அவள் நம்பிக்கைகள் - 51: சிசேரியன்.. சில உண்மைகள்!

அவள் நம்பிக்கைகள் - 51: சிசேரியன்.. சில உண்மைகள்!

சுகப்பிரசவத்தின் வலி குறித்த அச்சத்தில் சிசேரியனை தாங்களாகவே விரும்பித் தேர்ந்தெடுக்கும் பெண்கள் ஒருபுறம்; சிசேரியனின் பின்விளைவுகள் குறித்த அச்சத்தில் சிசேரியன் தேவைப்படும்போதும் அதனை மறுதலிக்கும் பெண்கள் மறுபுறம். இப்படி இரண்டு வகையிலும் அவை குறித்தான தெளிவைப் பெறுதல் அனைவருக்கும் அவசியம் என்பதால், சிசேரியன் குறித்த சில உண்மைகளை இங்கே தெரிந்து கொள்வோம்.

சிசேரியன்: வரலாற்று பின்னணி

ஒரு நாட்டின் மொத்த பிரசவங்களில் 10-15% மட்டுமே சிசேரியன் இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது உலக சுகாதார அமைப்பு. ஆனால் இந்த எண்ணிக்கை இந்தியாவில் அதிகமாக இருப்பதுடன், உலகெங்கிலும் இவை தொடர்ந்து அதிகரித்து வருவது கவலைக்குரியதாக பார்க்கப்படுகிறது. தமிழகத்திலும் இந்த சிசேரியன் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. மேலும், 'திட்டமிட்ட சிசேரியன்' என்பதே மகப்பேறு மருத்துவர்கள் தங்களது பிரத்தியேகக் காரணங்களுக்காக முன்வைக்கும் ஒன்றாக மாறிவருவதான குற்றச்சாட்டும் தொடர்கிறது.

உண்மையில், இயல்பான பிரசவத்துக்கு ஏதேனும் தடை வரும்போது மேற்கொள்ளப்படும் இந்த சிசேரியன் அறுவைசிகிச்சை என்பதை, ஏதோ அறிவியல் வளர்ந்த பிறகு ஆரம்பித்த ஒன்றல்ல.. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நடைமுறையில் இருப்பதுதான் என்கிறது மருத்துவ வரலாறு.

கி.மு.715-ஆம் ஆண்டே ரோமானிய அரசு சிசேரியன் குறித்து 'Lex Caesarea' எனும் சட்டத்தை இயற்றியிருக்கிறது. ரோம் அரசரான ஜூலியஸ் சீசர் இப்படிப் பிறந்தவர் என்பதால்தான், இந்த அறுவைசிகிச்சைக்கு ’சிசேரியன்’ என்ற பெயர் வந்தது என்றும் கூறப்படுகிறது. இந்தியாவிலும் சிசேரியனுக்கு வரலாறு உண்டு. கி.பி.300-களில் மௌரிய அரசரான பிந்துசாரரின் தாயார் தவறாக விஷத்தை உண்டதில், இறக்கும் தறுவாயில் அவரது வயிற்றைக் கிழித்து சிசுவை சாணக்கியர் காப்பாற்றியதாக வரலாறு சொல்கிறது.

அவசரநிலை மற்றும் திட்டமிட்ட சிசேரியன்கள்

17ஆம் நூற்றாண்டு வரை, இப்படி இறக்கும் தருவாயில் இருக்கும் தாயிடம் இருந்து சேயைக் காக்க மட்டுமே செய்யப்பட்டு வந்த சிசேரியன்கள், பிற்பாடு தாய்-சேய் என இருவரையுமே காக்கும் ஓர் அறுவை சிகிச்சையாக உருவெடுக்க ஆரம்பித்தது. Caesarean section, C-section, LSCS (Lower Segment Caesarean Section) என்று பல்வேறு பெயர்களில் இந்த அறுவை சிகிச்சை அழைக்கப்படுகின்றது. தாய் - சேய் இரு உயிர்களையும் காக்கும் பொருட்டு, பொதுவாக அவசரநிலையிலோ அல்லது திட்டமிட்டோ (emergency/elective c-section) இவை மேற்கொள்ளப்படுகின்றன.

