இதே தேதி... முக்கியச் செய்தி: மராட்டிய மண்ணை கிழக்கிந்திய கம்பெனி கைப்பற்ற காரணமான அஸாயே போர்!

அஸாயே போர்
அஸாயே போர்

எங்கோ ஒரு மூலையில் இருக்கும் சிறிய கிராமங்கள்கூட, வரலாற்றுப் பதிவுகளில் முக்கிய இடத்தை அடைந்துவிடுவதுண்டு. பெரும்பாலும் அங்கு நடக்கும் போர்கள்தான் அவற்றுக்கு அப்படியான ஒரு அந்தஸ்தை வழங்குகின்றன. அப்படி ஒரு அந்தஸ்தைப் பெற்ற சிறிய கிராமம்தான் அஸாயே. மகாராஷ்டிரத்தின் ஜால்னா மாவட்டத்தில் அமைந்திருக்கும் இந்த கிராமத்தில், பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி படைகளுக்கும், மராத்தா ஆட்சியாளர்களின் படைகளுக்கும் இடையே நடந்த அஸாயே போர் மிக முக்கியமானது. இரு தரப்புக்கும் இடையில் நடந்த இரண்டாவது மராத்தா போரின் முக்கிய யுத்தமாக வரலாற்றில் பதிவாகியிருக்கிறது.

தெற்கில் பெரும் பகுதியைப் பிடித்திருந்த பிரிட்டிஷ் கிழந்திந்திய கம்பெனியினர். மத்திய இந்தியாவின் மராத்தா பகுதியைக் கைப்பற்ற திட்டமிட்டுவந்தனர். அங்கு நிலவிய ஒற்றுமையின்மை அவர்களுக்கு ஒரு சாதகமான அம்சமாக அமைந்தது. ஆம், இந்தூர் மகாராஜா யஷ்வந்த்ராவ் ஹோல்கர் ஒரு புறம், பேஷ்வா பாஜிராவ் மறுபுறம் என இரண்டு தரப்பும் மோதி வந்தன. பாஜிராவ் பக்கம் தவுலத் சிந்தியா எனும் அரசரும் இருந்தார். ‘இந்தியாவின் நெப்போலியன்’ என அழைக்கப்பட்ட யஷ்வந்த்ராவ் ஹோல்கர், 1802-ல் நடந்த பூனா போரில் பாஜிராவின் படைகளையும், தவுலத் சிந்தியாவின் படைகளையும் தோற்கடித்தார். இப்படி ஒற்றுமையில்லாமல் இருந்த மராட்டிய மண்ணைக் கைப்பற்ற அஸாயே கிராமத்தில் கிழந்திய கம்பெனி படைகள் மராத்திய படைகளை எதிர்கொண்டன.

அந்தக் காலகட்டத்தில் தவுலத் சிந்தியா, ரகுஜி இரண்டாம் போன்ஸ்லே, யஷ்வந்த்ராவ் ஹோல்கர், பிரெஞ்சு தளபதியான பியர்ரே குயில்லியர் பெரான் ஆகியோர் ஒன்றிணைந்து கிழக்கிந்திய கம்பெனி படைகளை எதிர்கொள்ள முடிவுசெய்தனர் - பாஜிராவைத் தவிர. தவுலத் சிந்தியா பழைய எதிரி என்றாலும், புதிய எதிரியாக வளர்ந்துவந்த கிழக்கிந்திய கம்பெனியை வீழ்த்த அவருடன் கைகோக்க யஷ்வந்த்ராவ் ஹோல்கர் தயங்கவில்லை. இடையில், பாஜிராவ் சில சூழ்ச்சிகளைச் செய்தது யஷ்ய்வந்த்ராவ் ஹோல்கரைச் சற்றே கலங்கடித்தது தனிக்கதை. இதனால், அவர் அந்தப் போரிலிருந்து விலகி நின்றார்.

