ஏனெனில்-11: வெற்றியில் முடியுமா சசிகலாவின் பயணம்?

ஏனெனில்-11: வெற்றியில் முடியுமா சசிகலாவின் பயணம்?

சிறையிலிருந்து வெளிவந்த சசிகலா, 9 மாதங்களுக்குப் பிறகு இப்போதுதான் தொண்டர்களைச் சந்திக்கத் தனது பயணத்தைத் தொடங்கியிருக்கிறார். காவிரிப்படுகையில் தொடங்கி, மதுரை, ராமநாதபுரம் என்று அவரது பயணத்துக்குத் திட்டமிடப்பட்டுள்ளது. தினகரன் மகள் திருமண வரவேற்பில் கலந்துகொண்ட அவர் மதுரையில் மருதுபாண்டியர்கள் சிலைக்கு மாலை அணிவித்திருக்கிறார், அடுத்து பசும்பொன் தேவர் ஜெயந்தி விழாவில் ஒருநாள் முன்னதாகவே கலந்துகொள்ள திட்டமிட்டு அதன்படியே செய்யப்பட்டுள்ளது. மருதுபாண்டியர் நினைவுதினமான அக்.27 தொடங்கி தேவர் ஜெயந்தியான அக்.30 வரையில் தனது பயணத்தைத் திட்டமிட்டிருப்பதிலேயே சசிகலாவின் நோக்கம் தெளிவாகிறது.

தஞ்சை மாவட்டம், பூண்டியில் நடந்த தினகரன் மகள் திருமண வரவேற்பு விழாவில் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ராஜா கலந்துகொண்டுள்ளார். அரசியல் கருத்து வேறுபாடுகளை இல்ல விழாக்கள் வரைக்கும் நீட்டிக்க வேண்டியதில்லை. ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி காலமானபோது சசிகலா நேரில் சென்று ஆறுதல் கூறினார். அரசியலுக்கும் அப்பாற்பட்ட நாகரிகம் அது. ஆனால், சசிகலாவை அதிமுகவில் சேர அனுமதிப்பது குறித்து கட்சியின் நிர்வாகிகள் கலந்து முடிவெடுப்பார்கள் என்று ஓ.பன்னீர்செல்வம் பத்திரிகையாளர்களின் கேள்விக்குப் பதிலளித்தது, அதிமுகவுக்குள் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பெங்களூரு புகழேந்தி, செல்லூர் ராஜூ என்று அடுத்தடுத்து சிலர் ஓ.பன்னீர்செல்வத்தின் பதிலுக்கு ஆதரவளிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

சசிகலாவை எதிர்த்துத்தானே ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்தினார் என்று ஞாபகப்படுத்தியுள்ளார் ஜெயக்குமார். சசிகலாவை எதிர்த்து நடத்திய யுத்தம் என்பதைக் காட்டிலும் அதிமுகவின் தலைமையைக் கைப்பற்ற அறிவித்த யுத்தம் என்று பொருள்கொண்டால், இன்றைய அத்தனை கேள்விகளுக்கும் பதில் கிடைத்துவிடும். சசிகலாவால் வாய்ப்பிழந்தபோது பழனிசாமியைத் தவிர்க்க முடியாமல் ஆதரித்த பன்னீர்செல்வம், இதே நிலை தொடர்ந்தால், நிரந்தரமாகத் தலைமைக்கான வாய்ப்பை இழந்துவிடுவோம் என்று இன்றைக்கு சசிசலாவின் பக்கம் சாயவும் தயாராக இருக்கிறார் போல தெரிகிறது. அக்டோபர் கடைசி வாரம் அதற்கேற்றச் சூழலாக அமைந்துவிட்டது.

சசிகலாவை அதிமுகவின் எல்லாத் தரப்பினரும் ஏற்றுக்கொள்ளவில்லை. ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி ஆகியோரையும்கூட தொண்டர்கள் முழுமனதோடு ஆதரிக்கிறார்கள் என்று சொல்லிவிட முடியாது. ஒருவேளை, சசிகலாவை மீண்டும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரித்தால் தன்னுடைய இடத்தை இன்னும் அவர் பலப்படுத்திக்கொள்ள வாய்ப்பிருக்கிறது. சசிகலா அவரைப் பின்னிருந்து இயக்கவும் விரும்பலாம். ஆனால், அந்த ‘ஜெ யுகம்’ எப்போதோ முடிவுக்கு வந்துவிட்டது.

