அசோகர்- 21: சகிப்புத்தன்மையும் அதற்கு அப்பாலும்

அசோகர்- 21: சகிப்புத்தன்மையும் அதற்கு அப்பாலும்

எல்லோரும் எல்லா இடங்களிலும் வாழ வேண்டும் என்பதை டி.டி.கோசாம்பி வேறொரு கோணத்திலிருந்து அணுகுகிறார். மக்கள் மட்டுமல்ல, அவர்களை வழிநடத்தும் சமயத் தலைவர்களும் தத்துவவாதிகளும்கூட அப்போது பிளவுண்டே இருந்தனர். ஒரு சமயம் செல்வாக்கு பெற்றிருக்கும் பகுதியில் மாற்று சமயத் தலைவர்கள் செல்லத் தயங்கினர். மீறிச் செல்பவர்கள் எதிர்க்கப்பட்டனர். எனவே நத்தை போல் ஒவ்வொருவரும் அவரவர் இடத்தில் சுருங்கிக்கொள்ள வேண்டியிருந்தது. இந்தக் கட்டுப்பாட்டை அசோகர் அகற்ற விரும்பினார்.

எவரும் எப்பகுதிக்கும் செல்லலாம், பிரச்சாரம் மேற்கொள்ளலாம், மக்களின் நம்பிக்கையை மாற்றியமைக்கலாம். அவ்வாறு செய்வதற்கான உரிமை எல்லாச் சமயத் தலைவர்களுக்கும் உள்ளது. அவர்களைத் தடுத்து நிறுத்தும் அதிகாரம் யாருக்கும் இல்லை. இதுதான் அசோகர் தெரிவிக்க விரும்பிய செய்தி என்கிறார் கோசாம்பி. வேலிகள் அகற்றப்படும்போது சிந்தனைகள் தடையின்றி பரவும். ஒரு சமயம் இன்னொன்றோடு உரையாடும். ஒரு கோட்பாடு இன்னொன்றிடமிருந்து பெற்றுக்கொள்ளும். ஒரு நம்பிக்கை மற்றொன்றோடு ஒன்று கலக்கும். கலப்பு பகையை முடிவுக்குக் கொண்டுவரும்; உறவை வளர்க்கும். தனித்து வாழும் இனக்குழு வழக்கத்திலிருந்து விடுபட்டு ஒன்று கலந்து வாழ வேண்டியது வரலாற்றுத் தேவை. இது தவிர்க்கவியலாததும்கூட. எதிர்கால உலகம் பண்பாடுகளின் கலப்பாகவே இருக்கப்போகிறது என்பதை அசோகர் உணர்ந்திருக்க வேண்டும். அதற்கான முன்தயாரிப்புதான் ‘அனைவரும் அனைவரோடும்’ என்கிறார் ராஜீவ் பார்கவா.

பிளவுகளையும் வேறுபாடுகளையும் போக்குவதற்கு அசோகர் தம்மத்தை முன்மொழிந்தது ஒரு முக்கியமான திருப்பம் என்கிறார் பார்கவா. அவருக்கு முன்பு வரை தம்மம் தனிநபர் சார்ந்த அறமாக மட்டுமே இருந்தது. தனி மனித விடுதலைக்கான மார்க்கமாகவே தம்மத்தை பிக்குகள் பரிந்துரைத்து வந்தனர். அசோகரும் தனி மனித விடுதலையிலிருந்துதான் தொடங்கினார் என்றாலும் அந்த இடத்தில் நிறுத்திக்கொள்ளாமல் சமூக விடுதலைக்கும் தம்மத்தை நீட்டித்துச் சென்றார். தனி மனித ஒழுக்கத்துக்கான தம்மத்தைச் சமூக ஒழுக்கத்துக்கான தம்மமாக அவர் விரித்தார். உள்ளுக்குள் இருக்கும் பிளவுகளை மட்டுமல்ல, சமூகப் பிளவுகளையும் தம்மத்தால் சரிசெய்ய முடியும் என்றும் சமூக நல்லிணக்கத்துக்கான கருவியாக தம்மத்தை வளர்த்தெடுக்க முடியும் என்றும் அவர் நம்பினார்.

