அசோகர்- 5: சாத்தானும் கடவுளும்

அசோகர்- 5: சாத்தானும் கடவுளும்

பிந்துசாரர் தனது மூத்த மகன் சுசிமாவைத் தேர்ந்தெடுத்திருந்த நிலையில், அசோகரின் கரங்களுக்கு ஆட்சி சென்றது எப்படி? மகாவம்சம் அலட்டிக்கொள்ளாமல் அளிக்கும் விளக்கம் இது. தன் தந்தையின் மரணத்தைத் தொடர்ந்து அண்ணனையும் கொன்றுவிட்டு, அழகிய நகரை ஆளத் தொடங்கினார் அசோகர். தீபவம்சத்தின் கருத்தும் இதுதான். ஆனால், எண்ணிக்கையில் மட்டும் மகாவம்சத்தோடு மாறுபடுகிறது. ஒருவரையல்ல, தனது நூறு சகோதரர்களையும் கொன்றொழித்த பிறகே ஆட்சியைக் கைப்பற்றினாராம் அசோகர்.

அசோகாவதானம் அசோகருக்குப் பதவி வந்த கதையைப் பின்வருமாறு மகிமைப்படுத்துகிறது. பிந்துசாரர் என்னவோ சுசிமாவைத்தான் தனது வாரிசாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார். ஆனால், ஒரு முக்கியமான அமைச்சர் இதை எதிர்த்திருக்கிறார். அவருக்கு நிகழ்ந்த அவமரியாதைதான் காரணம். ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அந்த அமைச்சரை சுசிமா கோபத்தோடு தலையில் ஒரு தட்டு தட்டிவிட்டாராம். இது அமைச்சரை வெகுவாகக் காயப்படுத்திவிட்டது. இளவரசனாக இருக்கும்போதே இவ்வளவு மூர்க்கமாக நடந்துகொள்ளும் இவன் நாளை அரசனானால் என் கதி என்ன? வாளை உருவி என் தலையைச் சீவினாலும் ஆச்சரியப்பட முடியாது அல்லவா?

ரத்தக்குளியல்

தனது அச்சத்தை சக அமைச்சர்களோடு பகிர்ந்துகொண்டதோடு, அவர்கள் ஒத்துழைப்பையும் புரிதலையும் நாடிப் பெற்றிருக்கிறார் பதிக்கப்பட்ட அமைச்சர். என்ன நடந்தாலும் சுசிமா அரியணை ஏறக்கூடாது. எப்படியாவது அசோகரைக் கொண்டுவந்துவிட வேண்டும் என்று அவர்கள் கூட்டாகத் தீர்மானித்திருக்கிறார்கள். பிந்துசாரர் தன் இறுதிக் கணங்களை எண்ணிக்கொண்டிருந்தபோது அணுகி, அசோகரை இன்னொரு முறை பரிந்துரைத்திருக்கிறார்கள். செத்தாலும் அது நடக்காது என்று சொல்லிவிட்டார் பிந்துசாரர். அசோசர் கலங்காமல் (முன்பொருமுறை நடந்தது போலவே) வானைப் பார்த்து அறிவித்திருக்கிறார். ‘அரியணை என்னுடையது என்றால் கடவுள்கள் அதை எனக்கு எப்படியாவது சொந்தமாக்கட்டும்!’

அடுத்த கணமே கடவுள்கள் தோன்றி மணிமகுடத்தை அசோகருக்குச் சூட்ட, ஏமாற்றத்தைத் தாங்கிக்கொள்ள இயலாத பிந்துசாரர் ரத்தம் கக்கி, இறந்துபோனார்.

அசோகர் ஆட்சிக்கு வந்தது கடவுளின் அருளால்தான் என்பதை நிரூபித்து முடித்த பிறகு, மெல்ல கள நிலவரத்தை ஒப்புக்கொள்கிறது அசோகாவதானம். ஆம், பதவியைப் பிடிக்க அசோகர் கடுமையாகப் போட்டியிட வேண்டியிருந்தது. ஆம், அவர் மணிமகுடம் ரத்தக்குளியலைச் சந்தித்திருக்கிறது. சுசிமாவை நெருப்பில் பொசுக்கிக் கொன்றார் அசோகர்.

