உண்டு. பெருந்தொற்று முடக்கத்துக்குப் பிறகு அதை ரசிக்கும் ஆர்வம் இல்லாமலேயே போய்விட்டது.

(திங்கள் கிழமை சந்திப்போம்)

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in