வேறுபாடுகளோடு இணைந்து வாழ்வதற்கு என்ன செய்ய வேண்டும்? ஒவ்வொரு சமயமும் பிற சமயங்களுக்கு நெகிழ்ந்துகொடுக்க வேண்டும். ஒவ்வொரு சமயமும் இன்னொன்றுக்கு இடம் ஒதுக்கிக்கொடுக்க வேண்டும் என்கிறார் அசோகர். வேதம் என்ன சொல்கிறது என்பதை பவுத்தர்களும் சமணர்களும் ஆசீவகர்களும் காதுகொடுத்துக் கேட்க வேண்டும். பவுத்தம் ஏன் நம்மோடு முரண்படுகிறது என்பதை பிராமணர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். பிராமணர்கள் சடங்குகளில் திளைக்கிறார்கள். நன்றாகத் திளைக்கட்டும். பவுத்தமும் சமணமும் வேதச் சடங்குகளை நிராகரிக்கின்றன. நன்றாக நிராகரிக்கட்டும். எங்கள் சடங்குகள் விமரிசனத்துக்கு அப்பாற்பட்டவை என்று பிராமணர்கள் கருத வேண்டியதில்லை. சடங்குகளை எங்கள் பகுதியில் அனுமதிக்க முடியாது என்று பிராமணர்களும் சமணர்களும் போர்க்கொடி உயர்த்த வேண்டியதில்லை.

வேதமென்று இருந்தால் வேத மறுப்பும் இருக்கும் என்பதை பிராமணர்கள் ஏற்றுக்கொள்ளட்டும். சடங்கு மறுப்பு என்றொரு கொள்கை இருக்குமானால் சடங்கு என்றொன்றும் இருக்கும் என்பதை சிரமணர்கள் உணரட்டும். சடங்குகளின்மூலம் பலம் பெற முடியும் என்று நீங்கள் நம்ப வேண்டாம். ஆனால் அவ்வாறு நம்புபவர்கள் இருப்பார்கள் என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள். குடும்ப வாழ்வே உயர்ந்தது என்று ஒரு பிரிவு சொல்லட்டும். துறவுதான் மேன்மையானது என்று இன்னொருவர் சொல்லட்டும். குடும்ப வாழ்வைத் துறவிகளும் துறவு வாழ்வைக் குடும்பத்தினரும் எதிர்க்காமல் இருந்தால் போதும். சிரமணர்களின் சிந்தனைகளை, வாழ்க்கை முறைகளை பிராமணர்களும் பிராமணர்களின் சிந்தனைகளை, வாழ்க்கை முறையை சிரமணர்களும் புரிந்துகொள்ள வேண்டும். பகை விலகுவதற்கான முதல் நிபந்தனை, புரிதல். இதுதான் அசோகரின் அணுகுமுறை.

புத்தரின் பிரியத்துக்குரிய என்றல்ல, ‘கடவுள்களின்’ பிரியத்துக்குரியவர் என்றே அவர் தன்னை அழைத்துக்கொண்டார். சடங்குகளிலிருந்து வெளியில் வந்தவர், மற்றவர்களும் அவ்வாறே வெளியில் வர வேண்டும் என்று விரும்பியவர். இருந்தாலும் சில சடங்குகள் தேவையானவை என்பதை அவர் ஏற்றுக்கொண்டார். தம்மம், தத்துவம், உண்மை என்று முழுக்கவும் அறிவுபூர்வமான தளத்தில் மட்டும் ஒரு சமூகம் ஈடுபடுவது சாத்தியமற்றது. எளிய மக்களின் அன்றாட வாழ்விலிருந்து சடங்குகளைப் பிரித்தெடுப்பது சாத்தியமில்லை என்பதை அவர் உணர்ந்திருந்தார். வலுக்கட்டாயமாக மக்களின் சிந்தனைகளை, வாழ்க்கைமுறையை மாற்றியமைக்க முடியும் என்று நம்ப அவர் தயாராக இல்லை. எனவே இயன்றவரை எல்லாக் கல்வெட்டுகளிலும் தான் விரும்பும் தம்மத்தோடு மக்கள் விரும்பி, ஏற்றுக்கொண்ட வழக்கங்களை, நம்பிக்கைகளைக் கூடுமானவரை இணைத்துக்கொண்டார். ஆத்திகமும் நாத்திகமும், நகரமும் கிராமமும், சிந்தனையும் சடங்கும், அறிவும் உணர்ச்சியும், யதார்த்தமும் கனவும் எதிரெதிர் அல்லது தனித்தனி வளையங்களுக்குள் அடைபட்டுக் கிடக்க வேண்டியதில்லை. ஒன்று இன்னொன்றைத் தாழ்வாகக் கருத வேண்டியதில்லை. ஒன்றை இன்னொன்றோடு ஒப்பிட்டு எது மேல், எது கீழ் என்று தீர்ப்பெழுத வேண்டியதில்லை. எல்லாம் எல்லா இடங்களிலும் ஒன்றுகலக்கலாம். ஒன்றுகலக்க வேண்டும் என்றார் அசோகர்.

