கர்ப்பிணிப் பெண்கள் கவனம் கொள்ளவேண்டிய எட்டாவது மாதம்..!

அவள் நம்பிக்கைகள் - 47
கர்ப்பிணிப் பெண்கள் கவனம் கொள்ளவேண்டிய எட்டாவது மாதம்..!

"டாக்டர்... 15 நாளா திடீர்னு வயிறு டைட்டாகுது.. உடனே சரியாயிடுது.. இதுக்கும் பிரசவ வலிக்கும் எதாவது சம்மந்தம் இருக்கா டாக்டர்..?" என்ற கேள்வியை ஒரு கர்ப்பிணிப் பெண் தனது மகப்பேறு மருத்துவரிடம் எழுப்பும்போதே, அவர் கருவுற்று எட்டு மாதங்கள் ஆகிவிட்டது என்றுதான் அர்த்தம்..

இதுவரை பனிக்குட நீரில் நீந்திக் கொண்டே இருந்த குழந்தை, ஒரு நிலையாக தனது தலைப்பகுதி கீழ் நோக்கி இறங்கி, பிரசவத்திற்கு தன்னை தயார்படுத்திக் கொள்ளும் இந்த எட்டாவது மாதம் கர்ப்ப காலத்தின் மிகவும் ஸ்பெஷலான மாதம் என்றே சொல்லலாம். உண்மையில் இந்த மாதத்தில் தான் ஒரு கர்ப்பிணிப் பெண் உடலளவிலும் மனதளவிலும் பெரிய மாற்றங்களை ஒரு சேர சந்திக்கப் போகிறார் என்பதால் அவற்றை நாம் தெரிந்துகொள்வது அவசியமாகிறது..

முதலாவதாக பொய்வலி.. 

பொதுவாக எட்டாவது மாதத்தில் பிரசவ வலியைப் போன்றே ஒரு பொய்வலி தாய்க்கு அடிக்கடி ஏற்படக்கூடும். கிட்டத்தட்ட மாதவிடாய் வலியைப் போலவே ஏற்படும் இந்த அடிவயிற்று வலியை 'ப்ராக்ஸ்டன் ஹிக்ஸ் பெய்ன்ஸ்' என்று அழைக்கும் மருத்துவர்கள், இது பொய்வலி அல்ல... உண்மையான பிரசவ வலிக்கு ஒரு முன்னோடி இது என்கிறார்கள். இந்த மாதங்களில் சிலசமயம் தற்காலிக வலி ஏற்படும்போது பொதுவாக ஓய்வு, நடைபயிற்சி, மசாஜ், அல்லது நிற்பதிலிருந்து அமர்வது, அமர்வதிலிருந்து படுப்பது என நிலைகளை மாற்றிக் கொள்ளும்போது வலி காணாமல் போய்விடும் என்பதால் இந்த ப்ராக்ஸ்டன் வலியைப் பற்றி கர்ப்பிணிப் பெண்கள் கவலைப்படத் தேவையில்லை.

ஆனால், அப்படி மாறாமல் வலி அடுத்தடுத்து வந்தாலோ அல்லது வலியுடன் பனிக்குட நீர் வெளியேற்றம், இரத்தக்கசிவு அல்லது சளிக்கசிவு போன்ற அறிகுறிகளும் சேர்ந்து ஏற்பட்டாலோ அது உண்மையான பிரசவ வலி என்பதை உணர்ந்து அவர் மருத்துவமனைக்குச் செல்லலாம் என்று மகப்பேறு மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

இந்த எட்டாவது மாதத்தில், குழந்தையின் தலையின் அழுத்தம் காரணமாக, தாய்க்கு அடிக்கடி சிறுநீர் கழிப்பதும், மலச்சிக்கல் அல்லது பைல்ஸ் ஏற்படுவதும், அதேபோல கருப்பை பெரிதாவதால் மூச்சுத்திணறல், படபடப்பு, செரிமானமின்மை, கால்களில் வீக்கம், வெரிக்கோஸ் வெயின்ஸ் எனும் சிரைகுழல் வீக்கம், இடுப்பு வலி ஆகியன ஏற்படுவதும் பொதுவானது தான். இத்துடன் ஹார்மோன்கள் காரணமாக மார்பகங்களில் கனமும், பால் சுரப்பும் ஏற்படவதும் நிகழலாம்.

மேலும் ஒரு சிலருக்கு விரிவடையும் கருப்பை, தாயுடைய வயிற்றுப்பகுதி சருமத்தையும் விரிவாக்குவதால் தழும்புகளும் தோல் அரிப்பும் தோன்றலாம். பொதுவாக இந்த தோல் அரிப்புக்கு ஆலிவ் எண்ணெய் அல்லது மாஸ்ட்சுரைசிங் க்ரீம் போன்றவற்றைக் கொண்டு மசாஜ் செய்வது பலனளிக்கும் என்றாலும், அதீத அரிப்புக்கு கர்ப்பகால ஹார்மோன்களும் ஒரு காரணமாக இருக்கலாம் என்பதையும், சிலசமயம் இதனால் கல்லீரல் பாதிப்புகளும் ஏற்படலாம் (Cholestasis of Pregnancy) என்பதையும் கவனத்தில் கொண்டு தோல் அரிப்பு அதீதமாக இருக்கும்போது மருத்துவ ஆலோசனையைப் பெறுவது அவசியமாகிறது.

