அசோகர் - 13: எதிர்காலத்துடன் உரையாடிய பேரரசர்!

அசோகர் - 13: எதிர்காலத்துடன் உரையாடிய பேரரசர்!
கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் அருகே மஸ்கி என்ற இடத்தின் குகையில் உள்ள அசோகர் காலத்துக் கல்வெட்டு..

அசோகரின் கல்வெட்டுகள் நமக்கு அறிமுகமாகும்போது, அவர் பவுத்தத்தின் கரங்களில் ஏற்கெனவே சென்று சேர்ந்திருந்தார். பவுத்தத்தை ஏற்றபிறகு அவர் வாழ்க்கைமுறை முற்றாக மாறுகிறது. புதிய கற்பனைகள் அவருக்குள் உதிக்கின்றன. அதிகாரத்தை, பதவியை, செல்வத்தைப் புதிய கண்களில் பார்க்கத் தொடங்குகிறார். ஆட்சி நடத்தும் முறை மாறுகிறது. நிர்வகிக்கும் முறை மாறுகிறது. அசோகருக்குள் நிகழத் தொடங்கிய மாற்றங்கள் மவுரிய இந்தியாவிலும் வெளிப்படுவதைக் காண்கிறோம். அசோகரின் இந்தியா வரலாற்றில் முதல் முறையாகச் சில புதிய பரிசோதனைகளுக்குத் தன்னைத் தயார் படுத்திக்கொள்ளத் தொடங்குகிறது. இந்த மாற்றங்களையெல்லாம் அசோகரின் சொற்களைக் கொண்டு நாம் புரிந்துகொள்ளப்போகிறோம். அதற்கு முன்னால் அந்தச் சொற்களின் வரலாற்றை எளிமையாகத் தெரிந்துகொள்வோம்.

அசைக்க முடியாத ஆணைகள்!

இந்தியாவைப் பொறுத்தவரை இறந்தகாலம் என்றொன்று இல்லை. வரலாற்றுக்கு முந்தைய பழங்காலம்கூட இன்னமும் நம்மிடையே உயிர்த்திருக்கிறது என்பார் டி.டி. கோசாம்பி. ‘வாழும் பழங்காலம்’ என்றே அவர் அழைக்கிறார். எந்தக் கல்லில், எந்த மணல் துகளில், எந்தப் பாறையில் என்ன வரலாறு ஒளிந்திருக்கிறதோ, யார் கண்டது? அசோகர் தனது சொற்களை இந்தியத் துணைக்கண்டம் முழுக்கப் பதிவு செய்திருக்கிறார். அவை சொற்கள்தாம் என்பதையும் சொன்னவர் அசோகர் என்பதையும் கண்டுபிடிக்க, நமக்குக் கிட்டத்தட்ட 2,000 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. எல்லோருடனும் நெருங்கிவந்து உரையாட விரும்பிய ஒருவரின் குரல், இவ்வளவு நீண்ட காலம் மறைந்திருந்தது உண்மையிலேயே துயரம்தான். தன் காலத்தோடு மட்டுமல்ல எதிர்வரும் காலத்தோடும் உரையாட வேண்டும் என்பதால்தான், அழுத்தந்திருத்தமாகக் கற்களில் தன் சிந்தனைகளை வெளிப்படுத்திவிட்டுச் சென்றிருக்கிறார் அவர்.

