இதே தேதி... முக்கியச் செய்தி: ‘ஓர் அடிகூட பின்வாங்காதே!’

இதே தேதி... முக்கியச் செய்தி: ‘ஓர் அடிகூட பின்வாங்காதே!’

ஸ்டாலின்கிராடு யுத்தம் - இரண்டாம் உலகப்போரின் போக்கை திசைமாற்றிய முக்கியப் போர். தாக்குதல் மனப்பான்மையிலேயே இருந்துவந்த ஹிட்லருக்குத் தற்காப்பு குறித்த அச்சத்தை ஊட்டியதும் இதே போர்தான். அவர் செய்த மாபெரும் பிழையும் இதுதான். சோவியத் ரஷ்யாவின் அதிபர் ஸ்டாலினின் பெயரைத் தாங்கிய நகர் என்பதால் எப்படியேனும் கைப்பற்றியாக வேண்டும் என்று ஹிட்லரின் நாஜிப் படைகள் மூர்க்கமாகப் போரிட்டன. அதே காரணத்துக்காக ஸ்டாலினின் ‘பெயரை’க் காப்பாற்ற ரஷ்யப் படைகளும் - பல இழப்புகளைத் தாண்டி - ஆவேசத்துடன் பதிலடி கொடுத்தன. எல்லாவற்றையும் தாண்டி மனிதகுலம் மறக்க முடியாத பேரழிவை அந்தப் போர் தந்தது.

முதல் உலகப்போரில் ஜெர்மனிக்குக் கிடைத்த படுதோல்வியும், அப்போது கையெழுத்தான வெர்சைல்ஸ் ஒப்பந்தமும் ஜெர்மனியைச் சிதைத்துவிட்டது. வெற்றிபெற்ற நேச நாடுகள் ஜெர்மனியின் பல பகுதிகளைக் கூறுபோட்டுக்கொண்டன. பவேரியா ராணுவத்தில் பணியாற்றிய ஹிட்லர் இதையெல்லாம் பார்த்து மனம் நொந்திருந்தார். 1933-ல் ஜெர்மனியின் அதிபரானதும் தனது சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்த திட்டமிட்டார். அப்படித்தான் இரண்டாம் உலகப்போர் தொடங்கியது. ஒருகட்டத்தில் கிழக்கு நோக்கி ஜெர்மனியை விரிவாக்க அவர் திட்டமிட்டார். அப்படித்தான் சோவியத் ஒன்றியத்தின் மீது அவரது பார்வை விழுந்தது. யூதர்கள் மட்டுமல்ல. கம்யூனிஸ்ட்கள் தொடங்கி ஜிப்ஸிகள், மாற்றுப்பாலினத்தவர் என ஹிட்லரால் குறிவைக்கப்பட்டவர்கள் ஏராளம். மறுபுறம் நாஜிக்கள், பாசிஸவாதிகளுக்கு எதிராக சோவியத் ஒன்றியம் உறுதியாக நின்றது. ரஷ்யப் புரட்சிக்குப் பின்னணியில் யூதர்கள் இருந்ததாக நாஜி சிந்தனையாளர் ஆல்ஃபிரட் ரோஸன்பெர்க் கருதினார். இதனால் ரஷ்யா மீது தாக்குதல் நடத்துவது அவசியம் எனும் எண்ணம் ஏற்கெனவே ஹிட்லருக்குள் நிலைபெற்றிருந்தது.

இதற்கிடையே அண்டை நாடுகள் என்பதால் ஒன்றையொன்று தாக்கிக்கொள்ளாமல் இருக்க வேண்டும் என்றும் இரு நாடுகளும் முடிவுக்கு வந்தன. அதன்படி, 1939 ஆகஸ்ட் 23-ம் தேதி நள்ளிரவில் இரு நாடுகளுக்கும் இடையில் ஒப்பந்தம் (Germany and the Soviet Union signed a non-aggression pact) கையெழுத்தானது. ரஷ்யாவைப் பகைத்துக்கொண்டால் கச்சா பொருட்கள், எண்ணெய் என பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பலாம் என்று ஹிட்லர் கருத, இந்தக் காலகட்டத்தில் ரஷ்ய ராணுவ பலத்தைப் பெருக்கிக்கொள்ளலாம் என ஸ்டாலின் கருத... இரு தரப்பும் இப்படி அமரிக்கையாக நடந்துகொண்டன. கூடவே, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நேச நாடுகள் ரஷ்யாவை நேச பாவத்துடன் நடத்தவில்லை. எனவே, இரண்டாம் உலகப்போரில் ரஷ்யா சற்று விலகியே இருந்தது.

