அசோகர் - 6: முடிசூடியது எப்போது?

அசோகர் - 6: முடிசூடியது எப்போது?

அசோகரின் வாழ்வையும் அவர் வாழ்ந்த காலத்தையும் கட்டமைக்கும்போது, ஒவ்வொரு அத்தியாயத்திலும் பவுத்தப் பிரதிகளே நமக்கு உதவிக்கரம் நீட்டுவதைப் பார்க்கிறோம். முற்பிறவி முதலே புத்தரோடு தொடங்கிவிடும் அசோகரின் உறவு அவர் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்தது. காலத்தை வென்று இன்றும் தொடர்கிறது. அசோகர் எந்த ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்றுக்கொண்டார் எனும் கேள்வி எழும்போது வேறு யாரிடமிருந்தும் அல்ல, புத்தரிடம்தான் நாம் அடைக்கலம் பெறுகிறோம்.

புத்தர் மரணமடைந்து (பரிநிர்வாணம்) 218 ஆண்டுகள் கழித்து அசோகர் முடிசூடிக்கொண்டார் என்கின்றன மகாவம்சமும் தீபவம்சமும். உபயோகமான தகவல்தான் என்றாலும் இது, அடுத்த கேள்விக்கு நம்மை இட்டுச்செல்கிறது. புத்தர் எப்போது இறந்தார்? அஜாதசத்ரு ஆட்சிக்கு வந்து 8 ஆண்டுகள் கழித்து, புத்தர் பரிநிர்வாணம் அடைந்தார் என்கின்றன பவுத்தப் பிரதிகள். அஜாதசத்ரு எப்போது ஆட்சிக்கு வந்தார் என்பது நமக்குத் தெரியாது என்பதால், இந்தத் தகவலை வைத்துக்கொண்டு எதுவும் செய்வதற்கில்லை. எனவே, தேடலைச் சற்றே விரிவாக்க வேண்டியிருக்கிறது.

சான்றுகள், ஆய்வாளர்கள் சொல்வதென்ன?

புத்தர் பொஆமு 544-ம் ஆண்டு பரிநிர்வாணம் அடைந்தார் என்கின்றன இலங்கை, பர்மா, சியாம் பவுத்தப் பதிவுகள். தேராவாத பவுத்தமும் இதை ஒப்புக்கொள்கிறது என்கிறார் எஸ்.ராதாகிருஷ்ணன். ஆனால் இதிலுள்ள சிக்கல் என்னவென்றால், இத்தகவலை அளிக்கும் பவுத்தப் பிரதிகள் 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாக இருக்கின்றன. இவ்வளவு நீண்ட இடைவெளிக்குப் பிறகு கிடைப்பதால், ஆய்வாளர்கள் இதை ஏற்க மறுக்கின்றனர். இதுபோக, வேறு சிக்கல்களும் இருக்கின்றன என்கிறார் ரொமிலா தாப்பர்.

புத்தரின் மரணம்
புத்தரின் மரணம்

ஒரு வாதத்துக்கு 544-ம் ஆண்டு புத்தர் மரணமடைந்தார் என்று எடுத்துக்கொண்டு அதன் அடிப்படையில் அசோகர், பிந்துசாரர், சந்திரகுப்தர் ஆகியோரின் ஆட்சிக்காலங்களைக் கணக்கிட்டுக்கொண்டே வந்தால், சந்திரகுப்தர் பொஆமு 382-ம் ஆண்டு பதவியேற்றார் எனும் முடிவுக்கு நாம் வர வேண்டியிருக்கும். ஆனால் அது ஏற்கத்தக்கதல்ல. காரணம் சந்திரகுப்தர் அலெக்சாண்டரின் சமகாலத்தவர். அலெக்சாண்டரோடும் அவருக்குப் பிறகுப் பதவியில் அமர்ந்த செல்யூகஸ் நிகாடரோடும் சந்திரகுப்தருக்குத் தொடர்புகள் இருந்ததற்குச் சான்றுகள் உள்ளன. அலெக்சாண்டர் இறந்தது 323-ம் ஆண்டில். அவர் இறப்பதற்கு இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சந்திரகுப்தர் அவரைச் சந்தித்ததாகச் சொல்லப்படுகிறது. 382-ம் ஆண்டு சந்திரகுப்தர் பொறுப்பேற்றிருந்தால், கிரேக்கத் தொடர்புகள் அவருக்குக் கிடைத்திருக்காது. எனவே, 544-ம் ஆண்டு புத்தர் மரணம் அடைந்திருக்க முடியாது.

