அசோகர்-19: தம்மம் பரப்புதல்

அசோகர்-19: தம்மம் பரப்புதல்

செய்திகளைக் கொண்டுசெல்வதற்கு வேண்டுமானால் எழுதுவதும் படித்துக் காட்டுவதும் பயன்படலாம். தம்மம் வெறுமனே தெரியப்படுத்த வேண்டிய மற்றுமொரு செய்தி கிடையாது என்பதால் அதைக் கடத்துவதற்கு நிச்சயம் இந்த இரு வழிகள் போதாது என்று கருதினார் அசோகர். மூன்றாவதாக ஒரு புதிய வழியையும் கண்டுபிடித்தார். அது - பயணம்!

யாத்திரை மேற்கொள்ளும் வழக்கம் மன்னர்களிடம் நீண்டகாலமாகவே இருந்து வருகிறது. ‘கடந்த காலங்களில் மன்னர்கள் உல்லாசப் பயணங்களில் ஈடுபட்டனர். இந்தப் பயணங்களில் வேட்டையாடுவதிலும் (இதே போன்ற) பிற உல்லாசங்களிலும் திளைத்தனர். மன்னர் தேவனாம்பிய பியதசி முடிசூடிய பத்தாம் ஆண்டு கடவுள் ஞானம் பெற்ற இடத்துக்குச் சென்றார்’ என்று 8-ம் பெரும்பாறைக் கல்வெட்டில் குறிப்பிடுகிறார் அசோகர். அசோகருக்கு முந்தைய மன்னர்கள் மேற்கொண்ட யாத்திரை ‘விஹார யாத்திரை’ என்று அழைக்கப்பட்டது. அநேகமாக பிந்துசாரர் வரை இந்த வகை யாத்திரையைத்தான் மன்னர்கள் அதிகம் மேற்கொண்டனர். அசோகருமேகூட கலிங்கத்துக்கு முன்புவரை இதைத் தொடர்ந்திருக்கலாம்.

ஆனால் கலிங்கப் போர் முடிந்து இரண்டாண்டுகளுக்குப் பிறகு அசோகர் மேற்கொண்ட முதல் யாத்திரையின் நோக்கம் தம்மத்தைக் கண்டடைவதாக இருந்தது. எனவே ‘தர்ம யாத்திரை’ என்று அது அழைக்கப்பட்டது. புத்தர் ஞானம் பெற்ற மகாபோதிக்கு, அவர் மறைந்து கிட்டத்தட்ட 300 ஆண்டுகளுக்குப் பிறகு அசோகர் சென்றிருப்பதை மேற்படி கல்வெட்டிலிருந்து அறிய முடிகிறது. அசோகரின் வாழ்வில் ஒரு முக்கியமான நிகழ்வு என்றாலும் மேலதிகத் தரவுகள் இல்லை.

8-ம் பெரும்பாறைக் கல்வெட்டு
8-ம் பெரும்பாறைக் கல்வெட்டு

முதல் பயணம் தம்மத்தை அறிமுகப்படுத்திக்கொள்வதற்காக என்றால் அதன்பிறகு அவர் மேற்கொண்ட பயணங்கள் யாவும் தம்மத்தைப் பரப்புவதை நோக்கமாகக் கொண்டிருந்தன. தன் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு அவ்வப்போது அவர் இத்தகைய யாத்திரைகள் மேற்கொண்டிருப்பதை அறிய முடிகிறது. இந்தத் தர்ம யாத்திரை எப்படிப்பட்டதாக இருந்தது என்பதை அசோகர் அதே கல்வெட்டில் பகிர்ந்துகொள்கிறார். ‘இதுபோன்ற பயணங்களில் கீழ்வரும் செயல்கள் நடைபெறும். சிரமணர்களையும் பிராமணர்களையும் சந்தித்து பரிசுகள் அளிக்கப்படும். பிக்குகளைச் சந்தித்து பரிசுகள் அளிக்கப்படும். முதியவர்களைச் சந்தித்து (தேவைப்படுபவர்களுக்கு உதவியாக) தங்கம் அளிக்கப்படும். நாட்டிலுள்ள மக்களைச் சந்தித்து அறத்தின் முக்கியத்துவம் எடுத்துச்சொல்லப்படும். கேள்விகள் எழுப்பி (தம்மம் குறித்து) விவாதங்கள் நடத்தப்படும்’ என்கிறார். இந்த வகை யாத்திரையை அசோகர் தன் பணிகளில் ஒன்றாகக் கருதியது போல் இருக்கிறது. ‘இது (யாத்திரை) ஓர் அன்றாட நிகழ்வாக, வாழ்வின் ஒரு பகுதியாகவே மாறிவிட்டது. மன்னர் தேவனாம்பிய பியதசி தன் வாழ்நாளின் எஞ்சிய காலத்தையும் (இதே போன்று) இவ்வாறே கழிப்பார்.’