அசோகருக்கும் சுசிமாவுக்கும் இடையில் சகோதர மோதல் நிகழ்ந்தது என்கிறது திவ்யாவதானம். சுசிமாவின் பின்னால் 98 சகோதரர்களும் ஒன்று சேர்ந்தனர். அவர்கள் அனைவரும் ஓரணியில் இருந்துகொண்டு அசோகரை எதிர்த்தனர் என்கிறது மகாபோதிவம்சம்.

எல்லாமே பவுத்தப் பிரதிகள். எல்லாமே அசோகரை கதாநாயகனாகக் கருதுபவை. கடவுளுக்கு நிகராக அவரை உயர்த்தி வைப்பவை. இருந்தும் இவை அனைத்தும் ஒன்றுபடும் புள்ளி, அசோகர் வன்முறையைக் கையாண்டே பதவியைக் கைப்பற்றினார் என்பதுதான். தன் சசோதரர்களுள் ஒருவரைக் கொன்றாரா, நூறு பேரையா என்பதில் மட்டும்தான் மாறுபாடு நிலவுகிறதே தவிர அசோகர் கொன்றாரா என்பதில் எந்த ஐயமும் இந்தப் பிரதிகளுக்கு இருப்பதுபோல் தெரியவில்லை. இதை எப்படிப் புரிந்துகொள்வது?

உண்மையா, பொய்யா?

கதைகள் என்று மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும் என்கிறார் வின்சென்ட் ஸ்மித். ரத்தக்கடலில் நீந்திதான் அசோகர் செங்கோலைப் பற்றினார் என்பதை ஏற்க இவர் தயாராக இல்லை. ஒருவர், 6 பேர், 100 பேர் என்று விருப்பத்துக்கு ஏற்றாற்போல் கணக்கு காட்டும் பவுத்தப் பிரதிகளை நம்ப மறுக்கிறார் ஸ்மித். பூமி பிளந்து ஆயுதங்கள் தோன்றுகின்றன. கடவுள்கள் நினைத்தபோதெல்லாம் மேலிருந்து இறங்கி வருகிறார்கள். முற்பிறவிக் கதைகளும் மறுபிறப்புக் கதைகளும் கொட்டிக்கிடக்கின்றன. அதிசயங்களும் அற்புதங்களும் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. நிகழ்வுகள் விருப்பத்துக்கு ஏற்றாற்போல் திரிக்கப்படுகின்றன, மாற்றப்படுகின்றன, ஊதிப் பெரிதாக்கப்படுகின்றன. இப்படிப்பட்ட பிரதிகள் வரலாற்று உண்மையைச் சொல்லும் என்று எதிர்பார்க்க முடியுமா? பிக்குகள் பொய் கலந்து எழுதுபவர்கள் என்பதால், அவர்களுடைய பிரதிகளை ஆய்வுக்கு எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை என்கிறார் ஸ்மித்.

நவீன வரலாற்றாசிரியர்கள் அவ்வாறு செய்வதில்லை. வேதம், புராணம், இதிகாசம், தல வரலாறு, ஜாதகக் கதைகள் உள்ளிட்ட எதையும் புறக்கணிக்காமல் கவனமாக ஆய்வுக்கு உட்படுத்துகிறார்கள். ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுச் சலித்து, தரவுகள் சேகரிக்கிறார்கள். எவ்வாறு சலிப்பது என்பதற்கும் எவற்றைத் தரவுகளென்று தொகுத்துக்கொள்வது என்பதற்கும் வழிகாட்டு நெறிகள் வகுக்கப்பட்டுள்ளன. அவை தொடர்ந்து விவாதிக்கப்பட்டும் வருகின்றன. ஒரு பிரதியின் உள்ளடக்கம் மட்டுமல்ல, அது எவ்வாறு இயற்றப்பட்டது, யாரால், யாருக்காக, எதற்காக போன்றவற்றையும் அவர்கள் கவனத்தில் எடுத்துக்கொள்கிறார்கள். சிக்கல்களையும் சிடுக்குகளையும் படிப்படியாகக் களைந்து தர்க்கபூர்வமாக விவாதங்களைக் கட்டமைக்கிறார்கள். அசோகர் ஒரு வன்முறையாளரா எனும் கேள்வியை, அதே பவுத்தப் பிரதிகளைக் கொண்டு ரொமிலா தாப்பர் எவ்வாறு ஆராய்கிறார் என்று பார்ப்போம்.