ஓர் அரசர் தன் ஆணையைத் தெளிவாக எழுத வேண்டும். நல்ல எழுத்தர்கள்மூலம் ஆணைகள் அழகிய கையெழுத்தில் பதிவு செய்யப்பட வேண்டும். எழுத்தர்கள் அரசர் சொல்வதைக் கூர்மையாகக் கவனித்து, கவனமாக எழுத்தில் கொண்டுவர வேண்டும் என்று அறிவுறுத்துகிறது அர்த்தசாஸ்திரம். ஆனால், அசோகருக்கு முந்தைய ஆணைகளில் ஒன்றுகூட நமக்குக் கிடைக்கவில்லை என்கிறார் நயன்ஜோத் லாஹிரி. அதற்குக் காரணம் அவை எழுதப்பட்ட விதம் என்கிறார். பொதுவாகப் பனை ஓலை, மரப்பட்டை, பருத்தி துணி ஆகியவற்றில்தான் அரசரின் சொற்கள் பதிவு செய்யப்பட்டன. மரப் பலகைகளையும் அவர்கள் பயன்படுத்தியிருக்கலாம். இவை அனைத்துமே அழியும் தன்மை கொண்டவை என்பதால், காலப்போக்கில் அவை மண்ணோடு மண்ணாகிவிட்டன. அசோகரும்கூட, ஆரம்பத்தில் முந்தைய மன்னர்களைப் போல் ஓலைச்சுவடி முதல் மரப்பட்டை வரை பலவற்றில் ஆணைகளைப் பிறப்பித்திருக்க வேண்டும். இந்த வழக்கமும் கலிங்கத்துக்குப் பிறகே மாறியிருக்கிறது.

செய்திப் பரிமாற்றத்தில் 2 அடிப்படை மாற்றங்களைக் கொண்டுவந்தார் அசோகர். ஒரு மன்னர், பொதுவாகப் பணியமர்த்தப்பட்ட இளவரசர்களோடும் நிர்வாகிகளோடும் அலுவலர்களோடும்தான் உரையாடுவார். என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்றெல்லாம் அவர்களுக்குத்தான் ஆணைகள் அனுப்புவார். வணிகம், வரி வசூல், போர், தண்டனை முறை, நிர்வாகம் என்று அலுவல் தொடர்பான செய்திகளே ஒரு மன்னரிடமிருந்து அவருக்குக்கீழ் பணியாற்றுபவர்களுக்குச் சென்றுசேரும். வாசித்து, அதன்படி பணிகளை அவர்கள் மேற்கொள்ள வேண்டும். திட்டங்கள் தீட்ட வேண்டும். ‘என் ஆணைகளும் செய்திகளும் கற்களில் பதிவு செய்யப்பட வேண்டும்’ என்பது, அசோகர் கொண்டுவந்த முதல் மாற்றம். என் சொற்கள் எனக்குக்கீழ் பணிபுரிபவர்களுக்கானவை மட்டுமல்ல; அவை பொதுமக்களுக்கானவை. எல்லோரும் வாசிப்பதற்கானவை என்பது 2-வது மாற்றம். எல்லோருக்குமான செய்திகளை எல்லோரும் பார்க்கும், எல்லோரும் புழங்கும் பொதுவிடங்களில்தானே பதிவு செய்ய முடியும்?

அசோகர் தூண்
அசோகர் தூண்

பாறைகள், தூண்கள்... அறிவிப்புகள்

பொதுமக்களின் வாழ்விடங்களுக்கு அருகிலும் அவர்கள் கூடும் இடங்களிலும் காணக்கிடைத்த பாறைகளில் அசோகரின் சொற்களை முதலில் பொறிக்க ஆரம்பித்தார்கள். ஓலையிலோ பட்டையிலோ எழுதப்பட்ட செய்தி கையில் இருக்கும். வசதியான பாறையொன்றைக் கண்டுபிடித்து அதனருகில் அமர்ந்து செதுக்கிவிட்டுத் திரும்பிவிடுவார்கள். இது முதல் நிலை. பிற்காலத்தில் பாறையைக் காட்டிலும் மேலான தகவல் தொடர்பு சாதனமொன்று கண்டுபிடிக்கப்பட்டது. எழுத்துருக்களைப் பதிவு செய்யும் முறையும் தொழில்நுட்பமும் முன்பைவிட இப்போது கொஞ்சம் நவீனமடைந்திருக்க வேண்டும். அழகியல் உணர்வும் மாறியிருக்க வேண்டும். பாறைகளை விடுத்து, தூண்களில் எழுதத் தொடங்கினார்கள்.