தம்மத்தைத் தன்னுடைய தனிப்பட்ட பணிகளில் ஒன்றாக அசோகர் கருதியதுபோல் தெரியவில்லை. தன்னுடன் இருப்பவர்களும் தம்மத்தின் முக்கியத்துவத்தை உணர வேண்டும், தன்னைப் போலவே அவர்களும் தம்மத்தைக் கொண்டுசெல்லத் தொடங்க வேண்டும் என்று அவர் கருதியிருக்கிறார். முடிசூடி 12 ஆண்டுகளுக்குப் பிறகு (3-ம் பெரும்பாறைக் கல்வெட்டு) அசோகர் பின்வருமாறு அறிவிக்கிறார்.

‘என் கட்டுப்பாட்டில் இருக்கும் எல்லாப் பகுதிகளிலும் (நியமிக்கப்பட்டிருக்கும்) யுக்தா, ராஜுகா, பிரதேஷிகா (ஆகியோர்) ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை பயணம் மேற்கொள்ள வேண்டும். பயணத்தின் நோக்கங்களான தம்மத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பது, பிற பணிகளிலும் ஈடுபடுவது. தாய், தந்தையரிடம் கீழ்ப்படிவது, நண்பர்களோடும் உறவினர்களோடும் சுற்றத்தாரோடும் நல்ல முறையில் நடந்துகொள்வது, பிராமணர்களுக்கும் சிரமணர்களுக்கும் உதவி செய்வது ஆகியவை நன்மை பயக்கும். விலங்குகளைக் கொல்லாமல் இருப்பது, தேவையற்ற செலவுகளையும் உடைமைகளையும் குறைத்துக்கொள்வது நன்மை பயக்கும். (இந்த விதிகள்) கடைப்பிடிக்கப்படுவதை யுக்தாமூலம் மகாமாத்திரா உறுதிப்படுத்த வேண்டும்.’

மன்னரின் மதம் அரசு மதமாக மாறுவதுபோல் அசோகரின் அறம் அரசு அறமாக மாற்றப்படுவதை இங்கே காண்கிறோம். தன்னுடைய தனிப்பட்ட ஆர்வத்தை அரசின் ஆர்வமாக, தன்னுடைய கடமையை அரசின் கடமையாக அவர் மாற்றுகிறார். தம்மப் பணிகளுக்காக தகுந்த நிர்வாகிகளை நியமித்ததோடு அவர்களை மேற்பார்வை செய்ய ஓர் அதிகாரியையும் (மகாமாத்திரா) அதிகாரபூர்வமாக நியமிக்கிறார். வரி வசூல் போல், வேளாண்மை போல், எல்லைப் பாதுகாப்பு போல் தம்மம் ஒரு துறையாக வளர்த்தெடுக்கப்படுகிறது. வணிக விதிகள் சரியாகப் பின்பற்றப்படுகின்றனவா என்பதை உறுதி செய்வதுபோல் தம்மம் சரியாகக் கடைப்பிடிக்கப்படுகிறதா என்பதையும் ஓர் அலுவல் பணி போல் கருதி நிர்வாகிகள் உறுதி செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார் அசோகர். ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை அவர்கள் தம்ம யாத்திரை செல்ல வேண்டும் என்றும் ஆணையிடுகிறார். அசோகரின் தம்ம யாத்திரை நிர்வாகிகளின் தம்ம யாத்திரையாக நீட்டிக்கப்படுகிறது.