அசோகரின் பிற்கால வாழ்வை வெளிச்சத்தில் காட்டுவதற்காக, அவரது முற்காலத்தில் முடிந்தவரை இருளைப் பீய்ச்சியடித்திருக்கிறார்கள் பவுத்தர்கள்.

அசோகர் தனது 100 சகோதர்களைக் கொன்றார் எனும் குறிப்பை முதலில் எடுத்துக்கொள்வோம். 100 என்பது ஓர் எண்ணல்ல என்று ஏற்கெனவே பார்த்தோம். பிந்துசாரருக்கு 101 குழந்தைகள் என்றால், அவருக்குப் பல குழந்தைகள் என்றும் அசோகருக்கு 100 சகோதரர்கள் என்றால் அவர் ஏராளமான அண்ணன், தம்பிகளைக் கொண்டிருந்தார் என்றும்தான் பொருள்கொள்ள வேண்டும். பிந்துசாரரின் குழந்தைகளில் அசோகர் போக மேலும் இரண்டு பெயர்கள் மட்டும்தான் நமக்குக் கிடைத்திருக்கின்றன. முதலாமவர் சுசிமா. சுசிமா, சுமனா ஆகிய பெயர்களாலும் அழைக்கப்படுபவர். அசோகரால் கொல்லப்பட்டதாகச் சொல்லப்படும் பிந்தசாரரின் மூத்த வாரிசு.

இரண்டாமவர், திஷ்யா. சிங்கள இலக்கியங்கள் திஸ்ஸா என்று இவரை அழைக்கின்றன. அரசரான பிறகு அசோகர் இவரைத் தன்னோடு இணைத்துக்கொண்டார் என்றும் நல்ல பதவியில் (உப ராஜா) அமர்த்தினார் என்றும் மகாவம்சம் குறிப்பிடுகிறது. (அசோகருக்குச் சகோதரிகள் இருந்தனரா என்று தெரியாது). அசோகர் இவரைக் கொல்லவில்லை. இவர் மட்டுமே அசோகரோடு உடன் பிறந்தவர் என்றும் மற்றவர்களெல்லாம் பிந்துசாரரின் பிற மனைவிகள்மூலம் பிறந்தவர்கள் என்றும் காரணம் சொல்லப்படுகிறது. இது உண்மையானால் விதஷோகா என்று அவர் அம்மா பெயரிட்ட மகன்தான் திஷ்யாவாக நமக்கு அறிமுகமாகிறார். அதன்பின் பொறுப்புகளைத் துறந்து ஒரு துறவியாக அவர் மாறிவிட்டதாகத் தெரிகிறது.

மொத்தத்தில் சுசிமா கொல்லப்பட்டிருக்கிறார். வேறு எவ்வளவு சகோதரர்களை அசோகர் கொன்றார் என்பது நமக்குத் தெரியப்போவதில்லை. எல்லாச் சகோதரர்களையும் கொன்றுவிட்டார் என்பது ஏற்கத்தக்கதல்ல. ஏனெனில் அசோகரின் கல்வெட்டுகளில் அவருடைய சகோதரர்கள், சகோதரர்களின் குடும்பங்கள் ஆகியோர் பற்றிய குறிப்பு இடம்பெற்றுள்ளது. ஆட்சிப் பொறுப்பேற்று பல ஆண்டுகள் கழித்தும் அவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்பது இதிலிருந்து தெரியவருகிறது.

பாடலிபுத்திரம் வந்தார், சுசிமாவைக் கொன்றார், பேரரசர் ஆனார் என்னும் அளவுக்கு எளிமையாக எல்லாம் முடிந்துவிடவில்லை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அசோகர் ஆட்சியைப் பிடித்து நான்காண்டுகளுக்குப் பிறகே முடிசூடிக்கொண்டார் என்கிறது தீபவம்சம். அவ்வளவு காலம் வாரிசுப் போர் நீடித்திருப்பதையே இது உணர்த்துகிறது. மூத்த மகன் எனும் அடிப்படையில் சுசிமா நிச்சயம் அசோகருக்கு எதிராகத் திரண்டிருப்பார். அவரோடு பிற சகோதரர்களும் நின்றிருக்கக்கூடும். அசோகருக்கு அமைச்சர் குழுவின் ஆதரவு இருப்பதாக எடுத்துக்கொண்டால், இரு தரப்புக்கும் இடையில் நீடித்த மோதல்கள் நிகழ்ந்திருக்க வேண்டும். அந்த மோதலில் சுசிமா அசோகரால் கொல்லப்பட்டிருப்பார்.