அதேபோல், புத்தர் 271-ம் ஆண்டு பரிநிர்வாணம் அடைந்ததாகச் சொல்லப்படுவதையும் ஏற்பதற்கில்லை. அசோகர் கிரேக்கர்களோடு கொண்டிருந்த தொடர்பை அவருடைய கல்வெட்டுகள்மூலம் நாம் அறிகிறோம். 271-ம் ஆண்டைக் கொண்டு அசோகர் ஆட்சிக்காலத்தைக் கணக்கிட்டால், கிரேக்கத் தொடர்புகள் சாத்தியப்படாது.

ஊகங்கள் காட்டும் சிறு வெளிச்சம்

தீபவம்சத்திலிருந்து நமக்கொரு துப்பு கிடைத்திருக்கிறது. அசோகர் பல்வேறு பவுத்தப் புனித இடங்களுக்குப் யாத்திரை மேற்கொண்டிருக்கிறார். அந்த யாத்திரைக்கு முன்பு சூரிய கிரகணம் தோன்றியதாக தீபவம்சம் சொல்கிறது. அசோகர் எப்போது லும்பினி சென்றார் என்பதற்குக் கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளன. சூரிய கிரகணம் 249-ம் ஆண்டு ஏற்பட்டிருக்கலாம் என்கிறார்கள் வானியல் ஆய்வாளர்கள். அசோகர் தனது யாத்திரையைத் தொடங்குவதற்கு ஒன்று அல்லது இரண்டாண்டுகளுக்கு முன்பு கிரகணம் ஏற்பட்டிருக்கலாம். ஒரு பேரரசரின் பெரும் யாத்திரையைத் திட்டமிடுவதற்கு நிச்சயம் ஒன்றிரண்டு ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கும் என்று ஊகிக்கலாம்.

அடுத்து நமக்குக் கிடைக்கும் தரவுகள், புத்தரின் பரிநிர்வாணத்தை பொஆமு 486 என்று குறிப்பிடுகிறது. இதைக் கொண்டு, மவுரிய மன்னர்களின் காலகட்டத்தைக் கணக்கிட்டுப் பார்க்கிறார் தாப்பர். பொஆமு 486-ல் புத்தர் மரணமடைந்திருந்தால், சந்திரகுப்தர் 324-ல் பதவியேற்றிருப்பார், பிந்துசாரர் 272-ல் ஆட்சிக்கு வந்திருப்பார். அவர் 28 ஆண்டுகள் ஆண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதன்பின், அசோகர் முடிசூடிக்கொள்ள நான்காண்டுகள் ஆயின என்று கடந்த அத்தியாயத்தில் பார்த்தோம். அதையும் சேர்த்தால் 269 அல்லது 268-ம் ஆண்டு அவர் முடிசூடியிருக்கலாம். அசோகருக்கும் கிரேக்க மன்னர்களுக்குமான உறவைக் குறிப்பிடும் அசோகர் கல்வெட்டின் காலம் 256 அல்லது 255 ஆக இருக்கலாம். சூரிய கிரகணம் 249-ல் ஏற்பட்டிருக்கலாம் எனும் வானியல் ஆய்வாளர்களின் கணிப்பும் இங்கே பொருந்திவருகிறது. மிக நெருக்கமாக, பொஆமு 483-ம் ஆண்டையும் சிலர் குறிப்பிடுகிறார்கள். இரண்டுக்கும் பெரிய வேறுபாடுகள் இல்லை என்றாலும் 486-ம் ஆண்டை புத்தரின் பரிநிர்வாணமாகக் கொள்வது தரவுகளின் அடிப்படையில் சரியாக அமையும் எனும் முடிவுக்கு வருகிறார் தாப்பர். இந்த அடிப்படையில் 269 அல்லது 268-ம் ஆண்டு அசோகர் முடிசூடிக்கொண்டார் என்று சொல்லலாம்.