உடலைத் தாக்குவது மட்டுமல்ல; சொற்கள்மூலம் ஒருவர் மனதைத் தாக்குவதும் வன்முறைதான். எந்தப் பிரிவினவருக்கு எதிராகவும் வெறுப்புப் பேச்சை வளர்க்காமல் இருப்பதும், ஊக்குவிக்காமல் இருப்பதும் முக்கியம் என்று கருதியதால்தான் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தும் அதே கல்வெட்டில் நாவடக்கத்தையும் கொண்டுவந்தார் அசோகர். மாற்றுக் கருத்து கொண்டவர்களை இகழ்வது, சாபமிடுவது, வசை பாடுவது, குத்திக் காட்டுவது, தரம் தாழ்த்துவது, அவமானப்படுத்துவது என்று பலவிதங்களில் சொற்களைக் கொண்டு மற்றவர்களைக் காயப்படுத்த முடியும் என்பதை மறந்துவிடாதீர்கள். சொற்களின் விளைவுகளைச் சிந்தித்துப் பார்த்து சுயதணிக்கை செய்துகொள்ளுங்கள் என்கிறார் அசோகர்.

இன்னொரு ஆச்சரியமூட்டும் வேண்டுகோளும் அசோகரிடமிருந்து வருகிறது. ‘தன் சமயத்தைப் புகழ்ந்துகொள்வதையும் மற்றவர்களுடைய சமயங்கள்மீது பழி சுமத்துவதையும் ஒருவர் செய்யக் கூடாது’ என்று 12-ம் பெரும்பாறைக் கல்வெட்டில் கேட்டுக்கொள்கிறார் அசோகர். என் சமயம் உயர்ந்தது என்பதிலிருந்துதானே பிற சமயங்கள் தாழ்வானவை என்னும் கருத்துக்கு நான் வந்து சேர்கிறேன். உங்கள் கோட்பாடுகளும் நம்பிக்கைகளும் கீழானவை என்பதன் பொருள்

என் கோட்பாடும் நம்பிக்கையும் மேலானது என்பதுதானே? உயர்வு என்றொன்று இருப்பதால்தானே தாழ்வு தோன்றுகிறது? சுய சமயப் பற்றுதான் பிற சமய வெறுப்பாகவும் வெளிப்படுகிறது. தற்பெருமை இகழ்ச்சியில் வந்து முடிகிறது. சடங்குகளற்றது என் வாழ்க்கைமுறை என்று ஒரு சிரமணர் தன்னைப் புகழ்ந்துகொள்ளும்போது, சடங்குகளில் ஈடுபடுவரை அவர் தன்னோடு ஒப்பிட்டு இகழ்கிறார். வேதம் உயர்ந்தது, நான் வேதத் தேர்ச்சி பெற்றவன் என்னும் அகந்தையே மரபுகளைக் கேள்வி கேட்பவர்கள்மீது பகைகொள்ளச் செய்கிறது. இகழ்தல் போல் புகழ்தலுக்கும் உன் நாவைப் பயன்படுத்தாதே என்கிறார் அசோகர்.