வாராணசிக்கு அருகிலுள்ள சுனார் எனும் இடத்திலிருந்து மணற்கற்களைத் தருவித்து, அழகிய, பளபளப்பான தூண்கள் உருவாக்கப்பட்டன. அசோகரின் ஒவ்வொரு ஆணையும் அவர் பகிர்ந்துகொள்ள விரும்பிய ஒவ்வொரு செய்தியும் ஒரு தூணில் பதிவு செய்யப்பட்டது. பாறையில் எழுதுவதைவிட அதிக நேரமும் உழைப்பும் எடுக்கும் பணி. ஆட்களை வைத்து கற்களைக் கொண்டுவர வேண்டும், செதுக்கித் தூணாக மாற்ற வேண்டும், அதன்பிறகே எழுத்துகளைப் பொறிக்க முடியும். என்றாலும் இயற்கையாக அமைந்த பாறையைக் காட்டிலும் நிலப்பரப்பில் தன்னந்தனியே உயர்ந்து எழுந்து நின்றுகொண்டிருக்கும் ஒரு தூண் அதிகம் பேரைக் கவர்ந்திழுத்திருக்கும் என்பதில் ஐயமில்லை. அசோகர் காலத்தில் மட்டுமல்ல அதன்பிறகும்கூடப் பாறைகளைக் காட்டிலும் தூண்களே அதிகம் கண்டு, வியக்கப்பட்டிருக்கின்றன. மொத்தம் எவ்வளவு தூண்களை அசோகர் உருவாக்கினார் என்பது தெரியவில்லை. நமக்குக் கிடைத்திருப்பவை 10. ஒவ்வொன்றும் 40 முதல் 50 அடி உயரம் கொண்டவை. ஒவ்வொன்றும் கிட்டத்தட்ட 50 டன் எடை கொண்டவை.

அசோகரின் கல்வெட்டுகளை 4 பெரும் பிரிவுகளுக்குள் தொகுத்துக்கொள்ளலாம். பாறையிலா, தூணிலா எங்கே பொறிக்கப்பட்டுள்ளன என்பதை வைத்தும் அவை சிறியவையா பெரியவையா என்பதை வைத்தும் இந்தப் பிரிவுகள் வகுக்கப்பட்டுள்ளன.

1) பெரும் தூண் கல்வெட்டுகள்

2) சிறு தூண் கல்வெட்டுகள்

3) பெரும் பாறைக் கல்வெட்டுகள்

4) சிறு பாறைக் கல்வெட்டுகள்

இவற்றில் சிறு தூண் கல்வெட்டுகள், சிறு பாறைக் கல்வெட்டுகள் இரண்டிலும் பவுத்தம் குறித்த விஷயங்கள் பிரதானமான இடத்தைப் பிடித்துக்கொண்டுவிடுகின்றன. புத்தர், சங்கம், பவுத்த அறநெறிகள் ஆகியவை இவற்றில் அறிமுகப்படுத்தப்படுகின்றன. பெரும் தூண் கல்வெட்டுகளிலும் பெரும் பாறைக் கல்வெட்டுகளிலும்கூட அறம் சார்ந்த உபதேசங்கள் இருக்கின்றன என்றாலும் அரசியல் இரண்டிலும் முக்கியத்துவம் பெறுகிறது. இங்கே புத்தர் தோன்றுவதில்லை. ஆனால் தம்மம் நிறைந்திருக்கிறது. அசோகரின் காலத்தில் அரசு நிர்வாகம் எவ்வாறு இருந்தது, அயல்நாட்டு உறவுகள் எவ்வாறு பேணப்பட்டன போன்றவற்றைப் புரிந்துகொள்ள இந்த இரு கல்வெட்டுகளையே வரலாற்றாசிரியர்கள் நாடுகிறார்கள்.

நமக்குக் கிடைத்துள்ள பெரும் பாறைக் கல்வெட்டுகளின் எண்ணிக்கை 14. தூண்களின் எண்ணிக்கை 7. சிறு பாறைக் கல்வெட்டுகள் 15. இவை போக, குகைகளிலும் எழுத்துகள் கிடைத்துள்ளன. கந்தஹாரில் கிரேக்க மொழியிலும் அராமிக் மொழியிலும் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பாறைக் கல்வெட்டுகள் இந்தியத் துணைக்கண்டம் முழுக்கப் பரவியிருக்கின்றன என்றால் தூண் கல்வெட்டுகள் கங்கைச் சமவெளியில் மட்டும் குவிந்திருந்தன. முக்கியமான கல்வெட்டுகளை இனி வரும் பக்கங்களில் விரிவாக விவாதிக்கப்போகிறோம். மற்றபடி, கல்வெட்டுகளும் அவை கண்டறியப்பட்ட இடங்களும் பின்னிணைப்பில் பட்டியலிடப்பட்டுள்ளன.