ஆட்சியைப் பிடித்ததற்கும் முடிசூடிக்கொண்டதற்கும் இடையிலான நான்காண்டுகளும் விரிவாகவே விவாதிக்கப்பட்டுள்ளன. புத்தரின் பரிநிர்வாணத்துக்கும் அசோகரின் முடிசூட்டு விழாவுக்கும் முடிச்சு போடும்போது ஏற்பட்ட குழப்பங்களைத் தீர்க்க சிலர் இந்த நான்காண்டு இடைவெளியை உருவாக்கியிருக்கலாம் என்பது சிலர் வாதம். அப்படியொரு இடைவெளி இருந்திருக்க வாய்ப்பேயில்லை. ஆட்சியைப் பிடித்தவுடன் அவர் முடிசூடியிருக்க வேண்டும் என்கிறர்கள் இவர்கள். வாரிசு மோதல் முடிந்து தன் அதிகாரத்தைத் திரட்டிக்கொள்வதற்கு, அசோகருக்கு நான்காண்டுகள் நிச்சயம் தேவைப்பட்டிருக்கும். இது ஒன்றும் அதிகப்படியான காலமல்ல என்கிறார்கள் வேறு சிலர்.

மன்னருக்குப் பிறந்த தேதியல்ல, முடிசூடிக்கொண்ட தேதிதான் முக்கியமானதாகக் கருதப்பட்டிருக்கிறது. மணிமகுடம் தரித்த பிறகே ஒரு மன்னர் உயிர்பெற்று எழுகிறார்.

இன்னொரு ஊகத்தை ராதாகுமுத் முகர்ஜி சுட்டிக்காட்டுகிறார். 25 வயதாகும்போதுதான், ஒருவர் மன்னராகப் பொறுப்பேற்றுக்கொள்ள முடியும் எனும் மரபு அப்போது பின்பற்றப்பட்டு வந்தது. அதைக் கொண்டு பார்த்தால், அசோகர் தனது 21-வது வயதில் சண்டையிட்டு ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறார். மரபை மீறாமல் நான்காண்டுகள் காத்திருந்து, முடிசூடிக்கொண்டிருக்கிறார். இல்லை, அசோகர் முடிசூடிக்கொண்டபோது அவர் வயது 34 என்று வேறு சான்றுகளைக் கொண்டு சிலர் வாதிடுகின்றனர்.

முடிசூடிக்கொண்ட ஆண்டு என்பது அசோகரின் வாழ்வில் ஒரு குறிப்பு மட்டும்தான், இல்லையா? அதை ஏன் இவ்வளவு விரிவாக வரலாற்றாசிரியர்கள் ஆராய்ந்திருக்கிறார்கள்? பழமையான இலக்கியங்கள் தொடங்கி நவீன வானியல் ஆய்வுவரை பலவற்றையும் கொண்டு, இவ்வளவு சிக்கலான கணக்கீடுகளை ஏன் செய்யவேண்டும் அவர்கள்? புத்தரின் மரணத்தில் தொடங்கி கிரேக்கப் பதிவுகள்வரை ஒப்பிட்டு, ஓர் ஆண்டை நிர்ணயம் செய்யவேண்டிய அவசியம் ஏன் நேர்ந்தது? ஏனென்றால், ஒரு மன்னருக்குப் பிறந்த தேதியல்ல, முடிசூடிக்கொண்ட தேதிதான் முக்கியமானதாகக் கருதப்பட்டிருக்கிறது. மணிமகுடம் தரித்த பிறகே ஒரு மன்னர் உயிர்பெற்று எழுகிறார். அவர் வாழ்வின் முக்கிய நிகழ்ச்சிகள் அனைத்தும் அவர் முடிசூடிக்கொண்ட ஆண்டை அடிப்படையாக வைத்தே கணக்கிடப்படுகின்றன. அசோகர் எப்போது முடிசூடிக்கொண்டார் என்பதைக் கண்டறிந்தால்தான், பிந்துசாரரின் ஆட்சிக்காலத்தை உறுதி செய்யமுடியும். பிந்துசாரரின் ஆட்சிக்காலத்தை உறுதி செய்தால்தான், சந்திரகுப்தரின் வரலாறு தெளிவடையும். மன்னர்கள் முடிசூடிக்கொண்ட காலத்தை வைத்தே வம்சாவளி வரலாறு கட்டமைக்கப்படுகிறது. அதற்குதான் இவ்வளவு விவாதங்கள், இவ்வளவு கருத்து வேறுபாடுகள்.

