அசோகர்-27: இந்தியாவின் மகத்தான மகன்!

அசோகர்-27: இந்தியாவின் மகத்தான மகன்!

காலனியத்தின் பிடியிலிருந்து விடுபட்டு எழுச்சிகொள்ளும் ஆசியா அமைதியை நாடுகிறது. போரைவிட அமைதி மேலானது என்பதால் மட்டுமல்ல. ‘நாம் தீட்டிவைத்திருக்கும் திட்டங்களையும் கண்டுகொண்டிருக்கும் கனவுகளையும்’ போர் அழித்துவிடும் என்பதால்.

ஜவாஹர்லால் நேருவின் சொற்கள் இவை. சாரநாத் தூணிலுள்ள சிங்கங்களும் தர்ம சக்கரமும் புதிய இந்தியாவின் அடையாளங்களாக மாறின. அமைதியையும் இந்தியாவின் தேசியச் சின்னமாக மாற்ற வேண்டும் என்று விரும்பினார் நேரு. தன் பங்குக்குப் பல கலிங்கங்களைக் கண்டு முடித்திருந்தார் அவர். ரத்த வெள்ளத்தில் மூழ்கிக் குளித்த இந்தியாவைத்தான் அவரால் தன் கரங்களில் ஏந்திக்கொள்ள முடிந்தது. அந்த இந்தியா இனி ஒருபோதும் போருக்குச் செல்லக் கூடாது.

இந்தியா மட்டுமல்ல இரண்டாம் உலகப் போரைத் தொடர்ந்து காலனியாதிக்கத்திலிருந்து விடுபட்ட ஆசிய நாடுகள் அனைத்தும் அமைதியையே நாட வேண்டும். அப்போதுதான் ஒரு புதிய எதிர்காலத்தைக் கட்டமைக்க முடியும். இந்தியா தனக்காக மட்டும் பேசாது. உலகில் எங்கு, எந்த நாடு பாதிக்கப்பட்டாலும் அவர்கள் சார்பாக இந்தியா குரல் கொடுக்கும் என்றார் நேரு. இந்திய அமைதி உலக அமைதியோடு இணைந்தது என்பதால் அப்படியொரு அமைதி வேண்டும் என்று கனவு கண்டார்.

பேரரசரைக் கண்டடைந்த பிரதமர்

காந்தி போலன்றி நேரு வரலாற்றில் ஆர்வம் கொண்டிருந்ததை பகவான் ஜோஷ் சுட்டிக்காட்டுகிறார். தன் நேரத்தின் பெரும்பகுதியை எழுதுவதிலும் வாசிப்பதிலும் அவர் செலவிட்டார். எதிர்கால இந்தியா குறித்து பல கனவுகளை வளர்த்துக்கொண்டிருந்தவர் என்பதால் அதன் கடந்த காலத்திலும் ஆர்வம் கொண்டிருந்தது ஒரு வகையில் தவிர்க்கவியலாததும்கூட. காலனியவாதிகள் எழுதி வைத்த வரலாற்றுக்கு மாற்றாக தேசியவாதிகள் புதிய வரலாற்றை உருவாக்கிக்கொண்டிருந்த காலம் அது. புதிய தேசத்துக்கு புதிய வரலாறு வலுசேர்க்கும் எனும் நம்பிக்கையை வரலாற்றாசிரியர்களோடு சேர்ந்து அவரும் பகிர்ந்துகொண்டார். “எதிர்காலத்துக்கு முன்பு நிகழ்காலம் இருக்கிறது. நிகழ்காலத்துக்குப் பின்னால் நீண்ட நெடிய கடந்த காலம் மறைந்திருக்கிறது. அதிலிருந்துதான் நிகழ்காலம் பிறந்தது என்பதால் நான் கடந்த காலத்தைப் புரிந்துகொள்ள விரும்பினேன்” என்றார் நேரு. இந்தியாவின் கடந்த காலம் நிகழ்காலத்தோடு உரையாடிக்கொண்டிருந்ததை அவர் உணர்ந்தார்.