இதை அவர் பவுத்தத்துக்கும் சேர்த்தே சொல்கிறார் என்பதை மறந்துவிடக் கூடாது. மன்னரின் மதம்தான் எங்களுடையதும் எனும் பெருமித உணர்வை பிக்குகளுக்கு அவர் இதன்மூலம் மறுக்கிறார். பிற சமயங்களைக் காட்டிலும் மேலானதாக பவுத்தத்தை நிறுவ வேண்டாம் என்று ஒரு பவுத்தராக அசோகர் தன் சமயத்தினரிடம் கேட்டுக்கொள்கிறார். பிராமணப் பெருமிதம் வேண்டாம். பவுத்தப் பெருமிதம் வேண்டாம். துறவுதான் மேலானது என்று சொல்ல வேண்டாம். குடும்ப வாழ்வே உயர்ந்தது என்று பீற்றிக்கொள்ள வேண்டாம். புகழ்வதை நிறுத்தினால் இகழ்வதும் நிற்கும்.

இரண்டுமே அறமல்ல என்பதால்தான் புகழ்ச்சி, இகழ்ச்சி இரண்டையும் ஒரே தளத்தில் அசோகர் கொண்டுவந்து நிறுத்துகிறார். ஒரு சமயத்தின்மீது நாம் பற்று வைத்திருக்கும்போது நம்மால் நடுநிலையோடு இன்னொரு சமயத்தை அணுக இயலாமல் போகிறது. இந்த இயலாமைதான் இகழ்ச்சியாக வெளிப்படுகிறது. நாம் எந்தச் சமயத்தைச் சார்ந்திருக்கிறோமா அதையும் நம்மால் நடுநிலையோடு அணுக முடிவதில்லை. காரணம் சுய சமயப் பற்று நம்மைச் சிந்திக்கவிடாமல் தடுத்துவிடுகிறது. சமயப் பற்று எனும் நாணயத்தின் இன்னொரு பக்கம்தான் சமயக் காழ்ப்பு. ஒன்றில்லாமல் இன்னொன்று இருப்பதில்லை என்கிறார் அசோகர்.

இகழ்ச்சியைக் கைவிடுவதைக் காட்டிலும் சவாலானது புகழ்ச்சியைக் கைவிடுவது. உங்கள் சமயத்தை உயர்த்திச் சொல்ல வேண்டிய அவசியம் உங்களுக்கு நேரலாம். சூழலால் உந்தப்பட்டு பெருமை பாட ஆரம்பித்துவிடாதீர்கள், பொறுமையாக இருங்கள் என்கிறார் அசோகர். ‘அப்படியே சில காரணங்களால் உங்கள் சமயத்தை உயர்த்திச் சொல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டால், அப்போது உங்கள் சமயத்தோடு சேர்த்து பிற சமயங்களையும் உயர்த்திப் பேசுங்கள்’ என்கிறார் அசோகர். இதன்படி, பவுத்தத்தின் சிறப்புகளைப் பேசியே தீ ரவேண்டிய நிலை ஒரு பிக்குவுக்கு ஏற்படுமானால் அவர் புத்தரோடு வேதக் கடவுள்களையும் சேர்த்துப் பேச வேண்டும். ஒரு பிராமணர் வேத கடவுள்களோடு புத்தரையும் மகாவீரரையும் இன்னபிறரையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்வது கடினம் என்று அவர் கருதினால், தற்புகழ்ச்சியை மொத்தமாகக் கைவிட்டுவிடலாம். இல்லை, அனைத்துச் சமயங்களையும் உள்ளடக்கிப் பேசுகிறேன் என்று ஒருவர் துணிவாரானால் அவர் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய செய்தி ஒன்றுண்டு. ‘எந்தவொரு சமயத்தையும் கூடுதல் குறைச்சலின்றிப் புகழுங்கள்.’