அரியணையும் வன்முறையும்

16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த தாரநாதா லாமா பவுத்தத்தின் வரலாற்றை எழுதியிருக்கிறார். திபெத்திய பவுத்தரான இவர் தனது நூலில் மவுரிய வம்சத்தின் கதையைச் சுருக்கமாக அளித்திருக்கிறார். அதில் நிறைய குறைபாடுகள் உள்ளன என்றாலும் அசோகர் தனது 8 சகோதரர்களைக் கொன்றார் எனும் குறிப்பு ஏற்கத்தக்கதாக இருக்கிறது என்கிறார் தாப்பர். திஷ்யா கொல்லப்படவில்லை என்றே இவரும் சொல்கிறார்.

அசோகர் பிந்துசாரரின் மூத்த மகனல்ல என்பது தெரிகிறது. அவருக்கு எப்படியும் பதவி அளிக்கப்படாது என்பதையும் அவர் அறிந்திருப்பார். நியமிக்கப்பட்ட வாரிசை வீழ்த்துவதன்மூலம் மட்டுமே அரியணை கிடைக்கும் என்பதை உணர்ந்து, தன் சகோதரனை அல்லது சில சகோதரர்களை அவர் கொன்றிருக்கலாம். இது அரண்மனையில் ஒரு கலகத்தைத் தொடங்கியிருக்கும் என்கிறார் தாப்பர்.

ரொமிலா தாப்பரின் வாதத்தை ஏற்க வேண்டுமானால், 100 பேரைக் கொன்றார், ரத்தக்குளியலில் இறங்கினார், சகோதரனை நெருப்பில் வாட்டிக் கொன்றார் என்றெல்லாம் மிகையாகச் சொல்லவும் முடியாது. அசோகரின் கரங்களில் ரத்தம் படியவேயில்லை என்று பூசி மெழுகவும் முடியாது. முடியாட்சியைப் பொறுத்தவரை அதிகாரம் என்பது எப்போதும் வன்முறையோடு தொடர்புகொண்டே இயங்கி வந்திருக்கிறது. அதே அதிகாரத்தின் பெயரால், வன்முறையை நியாயப்படுத்தும் போக்கும் இருந்திருக்கிறது. அசோகரும் இதில் விதிவிலக்காக இருந்திருக்க வாய்ப்பில்லை.

பவுத்தப் பதிவுகள் ஏன் அசோகரின் வன்முறையைப் பெரிதுபடுத்திக் காட்டவேண்டும்? ஒரு பக்கம் அவரை வானளவு உயர்த்தி வழிபட்டுக்கொண்டிருக்கும்போது, இன்னொரு பக்கம் அவருடைய வன்முறையை ஏன் தேவையற்று வளர்த்து, காட்சிப்படுத்த வேண்டும்? இந்த ஐயம் தோன்றுவதற்குக் காரணம் மேற்கூறிய சம்பவங்கள் மட்டுமல்ல. ஆட்சியைப் பிடித்த பின்பும் அசோகர் மாறவில்லை. வன்முறை நாட்டத்தைக் குறைத்துக்கொள்ளவில்லை. உயிர்களை வதைத்துக்கொண்டே இருந்தார் என்று சாதிக்கின்றன பவுத்தப் பதிவுகள்.

குற்றவுணர்வு

ஒருமுறை அசோகர் நிர்கிரந்தா துறவிகள் அனைவரையும் பிடித்து வந்து கொல்லுமாறு உத்தரவிட்டார். சமணர்களையும் அவர்களுடைய வருகைக்கு முன்பிருந்த பிற துறவிகளையும் குறிக்கும் ஒரு சொல், நிர்கிரந்தா. வாழ்வின் எல்லாத் தளைகளிலிருந்தும் விடுபட்டு, மக்களிடமிருந்து ஒதுங்கி வாழ்பவருக்கு வழங்கப்படும் பெயர் இது. இந்த வகை துறவிகள் சமயப் பற்றில்லாதவர்கள், கடவுளுக்கு எதிரானவர்கள் என்று அசோகர் அஞ்சியிருக்கிறார். இவர்கள் பெருகினால் பவுத்த நம்பிக்கைகளுக்கு அச்சுறுத்தல் நேரலாம் என்று கருதிய அசோகர், அவர்களைக் கூண்டோடு ஒழிக்க முடிவெடுத்திருக்கிறார்.