ஒரு கர்ப்பிணிப் பெண்ணின் பவர், பேசேஜ் மற்றும் பேசஞ்சர் எனும் மூன்று ’P’ காரணிகளில் சிக்கல்கள் ஏற்படுவதை கடந்த வாரம் பார்த்தோம். இந்த சிக்கல்களை தீர்க்கவே அவசரகால சிசேரியன் (emergency section) மேற்கொள்ளப்படுகிறது. அதேபோல பெண் கர்ப்பமாக இருக்கும்போதே தாய் அல்லது சேயை பீடித்திருக்கும் சுகவீனங்களால், இயற்கை வழிப் பிரசவத்தை மேற்கொள்வது ஆபத்தாகலாம் எனும்போது, முன்பே திட்டமிட்டு மேற்கொள்ளப்படுவதே திட்டமிட்ட சிசேரியன் (elective caesarean) சிகிச்சை.

Brendan Hoffman

இந்த இரண்டில், அவசரநிலை சிசேரியன் என்பது பிரசவ வலியுடன் இருக்கும் ஒரு பெண்ணுக்கு மேற்கொள்ளப்படும், இரு உயிர்களை காப்பதற்கான சிகிச்சை என்பதால், இதைப் பற்றி பேச பெரிதாக ஒன்றுமில்லை. ஆனால் திட்டமிட்ட சிசேரியன் குறித்தான புகார்கள் இப்போது அதிகரித்து வருவதால் அதைப் பற்றி பார்ப்போம். பிரசவ வலி இல்லாதபோதும் ஒரு கர்ப்பிணிக்கு எப்போதெல்லாம் சிசேரியனை பரிந்துரைக்க நேரிடுகிறது என்பதைத் தெரிந்துகொள்வது அனைவருக்கும் அவசியமாகிறதல்லவா?

எப்போது சிசேரியன் அவசியமாகிறது?

பொதுவாகவே தாயின் இடை குறுகியோ, குழந்தையின் தலை பெருத்து இருப்பதோ காரணமாகும் CPD(Cephalo Pelvic Disproportion) எனும் நிலையும் சிசேரியன் திட்டமிடலை கோரும். பெரும்பாலும் உயரம் 140 செ.மீ.க்கும் குறைவாக இருக்கும் பெண்களுக்கு இடை குறுகலாகவே இருப்பதால், இது தவிர்க்க முடியாமல் போகலாம்.

அதேபோல, கர்ப்பகாலத்தில் தாய்க்கு கண்டறியப்படும் உயர் இரத்த அழுத்தம், சிகிச்சைக்கு பின்பும் குறையாதவர்களுக்கு வாய்ப்புள்ள, பிரசவ நேர வலிப்பு மற்றும் இரத்த உறைவு சிக்கல்களை தவிர்க்கவும் திட்டமிட்ட சிசேரியன் பரிந்துரைக்கப்படலாம்.

பொதுவாக, கர்ப்பகாலத்தின் 36 அல்லது 37-ஆம் வாரங்களில், பிரசவத்திற்குத் தயாராக இருக்கும் குழந்தை, தலைகீழாக கருப்பைக்குள் நிலைகொள்ள ஆரம்பிக்கும். அப்படி இல்லாது குழந்தையின் தலை மேலாக இருந்தாலோ அல்லது குறுக்காகத் திரும்பி இருந்தாலோ அதனை Malpresentation எனும் அசாதாரண நிலையாக மருத்துவர்கள் அடையாளம் காண்பார்கள். இந்த நிலையில் சுகப்பிரசவமானது தாய்-சேய் இருவரது உயிருக்கும் முற்றிலும் ஆபத்தானது என்பதால் திட்டமிட்ட சிசேரியனையே பரிந்துரைக்கின்றனர்.

அடுத்தது, Repeat Caesarean எனும் ’மீண்டும் மேற்கொள்ளப்படும் சிசேரியன்’. இதில், ஏற்கெனவே செய்திருந்த சிசேரியன் காரணமாகவோ அல்லது Myomectomy எனும் கட்டி நீக்க சிகிச்சையால் உண்டான கருப்பைத் தழும்புகள், வயிற்றுக்குள் பெருக்கும் சிசுவால் பலவீனமடைந்து கருப்பை வெடிப்பது வரையிலும் கொண்டு போகலாம். அந்த நிலையின் ஆபத்துகள் மற்றும் உயிரிழப்புகளைத் தவிர்க்க, மற்றுமொரு முறை சிசேரியன் அவசியமாகிறது.