புராணங்களிலிருந்து...

அசோகர் குறித்து புராணங்களிலும் குறிப்புகள் இருக்கின்றன. பவுத்த மத நூல்கள் போல் அவற்றையும் ஆய்வாளர்கள் கவனமாக வாசித்திருக்கின்றனர். தரவுகளையும் சேகரித்திருக்கின்றனர். விஷ்ணு புராணத்தின் உரையாசிரியரான துந்திராஜாவும் வேறு சிலரும் ‘மூரா’ எனும் பெயரிலிருந்து மவுரியர் தோன்றியிருக்கலாம் என்கிறார்கள். மவுரியருக்கு முன்பு மகதத்தை நந்த வம்ச மன்னர்கள் ஆண்டுவந்தனர். நந்த வம்சத்தைச் சேர்ந்த ஒரு மன்னரின் மனைவி பெயர் மூரா. மூராவின் பேரன் அல்லது மகன் சந்திரகுப்தர். சந்திரகுப்தரின் வம்சம் மூராவின் பெயரால் ‘மவுரியா’ என்று அழைக்கப்பட்டது என்பது இவர்கள் வாதம்.

புராணங்கள் இவ்வாறு குறிப்பிடவில்லை என்பதோடு, மூரா எனும் பெயரையும் எங்கும் காண முடியவில்லை என்கிறார் ஹெச். ராய் சவுத்ரி. பண்டைய இந்திய அரசியல் அமைப்புகள் பற்றி குறிப்பிடத்தக்க ஆய்வுகளை மேற்கொண்டவர் இவர். நந்த வம்சத்தினர் சூத்திர பிரிவின்கீழ் வருபவர்கள். அவர்களுக்கும் மவுரிய வம்சத்துக்கும் தொடர்பிருப்பதாகப் புராணங்கள் கருதாததற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என்கிறார் அவர். நந்த அரசைத் தொடங்கிவைத்தவரான மகாபத்ம நந்தர், இனி சூத்திரர் மட்டுமே மன்னராக வேண்டும் எனும் நோக்கில் சத்திரியர் அனைவரையும் கொன்றொழித்ததாகச் சொல்லப்படுகிறது.

சில புராணப் பிரதிகள் மவுரியரை ‘சூத்திர பிரயஸ்தவ் அதர்மிகா’ என்று அழைக்கின்றன. ‘சூத்திரர் போன்றவர்கள், மதமற்றவர்கள்’ என்பது இதன் பொருள். மவுரிய வம்சத்தைச் சேர்ந்தவர்கள் சனாதன தர்மத்தைக் கடைப்பிடிக்காமல் சமணம், பவுத்தம் போன்றவற்றைப் பின்பற்றியதால், மதமற்றவர்கள் என்று அவர்களை இப்பிரதிகள் கருதியிருக்கின்றன என்கிறார் ராய் சவுத்ரி.

துர்க்கை
துர்க்கை

இருப்பதிலேயே பழமையான புராணங்களுள் ஒன்றாகக் கருதப்படுவது மார்க்கண்டேய புராணம். மார்க்கண்டேய முனிவரால் இயற்றப்பட்ட இந்நூல் பதினெண் புராணங்களில் ஒன்று. தேவி மகாத்மியம் இதில் ஒருபகுதியாக இடம்பெற்றுள்ளது. துர்க்கை, சண்டி ஆகிய வடிவங்களில் தேவி தோன்றி அசுரர்களை அழித்தொழித்து நன்மையை நிலைநாட்டும் கதைகள் தேவி மகாத்மியத்தில் இடம்பெற்றுள்ளன. மார்க்கண்டேய புராணம் மவுரியரையும் அசுரர் என்று அழைப்பதைச் சுட்டிக்காட்டுகிறார் ராய் சவுத்ரி.

