அசோகர் - 17: காந்தாரம் - தர்மம், பக்தி, உண்மை

அசோகர் - 17: காந்தாரம் - தர்மம், பக்தி, உண்மை

அசோகர் முடிசூடி பத்தாண்டுகள் முடிந்த பிறகு, முதல் முறையாக அவர் குரல் காந்தாரத்தில் ஒலித்தது. இது நடந்தது பொஆமு 259 வாக்கில். அதற்கு மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பு, பாரசீகத்தைச் சேர்ந்த அக்கமேனியப் பேரரசின் கட்டுப்பாட்டில் இருந்தது காந்தாரம். அராமைக் மொழியும் காந்தாரத்துக்கு அப்போதுதான் அறிமுகமாகியிருக்க வேண்டும் என்கிறார் நயன்ஜோத் லாஹிரி.

காந்தாரம் அமைந்திருந்த பகுதிக்கு அப்போது ‘அரகோசியா’ என்று பெயர். முக்கியத்துவம் வாய்ந்த இடமாக அது கருதப்பட்டது. அலெக்சாண்டர் உள்ளே நுழைந்து, அப்போது ஆண்டுகொண்டிருந்த மூன்றாம் டேரியஸை வீழ்த்தியதைத் தொடர்ந்து பாரசீகம் செல்வாக்கிழந்தது. அவர்களுக்கு உட்பட்ட பிரதேசங்கள் அலெக்சாண்டரின் கட்டுப்பாட்டுக்கு வந்து சேர்ந்தன. அரகோசியாவை அலெக்சாண்ட்ரோபொலிஸ் என்று பெயர் மாற்றம் செய்து தனது ஆட்களை நியமித்தார் அலெக்சாண்டர். அவருடைய மரணத்துக்குப் பிறகு காந்தாரத்தை சந்திரகுப்தர் பெற்றுக்கொண்டதை முன்பு பார்த்தோம்.

கல்வெட்டு சாட்சியம்

பெருமளவில் மலைகள் சூழ்ந்த இடம் காந்தாரம். அசோகரின் முதல் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது இங்கேதான். அராமைக், கிரேக்கம் ஆகிய இரு மொழிகளிலும் பொறிக்கப்பட்ட கல்வெட்டு அது. கல்வெட்டுகளின் வரலாற்றில் இது புதிதல்ல. பொஆமு 6-ம் நூற்றாண்டைச் சேர்ந்த முதலாம் டாரியஸ் பாரசீகம், எலமைட், பாபிலோனியன் ஆகிய மூன்று பழங்கால மொழிகளில் ஒரு கல்வெட்டை அமைத்திருந்தார். ‘பூமியையும் ஆகாயத்தையும் மனிதனையும் உண்டாக்கிய கடவுள்தான் என்னையும் மன்னனாக்கியுள்ளான். நான் மன்னர்களின் மன்னர். இந்தப் பூமியிலும் அதற்கு அப்பாலும் உள்ள பலதரப்பட்ட மக்களை நான் ஆள்கிறேன்’ எனும் ரீதியில் அமைந்துள்ள கல்வெட்டு அது.

இனி, அசோகரின் கல்வெட்டுக்கு வருவோம். முதலில் கிரேக்கத்திலும் கீழே அராமைக்கிலும் அசோகரின் வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. கிரேக்கத்தின் செல்வாக்கும் பாரசீகத்தின் செல்வாக்கும் இந்தியத் துணைக்கண்டத்திலிருந்து மறைந்த பிறகும் இந்த இருவரின் மொழிகள் உயிர்த்திருந்ததற்கு இந்தக் கல்வெட்டு சாட்சியம் அளிக்கிறது. பாடலிபுத்திரத்திலிருந்து வெகு தொலைவில் வாழ்ந்துவந்த கிரேக்க, அராமைக் மக்களோடும் அசோகர் நேரடித் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள விரும்பியிருக்கிறார். தன் செய்திகளை அவர்களோடும் பகிர்ந்துகொள்ள விரும்பியிருக்கிறார். இரு அந்நிய மொழிகளும் தெரிந்துவைத்திருக்கும் மொழிபெயர்ப்பாளர்களைக் கொண்டு கல்வெட்டுச் செய்தியைப் பொறிக்கச் செய்திருக்கிறார். சிறு பாறைக் கல்வெட்டுகளில் ஒன்றான (எண் 4) இந்த இருமொழிக் கல்வெட்டு 1958-ம் ஆண்டு நடத்தப்பட்ட தொல்லியல் ஆய்வுகளின்போது செஹெல் ஜினா எனும் மலைப்பாங்கான இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இனி கல்வெட்டு வாசகங்கள்:

‘(முடிசூடி) பத்தாண்டுகள் முடிவடைந்தபின், பியதசி தனது பக்தியை (ஒரு கோட்பாடாக) வெளிப்படுத்துகிறார். மனிதர்கள் இந்தக் கணத்திலிருந்து அதிக பக்தியோடு இருக்குமாறு அவர் செய்துள்ளார். உலகம் முழுக்க அனைத்தும் செழிப்படைந்துள்ளன. மனிதர்களையும் பிற உயிர்களையும் கொல்வதை மன்னர் கைவிட்டுள்ளார். கொல்வதிலிருந்து வேடர்களும் மீனவர்களும் பின்வாங்கியுள்ளனர். தன்னடக்கமற்ற மிதமிஞ்சிய மனிதர்களும் தங்களைக் கட்டுப்படுத்திக்கொண்டுள்ளனர்; பழையபடி இல்லாமல் தந்தைக்கும் தாய்க்கும் மூத்தோருக்கும் கீழ்படிகின்றனர். எதிர்காலத்திலும் அவர்கள் இவ்வாறே இருப்பார்கள் என்பதால் மேம்பட்ட வாழ்வும் மகிழ்ச்சியும் கிடைக்கும்.’

பவுத்தம் பற்றியோ தம்மம் பற்றியோ எதுவும் இல்லை. தன்னுடைய மனமாற்றம் குறித்தோ மதமாற்றம் குறித்தோ ஒரு சொல்லும் இல்லை. நாம் முன்னர் பார்த்த இரு கல்வெட்டுகள் போல் அவர் இதில் எந்த அறிவுரையையும் வழங்கவில்லை; ஏற்கெனவே நிலவிவந்த எந்த அறநெறியையும் வலியுறுத்தவும் இல்லை. மாறாக, ‘ஆட்சி பொறுப்பேற்ற பிறகு நான் என்ன செய்துள்ளேன்’ என்பதையே அசோகர் இதில் பகிர்ந்துகொண்டிருக்கிறார். அந்த வகையில் தன் வெற்றியை அசோகர் பறைசாற்றும் ஒரு கல்வெட்டு என்று இதனை எடுத்துக்கொள்ளலாம்.

கல்வெட்டு கண்டெடுக்கப்பட்ட காந்தார மலைப்பகுதி
கல்வெட்டு கண்டெடுக்கப்பட்ட காந்தார மலைப்பகுதி

கொல்லாமைக் கோட்பாடு!

குறிப்பிடத்தக்க அளவுக்கு உறுதிமிக்கவராகவும் செயலூக்கம் கொண்டவராகவும் அசோகர் இந்தக் கல்வெட்டில் வெளிப்படுவதைச் சுட்டிக்காட்டுகிறார் நயன்ஜோத் லாஹிரி. கொல்லாமையைத் தனக்கு நெருக்கமான ஒரு கோட்பாடாக அவர் வரித்துக்கொண்டுள்ளதை அறிய முடிகிறது. நிலத்திலும் நீரிலும் வாழும் விலங்குகளையும் மீன்களையும் மனிதர்களுக்குச் சமமான உயிரினங்களாக அவர் உயர்த்துகிறார். உயிருள்ள உடல்கள் அனைத்தையும் சமமானவை என்பதால் ஒன்றுபோல் அவற்றைப் பாவிக்க வேண்டும். கொல்லாமை என்பது எந்தவோர் உயிரையும் கொல்லாமலிருப்பதுதான் என்கிறார்.