இதையெல்லாம் செய்யத் தவறினால் என்ன ஆகும் என்பதையும் அசோகர் விவரிக்கிறார். தன் சமயத்தை மட்டும் புகழ்ந்து பிறவற்றை இகழ்பவர், தன் சமயத்தைச் சிறப்பாகக் காட்டுவதற்காகப் பிறவற்றைத் தாழ்த்தியும் தாக்கியும் பேசுபவர், ‘தன் சமயத்துக்கு மிகப் பெரும் அழிவை ஏற்படுத்துகிறார்’ என்கிறார் அசோகர். மற்றவர்களின் குறைகளிலிருந்துதான் உங்கள் சமயத்தின் நிறையை நீங்கள் வாதிட்டு நிறுவ முடியுமென்றால் அப்படியொரு வாதத்தை நீங்கள் முன்னெடுக்க வேண்டிய அவசியமே இல்லை. சிரமணர்களைத் தூற்றுவதன்மூலம் வேதமரபை உயர்த்திவிடலாம் என்று ஒரு பிராமணர் கருதினால் அவர் சிரமணர்களின் நம்பிக்கையை அல்ல, தன் சமயத்தைத்தான் காயப்படுத்துகிறார். மற்றவர்களுக்காகக்கூட இல்லை; உங்கள் சமயம் முக்கியம் என்று நீங்கள் கருதினால், உங்கள் கடவுள்களை நீங்கள் மதித்தால், உங்கள் நம்பிக்கைகள் தழைக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், நாவை அடக்குங்கள் என்று நுட்பமாக வாதிடுகிறார் அசோகர்.

பேசுவதற்கு மாற்று என்ன? கேட்பது என்கிறார் அசோகர். ‘எல்லாப் பிரிவினரும் மற்ற பிரிவுகளின் தம்மத்தைக் கேட்டறிந்துகொள்ள வேண்டும். அவற்றின் உண்மையான சாரத்தை அறிந்துகொள்ள வேண்டும்.’ உங்கள் சமயம் குறித்து எவ்வாறு ஆர்வத்தோடு அறிந்துகொண்டீர்களோ அதே போல் பிற சமயங்களையும் அறிந்துகொள்ளுங்கள். அவர்களுடைய கோட்பாடு என்னவென்று கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். அவர்கள் நம்பிக்கை என்னவென்று கேளுங்கள். அவர்கள் ஆன்மாவை ஏற்கிறார்களா, நிராகரிக்கிறார்களா? கடவுள்தான் அனைத்தையும் தீர்மானிக்கிறார் என்கிறார்களா அல்லது கர்மவினையே அனைத்தையும் இயக்குகிறது என்கிறார்களா? அவர்களுடைய வழிபாட்டுமுறை என்ன? அவர்களுடைய சமயத் தலைவர்கள் எவ்வாறு பேசுகிறார்கள்? பேசுபவர்கள் அனைவரும் கேட்பவர்களாக மாறுங்கள். நிறைய கற்றுக்கொள்வீர்கள் என்கிறார் அசோகர். திறந்த மனதோடு எல்லாச் சமயங்களின் சாரத்தையும் உங்களால் உள்வாங்கிக்கொள்ள முடியுமென்றால் அதன்பின் நீங்கள் இயல்பாகவே தற்புகழ்ச்சியையும் பிற சமயக் காழ்ப்பையும் கைவிட்டுவிடுவீர்கள்.

புத்தர் தம்மத்தைப் போதித்தார். பிராமணர்களுக்குத் தர்மம் இருக்கிறது. சமணம், ஆசீவகம், சார்வாகம் என்று எல்லாப் பிரிவினரும் ஏதோ ஒரு வகையான தர்மத்தைப் பின்பற்றுகிறார்கள், மதிக்கிறார்கள். அவர்களுடைய தர்மங்களையெல்லாம் நாமும் கற்றுக்கொள்வோம் என்கிறார் அசோகர். பிற சமயங்களை நெருங்கிச் சென்று நீங்கள் அறிந்துகொண்டால் அதன்பின் அவர்களோடு பகை பாராட்டமாட்டீர்கள். அது அவர்களுக்கு நன்மை அளிக்கும். பிற நம்பிக்கைகளைத் தெரிந்துகொண்டால் உங்கள் நம்பிக்கை பலம்பெறும். அது உங்கள் சமயத்துக்கும் நன்மையையே அளிக்கும். புரிதல் பெருகி, பகை மறையும்போது தம்மம் தவிர்க்கவியலாபடி எங்கும் பரவத் தொடங்கிவிடும். இதுதான் அசோகரின் எதிர்பார்ப்பு.