இறுதி ஆதாரம்

நமக்குக் கிடைக்கும் ஆதாரங்களின்படி, 5-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சீன பவுத்தரான பாஹியான் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டபோது, பாடலிபுத்திரத்தில் அமைந்திருந்த அசோகர் தூணைப் பார்வையிட்டிருக்கிறார். அதில் இடம்பெற்றிருந்த கல்வெட்டைத் தன்னால் வாசிக்க முடிந்தது என்று அவர் தன் பதிவுகளில் குறிப்பிட்டிருக்கிறார். அவரை அடியொற்றி மற்றொரு சீன பவுத்தரான யுவான் சுவாங், 7-ம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு வருகை தந்தார். வரலாற்றுப் புகழ்மிக்க பட்டுப் பாதை வழியாக இருவரும் இந்தியாவுக்கு வந்திருந்தனர். பாஹியான் போலவே யுவான் சுவாங்கும் பாடலிபுத்திரத்துத் தூணைக் கண்டு அதிலுள்ள செய்தியை வாசித்திருக்கிறார். யுவான் சுவாங் வேறு சில கல்வெட்டுகளையும் படித்துப் புரிந்துகொண்டு சில குறிப்புகள் எழுதி வைத்திருக்கிறார் என்றாலும் அவருடைய புரிதல் பிழையானது என்கிறார்கள் பிற்கால வரலாற்றாசிரியர்கள்.

ஆக, பாஹியான், யுவான் சுவாங் இருவரும் ஒன்றுபோல் சரியாக வாசித்து, புரிந்துகொண்டது பாடலிபுத்திரத்துத் தூண் கல்வெட்டு ஒன்றை மட்டுமே. அசோகரின் கல்வெட்டுகள் வாசிக்கப்பட்டது குறித்து நமக்குக் கிடைக்கும் இறுதியான ஆதாரம் இதுவே. யுவான் சுவாங்குக்குப் பிறகு வெறுமை நம்மைச் சூழ்ந்துகொள்கிறது. எளிய மக்கள் தொடங்கி பல்லாயிரக்கணக்கானோரால் அன்றாடம் படிக்கப்பட்ட அசோகரின் எழுத்துகள் அப்படியே காலத்தில் உறைந்து நின்றுவிடுகின்றன.

காலம் கடந்து நின்றுவிட்ட ‘கதைகள்’!

பாறைகளைப் பலர் பார்த்திருப்பார்கள். அழகிய தூண்களைக் கண்டு சிலர் அதிசயித்திருப்பார்கள். இரண்டிலும் ஏதோ விநோத எழுத்துகள் இடம்பெற்றிருப்பதையும் பலர் கவனித்திருக்கலாம். நெருங்கி வந்து அவற்றை வாசிக்கவும் முயன்றிருக்கலாம். அவர்களுக்குத் தெரிந்த எந்த மொழி போலவும் அது இல்லாததால் சலிப்போடு கடந்து சென்றிருக்கலாம். படிக்க முடியாவிட்டாலும் இவர்களில் சிலர், அதில் இதுதான் எழுதப்பட்டிருக்கிறது என்று சொல்லி சில கதைகளை உண்டாக்கி பரப்பிவிட்டிருப்பது தெரிகிறது என்கிறார் ஜான் ஸ்ட்ராங். அவற்றில் சில கதைகள் தலைமுறைகள் கடந்து வேர் கொண்டு வளர்ந்திருக்கின்றன. தூண்களைச் சுற்றி தொன்மத்தின் வலை படரத் தொடங்கியது இப்படித்தான்.

