இதே தேதி... முக்கியச் செய்தி: நிறவெறிச் சிந்தனைக்கு ரத்தத்தில் முற்றுப்புள்ளி!

ஹெண்ட்ரிக் வெர்வோர்டு
ஹெண்ட்ரிக் வெர்வோர்டு

தென்னாப்பிரிக்காவில் பூர்வகுடி கறுப்பினத்தவர் மீது சிறுபான்மை வெள்ளையினத்தவர் நிகழ்த்திய நிறவெறிக் கொடுமைகள் மனிதகுல வரலாற்றில் பதிவான கொடூர சாட்சியங்கள். நிறத்தின் அடிப்படையில் சக மனிதன் மீது வெறுப்பையோ, பாகுபாட்டையோ காட்டுவதையும் தாண்டி நிறுவன ரீதியாக ஒரு கட்டமைப்பை உருவாக்கி அரசின் கொள்கையாகவே அமல்படுத்தியிருந்தது வெள்ளையின அரசு. நிறவெறியை நிறுவனப்படுத்தியதில் மிக மிக முக்கியமானவர் தென்னாப்பிரிக்கப் பிரதமராக இருந்த ஹெண்ட்ரிக் வெர்வோர்டு. இறுதியில் அவரது இழிவான சிந்தனைக்கு மிகக் கொடூரமான தண்டனை அமைந்தது.

வெளிநாட்டில் பிறந்து வளர்ந்து தென்னாப்பிரிக்காவின் பிரதமராக உயர்ந்த ஒரே தலைவர் ஹெண்ட்ரிக் வெர்வோர்டு. 1901 நெதர்லாந்தின் ஆம்ஸ்டெர்டாம் நகரில், ஆழ்ந்த மதப்பற்று கொண்ட கிறிஸ்தவக் குடும்பத்தில் பிறந்தவர் ஹெண்ட்ரிக். அவர் 2 வயதுக் குழந்தையாக இருந்தபோதே அவரது குடும்பம் தென்னாப்பிரிக்காவில் குடியேறியது. அவரது தந்தைக்கு அங்குள்ள தேவாலயங்களில் முக்கியப் பொறுப்புகள் வழங்கப்பட்டன.

பின்னாட்களில் எவ்வளவு கொடுமையான நபராக உருவானாலும் இளம் வயதில் ஏதேனும் ஒரு வகையில் திறமை கொண்டவர்களாக இருந்தவர்கள் உண்டு. யூதர்கள் மீது இனவெறி காட்டிய ஹிட்லருக்கு அபாரமான ஓவியத் திறன் இருந்தது போல ஹெண்ட்ரிக் வியக்கவைக்கும் கல்வித் திறன் கொண்டிருந்தார். நினைவாற்றல் அவரது கல்வி வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியது. ஆஃப்ரிகான்ஸ், டச்சு, ஆங்கிலம், ஜெர்மன் ஆகிய மொழிகளில் தேர்ச்சி பெற்றிருந்தார். ஸ்டெல்லென்போச் பல்கலைக்கழகத்தில் சமூக அறிவியல் படித்தார். பயன்பாட்டு உளவியலில் முனைவர் பட்டம் பெற்றார்.

ஹெண்ட்ரிக் வெர்வோர்டு
ஹெண்ட்ரிக் வெர்வோர்டு

பின்னர் ஜெர்மனிக்குச் சென்றார். ஹாம்பர்க், பெர்லின், லைப்ஸிக் நகரங்களின் பல்கலைக்கழகங்களில் படிப்பையும் ஆராய்ச்சியையும் தொடர்ந்தார். ஜெர்மனியில் இருந்த காலகட்டத்தில் அவருக்கு நாஜி சிந்தனை தாக்கம் செலுத்தியதாகவும் கருதப்படுகிறது. பின்னாட்களில், அவர் ‘டை ட்ரான்ஸ்வேலர்’ எனும் நாளிதழின் ஆசிரியராக இருந்தபோது, நாஜி பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக ‘தி ஸ்டார்’ எனும் ஆங்கில நாளிதழில் வெளியிடப்பட்ட கட்டுரை சொன்னது. (அதை எதிர்த்து அவர் தொடுத்த வழக்கை விசாரித்த நீதிபதி அவர் நாஜி கொள்கையில் பிடிப்பு கொண்டவர்தான் எனத் தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்). இரண்டாம் உலகப்போரின்போது ஜெர்மனியில் வசித்துவந்த யூதர்கள், நாஜிக்களின் பிடியிலிருந்து தென்னாப்பிரிக்காவுக்குத் தப்பிவர முயன்றபோது அதைக் கடுமையாக எதிர்த்தவர்களில் வெர்வோர்டும் ஒருவர். ஆம், கறுப்பினத்தவர்கள், பிரிட்டன்காரர்கள், யூதர்கள் எனப் பல்வேறு தரப்பினர் மீதான வெறுப்புச் சிந்தனை அவருக்குள் வேரூன்றியிருந்தது.

தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்த டச்சுக்காரர்களின் வழித்தோன்றல்களின் சமூகம் ஆஃப்ரிக்கானேர் என அழைக்கப்பட்டது. இரண்டாவது போயர் போர் காரணமாக பிரிட்டனைக் கடுமையாக வெறுத்த அந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்தான் வெர்வோர்டு. தென்னாப்பிரிக்காவின் வணிகத் துறை முதல் அரசியல் வரை அந்தச் சமூகத்தினர் ஆதிக்கம் செலுத்தினர். ஆஃப்ரிக்கானேர் தலைவர்களுக்குள்ளேயே தாராளவாதம், தீவிரவாதம் என இரண்டு பிரிவுகள் இருந்தன. இரண்டு பிரிவுகளுமே வெள்ளையர்கள்தான் தென்னாப்பிரிக்காவை ஆள வேண்டும் எனக் கருதியவை.

இதற்கிடையே, தென்னாப்பிரிக்க ஆஃப்ரிக்கானேர் தேசியவாதக் கொள்கையில் ஆழ்ந்த பிடிப்பு கொண்ட வெர்வோர்டு, அரசியலில் நுழைந்தார். தேசிய கட்சியில் (National Party) சேர்ந்தார். பிரதமர் டேனியல் மலான் அரசில் உள் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். அந்தக் காலகட்டத்தில் அவர் கொண்டுவந்த சட்டங்கள் தென்னாப்பிரிக்கக் கறுப்பின மக்கள் மீதான அடக்குமுறையை வலுவாகக் கட்டமைத்தன.

அவர் கொண்டுவந்த மக்கள்தொகைப் பதிவுச் சட்டம் (1950) தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்த வெள்ளையினத்தவர், கறுப்பினத்தவர், கலப்பினத்தவர் (Coloured) என ஒவ்வொரு சமூகத்துக்குமான சமூக வாழ்க்கையைக் கட்டமைத்தது; வெள்ளையினத்தவரின் அதிகாரத்தை வலுப்படுத்தியது. அவர் கொண்டுவந்த பன்டு கல்விச் சட்டம் (1953) கறுப்பினக் குழந்தைகளின் கல்விக்கான எல்லையை நிர்ணயித்தது. கறுப்பினக் குழந்தைகள் எதிர்காலத்தில் தொழில் திறனற்றவர்களாக (கூலி வேலை செய்யும் அளவுக்கு) வருவதைத் தாண்டி, கல்வி ரீதியாக முன்னேற்றம் அடைய விடாமல் அந்தச் சட்டம் தடுத்தது. பன்டு என்பது கறுப்பின மக்களைக் குறிக்கும் சொல்.

மிக மிகக் கொடூரமான அந்தச் சட்டத்தை நியாயப்படுத்திப் பேசிய வெர்வோர்டு, “ஐரோப்பியச் சமூகத்தில் பன்டு மக்களுக்கு எந்த இடமும் இல்லை. அவர்கள் தங்கள் சமூகத்துக்குள் எதையும் செய்துகொள்ளலாம். அதற்கான கதவுகள் திறந்தே இருக்கும்” என்றார். அரசு. 1950-ல் ‘தி க்ரூப் ஏரியாஸ் ஆக்ட்’ எனும் சட்டம் கொண்டுவரப்பட்டது. வெள்ளையினத்தவர்கள் வசிக்கும் பகுதிகளில் கறுப்பின மக்கள் வசிக்கக் கூடாது, நிலம் வைத்திருக்கக் கூடாது, தொழில் நடத்தக் கூடாது என பல்வேறு ஒடுக்குமுறைகள் அமல்படுத்தப்பட்டன. இந்தச் சட்டங்கள் தென்னாப்பிரிக்க கறுப்பின மக்களைக் கொந்தளிக்கச் செய்தன.