அஸாயே போர்
அஸாயே போர்

அப்போது பிரிட்டிஷ் இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த மார்னிங்டன் பிரபு அதை ஒரு பெரும் வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டார். தனது தம்பி மேஜர் ஜெனரல் ஆர்தர் வெல்லஸ்லிக்குத் தகவல் அனுப்பினார். மைசூருவில் இருந்த ஆர்தர் வெல்லஸ்லி தனது படைகளைத் திரட்டிக்கொண்டு மராட்டியத்துக்கு வந்தார். எண்ணிக்கையின் அடிப்படையில் பார்த்தால், ஆர்தர் வெல்லஸ்லியின் படைகளைவிட மராத்தா ஆட்சியாளர்களின் படைபலம் பெரிது. எனினும், முறையான போர்ப் பயிற்சி இல்லாதவர்கள் நிறைந்த படையாக அது இருந்தது. ஆனால் ஆர்தர் வெல்லஸ்லியின் படைகள் போர்த்திறனில் சிறந்து விளங்கின. அது அஸாயே போரில் நன்கு வெளிப்பட்டது. 1803 செப்டம்பர் 23-ல் அஸாயே கிராமத்துக்கு அருகே உள்ள திறந்த வெளியில் நடந்த போரில் வெல்லஸ்லியின் படைகள், மராட்டிய ஆட்சியாளர்களின் படைகளை வென்றன.

யஷ்வந்த்ராவ் ஹோல்கர்
யஷ்வந்த்ராவ் ஹோல்கர்

தொடர் வெற்றிகள் காரணமாகவே, ‘இந்தியாவின் நெப்போலியன்’ என அழைக்கப்பட்டவர் யஷ்வந்த்ராவ் ஹோல்கர். ஆனால், இந்தப் போரில் மராட்டிய ஆட்சியாளர்களுக்குக் கிடைத்த தோல்வியால் அவர் சற்றே பலவீனமான நிலைக்குத் தள்ளப்பட்டார். அதேசமயம், மீண்டும் இந்திய மன்னர்களைத் திரட்டிக்கொண்டு தங்கள் மீது அவர் தாக்குதல் நடத்துவார் என கிழந்திய கம்பெனி அஞ்சியது. எனவே, பல்வேறு வகைகளில அழுத்தம் தந்து அவருடன் ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டது. மிகச் சிறந்த வீரரான யஷ்வந்த்ராவைச் சரிசமமாக மதித்தே ஒப்பந்தத்துக்கு அவரை அழைத்தது. 1805 டிசம்பர் 24-ல், தனது நிலையை ரொம்பவும் விட்டுக்கொடுக்காமல் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் யஷ்வந்த்ராவ். அவது சாம்ராஜ்யத்தை மொத்தமாக அவரிடம் திரும்பக் கொடுத்த கிழக்கிந்திய கம்பெனி, அவர் விஷயத்தில் தலையிடப்போவதில்லை என்றும், அவரும் தங்கள் விஷயத்தில் தலையிடக் கூடாது என்றும் நிபந்தனை விதித்தது.

ஆனால், ஆங்கிலேயர்களை அடியோடு வெறுத்த யஷ்வந்த்ராவ் மீண்டும் மராட்டியக் கூட்டமைப்பை அமைக்கும் முயற்சியில் இறங்கினார். கல்கத்தாவில் இருந்த பிரிட்டிஷ் படைகள் மீது பெரும் தாக்குதல் நடத்தவும் படைகளைத் திரட்டினார். எனினும், 1811 அக்டோபர் 27-ல் அவர் இயற்கை எய்தினார். அவரது வரலாறு இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறில் அதிகம் பேசப்படாத அத்தியாயமாகவே மிஞ்சியிருக்கிறது.

ஆர்தர் வெல்லஸ்லி
ஆர்தர் வெல்லஸ்லி

இதில், வரலாற்று முக்கியத்துவம் கொண்ட இன்னொரு தகவலும் இருக்கிறது. அஸாயே போரில் வென்ற மேஜர் ஜெனரல் ஆர்தர் வெல்லஸ்லி தான், 1815 ஜூன் 18-ல் நடந்த வாட்டர்லூ போரில், பிரெஞ்சு பேரரசர் நெப்போலியனை வீழ்த்தினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in