நிலத்தை விரிவுபடுத்த வேண்டிய அவசியம் அசோகருக்கு இல்லை. எல்லைக்குள்ளும் எல்லையைக் கடந்தும் தம்மத்தை விரிவுபடுத்த வேண்டிய அவசியத்தை அவர் உணர்ந்திருந்தார்.

செல்வந்தர்களை அசோகர் கடிந்துகொண்டதுபோல் தெரியவில்லை. ஆனால் அவர்கள் பொறுப்போடு மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறார். தேவைப்படுபவர்களை எப்படி நான் கண்டறிந்து வலியச் சென்று உதவுகிறேனோ அதேபோல் மற்றவர்களும் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். உங்கள் உடைமைகளை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்வதன்மூலம் குறைத்துக்கொள்ளுங்கள். உங்கள் செல்வத்தைத் தேவைப்படுவோருக்கு அளிப்பதன்மூலம் குறைத்துக்கொள்ளுங்கள். அவ்வாறு செய்யும்போது நீங்களும் தம்மத்தின் பாதையில் அடியெடுத்து நடக்கத் தொடங்குகிறீர்கள் என்று சொல்ல விரும்புகிறார் அசோகர். மக்களுக்கு மட்டுமல்ல தன் அதிகாரிகளுக்கும் சேர்த்தே அசோகர் இதைச் சொல்லியிருக்க வேண்டும் என்கிறார் நயன்ஜோத் லாஹிரி.

சிரமணர் (அ) சமணர்
சிரமணர் (அ) சமணர்

மற்ற அலுவல் பணிகள் போலன்றி தம்மம் கடினமான ஒரு துறை என்பதையும் அத்துறையில் வெற்றி பெறுவது அவர் கல்வெட்டுகள் செதுக்கிய மலையை நகர்த்துவதைவிடவும் கடினமானது என்பதையும் அசோகர் உணர்ந்திருந்ததால் உற்சாகமூட்டும் சில முழக்கங்களை அவர் முன்வைப்பது உண்டு. ‘கடந்த காலங்களில், பல நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக விலங்குகள் கொல்லப்படுவதும் உயிரினங்கள் வதைக்கப்படுவதும் உறவினர்களும் சிரமணர்களும் பிராமணர்களும் அவமரியாதை செய்யப்படுவதும் வழக்கமாக இருந்தது. இன்று தேவனாம்பிய பியதசி எல்லோரும் தம்மத்தை ஏற்குமாறு செய்திருக்கிறார்’ என்று (4-ம் பெரும்பாறைக் கல்வெட்டு) அசோகர் சொல்வதை உள்ளவாறே எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை.

தம்மம் தன்னுடைய பணியாக, தன் அரசின் பணியாக இருந்தால் மட்டும் போதாது. அது தன்னையும் தன் அரசையும் கடந்தும் நீடிக்க வேண்டும் எனும் விருப்பத்தையும் அதே கல்வெட்டில் வெளிப்படுத்துகிறார் அசோகர். ‘என்னுடைய குழந்தைகள், பேரக்குழந்தைகள், அவர்களுடைய குழந்தைகள் என்று அனைவரும் தம்மத்தைக் கடைபிடிப்பார்கள், உயர்த்திப் பிடிப்பார்கள்’ என்று கனவு காண்கிறார். எதிர்காலம் என்றால் எவ்வளவு காலம்? தம்மம் எப்போதுவரை தேவைப்படும்? அசோகர் அழுத்தமாகச் சொல்கிறார்: ‘உலகம் அழியும் வரை!’

தனது கனவை இவ்வளவு நீண்ட காலத்துக்கு வேறெவரும் வளர்த்தெடுத்துச் சென்றதாகத் தெரியவில்லை.

