இதே தேதி... முக்கியச் செய்தி: விக்டோரியா மகாராணியின் சாதனையை முறியடித்த எலிசபெத் ராணி

இதே தேதி... முக்கியச் செய்தி: விக்டோரியா மகாராணியின் சாதனையை முறியடித்த எலிசபெத் ராணி

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் நேற்று (செப்.8) காலமானார். ஏழு தசாப்தங்களாக பிரிட்டன் அரியணையை அலங்கரித்தவர் எலிசபெத். இதற்கு முன்னர் விக்டோரியா மகாராணி 63 ஆண்டுகள் அரியணையில் வீற்றிருந்ததுதான் பிரிட்டன் வரலாற்றிலும் உலக வரலாற்றிலும் முறியடிக்கப்படாத சாதனையாக இருந்தது. அதை எலிசபெத் முறியடித்த தினம் இன்று.

1953-ல் எலிசபெத் இங்கிலாந்து ராணியாக முடிசூட்டப்பட்டார். அந்த நிகழ்ச்சி நேரடியாகத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. இங்கிலாந்து அரச குடும்பத்தினரின் முடிசூட்டு விழா நேரலையாக ஒளிபரப்பப்பட்டது அதுதான் முதல் முறை. “எனக்கு 21 வயதானபோது, மக்களுக்கான சேவையில் எனது வாழ்க்கையை அர்ப்பணித்துவிட்டேன். வாழ்க்கையிலும், இந்த நாட்டிலும் நிகழ்ந்த பல்வேறு மாற்றங்களுக்கு சாட்சியமாக இருந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று ஒருமுறை எலிசபெத் குறிப்பிட்டார்.

இரண்டாம் உலகப் போரின் அதிர்வுகளிலிருந்து அப்போது பிரிட்டன் வெளியே வந்திருக்கவில்லை. அவர் அரியணை ஏறிய வண்ணமயமான நிகழ்வை நேரில் பார்த்தவர்களும் நேரலையில் பார்த்தவர்களும் அப்போது மிகுந்த நம்பிக்கை கொண்டனர்.

அவரே இரண்டாம் உலகப் போரின் அழிவுகளை நேரடியாகப் பார்த்தவர்தான். இளவரசியாக இருந்தபோது 1940-ல் வானொலியில் நாட்டு மக்களிடம் உரையாற்றிய அவர், போரில் கலந்துகொள்ள பிரிட்டிஷ் இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்தார். “உங்களில் ஆயிரக்கணக்கானோர், உங்கள் பெற்றோரைப் பிரிந்து வாழ வேண்டியிருக்கும்” என்று அவர் கூறினார்.

எடின்பரோ கோமகன் என அழைக்கப்பட்ட இளவரசர் பிலிப்புக்கும் எலிசபெத்துக்கும் 1947 நவம்பர் 20-ல் திருமணம் நடந்தது. எலிசபெத்துக்கு 22 வயதானபோது, இளவரசர் சார்லஸ் பிறந்தார். ஆனால், குழந்தைப் பருவத்தில் இளவரசர் சார்லஸுக்குத் தனது தாயின் அரவணைப்பெல்லாம் அதிகமாகக் கிடைக்கவில்லை. இளவரசர் பிலிப் மால்டாவில் கடற்படைப் பணிகளை மேற்பார்வையிடச் சென்றிருந்தார். அவருக்குத் துணையாக எலிசபெத்தும் சென்றார். இப்படிப் பொதுவாழ்வுதான் அவர்கள் இருவருக்கும் முக்கியமானதாக இருந்தது.

1957-ல் முதன்முறையாக கிறிஸ்துமஸ் வாழ்த்தைத் தொலைக்காட்சி வாயிலாக மக்களிடம் பகிர்ந்துகொண்டார். இப்படி நவீன உலகின் பலன்களை சுவீகரித்துக்கொண்ட ராணியாக அவர் திகழ்ந்தார். பிரிட்டிஷ் பேரரசைப் பொறுத்தவரை பண்டைய காலத்துக்கும் நவீன காலத்துக்குமான தொடர்புப் புள்ளியாக எலிசபெத் திகழ்ந்தார் என்கிறார்கள் வரலாற்றாசிரியர்கள்.

அதே சமயம், அரண்மனைக் குடும்பம் என்பதால் ஏகப்பட்ட புகைச்சல்களும் இருந்தன. அவரது பிள்ளைகளின் திருமண உறவு மூலம் சாமானியக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் அரச குடும்பத்தில் நுழைந்தது அவருக்குச் சில அசெளகரியங்களை ஏற்படுத்தியது.

1978-ல் எலிசபெத்தின் தங்கை மார்கரெட் தனது கணவரை விவாகரத்து செய்தது, 1992-ல் இளவரசர் சார்லஸ் - டயானா தம்பதி விவாகரத்து செய்தது என்பன போன்ற பல கசப்பான தருணங்களை எலிசபெத் கடந்துவர நேர்ந்தது.

எலிசபெத்தின் வாழ்நாளில் மிகவும் கசப்பான சம்பவமாக அமைந்தது அவரது மருமகள் இளவரசி டயானாவின் மரணம். அதற்கு முன்னர் இருவருக்கும் இடையில் நிலவிய முரண்கள், பிரிட்டன் மக்களிடம் டயானா மீது மிகுந்த பரிவையும், எலிசபெத் மீது அதிருப்தியையும் ஏற்படுத்தியிருந்தன. 1997 ஆகஸ்ட் 31-ல் கார் விபத்தில் டயானா மரணமடைந்தைத் தொடர்ந்து மக்களிடமிருந்த மதிப்பை எலிசபெத் இழந்தார்.

எலிசபெத்தின் கணவர் பிலிப், அவரது வாழ்வில் பெரிய அளவில் உறுதுணையாக இருந்தார். 2021 ஏப்ரல் 9-ம் தேதி பிலிப் மரணமடைந்தார். அவரது மரணம், முதுமையின் பாதிப்புகளை எதிர்கொண்டிருந்த எலிசபெத்தை மனதளவில் தளரச் செய்தது. 14

காமன்வெல்த் நாடுகளின் தலைவர் போன்ற பதவிகளில் இருந்த எலிசபெத் தன் வாழ்க்கையில் எத்தனையோ நிகழ்வுகளைப் பார்த்தவர். பிரிட்டன் வரலாற்றில் நீண்ட காலம் ராணியாக அரியணையில் வீற்றிருந்தவர் எனும் பெருமைக்கும் சொந்தக்காரர். அவரது கொள்ளுப்பாட்டி விக்டோரியா மகாராணி 63 ஆண்டுகள் 7 மாதங்கள் ராணியாகப் பதவிவகித்தார். இந்நிலையில், 2015 செப்டம்பர் 9-ம் தேதி, பிரிட்டிஷ் நேரப்படி மாலை 5.30 மணிக்கு அந்தச் சாதனையை எலிசபெத் முறியடித்தார். 23,226 நாட்கள், 16 மணி நேரம் மற்றும் 30 நிமிடங்கள் என்று அவரது அரியணை சாதனை அன்றைய தினம் பதிவானது.

அதன் பின்னரும் தொடர்ந்து ராணியாகப் பதவிவகித்த எலிசபெத் நேற்று மரணமடைந்த கணம் வரை ராணியாகவே வாழ்ந்தார். அவரது மறைவுக்குப் பின்னர் இளவரசர் சார்லஸ் இங்கிலாந்து அரசராக அறிவிக்கப்பட்டிருப்பதும் ஒரு வரலாற்று நிகழ்வுதான்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in