ஜவாஹர்லால் நேரு
ஜவாஹர்லால் நேரு

அசோகரை நேரு ‘கண்டுபிடித்தது‘ அப்போதுதான். “சாரநாத் சென்றபோது புத்தர் முதல் உபதேசம் நிகழ்த்துவதைக் கண்டேன். 2500 ஆண்டுகள் கடந்து அவர் சொற்கள் என்னை வந்தடைந்தன. அசோகரின் தூண்களைக் கண்டேன். அவை மகத்தான மொழியில் என்னோடு பேசின. ஈடு இணையற்ற ஒரு பேரரசரின் கதையை அந்தத் தூண்கள் எனக்குச் சொல்லின” என்று உணர்வுபூர்வமாக எழுதுகிறார் நேரு.

அசோகரை வரலாறு மறக்காது. அவர் பற்றிய நினைவுகள் அழிவற்றவை என்று தன் மகளுக்குச் சிறையிலிருந்து எழுதுகிறார் நேரு. பொதுவாக அவர் முடியாட்சியை, மன்னர்களைக் கொண்டாடுவதில்லை. மாவீரர்களை வரலாறு தன் நினைவுகளிலிருந்து உதிர்த்துவிடுகிறது. பெரும் போர்களில் பெரும் வெற்றிகள் குவித்தவர்களால் நாம் இழந்ததே அதிகம் என்று கருதியவர். ஆனால் அசோகர் மற்ற பேரரசர்கள் போன்றவர் அல்லர். பேரரசர் என்பதையும் மீறி அவரை நம்மால் நெருங்க முடிகிறது, விரும்பவும் முடிகிறது என்கிறார் நேரு.

பேரரசர் என்றல்ல, இந்தியாவின் மகத்தான மகன் என்று அசோகரைத் தன் மகளுக்கு அறிமுகப்படுத்துகிறார் நேரு. மாபெரும் சாம்ராஜ்ஜியத்தின் தலைவவராக இருந்தபோதும், தன் மக்களை அவர் வென்றெடுத்த விதம் அலாதியானது என்கிறார் நேரு. வேறுபட்டிருந்த மக்களை அசோகர் அரவணைத்துக்கொண்ட விதம் அவருக்குப் பிடித்துப்போனது. மக்களிடம் நெருங்கிச் செல்ல வேண்டும், அவர்களோடு நின்று உரையாட வேண்டும் என்று இறுதிவரை அசோகர் விரும்பியது நேருவைக் கவர்ந்தது.

ஒற்றுமைச் சிந்தனையின் ஊற்று

ஆட்சியில் இருந்த காலம் நெடுகிலும் அசோகர் அமைதியை முன்மொழிந்திருக்கிறார். பண்டைய இந்தியாவுக்கு அவர் எதை வழங்கினாரோ அதுதான் புதிய இந்தியாவுக்கும் தேவைப்படுகிறது என்பதை நேரு கண்டுகொண்டார். அசோகரிடமிருந்து பெற்றுக்கொண்ட கனவைத்தான் அவர் இந்தியாவுக்கும் உலகுக்கும் நீட்டித்தார். ஒர் அரசு மனிதர்களின் நலன்கள்மீது மட்டுமல்ல விலங்குகள், பறவைகளின் நலன்கள்மீதும் அக்கறை கொள்ள வேண்டும் என்று நேரு சொன்னபோது கல்வெட்டுகளின் மொழி அவருக்குக் கைகூடியிருந்தது. நேரு அசோகரோடு தன்னை இணைத்து கற்பனை செய்யத் தொடங்கியிருந்ததை இது காட்டுகிறது என்கிறார் பகவான் ஜோஷ். நேருவை அசோகரின் மறுபிறப்பாகப் பலர் பார்க்கத் தொடங்கினார்கள்.

