ஏனெனில்-25: மேதைமைக்கு விரோதமானதா நகைச்சுவை?

பேராசிரியர் கு.ஞானசம்பந்தன், பேராசிரியர் சாலமன் பாப்பையா
பேராசிரியர் கு.ஞானசம்பந்தன், பேராசிரியர் சாலமன் பாப்பையா

இளசை சுந்தரத்தின் மறைவு, பள்ளி நாட்களை நினைவுக்குக் கொண்டுவந்துவிட்டது. 90-களில் திருச்சி வானொலியில் வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமை 1 மணி செய்திகளையடுத்து அவர் பங்கேற்று பேசும் ‘நகைச்சுவைப் பூங்கா’ வெகுபிரபலம். அவராகவே பகிர்ந்துகொள்ளும் நகைச்சுவைத் துணுக்குகளுடன் வானொலி நேயர்கள் அனுப்பிவைக்கும் துணுக்குகளையும் வாசிப்பார். இன்றைக்கு நகைச்சுவைக் காட்சிகளுக்கு என்றே தனியாக தொலைக்காட்சி அலைவரிசைகள் இருக்கின்றன. அன்றைய வானொலி நாட்களில், வாரம் ஒரு நிகழ்ச்சி மட்டுமே.

அன்று அவர் சொல்லக் கேட்டதில் இன்றும் நினைவில் நிற்கும் ஒன்று.

நாயோடு ‘வாக்கிங்’ சென்ற ஒருவரைப் பார்த்து அவரது நண்பர் கேட்டார், ‘எங்கே குரங்கோடு கிளம்பிவிட்டாய்?’ என்று.

‘குரங்கு அல்ல, இது நாய்.’

‘எனக்குத் தெரியுது. நான் உன்கிட்ட கேட்கல. அதுகிட்ட கேட்டேன்.’

நகைச்சுவைப் பேச்சாளராகவே நான் நினைத்துக்கொண்டிருந்த இளசை சுந்தரம், பட்டுக்கோட்டையில் நடந்த கம்பன் விழாவொன்றில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். ‘பாரதி பிறந்த மண்ணிலிருந்து வந்திருக்கிறேன்’ என்ற அறிமுகத்தோடு அவர் அன்று பேசிய பேச்சு அவருக்குள் இருந்த இலக்கிய ஆளுமையை வெளிப்படுத்தியது. இளசை என்பது எட்டயபுரத்தின் சுருக்கம்.

இளசை சுந்தரம் மட்டுமல்ல, இதுபோன்று நகைச்சுவைப் பேச்சாளராக மட்டுமே நான் நினைத்துக்கொண்டிருந்த பல ஆளுமைகள் அதிசயிக்க வைத்திருக்கிறார்கள். கவிஞர் தேவேந்திரபூபதி நடத்திவரும் ‘கடவு’ அமைப்பின் சார்பில் பத்தாண்டுகளுக்கு முன்பு மதுரையில் நவீன இலக்கியம் குறித்த கருத்தரங்கம் இரண்டு நாட்கள் நடந்தது. அந்த நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்து பேசியவர் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன். இலக்கியவாதிகள் பேசுமிடத்தில் நகைச்சுவைப் பேச்சாளருக்கு என்ன வேலை என்பதே என் யோசனையாக இருந்தது. அவர் பேச ஆரம்பித்த பிறகுதான், தமிழ் இலக்கணங்களில் அவர் எவ்வளவு பெரிய விற்பன்னர் என்று தெரிந்தது.

கு.ஞானசம்பந்தனின் நகைச்சுவை ஆற்றலையும் வியந்த மற்றொரு சந்தர்ப்பம், எழுத்தாளர் சுஜாதாவின் நினைவுக் கூட்டம். இரங்கல் உரையாற்ற வந்த அவர், நகைச்சுவையாகப் பேசிக்கொண்டிருந்தார். இடம் பொருள் உணராத பேச்சென்றே நான் நினைத்தேன். அவருக்குத் துண்டுச் சீட்டு ஒன்று வழங்கப்பட்டது. அதைப் பார்த்துவிட்டு மேலும் தனது பேச்சைத் தொடர்ந்தார். உரையை முடித்தபோது சொன்னார், அவர் பேச்சைக்கேட்டு திருமதி சுஜாதா முகத்தில் புன்னகை அரும்பியதால், கமல்ஹாசன் தொடர்ந்து பேசச் சொல்லி குறிப்பு அனுப்பினார் என்று. இப்படி சில சமயங்களில், நகைச்சுவை உணர்வு அறிவார்ந்த பேச்சைக் காட்டிலும் வலிமையாகவும் அமைந்துவிடுகிறது.

‘சிந்தித்துப் பார்த்தால், எது உங்களின் கண்களில் நீரை வரவழைக்கிறதோ, அதுவே நல்ல நகைச்சுவை’ என்பது கவிஞரின் பார்வை.

தனக்குள் சேர்த்து வைத்திருக்கும் துறைசார்ந்த அறிவை வெளிப்படுத்திக்கொள்ளாமல் பார்வையாளர்களின் போக்கிலேயே சென்று மீள்கிற தமிழ்ப் பேராசிரியர்கள் நிறைய உண்டு. திருக்குறளுக்கு விளக்கம் சொல்லும் சாலமன் பாப்பையா, ஷங்கர் இயக்கிய படங்களின் கவுரவ வேடமாகவே நமக்கு நினைவில் வந்துபோகிறார். அறிவார்ந்த ஆளுமையாகத் தன்னை அறிமுகப்படுத்திக்கொள்வதைக் காட்டிலும், எல்லோருக்கும் பிடித்தவராக இருக்க வேண்டும் என்பது அவர்களது நோக்கமாக இருக்கிறது.

நகைச்சுவை என்பதும்கூட மேதைமையின் வெளிப்பாடுதான். மேதைகளின் நகைச்சுவைகள் அர்த்தம் பொதிந்தவையாக இருக்கின்றன. பேதைகளின் நகைச்சுவைகள் சிலரின் மனம் புண்படும்படியாக அமைந்துவிடுகின்றன. நகைச்சுவையால் அடுத்தவரின் மனம் நோகக் கூடாது என்பது அதன் இலக்கணங்களில் ஒன்று. அதே நேரத்தில், நகைச்சுவையின் பொருட்டு தன்னைத் தாழ்த்திக்கொள்வதில் தவறில்லை என்ற பார்வையும் உண்டு.

நல்ல நகைச்சுவைக்குக் கண்ணதாசன் சொன்ன ஒரு இலக்கணமும் நினைவுக்கு வருகிறது. ‘சிந்தித்துப் பார்த்தால், எது உங்களின் கண்களில் நீரை வரவழைக்கிறதோ, அதுவே நல்ல நகைச்சுவை’ என்பது கவிஞரின் பார்வை. விளக்கின் அடியில் இருளாக, எல்லா மகிழ்ச்சிக்குப் பின்னாலும் துயரத்தின் சிறு நிழல் ஒன்று படிந்திருக்கிறது என்பது எவ்வளவு பெரிய தத்துவம்.

(முடிந்தது)

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in