ஏனெனில்-24: பெண்ணின் திருமண வயது... 150 ஆண்டு காலப் பயணம்!

ஈஸ்வர சந்திர வித்யாசாகர், பெரியார்
ஈஸ்வர சந்திர வித்யாசாகர், பெரியார்

பெண்ணின் திருமண வயதை 21 ஆக உயர்த்தும் பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 1860-ல் முதன்முதலாக பெண்களுக்குத் திருமண வயதாக 10 என்று தீர்மானிக்கப்பட்டது. அதற்கு முக்கியமான காரணம் ஈஸ்வர சந்திர வித்யாசாகர். 1856-ல் விதவைகள் மறுமணச் சட்டத்தை இயற்றுவதற்குக் காரணமான அவர்தான் குழந்தைகளின் திருமண வயது குறைந்தபட்சம் 10 ஆக இருக்க வேண்டும் என்ற இயக்கத்தை முன்னெடுத்தவர். கையெழுத்து இயக்கம் நடத்தி, “என்னுடைய பெண் குழந்தைக்குக் கல்வியைக் கொடுப்பேன். 11 வயதுக்குள்ளாக அவளைத் திருமணம் செய்துகொடுக்க மாட்டேன். என் பெண் குழந்தை விதவையானால் அவளுக்கு மறுமணம் செய்துகொடுப்பேன்” என்று பல பெற்றோர்களைக் கையெழுத்திட வைத்தவர்.

கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சிக்கு எதிராக 1857-ல் நடந்த சிப்பாய்க் கலகம் தோல்வியுற்ற பிறகு, இந்தியாவின் ஆட்சி நிர்வாகம் கம்பெனியின் கைகளிலிருந்து பிரிட்டிஷ் அரசின் வசம் சென்றது. குற்றங்களுக்கான இந்திய தண்டனைச் சட்டத்தொகுப்பை 1860-ல் இயற்றியது பிரிட்டிஷ் அரசு. இந்திய குற்றச் சட்டத்தொகுப்பின் பிரிவு 375-ன் கீழ் உறவுக்குச் சம்மதம் தெரிவிப்பதற்கான குறைந்தபட்ச வயது 10 என்று தீர்மானிக்கப்பட்டது. 1891-ல் சம்மதம் தெரிவிப்பதற்கான வயதுச் சட்டம் இயற்றப்பட்டு பெண்களின் திருமண வயது 12 வயதாக உயர்த்தப்பட்டது. 1925-ல் அது 13 வயதானது. ஆனால், இந்தக் குறைந்தபட்ச வயது குறித்த கட்டுப்பாட்டினை நீதிபதிகளும், வழக்கறிஞர்களும், ஒரு சில படித்த மனிதர்கள் மட்டுமே அறிந்திருந்ததால் இந்நிபந்தனை காகிதத்தில் மட்டுமே இருந்தது என்று 1929-ல் திருமண வயது ஒப்புதல் கமிட்டி தெரிவித்தது .

1929-ல் இயற்றப்பட்ட குழந்தைத் திருமணக் கட்டுப்பாட்டுச் சட்டப்படி பெண்களின் திருமண வயது 14 என்று நிர்ணயிக்கப்பட்டது. (ஆண்களுக்கு 18). தொடர்ந்து, 1947-ல் 15, 1978-ல் 18 (ஆண்களுக்கு 21) என்று அது உயர்த்தப்பட்டது.

பெண்ணின் திருமண வயதை 15-லிருந்து 18 ஆக உயர்த்துவது குறித்து விவாதிக்கப்பட்ட நாளிலேயே 20-க்கும் அதிகமாக நிர்ணயிக்க வேண்டும் என்று பேசியிருக்கிறார் பெரியார்.

2006-ல் குழந்தைத் திருமணச் சட்டம் இயற்றப்பட்டது. தற்போது பெண்களின் திருமண வயது 21 என்று உயர்த்தி குழந்தைத் திருமணச் சட்டம், இந்து திருமணச் சட்டம் ஆகியவற்றில் சட்டத்திருத்தங்கள் செய்யப்பட உள்ளன.

பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது குறித்த பெரியாரின் கருத்து அவரது 1970-ம் ஆண்டின் வானொலி பேட்டி ஒன்றிலிருந்து இந்தத் தொடரின் முதல் அத்தியாயத்தில் மேற்கோள் காட்டப்பட்டிருந்தது. அதே பேட்டியில், பெண்களின் திருமண வயது குறித்தும் பேசியிருந்தார் பெரியார்.

“20 வயசு வரைக்கும் அவங்க படிச்சாங்கன்னா- வேலைக்கு லாயக்கு ஆகறாப்லே ஒரு படிப்பு அவங்களுக்கு வந்து சேரும். இந்த 18-லே கொண்டு போயிட்டா எஸ்எஸ்எல்சி பாஸ் பண்ணியும் பெயில் ஆகியும் இருக்கிற நிலைமை வரும். அவங்க, புருஷனுக்கு என்னமா பாடுபட முடியும்? அவங்களுக்குத் தொழில்தான் என்ன வரும்? எனக்கென்னமோ, எவ்வளவு நாளைக்குக் கல்யாணத்தைத் தள்ளிப்போடறமோ அவ்வளவும் நல்லதுதான்; பின்னாலேயும் ரொம்ப உபயோகப்படுவாங்க அவங்க. இப்ப என்ன பண்றது? 18-லியே கலியாணம் பண்ணினா 19-லியே குடும்பப் பொம்பிளையா போயிடறா; குடும்பத்தைக் காப்பாத்தற வேலையே அவளுக்குச் சரியாப் போகுது; 20-லே ரெண்டு புள்ளையாகிப் போகுது... அதெல்லாம் இல்லாம இருக்கணும்னா ஒரு 20,22 வயதாவது இருக்கணும்.”

பெண்ணின் திருமண வயதை 15-லிருந்து 18 ஆக உயர்த்துவது குறித்து விவாதிக்கப்பட்ட நாளிலேயே 20-க்கும் அதிகமாக நிர்ணயிக்க வேண்டும் என்று பேசியிருக்கிறார் பெரியார். 150 ஆண்டுகளுக்கு முன்பு, ஈஸ்வர சந்திர வித்யாசாகர் பெண்களின் திருமண வயதை 10 ஆக நிர்ணயிப்பதற்கே ஒரு இயக்கத்தை நடத்த வேண்டியிருந்தது. 20 வயதுக்கும் மேல் திருமண வயதை நிர்ணயிக்க வேண்டும் என்று எழுபதுகளிலேயே பெரியார் பேசினாலும் அதற்குப் பிறகும் 50 ஆண்டுகள் கடந்திருக்கின்றன.

பெருந்தொற்றுக் காலத்தில் குழந்தைத் திருமணங்கள் அதிகரித்துள்ள நிலையில், பெண்களின் திருமண வயதை நீட்டித்திருப்பது அவற்றைக் கட்டுப்படுத்த உதவுமா என்று தெரியவில்லை. சட்டபூர்வ திருமண வயதை அனைவரும் கடைப்பிடிக்க கட்டுப்பாடுகள் மட்டுமின்றி விழிப்புணர்வும் தேவை.

(திங்கள்கிழமை சந்திப்போம்)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in