தன் சமயத்தை மட்டுமல்ல, எல்லாச் சமயங்களையும் காக்க விரும்பியிருக்கிறார் அசோகர். தன் சமயத்தின் நலனையல்ல, எல்லாச் சமயங்களின் நலன்கள்மீதும் சம அளவில் அக்கறை செலுத்தியிருக்கிறார். அதையே மற்றவர்களும் பின்பற்றவேண்டும் என்று விரும்பியிருக்கிறார். சமயத் தூய்மையையல்ல, சமயக் கலப்பை முன்மொழிகிறார். சமயக் கோட்பாடுகள் கொண்டும் கொடுத்தும் உறவுகொள்ள வேண்டும் என்கிறார். சமூக நல்லிணக்கத்தைத் தனது இலக்காக வரித்துக்கொண்டிருக்கிறார். சிந்தனைகள் தடையற்றுப் பரவ வேண்டும். கருத்து போல் மாற்றுக் கருத்துகளும் விவாதிக்கப்பட வேண்டும் என்கிறார். தன் கொள்கையை ஒருவர் எங்கும் எடுத்துச் சென்று பரப்பலாம். ஆனால் அப்படிப் பரப்பும்போது எதைப் பேச வேண்டும், எதைப் பேசக் கூடாது என்று வரையறை செய்கிறார். ஒருவரும் அவர் நம்பிக்கை காரணமாக சொல்லாலோ செயலாலோ தாக்கப்படக் கூடாது என்கிறார். அதிகாரத்தில் உள்ள மதம் அதிகாரமற்ற மதத்துக்குச் சமமாக அங்கீகரிக்கப்பட வேண்டும். பெரும்பான்மை மதம் எந்த விதத்திலும் சிறுபான்மை மதத்தைவிட உயர்ந்தது அல்ல என்று வலியுறுத்துகிறார். பகையை, வன்முறையை, வெறுப்புக் குற்றங்களை ஒழித்து சமூக நல்லிணக்கத்தை அடைவது குறித்து கனவு காண்கிறார்.

அசோகர் கண்ட கனவுகளில் மிகவும் அசாதாரணமான கனவென்று இதனை அழைக்க முடியும். இரண்டாயிரத்துச் சொச்சம் ஆண்டுகளுக்குப் பிறகும் நிலைமை பெரிதாக மாறிவிடவில்லை என்பதைக் கணக்கில் கொண்டு அவர் கல்வெட்டுகளை மறுவாசிப்பு செய்யும்போது பண்டைய இந்தியாவில் வாழ்ந்த ஒரு அதி நவீன மனிதராகவே அசோகர் நமக்கு வெளிப்படுகிறார். தன் காலத்து பூசல்களிலிருந்தும் முரண்பாடுகளிலிருந்தும் மயக்கங்களிலிருந்தும் விடுபடுவதற்கான ஆற்றல் அவரிடம் இருந்தது. அந்த ஆற்றலை அவர் தன் மக்களோடும் பகிர்ந்துகொள்ள விரும்பினார். நம்மைப் பிடித்திழுக்கும் தளைகளிலிருந்து நாம் அனைவரும் ஒரு சமூகமாக, ஒரே சமூகமாக கைகோர்த்து ஒன்றுபோல் விடுபடுவோம் என்று முழங்குகிறார் அசோகர். ஒரே கனவை நாம் அனைவரும் பகிர்ந்துகொள்ளும்போதுதான் ஒவ்வொருவருக்கும் மீட்சி சாத்தியப்படும் என்கிறார் அசோகர்.