ஒருகட்டத்தில் இரு பெரும் சக்திகளுக்கு இடையே முட்டிக்கொண்டது. ஒப்பந்தங்கள் ஒரு பொருட்டே இல்லை என ஆனது. 1940-ல் பால்டிக் பிரதேசங்களை ஜெர்மனி கைப்பற்றியது. அதன் தொடர்ச்சியாக, 1941-ல் ரஷ்யா மீது போர் தொடுத்தது. ‘ஆபரேஷன் பார்பரோஸா’ எனும் பெயரில் தொடங்கிய அந்தத் தாக்குதலில் உக்ரைன் உள்ளிட்ட சில பகுதிகளைக் கைப்பற்ற முடிந்தாலும் ரஷ்யப் படைகளின் பதிலடியால் அதில் முழு வெற்றி பெற முடியவில்லை. மாஸ்கோவைக் கைப்பற்றும் முயற்சியும் கைவிடப்பட்டது. அப்போதுதான் ஸ்டாலின்கிராடு நகர் மீது ஹிட்லரின் பார்வை பதிந்தது. வோல்கா நதிக் கரையில் அமைந்திருந்த முக்கிய தொழில்நகரமான ஸ்டாலின்கிராடு, ராணுவத் தளவாடங்கள் தயாரிப்புக்கான முக்கிய மையமாகவும் இருந்தது. இதையடுத்து அந்நகரைத் தாக்க நாஜிப் படைகள் தீர்மானித்தன. பல்வேறு முன்முயற்சிகளின் தொடர்ச்சியாக, 1942 ஆகஸ்ட் 23-ல் தாக்குதல் தொடங்கியது. விமானப் படைகள் குண்டு மழை பொழிந்தன. ஜெர்மனி மற்றும் கூட்டணியில் இருந்த அச்சு நாடுகளின் படைகள் ஸ்டாலின்கிராடைத் தாக்கத் தொடங்கின (ஏற்கெனவே நிறைய ஜெர்மானிய வீரர்களை இழந்திருந்ததால் பிற நாடுகளின் படைகளையும் இந்தப் போரில் அதிகம் சேர்த்துக்கொண்டது நாஜிப் படை). ஆரம்பத்தில் இதை எதிர்பார்த்திராத ஸ்டாலின் பின்னர் சுதாரித்துக்கொண்டதுடன், ஸ்டாலின்கிராடை இழக்கவே கூடாது என ரஷ்ய ராணுவமான செஞ்சேனைக்கு உத்தரவிட்டார். ‘ஓர் அடிகூட பின்வாங்கக் கூடாது’ என அவர் கண்டிப்புடன் உத்தரவிட்டிருந்தார். அதுமட்டுமல்ல, எவ்வளவு மோசமான தாக்குதல் நடந்தாலும் அந்நகர மக்கள் அங்கிருந்து வெளியேறக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டது. சொந்த மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற உத்வேகத்துடன் ரஷ்ய ராணுவம் தீரத்துடன் போரிடும் என அதற்குக் காரணமும் சொன்னார்.

எண்ணெய் மற்றும் இதர இயற்கை வளங்கள் நிறைந்த ரஷ்யாவின் தெற்குப் பகுதியைக் குறிவைத்த ஹிட்லர், ஒரே சமயத்தில் ஸ்டாலின்கிராடு மற்றும் காக்கேசியா பிராந்தியம் என இரு முனைகளின் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டார். ஸ்டாலின்கிராடை மட்டும் முற்றுகையிட்டால் அதில் முழு கவனத்தையும் செலுத்தலாம் என ஜெர்மன் ராணுவ அதிகாரிகள் சொன்ன யோசனையை ஹிட்லர் புறக்கணித்ததும், இந்தப் படுதோல்விக்கு ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது. ‘ஆர்மி க்ரூப் ஏ’ எனும் பெயரில் ஒரு படை காக்கேசியப் பிராந்தியத்திலும், ‘ஆர்மி க்ரூப் பி’ எனும் பெயரில் ஒரு படை ஸ்டாலின்கிராடிலும் போரிட்டது ரஷ்யா சுதாரித்துக்கொள்ள முக்கியக் காரணமாக அமைந்தது.