அவர் கொடுத்த உத்தரவின்படி எவ்வளவு துறவிகள் கொல்லப்பட்டனர் என்று தெரியவில்லை. ஆனால் திடீரென்று ஒருநாள் தனது உத்தரவை அவர் திரும்பப் பெற்றுக்கொண்டார் என்கிறது அசோகாவதானம். ஏன் தெரியுமா? துறவறம் பூண்டிருந்த அவருடைய தம்பி திஷ்யாவையும் தவறுதலாகப் பிடித்துக் கொன்றுவிட்டார்களாம். குற்றவுணர்வு கொண்ட அசோகர் துறவிகளைக் கொல்லும் வழக்கத்தை அன்றே கைவிட்டிருக்கிறார்.

சண்ட அசோகா

அதே அசோகாவதானத்தில், இன்னொரு கதையும் சொல்லப்பட்டிருக்கிறது. ஒருநாள் கிழக்கு பாடலிபுத்திரத்தில் அமைந்திருந்த ஒரு பூங்காவில் உலாவிக்கொண்டிருந்தார் அசோகர். அந்தப்புரத்துப் பெண்களும் அவருடன் இருந்தனர். செடிகளையும் மரங்களையும் மலர்ந்திருந்த பூக்களையும் பார்த்து ரசித்துக்கொண்டே வரும்போது ஓர் அசோக மரத்தை நெருங்கியிருக்கிறார். என்னுடைய பெயரைத் தாங்கி நிற்கும் மரம் அல்லவா இது என்று உணர்ச்சிப்பொங்க, வாஞ்சையோடு சொல்லியிருக்கிறார். அதே காதலோடு உடன் வந்த பெண்களையும் அவர் தழுவியிருக்கிறார். ஆனால் அந்தப் பெண்களுக்கு அசோகரின் தீண்டுதல் உவப்பை அளிக்கவில்லை. அவருடைய கரடுமுரடான தோல்தான் அதற்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது. அசோகர் உறங்கியதும், சினம் பொங்க வெளியில் வந்த பெண்கள் அசோக மரத்தை நெருங்கி அதன் கிளை, இலை, பூ என்று அனைத்தையும் வெட்டி வீசியிருக்கிறார்கள். செய்தி தெரிந்த அசோகர் பழி வாங்கும் வகையில் 500 பெண்களையும் நெருப்பில் வீசிக் கொன்றார். இதனால் கொடூரமான அசோகர் என்னும் பொருள்பட ‘சண்ட அசோகா’ எனும் பெயரையும் அவர் வென்றெடுத்தார்.

ஆட்சிக்கு வந்தவுடனே அசோகர் தனது வன்முறை ஆட்டத்தைத் தொடங்கிவிட்டதாகச் சொல்கிறது அசோகாவதானம். ஆட்சிக்கு வந்த கையோடு தன் அமைச்சர்கள் அனைவரையும் கூட்டி, இப்போதே சென்று பூ பூக்கும் மரங்களையும காய்த்துத் தொங்கும் மரங்களையும் வெட்டி வீசுங்கள். எந்த மரத்தில் முள் நிறைந்திருக்கிறதோ அதை மட்டும் விட்டுவிடுங்கள் என்று உத்தரவிட்டாராம். நாம் சரியாத்தான் உள்வாங்கியிருக்கிறோமா என்பதை உறுதி செய்ய மீண்டும் அசோகரிடம் அவர் உத்தரவைத் திரும்பச் சொல்லுமாறு அமைச்சர்கள் கோரியிருக்கிறார்கள். மூன்று முறை அசோகர் உத்தரவிட்டிருக்கிறார். இது அர்த்தமற்ற உத்தரவு என்பதால் பலர் அதை நிறைவேற்றாமல் இருந்திருக்கின்றனர். அனைவரையும் சிரச்சேதம் செய்திருக்கிறார் அசோகர். எப்படிப்பட்ட கட்டளையாக இருந்தாலும் தயங்காமல் நிறைவேற்றுபவரை மட்டுமே நம்பி அருகில் வைத்துக்கொள்ளமுடியும். மற்றவர்கள் எப்போது வேண்டுமானாலும் துரோகம் இழைக்கலாம் என்பது அசோகரின் திடமான நம்பிக்கையாம். அதனால்தான் 500 அமைச்சர்களை அவர் கொன்றாராம்.