இன்று நாம் பேசிக்கொண்டிருக்கும் மத சகிப்புத்தன்மையின் ஆதிவடிவத்தை அசோகரின் குரலில் தெளிவாக அடையாளம் காண முடிகிறது என்கிறார் நயன்ஜோத் லாஹிரி. அசோகரின் குரல் என்பது சகிப்புத்தன்மையின் குரல் என்கிறார் ரொமிலா தாப்பர். அசோகர் முன்மொழிந்த சகிப்புத்தன்மை நவீனமானது மட்டுமல்ல தனித்துவமானதும்கூட என்கிறார் ராஜீவ் பார்கவா. மூன்று வகையான சகிப்புத்தன்மையை வரலாற்றில் காண்கிறோம். செல்வாக்கும் பலமும் மிக்க ஒரு பெரிய மதம் தனக்கருகில் வாழும் சிறிய மதத்தைத் தொடர்ந்து வாழ அனுமதிப்பது முதல் வகை சகிப்புத்தன்மை. பெரிய மதம் நினைத்தால் எப்போது வேண்டுமானாலும் சிறிய மதத்தின் சுதந்தரத்தைத் தடுக்கலாம். எப்போது வேண்டுமானாலும் சிறிய மதத்தின் நம்பிக்கைக்குள், சடங்குக்குள் தலையிடலாம். ஆனால் அவ்வாறு செய்யாமல் சிறிய மதத்தை அது சகித்துக்கொள்கிறது. எனவே அமைதி நிலவுகிறது.

இரு பெரும் மதங்கள் அருகருகில் வாழ்கின்றன. இரண்டும் சம பலம் கொண்டவை. இரண்டும் ஒன்றுக்கொன்று எதிரானவை. இருந்தாலும் ஒன்று இன்னொன்றைச் சீண்டாமல் ஒதுங்கி நிற்கிறது. இரண்டும் ஒன்றையொன்று சகித்துக்கொள்கின்றன. இது இரண்டாவது வகை சகிப்புத்தன்மை. மூன்றாவது வகை சகிப்புத்தன்மை, வாழு, வாழ விடு. உன் மதத்தை நான் வெறுக்கிறேன். உன் சடங்குகளும் கோட்பாடுகளும் ஏற்கவே இயலாதவை. ஆனாலும் நான் உன்னோடு மோதிக்கொண்டிருக்க விரும்பவில்லை. என் நேரத்தையோ செல்வத்தையோ உன்னோடு மோதி வீணாக்க நான் தயாராக இல்லை. என் வழியில் குறுக்கிடாதவரை, என்னோடு மோதாதவரை உன்னைச் சகித்துக்கொள்வேன்.

முதல் எடுத்துக்காட்டில், பெரிய மதம் சிறிய மதத்தைக் கருணையோடு நடத்துகிறது. எனவே மத மோதல் தவிர்க்கப்படுகிறது. இரண்டாவதிலும் மோதல் நிகழ்வதில்லை. ஏனென்றால் சமபலம் கொண்ட இரு மதங்களும் ஒன்றையொன்று கண்டு அஞ்சுகின்றன. மோதல் வெடித்தால் அது இருவரையும் பாதிக்கும் என்பதை இரு தரப்பும் உணர்ந்திருக்கின்றன. மூன்றாவது வகையில் இருவரும் ஒருவரையொருவர் வெறுக்கின்றனர் என்றாலும் சண்டையிடும் ஆர்வம் இருவருக்கும் இல்லை. எனவே அமைதி நீடிக்கிறது. அசோகரின் அணுகுமுறை இந்த மூன்றும் அல்ல என்கிறார் பார்கவா.

அசோகரின் சகிப்புத்தன்மையை அவ்வாறு பெயரிட்டு அழைப்பதேகூடச் சரியாக இருக்காது. ஏனென்றால் அவர் மாற்று சமயத்தினரைச் சகித்துக்கொள்ளவே சொல்லவில்லை என்கிறார் பார்கவா. பெரிய மதத்தோடு மோதாதே, அது உன்னை அழித்துவிடும் என்று அவர் சிறிய மதத்துக்கு அறிவுரை சொல்லவில்லை. சிறிய மதம் பாவம், அதை விட்டுவிடு என்று அவர் பெரிய மதத்தை விட்டுக்கொடுக்கச் சொல்லவில்லை. நீங்கள் இருவரும் சண்டையிட்டால் இருவரும்தான் அழிவீர்கள், எனவே அமைதியாக இருங்கள் என்று யாரிடமும் எச்சரிக்கவும் இல்லை அவர்.