மேலும் கருப்பையில் குழந்தையின் எடை கூடுவதற்கு ஏற்றவாறு பனிக்குட நீரின் அளவு சிறிது குறையும் என்பதால், முந்தைய மாதங்களைக் காட்டிலும் இந்த எட்டாவது மாதத்தில் குழந்தையின் அசைவுகளை சற்று குறைவாகவே கர்ப்பிணிப் பெண்கள் உணரத் தொடங்குவார்கள். ஆனால் இந்த வித்தியாசத்தைக் கண்டு கர்ப்பிணிப் பெண்கள் மனதளவில் பயம்கொள்ளத் தேவையில்லை.

இவையனைத்திற்கும் மேலாக, இந்த எட்டாவது மாதத்தில் நமது பார்வைக்குத் தெரியாத மன மாற்றம் ஒன்றும் கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஏற்படுகிறது. மேற்கூறப்பட்ட அறிகுறிகள் காரணமாக தாயின் மனதில் ஏற்படும் குழப்பங்களுடன், உடல் வலி, உடல் சோர்வு மற்றும் தூக்கமின்மை சேர்ந்து கொள்வதுடன் பிரசவ வலி குறித்த கலக்கமும் சேர்ந்து இந்த மாதத்தில் கர்ப்பிணிப் பெண்ணின் மன அழுத்தத்தை பன்மடங்கு கூட்டி விடுகிறது..

என்றாலும் இந்த மன அழுத்தத்தைக் கடக்க கர்ப்பிணிப் பெண்ணுடன் இருக்கும் கணவர் மற்றும் குடும்பத்தினர் அளிக்கும் தொடர்ந்த ஆதரவும் ஆறுதலுமே பெரும்பாலும் அவர்களை இந்த மன அழுத்தமே ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும் என்பதை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். மேலும் நாம் எப்போதும் கூறும் எளிய வழிமுறைகளான உண்ணும் நல்ல உணவு, பருகும் அதிகளவு நீர், சிறிய எளிய உடற்பயிற்சிகள், நல் ஓய்வு, நல் உறக்கம் தருவிக்கும் முறைகளும் இந்த மன அழுத்தத்தை கடக்கும் சுலபமான வழிகளாகும்.  

கர்ப்பிணிப் பெண்களுக்கு இந்த ஸ்பெஷல் எட்டாவது மாதத்தின் அறிகுறிகளைப் பற்றிய புரிதல் தேவை என்பது போலவே, எப்போது செக்கப், பரிசோதனைகள் என்ன என்பதைப் பற்றிய புரிதல் இருப்பதும் அவசியம். பொதுவாக இதுவரை மாதாந்திர பரிசோதனை என்றிருந்த நடைமுறை மாறி, 32 வாரங்கள் தாண்டிய கர்ப்பத்தில், 15 நாட்களுக்கு ஒருமுறை செக்கப் செய்வது தேவையாகும். ஏனென்றால் இந்த சமயத்தில்தான் தாயின் பிபி, பல்ஸ், ஆக்சிஜன் அளவு, தாயின் இரத்த அளவு, சர்க்கரை அளவு (Glucose Challenge Test), உப்பின் அளவு ஆகியவற்றை சரியான அளவில் நிர்வகிப்பதுடன் குழந்தையின் வளர்ச்சி, அதன் நிலை மற்றும் துடிப்பு ஆகியவற்றை தொடர் இடைவெளிகளில் கண்காணிப்பதும் அவசியமாகிறது.

இதனால்தான், க்ரோத் ஸ்கேன் எனப்படும் குழந்தையின் வளர்ச்சியை கணிக்கும் ஸ்கேனிங் இந்த எட்டாவது மாதத்தில் மேற்கொள்ளப்படுகிறது. இதில் குழந்தையின் வளர்ச்சி மட்டுமன்றி அதன் நிலை, உத்தேச எடை, பனிக்குட நீரின் அளவு, நஞ்சுக்கொடியின் நிலை, குழந்தைக்குச் செல்லும் இரத்த ஓட்டத்தைக் கண்டறியும் டாப்ளர் பரிசோதனை ஆகியனவும் கண்டறியப்பட்டு, குழந்தையின் ஆரோக்கியம் உறுதிப்படுத்தப் படுவதுடன், தேவைப்படும்போது அதற்கான சிகிச்சைகளும் தொடர நேரலாம். இவை மட்டுமன்றி high risk pregnancy எனப்படும் சிக்கல்கள் நிறைந்த கர்ப்பிணிப் பெண்களுக்கு குழந்தைத் துடிப்பு மற்றும் அசைவுகளை கண்காணிக்க உதவும் ஃபீட்டல் மானிட்டர் மூலமாக கார்டியோ டோக்கோ க்ராஃப் (CTG) எனப்படும் அதிகப்படி பரிசோதனையும் தேவைப்படலாம்.


அப்ஆக, நிறைமாத கர்ப்பம் எனும் term pregnancyக்கு முன்னோடியான இந்த இறுதிச்சுற்று மாதத்தில், ஏற்படும் மாற்றங்களுக்கு உடன் நின்று, உரிய பரிசோதனைகளை மேற்கொண்டு, உடலளவிலும் மனதளவிலும் தயாராவது என்பது அந்தத் தாயின் பொறுப்பு மட்டுமல்ல... அவர் குடும்பம் மற்றும் சமுதாயமாகிய நம் அனைவரின் கடமை என்ற புரிதலுடன் 'அவள் நம்பிக்கைள்' தொடர்கிறது..!\

கட்டுரையாளர்: மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர். தொடர்புக்கு: savidhasasi@gmail.com

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in