அசோகர் இன்னொன்றையும் முதல் முறையாகச் செய்தார். சமூகம் தம்மத்தைச் சரியாகப் பின்பற்றுகிறதா என்பதை மேற்பார்வை செய்வதற்கு மேலதிகாரி (மகாமாத்திரா) ஒருவரை நியமித்திருந்தார் என்று சற்றுமுன்பு பார்த்தோம். இந்த மேலதிகாரி தன்னுடைய பிற பணிகளோடு சேர்த்து தம்மத்தையும் மேற்பார்வையிட வேண்டும் என்பது அசோகரின் எதிர்பார்ப்பு. ஆனால் பல்வேறு பணிகளோடு தம்மத்தையும் நுழைத்தால் தம்மம் காணாமல்போய்விடும் என்பதை அவர் உணர்ந்திருக்க வேண்டும். எனவே ‘தம்ம மகாமாத்திரா’ என்றொரு பதவியைப் புதிதாக உருவாக்குகிறார் அசோகர்.

‘கடந்த காலங்களில் தம்ம மகாமாத்திரா இருந்ததில்லை. (முடிசூடிய) 13-ம் ஆண்டு நான் அவர்களை நியமித்திருக்கிறேன். எல்லோரிடமும் தம்மத்தைக் கொண்டுசென்று சேர்க்கும் பணியை அவர்கள் மேற்கொள்வார்கள்’ என்று 5ஆம் பெரும்பாறைக் கல்வெட்டில் தெரிவிக்கிறார் அசோகர். ‘அனைவரும்’ எனும் பிரிவுக்குள் யாரெல்லாம் வருகிறார்கள்? ‘யவனர்கள், காம்போஜர்கள் (காந்தாரத்துக்கு அருகிலுள்ள காம்போஜ நாட்டைச் சேர்ந்தவர்கள்), காந்தாரர்கள், ராஷ்டிரிகர்கள், பிதினிகர்கள் (கடைசி இருவரையும் அடையாளம் காண்பதில் குழப்பங்கள் நிலவுகின்றன) மற்றும் என்மீது நம்பிக்கை கொண்டிருக்கும் அனைவரும்’ என்கிறார் அசோகர். எந்தெந்த நிலத்தில் வாழ்பவர்களுக்குத் தம்மம் எடுத்துச்செல்லப்பட வேண்டும் என்று சொல்லி முடித்த அசோகர், எத்தகைய மனிதர்களுக்கெல்லாம் தம்மம் அவசியம் என்பதையும் சொல்கிறார். ‘பணியாளர்கள், பெரிய மனிதர்கள், பிராமணர்கள், செல்வந்தர்கள், ஏழைகள், வயதானவர்கள்’ ஆகியோரைச் சேர்த்துக்கொள்கிறார்.

இந்தப் பட்டியலில் முதல் முறையாக சிறைக் கைதிகளும் இடம்பெறுவதைப் பார்க்கிறோம். ‘கைதிகளின் நலன்கள் பேணப்பட வேண்டும். குழந்தைகள் இருப்பவர்கள், வலியால் அவதிப்படுபவர்கள், வயதானவர்கள் ஆகியோரை (சிறையிலிருந்து) விடுவிக்க வேண்டும்’ என்கிறார். வழக்கமான மேற்பார்வையாளர்களால் இப்படி ஒவ்வொருவரையும் பார்த்துப் பார்த்து கவனித்துக்கொள்ள முடியாது என்பதால் தம்ம மகாமாத்திராக்களிடம் இந்தப் பொறுப்பை ஒப்படைக்கிறார் அசோகர். தம்ம மகாமாத்திராக்கள் ‘மக்களுக்கானவர்கள். அவர்கள் மக்களையும் முதியோரைக் கவனித்துக்கொள்ள வேண்டும். பாடலிபுத்திரத்திலும் பாடலிபுத்திரத்துக்கு அப்பாலும் செல்ல வேண்டும். எல்லா இடங்களிலும் மும்முரமாகப் பணியாற்ற வேண்டும். பெண்களின் குடியிருப்புகள், என்னுடைய வீடு, என் சகோதரர்கள், சகோதரிகளின் வீடுகள், என் உறவினர்களின் வீடுகள் என்று தொடங்கி எல்லா இடங்களிலும் மும்முரமாகப் பணியாற்ற வேண்டும்’ என்கிறார் அசோகர்.