எல்லாச் சமயங்களும் சமமானவை என்பதால் எல்லாவற்றுக்கும் இங்கே இடமுண்டு, அதற்கான உரிமையும் உண்டு என்கிறார் அசோகர். வேற்றுமைகளை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று சொல்லவில்லை அசோகர். வேற்றுமையில் மட்டும்தான் முழுமையைக் காணமுடியும் என்கிறார் அவர். அச்சமும் கருணையும் தாற்காலிகமான அமைதியை மட்டுமே ஏற்படுத்தும் என்பது அவருக்குத் தெரியும். நீடித்த அமைதி வேண்டுமானால் மாற்று மதங்களை நீங்கள் வெறுமனே சகித்துக்கொள்ளக்கூடாது. அவற்றை விருப்பத்தோடு உங்களுக்குள் உள்வாங்கிக்கொள்ளவேண்டும் என்கிறார் அசோகர். நீயும் வாழ்ந்துகொள் என்று மேலிருந்து குனிந்து பார்த்து இன்னொரு மதத்திடம் சொல்லாதீர்கள். மேலிருந்து இறங்கி வந்து அவர்களோடு சமமாக உரையாடுங்கள். அப்போது இருவரும் ஒரே தளம், இருவருமே ஒரே உயரம் என்பது இருவருக்கும் புரியும் என்கிறார் அசோகர்.

மாற்று நம்பிக்கைகளும் இருக்கட்டும் என்று சொல்லாதீர்கள். எனக்கொரு நம்பிக்கை இருப்பது போல் என் அருகில் இருக்கும் மனிதனுக்கு இன்னொரு வகை நம்பிக்கை இருக்கிறது. அதை நான் எப்படி எதிர்க்கவேண்டியதில்லையோ அவ்வாறே அனுமதிக்கவும் வேண்டியதில்லை. என் அனுமதியும் எதிர்ப்பும் சார்ந்து அந்த நம்பிக்கை உயிர் வாழவில்லை என்பதை நான் உணர்கிறேன். அது ஒரு சுதந்தர உயிர். அவ்வாறு இருப்பதற்கான எல்லா உரிமைகளையும் எல்லா நியாயங்களையும் அது கொண்டிருக்கிறது. என்னுடைய மதம் எனக்கொரு பார்வையை அளிப்பதுபோல் அவர் மதம் அவருக்கொரு பார்வையை அளிக்கிறது. இன்னொருவருக்கு இன்னொரு பார்வை. இவையெல்லாம் துண்டு, துண்டாகச் சிதறிக் கிடக்க வேண்டியவை அல்ல. அவை தொகுக்கப்படவேண்டும். புரிந்துகொள்ளப்படவேண்டும். ஒன்றாக்கப்படவேண்டும். அப்போதுதான் முழுமையான தரிசனம் கிடைக்கும். வேற்றுமை இயல்பானது. நம் ஒவ்வொருவருக்கும் பலனளிக்கக்கூடியது. நம் ஒவ்வொருவரையும் நிறைவு செய்வது. இயற்கையானது. கடவுள்கள் அனைவருக்கும் விருப்பமானது. உயிர்கள் அனைத்துக்கும் பொதுவானது. எனவே அதுவே தம்மம்.

(விரியும்)

1) The Roots of Indian Pluralism : A reading of Asokan edicts, Rajeev Bhargava, Philosophy and Social Criticism, 2015

2) Ashoka in Ancient India, Nayanjot Lahiri, Harvard University Press

மருதன், எழுத்தாளர். ‘ரொமிலா தாப்பர்: ஓர் அறிமுகம்’, ‘ஹிட்லர்’, ‘ஹிட்லரின் வதைமுகாம்கள்’, ‘அகதிகள்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: marudhan@gmail.com

Related Stories

No stories found.