இதே தேதி... முக்கியச் செய்தி: கல்வி மூலம் மக்களைக் கரைசேர்த்த பாவுராவ்!

டாக்டர் அம்பேத்கருடன் பாவுராவ் பாட்டீல் (இடது ஓரம்)
டாக்டர் அம்பேத்கருடன் பாவுராவ் பாட்டீல் (இடது ஓரம்)

அந்தக் காட்சி பாவுராவ் பாட்டீலைக் கொந்தளிக்க வைத்தது. ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்கள், தன் ஊரில் உள்ள ஒரு கிணற்றில் தண்ணீர் எடுக்க முடியாமல் தவித்து நின்றனர். முன்னேறிய வகுப்பைச் சேர்ந்தவர்கள் அவர்களுக்குத் தண்ணீர் தர மறுத்ததைப் பார்த்த பாவுராவ், அந்தக் கிணற்றின் வாளியையே உடைத்துப் போட்டார். இளம் வயதிலேயே தீண்டாமை, பாகுபாடு போன்றவற்றுக்கு எதிரான பார்வை கொண்டிருந்த அவர், கல்வி மூலம்தான் ஒடுக்கப்பட்ட, ஏழை மக்களின் எதிர்காலத்தை வளப்படுத்த முடியும் என பின்னாட்களில் உணர்ந்தார்.

சமூகச் செயற்பாட்டாளராகவும் கல்வியாளராகவும் சேவை புரிந்த பாவுராவ் பாட்டீல், இன்றளவும் மகாராஷ்டிர மக்களால் கொண்டாடப்படும் ஒரு மகான் ஆவார்.

1887 செப்டம்பர் 22-ல் இன்றைய மகாராஷ்டிரத்தின் கோல்ஹாப்பூர் ராஜ்ஜியத்தில் இருந்த கும்போஜ் மாவட்டத்தில் ஒரு சமணக் குடும்பத்தில் பிறந்தார் பாவுராவ் பாட்டீல். அவரது தந்தை பைகொண்டா பாட்டீல், கிழக்கிந்திய கம்பெனியின் வருவாய்த் துறையில் குமாஸ்தாவாகப் பணிபுரிந்துவந்தார். அந்தக் காலகட்டத்தில் சமண சமூகத்திலேயே அதிகம் படித்தவர்கள் இல்லை. பாவுராவ் அப்போது 8-ம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்றார். பின்னர் கோல்ஹாப்பூர் ராஜ்ஜியத்தை ஆண்ட சத்ரபதி ஷாஹூவின் அரண்மணையில் தங்கி படிக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.

இளம் வயதில் சந்திக்க நேரும் ஆளுமைகளின் தாக்கம் ஒருவரது எதிர்காலத்தில் ஆக்கபூர்வ மாற்றங்களைத் தரும் என்பார்கள். அதை மெய்ப்பிக்கும் வகையில் சத்ரபதி ஷாஹூவின் அறிமுகமும் அரவணைப்பும் பாவுராவ் பாட்டீலின் மனதில் உயர்ந்த லட்சியங்களை விதைத்தது. ஆம்! ஒடுக்கப்பட்ட, அடித்தட்டு மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் அளவுக்குச் சமூக சீர்திருத்தவாதியாக விளங்கிய சத்ரபதி ஷாஹூவின் செயல்பாடுகள் பாவுராவ் பாட்டீலுக்கு மிகுந்த உத்வேகம் தந்தன.

அம்பேத்கருடன் பாவுராவ் பாட்டீல்
அம்பேத்கருடன் பாவுராவ் பாட்டீல்

நன்கு படித்து முன்னேறிய அவர், இந்திய விடுதலைப் போராட்டத்திலும் பங்கேற்றார். அந்தக் காலகட்டத்தில் மிகப் பெரிய தலைவர்களின் தாக்கமும் அவருக்குக் கிடைத்தது. தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்துவந்த காலத்தில், மகாத்மா ஜோதிராவ் புலேயின் சத்ய ஷோதக் சமாஜ் அமைப்பில் இணைந்து சேவை புரிந்துவந்தார். 1919-ல் மாணவர்களுக்கான தங்கும் விடுதியைத் தொடங்கினார். அதில் ஒடுக்கப்பட்ட, ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் தங்கி படிக்க வாய்ப்பு உருவாக்கித் தந்தார். அதுதான் பின்னாட்களில் ‘ரயத் சிக்‌ஷன் சன்ஸ்தான்’ எனும் பிரம்மாண்டமான கல்வி நிறுவனமாக வளர்ச்சியடைந்தது. அந்தக் காலகட்டத்தில் பாவுராவிடம் போதிய நிதி இல்லை. அவரது மனைவி லக்‌ஷ்மிபாய் தனது தாலியை விற்று பணம் திரட்டி தனது கணவரின் லட்சியத்துக்குத் துணை நின்றார். இன்று வரை அந்தக் கல்வி நிறுவனத்தில் ஏழை மாணவர்கள் கல்வி கற்று வாழ்வில் ஏற்றம் கண்டுவருகின்றனர்.

ஒருகட்டத்தில், மகாத்மா காந்தி தலைமையிலான சுதந்திரப் போராட்டத்தில் பாவுராவ் பங்கேற்றார். 1921-ல் மும்பையில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் காந்தியைச் சந்தித்தது அவரது வாழ்வில் முக்கியத் திருப்புமுனையாக அமைந்தது. காந்தியின் எளிமை வாழ்க்கையை வரித்துக்கொண்டார். காந்தியவாதியானார். காந்தியும் பாவுராவின் சேவைகளை மதித்தார். ஒருகட்டத்தில், அவரது ரயத் சிக்‌ஷன் சன்ஸ்தான் கல்வி நிறுவனத்துக்கு ஆண்டுதோறும் நிதி உதவி வழங்கினார் காந்தி. காந்தியின் பெயரில் 101 பள்ளிகளை பாவுராவ் தொடங்கினார். பாபாசாகேப் அம்பேத்கருடனான அவரது தொடர்பு அவரது சேவை வாழ்க்கையில் மிகுந்த உத்வேகம் தந்தது. அம்பேத்கரின் செயல்பாடுகள் அனைத்திலும் பாவுராவ் துணைநின்றார்.

பள்ளிகளில் ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கு சாதி ரீதியில் பாகுபாடுகள் நிகழ்த்தப்பட்டதைக் கடுமையாகக் கண்டித்தார். சாதி வெறியால் பாதிக்கப்பட்ட மாணவர்களைத் தனது நேரடிக் கண்காணிப்பில் வளர்த்து படிக்க வைத்தார். அவரும் அவரது மனைவி லக்‌ஷ்மிபாயும் தங்கள் வாழ்நாளின் இறுதிவரை கல்வி சேவை புரிந்தனர். மகாராஷ்டிர மக்கள் பாவுராவை ‘கர்மவீரர்’ என மதிப்புடன் அழைத்தனர். 1959-ல் மத்திய அரசு அவருக்கு பத்மபூஷண் விருது வழங்கி கெளரவித்தது. 1994-ல் டாக்டர் அம்பேத்கர் தேசிய விருது, அவரது ரயத் சிக்‌ஷன் சன்ஸ்தான் கல்வி நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in