14-ம் நூற்றாண்டின் மத்தியில் ஒரு நாள் சுல்தான் ஃபிரோஸ் ஷா துக்ளக், இன்றைய ஹரியாணாவில் உள்ள ஒரு கிராமத்தைக் கடந்து சென்றுகொண்டிருந்தபோது, பளபளப்பான தூண் ஒன்று அவரைக் கவர்ந்து இழுத்திருக்கிறது. முகமது பின் துக்ளக்கின் மரணத்துக்குப் பிறகு டெல்லி சுல்தானகத்தின் சுல்தானாகப் பொறுப்பேற்றுக்கொண்டவர் இவர். சமஸ்கிருதத்திலிருந்து பல இந்து மத நூல்களை பாரசீகத்திலும் அரபியிலும் மொழிபெயர்க்கச் செய்தவராக ஃபிரோஸ் ஷா அறியப்படுகிறார். தனக்கென்று பிரத்யேகமான ஒரு பெரிய நூலகத்தையும் இவர் உருவாக்கிக்கொண்டிருக்கிறார். தான் கண்டுபிடித்திருப்பது சாதாரண தூணல்ல; அது மகாபாரதத்தில் வரும் பீமன் அந்தக் காலத்தில் பயன்படுத்திய கைத்தடி எனும் கதை அவரைக் கவர்ந்துவிட்டது. உடனடியாகத் தூணை டெல்லிக்குக் கொண்டுவருமாறு உத்தரவிட்டார்.

டெல்லி சுல்தான் ஃபிரோஸ் ஷா துக்ளக்
டெல்லி சுல்தான் ஃபிரோஸ் ஷா துக்ளக்

சுல்தானின் வீரர்கள் கவனமாக நிலத்தைத் தோண்டி தூணை வெளியில் உருவி எடுத்தார்கள். விலை மதிப்பில்லாத அபூர்வத் தூண் என்பதால், பெரிய பட்டுத் துணியை வரவழைத்து தூணைக் கவனமாகப் போர்த்தியிருக்கிறார்கள். தூணின் உயரத்தைக் கணக்கிட்டு 42 பெரிய சக்கரங்கள் கொண்ட, எருதுகள் பூட்டப்பட்ட மாபெரும் வண்டியை உருவாக்கி தூணை ஏற்றிவிட்டிருக்கிறார்கள். வண்டி யமுனை ஆற்றை அடைந்ததும் வழக்கத்தைவிட நீளமான படகொன்றில் தூண் கவனமாக இடம் மாற்றப்பட்டது. டெல்லி சென்று சேர்ந்தபோது சுல்தானே நேரில் வந்து சரியாக வந்திருக்கிறதா என்று பார்த்து, நிம்மதியாகத் தூணைப் பெற்றுக்கொண்டிருக்கிறார். புதிதாக உருவான, ஃபிரோஸாபாத் நகரில் உள்ள தனது மாளிகையின் உச்சியில் பயபக்தியோடு தூணைப் பொருத்தினார்.

19-ம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் அதிகாரிகள், குஜராத்திலுள்ள கிர்நார் தொடங்கி ஆப்கனிஸ்தானிலுள்ள கந்தஹார் வரை விநோதமாக தூண்களும் பாறைக் கல்வெட்டுகளும் பரவியிருந்ததைக் கண்டுகொண்டனர். சாஞ்சியில் ஒரு ஜமீன்தார் கண்ணில் ஓர் அசோகர் தூண் சிக்கியிருக்கிறது. பார்த்த மாத்திரத்திலேயே கரும்பு பிழிவதற்கு இது உபயோகமாக இருக்கும் என்று அவருக்குத் தோன்றியிருக்கிறது. சிறிய துண்டுகளாக உடைத்து, அள்ளிப் போட்டுக்கொண்டு போயிருக்கிறார். இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தைத் தொடங்கி வைத்த அலெக்சாண்டர் கன்னிங்ஹாம் இதை விவரித்துள்ளார். இந்தத் தூண்கள் எந்தக் காலகட்டத்தைச் சேர்ந்தவை? எதற்காக உருவாக்கப்பட்டவை? தூண்களிலும் பாறைகளிலும் என்ன எழுதப்பட்டிருக்கிறது? ஆர்வத்தோடு பலர் ஆராயத் தொடங்கினார்கள்.