பாகவதத்தில் தீர்த்தங்கரர் போலவே புத்தரும் தோன்றுகிறார். இருவரும் விஷ்ணுவின் அவதாரங்கள். பவுத்தக் கதைகளை விவரிக்கும்போது, வேதங்களைச் சிதைக்கவும் தவறாக அர்த்தப்படுத்தவும் குழப்பவும் சிலர் தோன்றுவார்கள் என்று நினைவுபடுத்துகிறது. புத்தரின் உபதேசங்களால் கவரப்பட்டவர்களை ‘சுரத்விஷ்’ என்று பாகவதம் அழைக்கிறது. அசுரர் என்பதே இதற்கும் பொருள்.

இந்தக் குறிப்புகளிலிருந்து சில செய்திகளைத் தொகுத்துக்கொள்ள முடியும். வேதங்களோடு, பிராமணர்களோடு, சனாதன தர்மத்தோடு புத்தர் முரண்பட்டிருக்கிறார். புத்தரை வேத மறுப்பாளராக, சடங்குகளை எதிர்ப்பவராக, கலகக்காரராக, ஆபத்தை விளைவிக்கக்கூடியவராக புராணங்கள் கருதியதில் வியப்பேதுமில்லை. பவுத்தம் ஒரு எதிர் மதமாக அல்லது மதத்தை மறுக்கும் அமைப்பாக அவர்களுக்குத் தோன்றியிருக்கிறது. பவுத்தம் மட்டுமல்ல சமணமும் இவ்வாறே கருதப்பட்டிருக்கிறது. சந்திரகுப்தர், பிந்துசாரர், அசோகர் மூவரும் சமணம், பவுத்தம், ஆசீவகம் போன்ற கலகக்காரப் பிரிவுகளோடு உறவு வளர்த்துக்கொண்டவர்களாக இருந்திருக்கிறார்கள்.

கெளடில்யர் எனும் பிராமணரால் வளர்த்தெடுக்கப்பட்டவர் என்றாலும், சந்திரகுப்தரின் ஆட்சியில் மேற்கூறிய 3 மதங்களும் செழித்து வளர்ந்திருக்கின்றன. பிந்துசாரர் ஆசிவகத்தை ஆதரித்திருப்பதற்குச் சான்றுகள் உள்ளன. அசோகர் புத்த தம்மத்தை ஏற்று பவுத்தத்தை முன்மொழிந்ததோடு, உலகெங்கும் கொண்டுசென்று சேர்ப்பித்திருக்கிறார். பவுத்த இலக்கியங்கள் அவரை, சக்கரவர்த்தியாகக் கொண்டாடுகின்றன. பவுத்தத்தை வளர்த்தெடுத்த புரவலராக அசோகர் திகழ்ந்ததால், பவுத்த இலக்கியங்கள் அவரைக் கொண்டாடுவதில் ஒரு நியாயம் இருக்கிறது. புராணங்கள் அதைச் செய்ய வேண்டிய அவசியம் என்ன?

மவுரியர்களின் ஆட்சிக்காலம்

அசுரர், பகைவர் என்றெல்லாம் தூற்றினாலும் மவுரிய வம்சாவளி பற்றிய குறிப்புகளைப் புராணங்கள் கொண்டிருக்கின்றன. கலியுக வம்சங்களைப் பற்றிய இக்குறிப்புகளை எஃப்.ஈ. பார்கிடெர் என்பவர் தொகுத்திருக்கிறார் (1913). மச்ச புராணம், வாயு புராணம், பிரம்மாண்ட புராணம், விஷ்ணு புராணம், பாகவதம், கருட புராணம், பவிஷ்ய புராணம் போன்றவற்றிலிருந்து வெவ்வேறு மன்னர்களின் பெயர்கள், அவர்கள் வம்சத்தின் பெயர், அவர்கள் அரசாண்ட காலம் ஆகியவற்றை பார்கிடெர் திரட்டியிருக்கிறார்.