கொலையாள்

இந்தக் கொலைகளையெல்லாம் அசோகர் தானே முன்வந்து தன் சொந்தக் கரங்களால் நிகழ்த்தியிருக்கிறார். அசோகரின் ரத்த வெறியைக் கண்டு, அவருடைய தலைமை அமைச்சர் கலக்கத்தோடு அவரிடம் சென்று, ‘மன்னா நீங்கள் எவ்வளவு பேரை வேண்டுமானாலும் தண்டித்துக்கொள்ளுங்கள். ஆனால், நீங்களே கொல்வதற்குப் பதில் தண்டிப்பதற்கென்றே ஒருவரைப் பணியிலமர்த்திவிடலாமே!’ என்று ஆலோசனை சொல்லியிருக்கிறார். அசோகரும் ஒப்புக்கொண்டிருக்கிறார் என்றாலும், அவர் எதிர்பார்க்கும் அளவுக்கு வன்முறை வேட்கை கொண்ட ஒரு மரண தண்டனை அதிகாரியைக் கண்டுபிடிப்பது சவாலானதாக இருந்திருக்கிறது. இறுதியில் கிரிகா என்றொருவனைப் பிடித்திருக்கிறார்கள். உன்னால் அசோகர் சொல்லும் அனைவரையும் கொல்ல முடியுமா என்று கேட்டதற்கு, இந்த நாட்டையே அழிக்க வேண்டுமானாலும் தயார் என்று சொல்லியிருக்கிறான். நீ அசோகரிடம் பணியாற்றக்கூடாது என்று அவன் தாயும் தகப்பனும் தடுத்தததைத் தொடர்ந்து, இருவரையும் வெட்டி வீழ்த்திவிட்டுப் பணியில் இணைந்துகொண்டிருக்கிறான். மூர்க்கமான கிரிகா என்னும் பொருள்பட ‘சண்டகிரிகா’ என்று அவன் அதன்பின் அழைக்கப்பட்டானாம்.

அவனுடைய விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டு, அசோகர் பாடலிபுத்திரத்தில் ஒரு சிறைச்சாலையைத் தனியே உருவாக்கிக் கொடுத்திருக்கிறார். வெளியிலிருந்து பார்ப்பதற்குக் கண்களைக் கவரும் வகையில் அழகாகவும் உள்ளே சென்றால் இதயம் வெளியில் விழுந்து வெடிக்கும் அளவுக்குப் பயங்கரமாகவும் அந்தச் சிறை இருந்ததாம். அதற்குள் பலரையும் போட்டு அடைத்து விதவிதமாக வதைகள் புரிந்து மகிழ்ந்திருக்கிறான் கிரிகா. ‘அசோகரின் நரகம்’ என்று இச்சிறை அழைக்கப்பட்டுள்ளது.. அஞ்சப்பட்டுள்ளது. எப்படியெல்லாம் உடல் வதைக்கப்படுகிறது என்பதை அசோகரே நேரில் வந்து பார்த்து ஆய்வு செய்திருக்கிறார். கையில் கிடைத்த அப்பாவிகளை, அதாவது அந்தப் பக்கமாக தன் பாட்டுக்குச் சென்றுகொண்டிருந்த சிலரை உள்ளே இழுத்துப்போட்டு அவரும் சில வதைகளை முயன்று பார்த்திருக்கிறார். அந்தச் சிறைக்குள் என்னென்ன வதைகளெல்லாம் மேற்கொள்ளப்பட்டன என்பதை அசோகாவதானம் ஒன்றன்பின் ஒன்றாக, நிதானமாக, நின்று விவரிக்கிறது.

காம அசோகா

பெண்ணாசையும் அசோகரைப் பிடித்து ஆட்டியிருக்கிறது என்கிறார் தாரநாதா லாமா. ‘காம அசோகா’ என்று அழைக்கப்படும் அளவுக்கு அவர் புலனின்பங்களில் மூழ்கித் தன்னைத் தொலைத்தார் என்கிறது இவருடைய பதிவு.