ஜெர்மன் போர் விமானங்கள் ஸ்டாலின்கிராடின் பல பகுதிகளை உருக்குலைத்துவிட்டதால், நாஜி தரைப்படையினர் முன்னேறிச் செல்வதுகூட சிக்கலானது. இதற்கிடையே, பெரிய அளவில் அகழி அமைப்பது என்பன உள்ளிட்ட வேலைகளில் நகர மக்களும் ஈடுபட்டிருந்தனர்.

ஆரம்பத்தில் ஹிட்லர் எதிர்பார்த்த நாசத்தை ரஷ்யா சந்தித்தது. ஆனால், ஆபரேஷன் யுரேனஸ் எனும் பெயரில் செஞ்சேனை கொடுத்த பதிலடியை ஜெர்மனி மற்றும் அச்சு நாடுகளின் வீரர்களால் தாங்க முடியவில்லை. கூடவே, சில மாதங்களில் ரஷ்யாவின் கடுங்குளிர் தொடங்கியதும் நாஜிப் படைகள் நடுங்கின. போதிய உணவின்றி, கடுங்குளிரில் அவஸ்தைப்பட்டே பலர் உயிரிழந்தனர். நகரம் முற்றுகையிடப்பட்டிருந்ததால் மக்களுக்கும் அதே கதிதான் நேரிட்டது. போரால் ஏற்பட்ட வறுமை மிகக் கொடூரமானது. பலர் களிமண்ணைத் தின்ன நேர்ந்தது. பலரது பட்டினிக்கு எலிகள் இரையாகின.

சரணடையக் கூடாது என்று ஹிட்லர் கண்டிப்பாக ஆணையிட்டிருந்தும், வேறு வழியின்றி ஜெர்மன் வீரர்கள் ஃபீல்டு மார்ஷல் ஃபிரெடெரிக் பாலஸ் தலைமையில் ரஷ்யாவிடம் சரணடைந்தனர். அவர்களில் பலர் ரஷ்யச் சிறைகளில் நோயாலும் பட்டினியாலும் இறந்தனர். 1943 பிப்ரவரி 2 வரை நடந்த இந்தப் போர் இரண்டாம் உலகப்போரின் திசையை மாற்றியது. ஹிட்லரை வீழ்த்திவிடலாம் எனும் நம்பிக்கையை நேச நாடுகளுக்குக் கொடுத்தது.

இந்தப் போரில் அச்சு நாடுகளின் ராணுவத்தைச் சேர்ந்த 8லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ரஷ்ய ராணுவத் தரப்பில் 11 லட்சத்துக்கும் மேல் பலியாகினர். 40,000 பொதுமக்களும் கொல்லப்பட்டனர். எனினும், போர்களில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அத்தனை துல்லியமாகக் கணக்கிட முடியாததுதான்.

ஆம். ஸ்டாலின்கிராடு போரின் எச்சங்களாக அந்நகரின் ஏதேனும் ஒரு மூலையில் போர் வீரர்களின் சடலங்கள், உடல் பாகங்கள், ஆடைகள், ஆயுதங்கள் கிடைத்துவந்தது குறித்த தகவல்கள் சில ஆண்டுகள் முன்புவரை வெளியாகின.

பல ஆண்டுகளுக்குப் பின்னர் அந்நகரம் மெல்ல மீண்டெழுந்தது. ஸ்டாலின் ஆட்சியின் நினைவை மறக்கும் வகையில் அதன் பெயரும் மாற்றப்பட்டது. ஆம், 1961 முதல் அதன் பெயர் வோல்கோகிராடு ஆனது தனிக்கதை!

ஆகஸ்ட் 23: ஸ்டாலின்கிராடு போர் தொடங்கிய தினம்

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in