அவர் மட்டும் மாறவில்லை. மற்றவர்களையும் மாற்றியமைத்திருக்கிறார். எந்த அளவுக்கு என்றால் விலங்குகளை வேட்டையாடுவதைத் தொழிலாகக் கொண்ட வேடர்களும் மீன்களைப் பிடித்துவந்த மீனவர்களும்கூட கொல்லாமையை ஒரு கோட்பாடாக ஏற்றுக்கொண்டுவிட்டனராம். பெற்றோர்களையும் பெரியோர்களையும் மதித்து நடந்துகொள்ளவேண்டும் என்னும் பழங்கால நெறியை முந்தைய கல்வெட்டில் சுட்டிக்காட்டியிருந்த அசோகர் இப்போது அந்த வழக்கத்தையும் வெற்றிகரமாக மக்களிடம் கொண்டு சேர்த்துவிட்டார். இதன் காரணமாக மனித வாழ்க்கை உயர்ந்திருக்கிறது. செழிப்பும் கைகூடியிருக்கிறது என்கிறார்.

அசோகரின் எண்ணவோட்டத்தை கிரேக்கச் சொற்கள் சரியாகவும் அழகாகவும் வெளிப்படுத்தியிருப்பதாக வாசித்தவர்கள் சொல்கிறார்கள். தம்மத்துக்குப் பதிலாக கிரேக்கம் அறிந்தவர்களுக்கும் மற்றவர்களுக்கும் நன்கு தெரிந்த பக்தி எனும் சொல் இங்கே கையாளப்பட்டிருக்கிறது. அசோகர் உணர்த்த விரும்பிய தம்மத்துக்கு இணையான கிரேக்கச் சொல் உருவாகியிருக்கவில்லை. அப்படியே உருவாக்கினாலும் சட்டென்று அதை அறிமுகப்படுத்திவிடவும் முடியாது. கிரேக்கப் பண்பாட்டுச் சூழலைக் கணக்கில் கொண்டு, தத்துவம், ஆன்மிகம் ஆகியவற்றிலுள்ள அவர்களுடைய நாட்டத்தையும் கணக்கில் கொண்டு பக்தி எனும் சொல் கையாளப்பட்டிருக்கலாம்.

அராமைக் கல்வெட்டிலும் இதுவேதான் நடந்திருக்கிறது என்கிறார் நயன்ஜோத் லாஹிரி. கிரேக்கத்தில் உள்ளதை சொல் சொல்லாக மொழிபெயர்க்காமல் அம்மொழி பேசும் மக்களைக் கருத்தில் கொண்டு தேவைப்பட்ட இடங்களில் சின்ன மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. ஒரே செய்தி இரு வேறு மொழிகளுக்குச் செல்லும்போது எத்தகைய மாற்றங்களை அடைகிறது என்பதைப் புரிந்துகொள்வதற்காக அராமைக் கல்வெட்டின் தோராயமான மொழியாக்கம் கீழே அளிக்கப்பட்டுள்ளது.

‘(முடிசூடி) பத்தாண்டுகள் கழிந்துவிட்ட நிலையில் நம் மன்னர் உண்மையை நிலைநாட்டுகிறார். அதுமுதல் தீமை எல்லா மனிதர்களிடமிருந்தும் அகன்றுவிட்டது. பகை சக்திகள் அனைத்தும் மறைந்துவிட்டன. பூமி முழுக்க மகிழ்ச்சி உண்டாகியிருக்கிறது. மன்னரின் உணவுக்காக இயன்றவரை குறைவான உயிர்களே கொல்லப்படுகின்றன. இதைக் கண்டதும் விலங்குகளைக் கொல்வதை மனிதர்கள் கைவிட்டுவிட்டனர். மீன் பிடித்துக்கொண்டிருந்தவர்கள் நிறுத்திவிட்டனர். கட்டுப்பாடின்றி இருந்தவர்கள் இப்போது கட்டுப்பாட்டோடு இருக்கின்றனர். தாய், தந்தை, முதியோர் அனைவருக்கும் விதி நிர்ணயித்தபடி கட்டுப்படுகின்றனர். இது அனைவருக்கும் நன்மையை ஏற்படுத்தியிருக்கிறது, பூமிக்கும் நன்மை உண்டாக்கியிருக்கிறது.’