எல்லோருக்கும் பொருளாதார உதவிகள் தேவைப்படாமல் இருக்கலாம். எல்லோருக்கும் உடல் உபாதைகள் இல்லாமல் இருக்கலாம். எல்லோருக்கும் அரசிடமிருந்து கிடைக்கும் உதவிகள் தேவைப்படும் என்று சொல்ல முடியாது. ஆனால் தம்மம் அனைவருக்கும் பொதுவானது. மாளிகையில் வசிக்கும் நான் தொடங்கி சிறையில் அடைபட்டிருக்கும் கைதி வரை அனைவருக்கும் தம்மம் தேவைப்படுகிறது. அறத்தின் முக்கியத்துவத்தை அனைவருக்கும் உணர்த்த வேண்டியிருக்கிறது. ஒரு மனிதன் எங்கே வேண்டுமானாலும் வசிக்கலாம். அவன் பின்னணி என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆணாகத்தான் இருக்க வேண்டுமென்றில்லை, பெண்ணாகவும் இருக்கலாம். தம்மம் அனைவருக்குமானது. ஒருவரையும் விலக்கி வைக்காமல் ஒவ்வொருவரையும் தம்ம மகாமாத்திராக்கள் அணுக வேண்டும் என்கிறார் அசோகர். நிதி உதவி தேவைப்படுபவருக்கு நிதி. உடல் வலி கொண்டவருக்கு சிகிச்சை, வலி நிவாரணம். தம்மமோ தேவை என்று உணர்பவருக்கு மட்டுமல்ல, அப்படியென்றால் என்னவென்று தெரியாதர்களுக்கும் தேவைப்படுகிறது. உடலுக்காக சிகிச்சை போல் மனதுக்கான சிகிச்சை அது. அதை தம்ம மகாமாத்திராக்கள் வழங்க வேண்டும் என்கிறார் அசோகர்.

தவறான சிந்தனையால், பிறரின் தூண்டுதலால் குற்றமிழைக்கும் ஒருவன் சிறைக்குச் செல்கிறான். அவனை மீட்க வேண்டியிருக்கிறது. தம்மத்தை அறியாதவர்களும் தவறுதான் இழைக்கிறார்கள். மனிதர்களுக்கு இன்னல் விளைவிக்கிறார்கள். சக மனிதர்களை வெறுக்கிறார்கள். விலங்குகளின் மேன்மையை உணராமல் துன்புறுத்துகிறார்கள், கொல்கிறார்கள். கடவுளை ஏற்றவர்களும் சரி, ஏற்காதவர்களும் சரி. இத்தகைய தவறுகளில் ஈடுபடுகிறார்கள். சிறையில் இல்லையே தவிர அவர்களுக்கும் மீட்பு தேவைப்படுகிறது. ஆன்ம விடுதலை. அதை அளிக்கும் ஆற்றல் தம்மத்துக்கு மட்டுமே இருக்கிறது என்று நம்பினார் அசோகர். ஒரு பேரரசனும் அவனுடன் பணிபுரிபவர்களும் தம்மத்தைப் பரப்புவதில் முனைப்போடு இருக்கும்போது அவன் ஆளுகைக்கு உட்பட்ட இடத்தில் குற்றங்களும் குறைகளும் மறையாவிட்டாலும் வெகுவாகக் குறையும் அல்லவா?

நிலத்தை விரிவுபடுத்த வேண்டிய அவசியம் அசோகருக்கு இல்லை. எல்லைக்குள்ளும் எல்லையைக் கடந்தும் தம்மத்தை விரிவுபடுத்த வேண்டிய அவசியத்தை அவர் உணர்ந்திருந்தார். வட மேற்கு தொடங்கி தெற்கு வரை நீண்டிருக்கும் பெரும் நிலப்பரப்பில் கவனம் குவிக்கிறார். எல்லா இடங்களுக்கும் நிர்வாகிகளையும் மேற்பார்வையாளர்களையும் அனுப்பிவைக்கிறார். மக்களிடம் தம்மம் தழைப்பதை உறுதி செய்ய விரும்புகிறார். சிறைகளின் எடையும் குற்றங்களின் எடையும் குறைய வேண்டும் என்று விரும்புகிறார். எல்லா உயிர்களும் இன்புற்று இருக்க வேண்டும் என்று கனவு காண்கிறார்.