டேனியல் மலானுக்குப் பிறகு பிரதமரான ஸ்ட்ரிஜ்டாம் 1958-ல் மறைந்ததைத் தொடர்ந்து, அந்தப் பதவிக்கு வெர்வோர்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். அமைச்சராக இருந்தபோதே அத்தனைக் கொடுமைகளை நிகழ்த்தியவர் பிரதமரான பின்னர் எப்படி இருப்பார்? அவரது நிறவெறிச் சிந்தனை மேலும் வலுவடைந்தது. அவரது கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராகக் கறுப்பினச் சமூகத்தினர் போராட்டத்தில் இறங்கினர். அவற்றை அவர் கடுமையாக நசுக்கினார். அவரது ஆட்சிக்காலத்தில் ஏராளமானோர் சிறையில் அடைக்கப்பட்டனர். 1962 ஆகஸ்ட் 5-ல் அப்படிக் கைதுசெய்யப்பட்டவர்தான் நெல்சன் மண்டேலா.

இப்படியாக, தென்னாப்பிரிக்க நிறவெறிச் சிந்தனையையும், நிறவெறி அரசையும் கட்டமைத்த வெர்வோர்டு தனது நடவடிக்கைகளின் காரணமாக, தென்னாப்பிரிக்காவை உலகச் சமூகம் ஒதுக்கிவைக்கக் காரணமாக இருந்தார். விளையாட்டுப் போட்டிகளிலிருந்து தென்னாப்பிரிக்க அணிகள் விலக்கிவைக்கப்பட்டன. நிறவெறி அரசுக்கு எதிராக ஐநா தீர்மானம் நிறைவேற்றியது.

டேவிட் பிராட்  சுட்டதில் காயமடைந்த வெர்வோர்டு
டேவிட் பிராட் சுட்டதில் காயமடைந்த வெர்வோர்டு

இப்படிச் சர்வதேச சமூகத்தின் பார்வையில் தென்னாப்பிரிக்காவைக் குற்றவாளியாக நிறுத்திய வெர்வோர்டு மீது கறுப்பினத்தவர்கள் மட்டுமல்லாமல் பல தரப்பினர் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியது. 1960 மார்ச் 9-ல், ஜோஹன்னர்ஸ்பெர்க் நகரில் நடந்த ஒரு நிகழ்ச்சியின்போது மேடையிலேயே அவரை நோக்கித் துப்பாக்கியால் சுட்டார் டேவிட் பிராட் எனும் ஆங்கிலேயே தொழிலதிபர். கன்னத்திலும் காதிலும் ரத்தம் வழிய சரிந்த வெர்வோர்டை அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். மருத்துவர்களே அதிசயிக்கும் வகையில் அவர் பிழைத்துக்கொண்டார். ஓரிரு மாதங்களில் பொதுவாழ்க்கைக்குத் திரும்பினார். டேவிட் பிராட் மனநிலை சரியில்லாதவர் எனக் கூறப்பட்டு மனநலக் காப்பகத்தில் அடைக்கப்பட்டார். அங்கேயே தற்கொலை செய்துகொண்டார். ஆனால், அந்தக் காலகட்டத்தில் தற்கொலைகளின் பின்னணியில் காவல் துறையினர் இருந்தது கவனிக்கத்தக்கது.

1966 செப்டம்பர் 6-ல் கேப்டவுன் நகரில் சட்டமன்றக் கட்டிடத்துக்குள் வெர்வோர்டு நுழைந்ததும், திமித்ரீ ஸாஃபெண்டாஸ் எனும் நாடாளுமன்றப் பணியாளர் அவரது கழுத்திலும் மார்பிலும் 4 முறை கத்தியால் குத்தினார். இந்த முறை வெர்வோர்டு உயிர் பிழைக்கவில்லை. போர்த்துக்கீசிய பின்னணி கொண்ட கம்யூனிஸ சிந்தனை கொண்ட ஸாஃபெண்டாஸ் அவரது கொடுங்கோல் வரலாற்றுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். ஆனாலும், இறுதிமூச்சு வரை தனது நிறவெறிக் கொள்கையில் பிடிவாதமாக இருந்தார் வெர்வோர்டு,

பின்னாட்களில், அதாவது 1995-ல் வெர்வோர்டின் மனைவி பெஸ்டி வெர்வோர்டை ஒருவர் சந்தித்துப் பேசினார். அவர் நெல்சன் மண்டேலா. தன்னைச் சிறையில் அடைத்த வெர்வோர்டை அவர் விரோதிகளாகக் கருதவில்லை. அனைவரையும் உள்ளடக்கிய சமூகத்தையும் அரசையும்தான் அவர் விரும்பினார். அதனால்தான் நெல்சன் மண்டேலா உலகத் தலைவராகக் கருதப்படுகிறார்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in