கிரேக்கர்களுக்கு பக்தியை முன்னிறுத்திய அசோகர் அராமைக் மக்களுக்கு உண்மையை நிலைநாட்டுகிறார். பக்தியைவிடவும் உண்மையை அம்மக்கள் முக்கியமானதாக, மதிப்புமிக்கதாகக் கருதியிருக்கலாம். அவர்களுடைய பண்பாட்டு பின்னணியைக் கருத்தில் கொண்டு இச்சொல் இங்கே சேர்க்கப்பட்டிருக்கலாம். கொல்வதை முற்றாக நிறுத்திவிட்டதாகச் சொன்னவர் இங்கே வெகுவாகக் குறைத்துவிட்டதாகச் சொல்கிறார். பின்னர் நாம் பார்க்கப்போகும் ஒரு கல்வெட்டும் இதையே உறுதி செய்கிறது.

அசோகர் உணர்த்திய செய்தி

அசோகரின் பிற கல்வெட்டுகள் எதிலும் இடம்பெறாத ஓர் அம்சம் காந்தார இருமொழிக் கல்வெட்டில் அழுத்தமாக, இன்னும் சொல்லப்போனால் மிகையுணர்வோடு இடம்பெற்றுள்ளது. அது, அவருடைய வெற்றி. கலிங்கத்தில் வெற்றி பெற்றபோதுகூட அதை ஒரு தோல்வியாக மாற்றிக் காட்டிய அசோகர் காந்தாரத்தில் தன் சாதனைகளை முதன்முறையாக வெளிப்படுத்தியுள்ளார். அதற்கான தேவை ஏன் அவருக்கு எழ வேண்டும்? நயன்ஜோத் லாஹிரி சொல்லும் காரணம் இது. காந்தார மக்களுக்குக் கல்வெட்டு புதிதல்ல. பல காலமாக பாரசீக மன்னர்களின் செய்திகளை அவர்கள் வாசித்துக்கொண்டிருக்கிறார்கள். அவை எப்படி இருக்கும் என்பதற்கு ஒரு மாதிரியை மேலே கண்டோம். நான் அப்படிப் போரிட்டேன், இப்படிப் போரிட்டேன், இவ்வளவு நிலத்தை ஆக்கிரமித்தேன், என் வெற்றி சாமானியமானதல்ல எனும் ரீதியில்தான் ஒவ்வொரு மன்னரின் கல்வெட்டு முழக்கமும் அமைந்திருக்கும். அப்படிப்பட்ட சூழலில், ‘நான் ஓர் உபாசகன் மட்டுமே’ என்று தொடங்கி ஒரு மன்னரின் தகுதிக்குச் சற்றும் பொருந்திவராத பணிவோடு அசோகர் தன் செய்தியை வெளியிட்டிருந்தால் அது கண்டுகொள்ளப்படாமல் போவதற்கே வாய்ப்பு அதிகம்.