மேலும், வாழ்க்கைமுறை மாற்றங்கள் காரணமாகப் பெருகி வரும் குழந்தைப்பேறின்மையும், அதன் காரணமாக செயற்கை முறை கருத்தரிப்புகளும் தற்போதைய சூழலில் அதிகரித்து வருகின்றன. இந்த IVF எனும் 'டெஸ்ட் ட்யூப்' முறை மூலமாக கருத்தரிப்பதில் உள்ள சிரமங்கள், மன அழுத்தம் மற்றும் பணவிரயம் ஆகியவற்றைக் கவனத்தில் கொண்டு, ISOM எனப்படும் சர்வதேச மகப்பேறு நலச் சங்கம் திட்டமிட்ட சிசேரியன் சிகிச்சையை பெரும்பாலும் இவர்களுக்கு பரிந்துரைக்கிறது. எனவே இந்த வகைக் கருத்தரிப்புகளில் சிசேரியன்களின் எண்ணிக்கையும் அதிகமாகிறது.

‘கூகுள் டாக்டர்’ தீர்மானிக்கும் பிரசவம்

இவற்றுடன், இரட்டைக் குழந்தைகள், வளர்ச்சி குன்றிய குழந்தை மற்றும் குறைமாதப்பேறு போன்ற நிலைகளில் பிறக்கும் குறைந்த எடை குழந்தைகளை, மூச்சுத்திணறல் உள்ளிட்ட வாய்ப்புள்ள பாதிப்புகளிலிருந்து பாதுகாக்கவும் திட்டமிட்ட சிசேரியன் மேற்கொள்ளப்படுகிறது.

இதுதவிர இருதயநோய், சர்க்கரை நோய், சிறுநீரக நோய்கள், கல்லீரல் நோய், 35 வயதிற்கு மேல் கர்ப்பம் தரித்தல், உடற்பருமன், TORCH infection எனப்படும் சில நோய்த்தொற்றுகள் உள்ளிட்ட மருத்துவக் காரணங்களாலும் சிசேரியன் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.

மேற்கூறிய அனைத்துமே, 'High Risk Pregnancy' எனும் இடர்பாடுகள் நிறைந்த கர்ப்பங்கள் என்பதுடன், இங்கு இயற்கைப் பிரசவத்தைக் காட்டிலும் Elective Caesarean என்ற திட்டமிட்ட சிசேரியன் தான் பாதுகாப்பானது என்பதையும் நாம் புரிந்து கொள்ளலாம்.

இந்த மருத்துவக் காரணங்கள் தவிர, முன்போல இன்றைய காலகட்டத்தில் ஐந்தாறு குழந்தைகளைப் பெறாது, ஒரேயொரு குழந்தையை எந்த சிக்கலுமின்றி பெற்றுக்கொள்ள விரும்புவோர் அதிகரித்துள்ளனர். மேலும் தங்களது படிப்பு, பணி ஆகியவற்றுக்கான முக்கியத்துவங்களால், தாமதமாக மணம் புரிந்து தாமதமாகக் கருத்தரிக்கும் பெண்களும் அதிகரிக்கும் சிசேரியன்களின் சமுதாயக் காரணங்களாகிறார்கள்.

பிரசவ வலி என்பதை சிறிதும் ஏற்றுக்கொள்ளாத இன்றைய பெண்களின் மனநிலை, அதற்கு ஆதரவளிக்கும் குடும்பத்தினர், ’கூகுள் டாக்டர்’ உதவியால் சிசேரியன்தான் எளிதானது என்று தங்கள் மருத்துவரை சந்திக்கும் முன்னரே முடிவு செய்வோர் ஆகியோரும் மருத்துவ காரணங்களுக்கு அப்பால் சிசேரியனை நாடுகிறார்கள். இவற்றின் உச்சமாக, பிறக்கவிருக்கும் குழந்தையின் ஜாதகத்தைக் முன்கூட்டியே கணித்து(?), இந்த நேரத்தில்தான் பிரசவம் மேற்கொள்ளப்பட வேண்டும்(On demand C-section) என்று திணிப்புக்கு ஆட்படும் திட்டமிட்ட சிசேரியன்களும் தற்போது அதிகரித்து வருவது வேதனையூட்டும் நிதர்சனம்.

சிசேரியன் - மறுபக்கம்

இதையெல்லாம் கருத்தில் கொண்டு மத்திய மாநில அரசுகள் மற்றும் மருத்துவ அமைப்புகள் பலவும் சேர்ந்து சிசேரியன்களை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. மேலும், இன்றைய சூழ்நிலையில் ஒவ்வொரு சிசேரியனுக்கும் மருத்துவர்கள் விளக்கம் சொல்ல வேண்டியிருப்பதால், மருத்துவர் தரப்பிலும் திட்டமிட்ட சிசேரியனைத் தவிர்க்கவே முயல்கிறார்கள்.