இரண்டாம் சந்திரகுப்தர் காலத்து நாணயம்
இரண்டாம் சந்திரகுப்தர் காலத்து நாணயம்படம்: ‘தி இந்து’ ஆவணக் காப்பகம்

எடுத்துக்காட்டுக்கு மச்ச புராணம் சந்திரகுப்தர், அசோகர் உள்ளிட்ட 10 மன்னர்களின் பெயரை மவுரிய வம்சத்தின்கீழ் பட்டியலிடுகிறது. மொத்தம் 137 ஆண்டுகள் மவுரியர் ஆட்சி செய்திருப்பதாகவும் குறிப்பிடுகிறது. வாயு புராணத்தின்படி 9 மவுரிய மன்னர்கள் ஆட்சி செய்திருக்கிறார்கள். பிரம்மாண்ட புராணம் 9 மன்னர்களையும், விஷ்ணு புராணம் 10 பேரையும், பாகவதம் 10 பேரையும் குறிப்பிடுகிறது.

மவுரியரின் மொத்த ஆட்சிக்காலம் 137 ஆண்டுகள் என்பதில் எல்லாப் புராணங்களும் உடன்படுகின்றன. மன்னர்களின் எண்ணிக்கை 9 அல்லது 10 என்று மட்டுமே மாறுபடுகிறது. சந்திரகுப்தர், பிந்துசாரர், அசோகர் மூவருடைய பெயர்களும் எல்லாப் புராணங்களிலும் இடம்பெற்றுள்ளன. மற்ற பெயர்கள் ஒன்றுக்கொன்று மாறுகின்றன. புராணங்களின்படி சந்திரகுப்தர் 24 ஆண்டுகளும் பிந்துசாரர் 25 ஆண்டுகளும் அசோகர் 36 ஆண்டுகளும் ஆண்டிருக்கிறார்கள். மகாவம்சத்தின்படி சந்திரகுப்தர் 24 ஆண்டுகளும் பிந்துசாரர் 28 ஆண்டுகளும் அசோகர் 37 ஆண்டுகளும் (இடையில் 4 ஆண்டுகள்) ஆண்டிருக்கிறார்கள். தீபவம்சம் மகாவம்சத்தோடு ஒத்துப்போகிறது.

அசோகரின் ஆட்சிக்காலத்தை நிர்ணயிக்க பவுத்தப் பிரதிகளோடு புராணங்கள் அளிக்கும் தகவல்களையும் ஆய்வாளர்கள் ஒப்பிட்டிருக்கிறார்கள். மற்றபடி மவுரியர் வரலாற்றைக் கட்டமைக்க புராணங்கள் மேலதிகம் உதவவில்லை. பவுத்தப் பிரதிகள் மட்டுமே பரவலாக நாடப்படுகின்றன.

(விரியும்)

1) The Purana Text of the Dynasties of the Kali Age, F.E. Pargiter, Oxford University Press, 1913

2) The Puranic Chronology of the Mauryan Dynasty, H.G. Shastri, Proceedings of the Indian History Congress , 1959, Vol. 22 (1959), pp. 78-83

3) Chandragupta and Bindusara, H.C. Raychaudhuri, (Age of the Nandas and Mauryas, K.A. Neelakanda Sastri (ed.), Motilal Banarsidass)

4) Ashoka, R.K. Mookerjee, Motilal Banarsidass Publications, 1962

5) Ashoka and the Decline of the Mauryas, Romila Thapar, 3rd Edition, Oxford University Press, 2018

மருதன், எழுத்தாளர். ‘ரொமிலா தாப்பர்: ஓர் அறிமுகம்’, ‘ஹிட்லர்’, ‘ஹிட்லரின் வதைமுகாம்கள்’, ‘அகதிகள்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: marudhan@gmail.com

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in