‘நான் ஆட்சிக்கு வந்தேன். அதன்பின் அனைத்தும் மாறிவிட்டது’ என்பது பாரசீகக் கல்வெட்டுகளில் அவ்வப்போது இடம்பெறும் ஒரு வரி என்கிறார் லாஹிரி. ஒவ்வொரு முறை ஆட்சி மாறும்போதும் புதிய மன்னர் ஒரு வெற்றிக் கல்வெட்டைப் பொறிப்பது அங்கே வழக்கம். எனவே அசோகர் தன் வழக்கத்தை மாற்றிக்கொள்ள வேண்டியிருந்தது. ஒரு புதிய தொனியில் பேசியாக வேண்டிய கட்டாயத்தில் அவர் இருந்தார். தொனியில்தான் மாற்றமே தவிர, உள்ளடக்கத்தை அவர் மாற்றிக்கொள்ளவில்லை. நிலமல்ல, மனமே என் இலக்கு. அதைத்தான் நான் வென்றுள்ளேன் என்கிறார் அசோகர். வெளியில் அல்ல, உள்ளுக்குள்தான் ஒவ்வொருவரும் போரிட வேண்டியிருக்கிறது. வெளியில் அல்ல, உள்ளுக்குள்தான் பகை சக்திகள் வளர்ந்திருக்கின்றன. அவற்றை வெல்வதற்கு ஏந்த வேண்டிய ஆயுதம், அகிம்சை. அனைத்து உயிர்களையும் உங்களால் கருணையோடு அணுக முடியுமானால் மகிழ்ச்சி உங்களுடையது, உலகம் உங்களுடையது. இதைத்தான் உணர்த்த விரும்பினார் அசோகர்.

அசோகர் உணர்த்திய செய்தி சென்று சேர்ந்ததா? அசோகர் சொன்னதுபோல் காந்தார மக்கள் அகிம்சையையும் புலால் மறுப்பையும் ஏற்றுக்கொண்டனரா? வேடர்கள் அம்பையும் வில்லையும் தூக்கி வீசிவிட்டனரா? ஒரு மீன்கூட பிடிக்கப்படவில்லையா? அப்படி நடந்திருக்க வாய்ப்பில்லை என்கிறார் லாஹிரி. காந்தார மக்கள் பலவிதமான உயிரினங்களை உண்டு, மகிழ்ந்திருக்கிறார்கள். வாழ்நாள் முழுக்க மரக்கறி உணவை உட்கொள்ளும் வழக்கத்தைப் பின்பற்றுவதை விடுங்கள், அப்படியொன்றை அவர்களால் கற்பனையும் செய்திருக்க முடியாது. மனிதர்களையும் விலங்குகளையும் பறவைகளையும் மீன்களையும் ஒரே தட்டில் வைத்து அவர்களால் பார்க்க முடிந்திருக்காது. அசோகர் அன்பை, கருணையை, நல்லொழுக்கங்களை வலியுறுத்துகிறார் என்ற பொதுவான ஒரு செய்தியை மட்டுமே அவர்கள் வாசித்த கல்வெட்டிலிருந்து பெற்றுக்கொண்டிருக்க வேண்டும்.

கிரேக்க மொழிக் கல்வெட்டு காந்தாரத்தில் வாழ்ந்த கிரேக்கம் மட்டுமே தெரிந்த மக்களுக்காகப் பொறிக்கப்பட்டது என்பது சரிதான். ஆனால் அராமைக் கல்வெட்டின் நோக்கம் தன் பகுதிக்குட்பட்ட பகுதிகளில் வாழும் மக்களோடு உரையாடுவது மட்டுமல்ல. எல்லைக்கு அப்பால் அதை வாசிக்கும் மற்ற பாரசீக மக்களையும் அசோகர் ஈர்க்க விரும்பினார் என்கிறார் டி.சி. சர்க்கார்.