சிசேரியன் குறித்த அவநம்பிக்கைகள் பெருகி வரும் காலத்தில் அதன் மறுபக்கத்தையும் அறிந்தாக வேண்டும். முன்பெல்லாம் வீட்டில் பிரசவங்கள் பார்க்கப்பட்டபோது, அதில் மரணங்கள் குறித்த விவரங்கள் பதிவு செய்யப்படாமலே போனது. தற்போது தமிழகத்தில் மருத்துவமனைப் பிரசவங்கள் 99% என்று ஆனபிறகு தேசிய அளவில் தமிழகத்தின் MMR எனப்படும் மகப்பேறு மரண விகிதம் மிகக்குறைவாக இருக்கிறது.

இது கடந்த 10 வருடங்களில் ஒரு சாதனை அளவில் நீடிப்பதற்கு சிசேரியனின் பங்களிப்பும் முக்கியக் காரணம் என்பதை மறுக்கமுடியாது. ஒரு நாட்டின் மருத்துவ முன்னேற்றத்தின் மைல்கல் எனக் கருதப்படும் இந்த MMR எனும் மகப்பேறு மரண விகிதத்தையும், பிறந்த குழந்தை இறப்பு விகிதத்தையும் (Neonatal Mortality Rate) தமிழகம் பெருமளவில் குறைத்து, நமது நாட்டை சுகாதார முன்னேற்றத்தில் அழைத்துச் சென்றதற்கு உரிய நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட சிசேரியனும் ஒரு காரணம் என்பதே உண்மை.

இவற்றின் மத்தியில் இயன்றவரை சிசேரியனைக் குறைக்க, அரசு மற்றும் மருத்துவர்கள் முயல்வதுடன், ஒவ்வொரு கர்ப்பிணிப் பெண்ணும், உடனிருப்பவர்களும், உடன் இந்த சமுதாயமும் மேற்கொள்ள வேண்டிய சில வழிமுறைகளை அறிவதும் இங்கு அவசியமாகிறது.

கர்ப்பிணிகளின் கனிவான கவனத்துக்கு

கருவுற்ற காலம் தொடங்கி, பிரசவ காலம் வரை கர்ப்பிணிப் பெண்கள் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகளில் சிலவற்றைப் பார்ப்போம்:

கர்ப்பகாலத்தை பெண்கள் அச்சத்துடன் பார்க்காமல், இயல்பாக ஏற்றுக்கொள்ளும்படி அறிவுறுத்துவதே இதில் முதல் மற்றும் முக்கிய ஆலோசனை! அடுத்து, 'Birthing classes' எனப்படும் பேறுகால விழிப்புணர்வு வகுப்புகளை அனைத்து மருத்துவமனைகளிலும் மேற்கொள்வதும், கர்ப்பகால உடற்பயிற்சிகள், யோகா மற்றும் மூச்சுப்பயிற்சி வகுப்புகளை ஒவ்வொரு பெண்ணுக்கும் பரிந்துரைப்பதும் அவசியமாகிறது.

ஒவ்வொரு பெண்ணுக்கும் இயற்கைப் பிரசவத்தையும், அதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தும் போதே, சிசேரியன் மற்றும் ஆயுதப் பிரசவ முறைகளைப் பற்றியும், ஒவ்வொன்றின் சாதக-பாதகங்கள் குறித்த புரிதல்களை ஏற்படுத்துவதும் அவசியமாகிறது. வலியில்லாப் பிரசவ முறையை பரவலாகக் கையாள்வது இவற்றுக்கு பலம் சேர்க்கிறது என்பதுடன், Family centered delivery எனப்படும் பிரசவத்தின்போது கணவர் அல்லது தாய் உடனிருப்பதும் இயற்கை வழிப் பிரசவத்திற்கு பெரிதும் உதவுகிறது என்பதே உண்மை.

அனைத்திற்கும் மேலாக, சிசேரியன் அல்லது வெஜைனல் டெலிவரி என எதுவானாலும், சுகப்பிரசவம் என்பது தாய் -சேய்க்கு சுகம் சேர்ப்பதே என்பதை இந்த சமுதாயமும் உணர வேண்டும். 

பெண்மைக்கென்றே இயற்கை அளித்திருக்கும் உன்னத வரம் தாய்மை. அதில் பாதகங்கள் நேராது, தெவிட்டாத கனியான பிள்ளைக்கனி அமுதைத் தரும் அன்னைகளைக் காக்க திட்டமிட்ட சிசேரியன்களும் தேவைப்படலாம் என்ற புரிதலுடன் 'அவள் நம்பிக்கைகள்' தொடர்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in