புத்தரின் பேரன்பை ஏந்தி நிற்க வேண்டிய நூல்கள் படிப்போரைப் பதைபதைக்க வைக்கும் அளவுக்கு வதைகளையும் வன்முறைச் செயல்களையும் படுகொலைகளையும் நீட்டி, முழக்கி பதிவு செய்திருக்கின்றன. ஒரேயொரு எளிய செய்தியைத் தெரிவிப்பதற்குதான் இத்தனையும் என்கிறார் ரொமிலா தாப்பர். காமம், குரோதம், குரூரம், கொலை என்று மனித குலம் வெறுக்கத்தக்க வகையில் நடந்துகொண்டவர் அசோகர்.

கடவுளாக்கிய பவுத்தம்

அப்படித்தான் அவர் தொடக்கம் முதல் இருந்தார். அதுதான் அவர் அடையாளம். சண்ட அசோகராகவும் காம அசோகராகவும் வாழ்ந்து வந்தவர், பவுத்தத்தின் அருள் கிடைத்த பிறகே தம்ம அசோகராக மாறினார். எண்ணற்ற குற்றங்களை இழைத்தவர், பவுத்தம் தீண்டியதும் மாசற்ற மாணிக்கமாக மலர்ந்தார். அசோகர் எனும் அரக்கனை மனிதனாகவும் பின்னர் கடவுளாகவும் உயர்த்தியது பவுத்தம். ஆகவே மானிடத்தீரே, பவுத்தத்தைத் தழுவுவீர்!

நயன்ஜோத் லாஹிரி வந்தடையும் முடிவும் இதுவே. அசோகரின் பிற்கால வாழ்வை வெளிச்சத்தில் காட்டுவதற்காக அவரது முற்காலத்தில் முடிந்தவரை இருளைப் பீய்ச்சியடித்திருக்கிறார்கள் பவுத்தர்கள். அசோகரின் புரட்சிகரமான மனமாற்றமே அவர்கள் உணர்த்த விரும்பும் செய்தி. அதைத்தான் நாம் இத்தகைய கதையாடல்களிலிருந்து எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி மிகையும் கற்பனையும் கலந்த பதிவுகள் என்பது பார்த்த மாத்திரத்திலேயே தெரிந்துவிடுகிறது. ஒரு பிரதி தொட்டதற்கெல்லாம் 100 பேரைக் கொன்றார் என்கிறது. இன்னொன்று குறைந்தது 500 கொலைகளிலிருந்துதான் பேசவே ஆரம்பிக்கிறது. அசோக மரத்தை வெட்டியதால் 500 பெண்களும் அசோகர் சொன்ன மரங்களை வெட்டாததால் 500 அமைச்சர்களும் கொல்லப்பட்டிருக்கின்றனர் என்பதை நம்ப முடிகிறதா? அசோகர் பவுத்தத்தை உயிருக்கும் மேலாக மதித்தார் என்று சொன்னால் போதாதா? மாற்று சமயத்துத் துறவிகளைத் தேடிப்பிடித்துக் கொன்று தன் சமயப் பற்றைப் பறைசாற்றிக்கொண்டார் என்று நிறுவும் அளவுக்குச் செல்ல வேண்டுமா?

நரகத்தை பூமியில் உண்டாக்கும் அளவுக்கு படுபயங்கரமான குரூரம் அசோகருக்குள் நுழைந்திருக்கிறது. அது எப்படி வந்தது, எங்கிருந்து வந்தது? தெரியாது. பெரும் அழிவை ஏற்படுத்திய பிறகு, திடீரென்று ஒருநாள் வந்த சுவடே தெரியாமல் அது மறைந்துவிடுகிறது. அவ்வளவு குரூரம் எப்படிக் கண்மூடித் திறப்பதற்குள் வரும், மறையும்? கதைகளில் மட்டுமே இத்தகைய மாய விநோதங்கள் நிகழும் என்கிறார் தாப்பர்.