பிரத்யேகமான கல்வெட்டு

காந்தாரக் கல்வெட்டை ஆராய்ந்த டி.டி. கோசாம்பி, அப்பகுதி மக்களுக்காகவே தனித்துவத்தோடு அது உருவாக்கப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டுகிறார். பொதுவாக அசோகரின் செய்தி பல இடங்களில் ஒன்றுபோல் கல்வெட்டுகளாகப் பொறிக்கப்படுவது வழக்கம். காந்தாரக் கல்வெட்டு மட்டும்தான் அங்குள்ளவர்களுக்கென்றே பிரத்யேகமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. அதற்குக் காரணம் பிற பகுதிகளிலிருந்து அது வேறுபட்டிருந்ததுதான் என்கிறார் கோசாம்பி. மற்ற இடங்கள் போல் காந்தாரத்தில் நான்கு வர்ணங்களில் மக்கள் பிரிந்திருக்கவில்லை. எஜமானர், அடிமை எனும் இரு பிரிவுகள்தான் அங்கு இருந்தன என்பதை பாலி இலக்கியங்கள் அறிந்து வைத்திருந்தன. இரண்டாகப் பிளந்திருக்கும் அந்தச் சமூகத்து மக்களுக்கு அனைத்து உயிர்களிடத்தும் அன்பு செலுத்தும் அகிம்சையை வலியுறுத்துவது பலனளிக்கும் என்று அசோகர் நம்பியிருக்கலாம்.

இந்தியத் துணைக்கண்டம் முழுக்க, காந்தாரம் தவிர்த்து எல்லா இடங்களிலும் மகதியில் (பிராகிருதம்) மட்டுமே கல்வெட்டுகள் அமைந்துள்ளன. பிராமி, கரோஷ்டி என்று எழுத்துரு மட்டுமே மாறும், மொழி மாறாது. கிரேக்கம், அராமைக் தவிர்த்து மூன்றாவதாக வேறு எந்த பிராந்திய மொழியிலும் தன் கல்வெட்டு செய்தியை அசோகர் மொழிபெயர்த்துக் கொண்டுசென்றதில்லை என்கிறார் கோசாம்பி.

காந்தாரக் கல்வெட்டை பிரசாரம் எனும் அளவில்தான் எடுத்துக்கொள்ள முடியும் என்கிறார் ரொமிலா தாப்பர். தம்மத்தின் பலனை தன் ஆட்சியின் எல்லைப்பிரதேசம்வரை கொண்டு செல்லும் பொருட்டே அதன் உள்ளடக்கம் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும். கொல்லாமை என்பதைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் பிற கல்வெட்டுகள்போல் அது தம்மத்தை முறையாக அறிமுகப்படுத்தவில்லை. எல்லோரையும் பக்தியுள்ளவர்களாக மாற்றிவிட்டேன், உலகில் மகிழ்ச்சி உண்டாகிவிட்டது என்பதெல்லாம் ஆர்வமூட்டுவதற்காகச் சொல்லப்பட்டவையாக இருக்கும் என்கிறார் தாப்பர். காந்தாரத்திலுள்ள மக்களுக்காக மட்டுமின்றி, அந்த வழித்தடத்தில் அவ்வப்போது பயணம் மேற்கொள்ளும் வணிகர்களையும் மனதில் கொண்டு இக்கல்வெட்டு அமைக்கப்பட்டிருக்கலாம் என்று தாப்பர் சொல்கிறார். வணிகர்கள் பல தேசங்களுக்குச் செல்பவர்கள். இச்செய்தியை வாசித்தால் அதிலிருந்து சில சொற்கள் அவர்கள் மனதில் பதியலாம். அதை அவர்கள் பிற இடங்களுக்கும் அறிமுகப்படுத்தலாம். கொல்லாமை ஒரு சொல்லாகவேனும் பிற இடங்களுக்குச் செல்லுமானால் அதுவே அசோகருக்கு நிறைவானதாக இருந்திருக்கும்.

(விரியும்)

ஆதாரங்கள்:

1) Ashoka in Ancient India, Nayanjot Lahiri, Harvard University Press

2) Ashoka and the Decline of the Mauryas, Romila Thapar, 3rd Edition, Oxford University Press, 2018

3) Notes on the Kandahar Edict of Asoka, D.D. Kosambi, Journal of the Economic and Social History of the Orient , May, 1959, Vol. 2, No. 2 (May, 1959), pp. 204-206

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in