வகுப்புவாத மோதல்கள் ஒரு தேசத்தை என்னவெல்லாம் செய்யும் என்பதைக் கண்கூடாகக் கண்டவர் என்பதால் வேற்றுமைகளை அசோகர் பாணியில் அணுகவும் அரவணைத்துக்கொள்ளவும் விரும்பினார் நேரு. அசோகர் பாறையிலும் தூணிலும் பொறித்திருந்ததை நேரு எழுத்திலும் பேச்சிலும் வெளிப்படுத்தத் தொடங்கினார். வேற்றுமை என்பது பலம், பலவீனமல்ல. அமைதி என்பது பலம், பலவீனமல்ல. யதார்த்தத்தை மாற்றும் ஆற்றல் கனவுக்கு உண்டு என்று வலியுறுத்தத் தொடங்கினார் நேரு.

சீனப் போர் (1962) அவர் கனவைக் குலைத்தது. அசோகர் சந்தித்த அதே விமரிசனம் நேருவுக்கும் திருப்பிடவிடப்பட்டது. அமைதி, அகிம்சை என்று நேரு இந்தியாவைப் பலவீனப்படுத்திவிட்டார். வலுகுன்றிய தேசமாக இந்தியா மாறிவிட்டது. நேரு ஒரு தோல்வியாளர் என்று எல்லா மூலைகளிலிருந்தும் தாக்கப்பட்டார். நேருவேகூட குலைந்துதான் போனார். வேற்றுமையில் ஒற்றுமை, மதச்சார்பின்மை, சிறுபான்மை நலன் என்று அசோகரிடமிருந்து அவர் திரட்டிக்கொண்டு செழுமைப்படுத்திய கோட்பாடுகளும்கூட தாக்குதல்களிலிருந்து தப்பவில்லை.

அசோகருக்குப் பின் வந்தவர்கள் அசோகரைக் கைவிட்டதைப் போல் நேருவுக்குப் பின் வந்தவர்கள் நேருவைக் கைவிட்டனர். பெரும்பான்மை மதம் மேலதிகத் தீவிரத்தோடு முன்னெடுக்கப்பட்டது. இந்தியாவின் ‘வலிமை’யைக் கூட்ட வேண்டும் எனும் முழக்கத்தோடு ஆயுதத் தளவாடங்கள் அதிகரிக்கப்பட்டன. போர் ஏற்கத்தக்கதாக மாறியது. பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றிகள் மகத்தான சாதனைகளாகக் கொண்டாடப்பட்டன. அணு ஆயுதப் பரிசோதனை ‘வெற்றிகரமாக’ நடத்தி முடிக்கப்பட்டது. இன்று, அசோகரின் சின்னம் போர் விமானங்களிலும் ஏவுகணைகளிலும்கூட இடம்பிடித்துவிட்டன என்கிறார் பகவான் ஜோஷ்.

நம் காலம் அசோகரை வாசிக்கவில்லை என்பதற்கான அவர் சோர்ந்துவிடமாட்டார். அடுத்த தலைமுறையோடு பேசுவதற்கு அவர் காத்துக்கொண்டிருக்கிறார்.

இன்று அசோகரை வாசிக்கும்போது அவர் சொற்கள் விவரிக்கவொண்ணா வியப்பை நமக்கு ஏற்படுத்துவதற்குக் காரணம் அவர் மட்டுமல்ல, நாமும்தான். அவருடைய கனவு வெகு தொலைவில் மறைந்துவிட்டது போல் இன்று நமக்குத் தோன்றுகிறது என்றால் அதற்குக் காரணம் இன்று நாம் வாழும் சூழல். ஒரு நவீன, ஜனநாயக நாட்டில் வசிக்கும் நாம் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு இங்கே வாழ்ந்து மறைந்த ஒருவரை ஏக்கத்தோடு நினைத்துக்கொள்கிறோம் என்றால் நம் காலம் அந்த அளவுக்கு மாசடைந்திருக்கிறது, அந்த அளவுக்குத் திரிந்து போயிருக்கிறது, அந்த அளவுக்கு வீழ்ச்சியைச் சந்தித்திருக்கிறது என்று பொருள்.