நாம் மேலே கண்ட கல்வெட்டுகளில் உள்ள ஆச்சரியமூட்டும் ஒரு பொதுத்தன்மையைக் கவனப்படுத்துகிறார் நயன்ஜோத் லாஹரி. தம்மத்தை வலியுறுத்தும் இடங்களிலெல்லாம் பிராமணர்களையும் சிரமணர்களையும் ஒரே இடத்தில் வைத்து அணுகுகிறார் அசோகர். ‘சிரமணா’ என்னும் சமஸ்கிருதச் சொல் பாலியில் ‘சமணா’ என்று மாறுகிறது. சமணம் இதிலிருந்து வந்தது என்பார்கள். வேதங்களில் சிரமணர் எனும் சொல் இடம்பெறுகிறது. உடலை வருத்திக்கொள்பவர், தீவிரமான தேடலில் மூழ்கிப்போனவர், எளிமையை மிகுதியாகப் பேணுபவர், புலனின்பங்களிலிருந்து ஒதுங்கி நிற்பவர், துறவு மேற்கொண்டவர் ஆகிய பொருள்களில் இச்சொல் வழங்கப்பட்டுள்ளது. பவுத்தம், சமணம், ஆசீவகம், சார்வாகம் போன்ற வேத மரபுகளிலிருந்து மாறுபட்டு நின்ற பிரிவுகள் அனைத்துக்குமான பொதுப்பெயராக சிரமணம் என்பது காலப்போக்கில் மாற்றம் பெற்றது.

பிராமணர், சிரமணர் என்று இரு தத்துவப் பிரிவுகள் இருந்ததை மெகஸ்தனிஸும் பதிவு செய்துள்ளார். பிராமணர்களைப் போலன்றி சிரமணர்கள், காடுகளில் வாழ்பவர்கள் என்கிறார் மெகஸ்தனிஸ். பழங்களையும் காட்டுப்பூக்களையும் உண்பவர்கள். மரப்பட்டைகளே அவர்களுடைய ஆடை. குடும்ப உறவுக்குள் அவர்கள் வருவதில்லை. மது அருந்துவதில்லை. அவர்களுக்குக் கடவுளும் கிடையாது என்கிறார் அவர். பிராமணர் என்பதற்கு எதிர்ப்பதமாகவே சிரமணர் பயன்படுத்தப்படுவதைப் பல இடங்களில் காண்கிறோம். இறை நம்பிக்கையற்றவர்கள், மரபை எதிர்ப்பவர்கள் என்று சிரமணர்களை பிராமணர்கள் கருதியதையும் கங்கைக்கரை ராஜ்ஜியங்களை அவர்கள் வெறுத்ததையும் முன்பே பார்த்தோம்.

அசோகர் பிராமணர்களை வெறுக்கவும் இல்லை, ஒதுக்கவும் இல்லை என்பதோடு அவர்களை மதிக்கவும் செய்கிறார். ஒரு பவுத்தராக இருந்தாலும் பிராமணரை அவர் பவுத்தத்துக்கு எதிரானவராகக் காண மறுக்கிறார். சிரமணப் பிரிவுகளையும் பிராமணப் பிரிவையும் எதிரெதிர் நிறுத்தும் போக்குக்கு மாற்றாக இருவரையும் ஒரு தளத்தில், அருகருகில் கொண்டுவருகிறார். நாம், அவர்கள் என்னும் பிரிவினை அவரை அண்டுவதில்லை. பிராமணர்களுக்கும் சிரமணர்களுக்கும் தான, தர்மம் செய்திட வேண்டும். பிராமணர்களையும் சிரமணர்களையும் சென்று சந்திக்க வேண்டும். சிரமணர்களை மட்டுமல்ல, பிராமணர்களையும் அவமரியாதை செய்யக் கூடாது. நன்னெறி என்பது சிரமணர்களை மதிப்பதல்ல, பிராமணர்களையும் சேர்த்து மதிப்பது. என்னுடைய தம்மம் இருவரையும் சமமாகப் பார்ப்பதால் என்னுடைய நலத்திட்டங்கள் இருவருக்கும் ஒன்றுபோல் சென்றுசேர வேண்டும். இதுதான் அசோகரின் தர்க்கம்.