நரகத்தின் நிழல்

பாடலிபுத்திரத்தையே அச்சத்தில் தள்ளிய அசோகரின் நரகம் என்னானது? அசோகரின் வலதுகரமாகச் செயல்பட்ட கிரிகா என்னவானான் என்பதைத் தெரிந்துகொள்ள அசோகாவதானத்துக்கு நாம் திரும்பிச் சென்றாக வேண்டும். ஒருநாள் சமுத்திரா எனும் பவுத்தத் துறவியை கிரிகா சிறைபிடித்து நரகத்துக்கு இழுத்து வந்தான். உன்னை நான் வகை வகையாக வதைத்துக் கொல்லப்போகிறேன் என்று மிரட்டியிருக்கிறான். வதைகள் எனக்குப் பொருட்டல்ல என்று அடக்கமாகப் பதிலளித்திருக்கிறார் சமுத்திரா. சரி அதையும் பார்த்துவிடுவோம் என்று இழுத்துச்சென்று கொதிக்கும் நீரில் துறவியை வீசுகிறான். மனித ரத்தமும் எலும்பு லஜ்ஜையும் கழிவும் சேர்ந்து குமிழ் விட்டுக் கொதிக்கும் நீர் அது. சமுத்திராவை ஏற்றுக்கொண்ட மறுகணமே கொதிநீர் குளிர் நீராக மாறியது. உள்ளிருந்து தோன்றிய ஒரு தாமரை மலர்மீது கால்களை மடக்கி அமர்ந்துகொண்டார் சமுத்திரா.

அந்த அதிசயத்தைக் காண அசோகர் உடனே விரைந்து வந்தார். இதை எப்படி உன்னால் செய்ய முடிந்தது என்று அவர் வியப்போடு கேட்க, ‘நான் புத்தரின் சீடன். தம்மத்தைக் கடைபிடிப்பவன்’ என்று சொல்லியிருக்கிறார் சமுத்திரா. அத்தோடு நில்லாமல், ‘நீ இப்படியொரு நரகத்தைக் கட்டியிருக்கக்கூடாது. உன் குற்றங்களுக்குப் பரிகாரமாக 84,000 தூபங்களைக் கட்டியெழுப்பு. எல்லா உயிர்களுக்கும் பாதுகாப்பை உறுதி செய். புத்தர் உன்னை மீட்பார்’ என்று அறிவுறுத்தியிருக்கிறார். தன் பாவங்களையெல்லாம் ஒப்புக்கொண்ட அசோகர் அக்கணமே பவுத்தத்தை ஏற்றார். கிரிகாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. நரக சிறைச்சாலை இடிக்கப்பட்டது. அதன்பின் எல்லாம் சுகமாக மாறியது என்று பூரிக்கிறது அசோகாவதானம்.

ஒரு முன்மாதிரி பவுத்தரை, ஒரு மகத்தான சக்கரவர்த்தியை, ஒரு மனிதப் புனிதரை உருவாக்குவதற்கு நரகம் ஒரு முன்நிபந்தனையாக அவர்களுக்கெல்லாம் இருந்திருக்கிறது.

அசோகரின் வன்முறை முகம் குறித்து உறுதியோடு பேசுவதற்கு நமக்குள்ள ஒரே ஆதாரம் அசோகர் மட்டுமே. அந்த முகத்தை அவர் மறைக்கவில்லை. முலாம் பூசி நியாயப்படுத்தவில்லை. என் ஆன்மாவுக்குள் நரகத்தின் நிழல் வந்து விழுந்தது என்று அவரே ஒப்புக்கொள்கிறார். அதை எவ்வாறு நீக்கினேன் என்பதையும் அவரே சொல்கிறார். பவுத்த இலக்கியங்கள்கூட அமைதியாகக் கடந்துசென்றுவிடும் இருள் பகுதிகளை தானாகவே முன்வந்து வெளிப்படுத்துகிறார். அசோகரின் குரலைக் கேட்கும்போது அது சாத்தானின் குரல் போலவும் இல்லை; கடவுளின் குரல் போலவும் இல்லை. ஒரு மனிதனின் குரலாகவே அது ஒலிக்கிறது.

(விரியும்)


1) Ashoka in Ancient India, Nayanjot Lahiri, Harvard University Press, 2015

2) Ashoka and the Decline of the Mauryas, Romila Thapar, 3rd Edition, Oxford University Press, 2018

3) A History of Ancient and Early Medieval India : From the Stone Age to the 12th Century, Upinder Singh, Pearson, 2008

4) Ashoka, R.K. Mookerjee, Motilal Banarsidass Publications, 1962

5) The Legend of King Ashoka : A Study and Translation of the Asokavadana, John S. Strong, Motilal Banarsidass Publishers, Reprint 2008

மருதன், எழுத்தாளர். ‘ரொமிலா தாப்பர்: ஓர் அறிமுகம்’, ‘ஹிட்லர்’, ‘ஹிட்லரின் வதைமுகாம்கள்’, ‘அகதிகள்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: marudhan@gmail.com

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in