உயிர்த்தெழும் கனவு

அவநம்பிக்கையோடு நிறைவு செய்வதை அசோகர் விரும்பமாட்டார்.

நம் காலம் அவரை வாசிக்கவில்லை என்பதற்கான அவர் சோர்ந்துவிடமாட்டார். அடுத்த தலைமுறையோடு பேசுவதற்கு அவர் காத்துக்கொண்டிருக்கிறார். அவர்களும் நம்மைப் போல் கைவிட்டுவிட்டுவிட்டால், அவர்களுக்குப் பிறகு வரும் பேரன், பேத்திகளோடு அவர் உரையாடலைத் தொடர்வார். அவர்களில் யாரேனும் ஒருவருக்குள் அசோகரின் சொற்கள் இறங்கி, கலக்கலாம். அப்போது அவர் அசோகரின் மொழியில் பேசத் தொடங்கலாம். அவ்வாறு செய்யும்போது அசோகரின் கனவு மீண்டும் வளரத் தொடங்கும்.

அவர் கனவு மானுடப்பொதுவானது என்பதால் மொழி, நிறம், இனம், சாதி, சமயம், தேசம், பாலினம் என்று எந்த எல்லைக்கோட்டுக்கும் அது அடங்கப்போவதில்லை. காலத்தின் கரங்களாலும் அதை அநேகமாகத் தடுத்து நிறுத்த முடியாது. பிளவுகள் கூர்மையடையும்போது, வேறுபாடுகள் ஒன்றையொன்றை எதிர்த்து சமர் புரியும்போது, பெரும்பான்மைவாதம் பலம்பெறும்போது மனித மனம் அமைதியையும் ஒற்றுமையையும் நாடுவது இயற்கை. அந்த இயற்கையின் ஒரு பகுதியாக அசோகரின் கனவு உயிர்த்திருக்கும்.

அவர் கனவு வேண்டுமானால் அசாதாரணமானதாக இருக்கலாம். அசோகர் ஒரு சாமானியர்தான். ‘அவரை நாம் கடவுளாக மாற்ற வேண்டியதில்லை’ என்கிறார் ரொமிலா தாப்பர். அசோகரையும் அவர் பணிகளையும் புரிந்துகொள்ள வேண்டுமானால் நிறைகுறைகளோடு வாழ்ந்து மடிந்த ஒரு வரலாற்று மனிதராக அவரை நாம் அணுக வேண்டும். அதைத்தான் அவரும் விரும்புவார்.

முதலாம் தனிப்பாறைக் கல்வெட்டின் வாசகங்கள்.

‘எல்லோரும் என் குழந்தைகள். என் குழந்தைகள் எப்படி இருக்க வேண்டும் என்று விரும்புவேனோ, அவர்கள் எவ்வளவு நலத்தோடும் வளத்தோடும் இருக்க வேண்டும் என்று விரும்புவேனோ அவ்வறே எல்லா மனிதர்களும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். என் விருப்பம் எவ்வளவு தீவிரமானது என்பதை உங்களால் புரிந்துகொள்ள முடியாது!’

(முற்றும்)

ஆதாரங்கள்:

1. Revenge & Reconciliation : Understanding South Asian History, Rajmohan Gandhi, Penguin

2. Ashoka in Ancient India, Nayanjot Lahiri, Harvard University Press

3. Ashoka and the Decline of the Mauryas, Romila Thapar, 3rd Edition, Oxford University Press, 2018

4. Ashoka and His Inscriptions, B.M. Barua, New Age Publishers Ltd.

மருதன், எழுத்தாளர். ‘ரொமிலா தாப்பர்: ஓர் அறிமுகம்’, ‘ஹிட்லர்’, ‘ஹிட்லரின் வதைமுகாம்கள்’, ‘அகதிகள்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: marudhan@gmail.com

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in