ஏனெனில் - 15: பெண் ஏன் இன்னும் அடிமையாக இருக்கிறாள்?

ஏனெனில் - 15: பெண் ஏன் இன்னும் அடிமையாக இருக்கிறாள்?

திருப்பூரில் பள்ளி நூலகம் ஒன்றுக்கு பெரியாரின் ‘பெண் ஏன் அடிமையானாள்?’ புத்தகம் அன்பளிப்பாக அளிக்கப்பட்டதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது. இதே நேரத்தில், கோவையில் பள்ளி மாணவியொருவர் பாலியல் தொல்லைகளால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டுள்ளதாக அவரது ஆசிரியரின் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்த 2 தகவல்களுக்கும் இடையிலிருக்கும் இடைவெளிகளை உணரத் தலைப்பட்டாலே, பெரியாரின் பெண்ணுரிமைக் கருத்துகளுக்கான தேவை இன்னும் தேவையாக இருப்பதைப் புரிந்துகொண்டுவிட முடியும்.

80 பக்கங்கள் கொண்ட ஒரு புத்தகம் ஏன் சிலரைப் பதறவைக்க வேண்டும்? அது பெரியாரால் எழுதப்பட்டது என்ற அடையாள அரசியல் தவிர, வேறெந்தக் காரணங்களும் இருந்துவிட முடியாது. மத நம்பிக்கைகளின் பெயரால் பெண்கள் வீட்டுக்குள்ளேயே அடக்கிவைக்கப்பட்டது ஒரு காலம். அந்தக் கட்டுப்பாடுகள் காலப்போக்கில் கொஞ்சம் கொஞ்சமாக உதிரத் தொடங்கிவிட்டன என்றாலும், அவை பெண்களிடத்தில் ஏற்படுத்தியிருக்கும் தயக்கம் இன்னும் முற்றுமுழுதாக நீங்கிவிடவில்லை. பெரியாரிய வாசிப்பு, பெண்களை அந்தத் தயக்கத்திலிருந்து விடுவிக்க உதவும்.

கற்பு, காதல், மறுமணம், சொத்துரிமை, கர்ப்பத் தடை என்று 10 தலைப்புகளில் எழுதப்பட்டக் கட்டுரைகளின் தொகுப்பு ‘பெண் ஏன் அடிமையானாள்?’ புத்தகம். இவற்றில் ‘காதல்’ என்ற அத்தியாயம் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் பாடமாக வைக்கத்தக்கது. ‘பலவீனமாய் இருக்கும்போது ஏமாந்துவிடுவதும், உறுதி ஏற்பட்ட பின்பு தவறுதலைத் திருத்திக்கொள்ள முயற்சிப்பதும், அனுபவ ஞானமில்லாதபோது கட்டுப்பட்டுவிடுவதும், அனுபவம் ஏற்பட்ட பிறகு விடுதலை செய்துகொள்ள முயல்வதும் இயற்கையல்லவா?’ என்று அந்தக் கட்டுரையில் ஒரு கேள்வியை எழுப்புவார் பெரியார்.

கடவுள் நம்பிக்கையாளராக இருப்பவர்களுக்கும் சேர்த்துதான் சிந்தித்திருக்கிறார் பெரியார்.

பள்ளியில் படிக்கும் சிறுமியர்களைப் பள்ளி வாசலிலேயே கொண்டுபோய் விடுகிறோம் அல்லது பள்ளி வாகனங்களிலேயே பாதுகாப்பாக அனுப்பிவைக்கிறோம். கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளுக்குத் தனிவிடுதி பாதுகாப்பாக இருக்கும் என்று நம்புகிறோம். பெண்களுக்கு அவர்களது சுயசிந்தனை ஒன்றே, எப்போதும் முழுமையான பாதுகாப்பு உணர்வையும் நம்பிக்கையையும் அளிக்க முடியும். வெறும் ஏட்டுக் கல்வியை மட்டும் அளித்துவிட்டு, சுயசிந்தனைக்கான வாய்ப்புகளைக் கவனமாக அடைத்துவைப்பதே பெண்கள் இன்னும் அடிமையாக இருப்பதற்குக் காரணம்.

திராவிடர் கழகம் 1934-ல் வெளியிட்ட, ‘பெண் ஏன் அடிமையானாள்?’ கடந்த காலத்தில் பல்லாயிரக்கணக்கானவர்களைச் சென்றடைந்தது என்றால், சமீபத்தில் நன்செய் பதிப்பகம் மலிவுவிலையில் ஒரு லட்சம் பேரிடம் இப்புத்தகத்தைக் கொண்டுபோய்ச் சேர்த்துள்ளது. திராவிடர் கழக வெளியீட்டின் முன்னுரையில் இந்தப் புத்தகத்தை, பெட்ரண்ட் ரஸ்ஸல் எழுதிய ‘மேரேஜஸ் அண்ட் மாரல்ஸ்’ புத்தகத்துடன் ஒப்பிட்டிருப்பார் கி.வீரமணி. ‘பெண் ஏன் அடிமையானாள்?’ புத்தகத்தை ஃப்ரெடரிக் ஏங்கெல்ஸ் எழுதிய ‘குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்’ புத்தகத்துடனும் ஒப்பிட முடியும். சொத்துரிமையைப் பாதுகாக்க நிலப்பிரபுத்துவக் காலத்தில் பெண்களின்மீது விதிக்கப்பட்ட சமூகக் கட்டுப்பாடுகள், அந்தக் காலம் முடிவுக்குவந்து தொழில் முதலீட்டியம் வளர்ந்து அதுவும் இப்போது நிதி முதலீட்டியமாக உருமாறி நிற்கையிலும் தொடர்கிறது.

பெரியார் ஒரு கடவுள் மறுப்பாளர் என்ற எண்ணத்திலிருந்தே, அவரது பெண்ணுரிமைக் கருத்துகளையும் அணுக முற்படுகிறோம். கடவுள் நம்பிக்கையாளராக இருப்பவர்களுக்கும் சேர்த்துதான் அவர் சிந்தித்திருக்கிறார். சடங்குகளை மறுப்பதில் அவருக்கிருக்கும் தீவிரத்தை எல்லோரும் பின்பற்றிவிட இயலாமல் போகலாம். ஆனால், கல்வியில், வேலைவாய்ப்பில், திருமண உறவைத் தேர்ந்தெடுப்பதில், குழந்தைப் பேற்றைத் தீர்மானிப்பதில், பொதுவெளியில் பாலினரீதியாக அவமதிப்பைச் சந்திக்க நேர்ந்தால் அதற்கெதிராகப் போராடுவதில் பெண்களுக்குப் பெரியார் என்றும் துணைநிற்பார்.

எல்லா காலத்துக்கும் ஏற்ற அவரது சிந்தனைகளை நாட்டுடைமை ஆக்கி, யாரும் எவரும் புத்தகங்களாகக் கொண்டுவர வழி செய்தால்... பெரியாரின் வலிவான துணை எளியோர் அனைவரையும் சென்றடையும்!

(வெள்ளிக்கிழமை சந்திப்போம்)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in