ஏனெனில்-14: எதனினும் கொடிது இளமையில் வறுமை

'பதேர் பாஞ்சாலி’ படத்தின் கடைசிக் காட்சி...
'பதேர் பாஞ்சாலி’ படத்தின் கடைசிக் காட்சி...

சினிமா பார்க்கையிலும் ஏதாவது ஒரு புத்தக நினைவு. புத்தகம் படிக்கையிலும் இப்படி நேர்மாறான அனுபவங்கள் உண்டு. சத்யஜித் ரே இயக்கிய 'பதேர் பாஞ்சாலி’யின் கடைசிக் காட்சி, குழிகளில் நீர் தேங்கிக்கிடக்கும் ஒரு மண் ஒழுங்கையில் பயணிக்கும் கூட்டுவண்டியோடு முடியும். எழுத்தை நம்பிப் பிழைக்கலாம் என்ற நம்பிக்கைகள் சிதைந்தழிந்து காசி நகரத்தை நோக்கி ஒரு ஏழை பிராமணக் குடும்பம் கிளம்பும் காட்சி அது. தாய், தந்தை, மகன் என்று இமைக்கவும் மறந்த அந்த ஆறு விழிகளின் துயரம் நெஞ்சைப் பிசைவது. காய்ச்சலுக்குப் பலியான, துல்லியமாகச் சொன்னால் வறுமைக்குப் பலியான அக்கா துர்க்காவின் நினைவுகளில் அபுவும் அவனது பெற்றோரும் மவுனமாகக் கேவியழும் சப்தம் நம் மனதுக்குக் கேட்கும்.

கூட்டுவண்டியில் பெற்றோருடன் அபு ஊரைவிட்டுக் கிளம்பும் அந்தக் காட்சியைப் பார்த்தபோது, உ.வே.சா எழுதிய ‘என் சரித்திர’த்திலிருந்து ஒரு அத்தியாயம் என் நினைவில் வந்தது. வங்கத்தில் மட்டுமில்லை, தமிழ்நாட்டிலும் அதே காட்சி வேறொரு விதமாய் பதிவாகியிருக்கிறது.

‘எங்கள் பிரயாணத்திற்காக ஒரு வண்டி திட்டம் செய்துகொண்டு குமரபிள்ளை வந்தார். செலவுக்கும் பணம் அளித்து அவர் விடைபெற்றுச் சென்றார். விடிய ஐந்து நாழிகையளவில் எங்கள் வீட்டு வாசலில் வண்டி வந்து நின்றது. என் தந்தையாரும் நானும் வீட்டைவிட்டு வெளியே வந்தோம். தந்தையார் ஈசுவரப் பிரார்த்தனை செய்துகொண்டே என்னை வண்டியில் எடுத்து உட்கார வைத்தார். அந்தச் சமயத்திற் பெருமாள் கோயிற் பக்கம் மேள வாத்தியத்தின் சத்தம் கேட்டது... என் தந்தையாருக்கு மயிற்கூச்செறிந்தது... கிருஷ்ண விக்கிரகத்தை எழுந்தருளப் பண்ணி ஸந்நிதிக்கெதிரில் நிறுத்தித் தீபாராதனை செய்தார்கள். அந்தச் சமயமும் எந்தையார் என்னை வண்டியில் ஏற்றிய நேரமும் ஒன்றாக இருந்தன... எதிர்காலத்தை ஒன்றும் தெரியாத வாழ்க்கைப் பிரயாணத்தில் தெய்வத்தின் திருவருள் துணைசெய்யுமென்ற ஆறுதல் அவர் நெஞ்சில் குடிகொண்டது.’

உ.வே.சா என்றதுமே அவரது ஆசிரியர் மயிலாடுதுறை மீனாட்சிசுந்தரனார் நினைவு வந்துசேர்வது இயல்பானது. ஆனால், உ.வே.சா மாயவரத்துக்குப் புறப்படுவதற்கு முன்பே அரியிலூர், பெரும்புலியூர் வட்டாரத்தில் (இன்றைய அரியலூர், பெரம்பலூர்தான்) தமிழறிந்த பலரிடமும் அவரவர்கள் அறிந்தவற்றைப் பாடமாகக் கேட்டு தன்னைத் தமிழ் மாணவனாகத் தகுதிப்படுத்திக்கொண்டிருந்தார். அனைவரைக் காட்டிலும் தந்தையாரே அவரது முதல் தமிழாசிரியர். மகனுக்கு இசை கற்றுக்கொடுத்து பெரிய வித்வான் ஆக்கிவிட வேண்டும் என்பதுதான் அவரது ஆசை. ஆனால், அவரின் நலம்விரும்பிகளோ கணக்குப் பிள்ளையாகப் பயிற்சிகொடுக்க ஆலோசனை வழங்கினார்கள். உ.வே.சா-வுக்கு இசையில் எப்போதுமே தனி ஈடுபாடு இருந்தது. நல்ல வேளையாக, வரவு-செலவுப் பேரேடுகளுக்குள் அவர் வாழ்க்கை முடங்கிவிடவில்லை. வறுமையைக் கண்டு மனம் தளராத அவரது தந்தைக்கே நன்றிசொல்ல வேண்டும். காலட்சேபங்கள் நடத்திக் கிடைத்த குறைந்த வருமானத்தில் மகனை எப்படியோ கரையேற்றிவிட்டார்.

இவ்வுலகில் இன்னும் சில இடங்களில் தந்தை, தாய் இருவராலுமே கண்டுகொள்ளப்படாத சிறுவர்களும்கூட இருக்கத்தானே செய்கிறார்கள்!

‘பதேர் பாஞ்சாலி’யில் தந்தை தனது எழுத்துப் பணியில் ஆழ்ந்திருக்க, அருகே அமர்ந்து அபு அரிச்சுவடி பயில்கிற காட்சிதான் மீண்டும் மீண்டும் நினைவுக்கு வருகிறது. தன்னைக் காக்காத கல்வி தன் தலைமுறையையாவது காத்துவிடும் என்று அபுவின் தந்தை ஹரிஹர் நம்பியதாய் நினைக்கவில்லை. நெறிபிறழ நினையாத நல்மனதைப் பீடித்த சாபமோ, வரமோ அது.

அந்த வாய்ப்பும் எல்லாச் சிறுவர்க்கும் வாய்த்துவிடுவதில்லை. அபுவின் தமக்கை துர்க்காவின் மரணக் காட்சி, எனக்கு இன்னொரு நாவலை நினைவுக்குக் கொண்டுவந்தது. கன்னட எழுத்தாளர் எஸ்.எல்.பைரப்பா எழுதிய ‘ஒரு குடும்பம் சிதைகிறது’ நாவலிலும் அதேபோல, தமக்கையின் அகால மரணம். ஆனால், தந்தை சென்னகராயனோ குடும்பப் பொறுப்புகள் எதுவும் இல்லாத சோற்றுமூட்டை. அங்கே தாய் நஞ்சம்மாவே தந்தையின் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டு அல்லாடுவாள். அதுவும்கூட ஒரு ஏழைப் பிராமணக் குடும்பம்தான். இவ்வுலகில் இன்னும் சில இடங்களில் தந்தை, தாய் இருவராலுமே கண்டுகொள்ளப்படாத சிறுவர்களும்கூட இருக்கத்தானே செய்கிறார்கள்!

(திங்கள்கிழமை சந்திப்போம்)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in