ஒரு பவுத்த சக்கரவர்த்தியாக மட்டும் அசோகர் இருந்திருந்தால் அவர் இவ்வாறு கருதியிருக்கமாட்டார். ஒரு பவுத்தர் பவுத்தத்தைத்தான் தனிக்கவனம் செலுத்தி வளர்க்க வேண்டும். ஒரு பவுத்தர் பவுத்தத்தைத்தான் மக்களிடம் பரப்ப வேண்டும். ஒரு பவுத்தருக்கு பிக்குகள்தான் உயர்ந்தவர். சங்கம்தான் உயர்வானது. இதுவரை பார்த்த கல்வெட்டுகளில் மட்டுமல்ல, இனி பார்க்கப்போவதிலும் அசோகர் பவுத்தத்துக்கு எந்தத் தனியிடத்தையும், எந்தச் சிறப்பான தகுதியையும் அளிக்கவில்லை. மகாபோதி சென்றார், புத்தரைக் கடவுளாக ஏற்றார், தம்மத்தை மதித்தார் என்றாலும் பிராமணர்களுக்கு அவர் ஆட்சியில் என்ன கிடைத்ததோ அதுவேதான் பவுத்தர்களுக்கும் கிடைத்தது. அதுவேதான் பிற பிரிவினருக்கும். புத்தர்மீது நம்பிக்கையுள்ளவரும் புத்தர்மீது நம்பிக்கையற்றவரும் அவர் பார்வையில் ஒன்றே.

அசோகரின் பார்வையை பவுத்தம் வடிவமைத்தது உண்மை. ஆனால் பவுத்தத்தைக் கடந்தும் அவர் பார்வை விரிந்திருக்கிறது. புத்தரைத் தொழும் எந்தவொரு பிக்குவின் தம்மம்தான் அவருடையதும். ஆனால் பவுத்தத் தம்மத்தை எதுவரை ஏற்க வேண்டும், எங்கே கடந்து செல்ல வேண்டும் என்பதை அவர் அறிந்துவைத்திருந்தார். ஒரு பவுத்தராகத் தன் பணி என்ன, ஓர் அரசராகத் தன் பணி என்ன, இரண்டுக்கும் பொதுவான அம்சங்கள் என்ன, வேறுபாடு எங்கே எழுகிறது என்பதை அவர் கவனமாகவும் கூர்மையாகவும் சிந்தித்து தனக்கென்று ஒரு தனித்த அணுகுமுறையை உருவாக்கியிருப்பதைக் காண முடிகிறது. முழுக்க முழுக்க ஒரு பவுத்தராக இருந்துகொண்டு பவுத்தத்தைக் கடந்து சென்றிருக்கிறார் அசோகர். ஒரு முழு பவுத்தராக இருந்ததால்தான் அவரால் பவுத்தத்தைக் கடக்க முடிந்தது என்றும் சொல்லலாம். புத்தரை பவுத்தர் என்று சொல்லிவிட முடியுமா என்ன?

(விரியும்)

ஆதாரங்கள்:

1) Ashoka in Ancient India, Nayanjot Lahiri, Harvard University Press

2) Ashoka and the Decline of the Mauryas, Romila Thapar, 3rd Edition, Oxford University Press, 2018

3) Ashoka and His Inscriptions, B.M. Barua, New Age Publishers Ltd.

மருதன், எழுத்தாளர். ‘ரொமிலா தாப்பர்: ஓர் அறிமுகம்’, ‘ஹிட்லர்’, ‘ஹிட்லரின் வதைமுகாம்கள்’, ‘அகதிகள்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: marudhan@gmail.com

Related Stories

No stories found.