எம்ஜிஆரைப் போலவோ, ஜெயலலிதாவைப் போலவே இவர்கள் மூவருமே தனிப்பெரும் தலைவர்களும் இல்லை. இவர்கள் மூவரையும்விட கள அரசியலில் கனிந்த பல மூத்தத் தலைவர்கள் அக்கட்சியில் உண்டு. ஆனாலும், இந்த மூவருக்கும் இடையில் நடந்துகொண்டிருக்கும் அரசியல் போட்டியில் ஒவ்வொருவருமே தாங்கள் சார்ந்த சமூகத்தின் பிரதிநிதியாகவே தங்களை முன்னிறுத்திக்கொள்கிறார்கள் என்பது முக்கியமானது. கொங்கு வேளாளருக்கும் முக்குலத்தோருக்கும் இடையே நடந்துகொண்டிருக்கும் இந்த அதிகாரப் போட்டியில், ஏன் மற்ற சமூகங்கள் விலகி நிற்கின்றன என்ற கேள்வியும் தவிர்க்கவியலாதது.

பேராசிரிய இணையர்கள் க.நெடுஞ்செழியன், இரா.சக்குபாய் இருவரும் இணைந்து ‘சமூகநீதி’ என்ற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதியுள்ளனர். 90-களின் தொடக்கத்தில் திமுக அறக்கட்டளை சார்பில் சிறிது காலம் நடத்தப்பட்ட அஞ்சல்வழிக் கல்லூரிக்காக எழுதப்பட்ட பாடநூல் அது. அந்நூலில், அதிமுகவைக் குறித்து எழுதப்பட்ட ஒரு பத்தி இது:

‘அமைச்சரவையிலும், அரசுப் பதவிகளிலும் எந்தச் சாதியும் தன் பங்குக்கும் கூடுதலாக இடம்பெற திமுக அமைச்சரவை அனுமதிக்கவில்லை. ஆனால், தமிழகத்தில் அண்ணாவின் பெயரால் பொறுப்பை ஏற்ற ம.கோ.இராமச்சந்திரன் அரசிலும், செயலலிதா அரசிலும் கொங்குவேளாளர், முக்குலத்தோர் ஆகிய இரு சமூகங்களும் ஆதிக்கச் சக்திகளாய் உருமாறின. மேலே சுட்டிய இரு அமைச்சரவைகளிலும் இந்த இரு சாதியினரின் எண்ணிக்கை ஒரு வீக்கமாய் அமைந்திருந்ததும், இவ்விருவரது ஆட்சியிலும் சாதிக் கலவரங்கள் முன் எப்போதையும்விடக் கூடுதலாய் நடந்ததும் அவ்வீக்கங்களின் விளைவு என்பதைத் தனிப்பட்ட ஆய்வுகள் உணர்த்துகின்றன’

திமுக ஆதரவு ஆய்வாளரின் கருத்து இது. அதிமுக ஆதரவாளருக்கு இதே காரணங்கள் நேர்மறையாகவும் தோன்றக்கூடும். எண்ணிக்கையில் பெரும்பான்மை கொண்ட சமூகங்கள் தங்களுக்குக் கட்சியிலும் ஆட்சியதிகாரத்திலும் கூடுதல் இடங்களை எதிர்பார்ப்பது இயல்பே. அதற்கான வாய்ப்புள்ள கட்சிகளை நோக்கியே அவை ஈர்க்கப்படும். அதிமுகவின் தொடர்வெற்றிக்கான அடிப்படைக் காரணங்களில் அதுவும் ஒன்று. எம்ஜிஆர், ஜெயலலிதா இருவருமே இந்த 2 சமூகங்களுக்கும் வெளியிலிருந்தவர்கள் என்பதால், அவர்களது தலைமையை 2 சமூகங்களும் ஏற்றுக்கொண்டன. இன்றும் அப்படியொரு பொதுவான தலைமை அமைந்திருந்தால், இரட்டைத் தலைமைக்கு அவசியமே எழுந்திருக்காது.

ஒற்றைத் தலைமையைத்தான் இரு சமூகங்களின் பிரதிநிதிகளுமே விரும்புகிறார்கள் என்றால், மற்ற சமூகத்துக்கு எவ்வளவு விட்டுக்கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள் என்பதுதான் அவர்களுக்கான வாய்ப்பைப் பெற்றுத் தரும். தவிர, 2 சமூகங்களையும் தவிர்த்த சிறுபான்மைச் சமூகங்கள் இவர்களில் யாரை ஆதரிக்கின்றன என்பதும் முக்கியம்.

விட்டுக்கொடுக்க சசிகலா தயாராக இருப்பதுபோலத்தான் தெரிகிறது. அதை எடப்பாடியார் ஏற்றுக்கொள்வாரா என்பது உறுதியில்லை. ஒருவேளை, கொங்கு மண்டலத்திலிருந்து யாரேனும் ஒரு மூத்தத் தலைவர் சசிகலாவை ஆதரிக்க முன்வந்தால் தற்போதைய நிலையில் மாற்றம் வரலாம். அதிமுகவில் எதுவும் நடக்கலாம். ஆனால், நடந்துகொண்டிருக்கும் அதிகாரப் போட்டி தனிநபர்களுக்கு இடையிலானது மட்டுமல்ல.

(திங்கள்கிழமை சந்திப்போம்)

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in