ஜேம்ஸ் பிரின்ஸெப்பின் ஆய்வு

அவர்களில் ஒருவர் ஆங்கிலேயரும் பழம்பொருள் ஆய்வாளருமான ஜேம்ஸ் பிரின்ஸெப். அதிசய எழுத்துகளைக் கண்டறியும் பணியில் இவர் இறங்கியிருக்கிறார் என்பதைத் தெரிந்துகொண்டு, பல அதிகாரிகள் தங்களுக்குக் கிடைத்த துப்புகளை அவருக்கு அனுப்பிவைக்க ஆரம்பித்தனர். ஒருநாள் அலகாபாத் கோட்டையில் அசோகர் தூணின் ஒருபகுதி கண்டுபிடிக்கப்பட்டது. டெல்லி சுல்தான் ஏற்கெனவே கண்டுபிடித்திருந்த தூணின் சாயலை அது கொண்டிருந்தது. சமஸ்கிருத அறிஞரின் உதவியோடு தூணில் உள்ள எழுத்துகளைப் புரிந்துகொள்ள பிரின்ஸெப் முயலும்போதே, வடக்கு பிஹாரில் மற்றொரு தூண் கண்டறியப்பட்டது. அதில் உள்ள எழுத்துகளை ஆங்கிலேயர் ஒருவர் பிரதியெடுத்து பிரின்ஸிப்புக்கு அனுப்பி வைத்தார். இதற்கிடையில் மற்றொரு ஆங்கிலேயர் சாஞ்சி தூபத்தைச் சுற்றியுள்ள கைப்பிடிச் சுவற்றில் சில எழுத்துகள் பொறிக்கப்பட்டிருந்ததைக் கண்டுபிடித்து, பிரதியெடுத்து அனுப்பி வைத்தார்.

பிரின்ஸெப்பால் ஒரேயொரு எழுத்தைக்கூட இதுவரை படிக்க முடியவில்லை என்றாலும், ஒரு முக்கியமான விஷயத்தை அவர் கவனிக்கத் தவறவில்லை. இதுவரை அவருக்குக் கிடைத்த எல்லாப் பிரதிகளும் ஒரே மாதிரியான எழுத்துகளைக் கொண்டிருந்தன. ஒரே விநோதமான மொழியின் ஒரே எழுத்துரு. எனில், இதை ஒருவர்தான் எல்லா இடங்களிலும் நிறுவியிருக்க வேண்டும் என்று பிரின்ஸெப் யூகித்தார். எல்லாப் பாறை எழுத்துகளையும் எல்லாத் தூண் எழுத்துகளையும் ஒன்றாகத் தொகுத்து வைத்துக்கொண்டு ஆய்வைத் தொடர்ந்தார். பிராமி எழுத்தில், பிராகிருத மொழியில் எழுதப்பட்ட கல்வெட்டுகள் அவை என்பதைக் கண்டறிய அவருக்கு நான்காண்டுகள் ஆயின. பழங்காலத்தில் வட இந்தியாவில் பேசப்பட்டு வந்த ஓர் இந்தோ ஆரிய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த மொழி பிராகிருதம். பிராமி அதன் எழுத்துமுறை. இது உறுதியானதும் கல்வெட்டுகளிலிருந்த ‘தேவனாம்பிய’, ‘பியதசி’ ஆகிய சொற்களை இப்போது பிரின்ஸெப்பால் படிக்க முடிந்தது. கல்வெட்டுகளை உருவாக்கியவரின் பெயர் இப்போது அவருக்குத் தெரிந்துவிட்டது என்றாலும் அவர் யார் என்று தெரியவில்லை. பெயரைக் கொண்டு அவர் இலங்கையைச் சேர்ந்த ஒரு மன்னராகத்தான் இருக்க வேண்டும் என்று கருதினார் பிரின்ஸெப்.

இத்தனை பெரிய முன்னேற்றத்தை பிரின்ஸெப் அடைந்துவிட்ட செய்தி இந்தியாவைக் கடந்து பரவத் தொடங்கியது. ஒருநாள் ஜார்ஜ் டர்னர் என்பவர் இலங்கையிலிருந்து பிரின்ஸெப்பைத் தொடர்புகொண்டார். அவர் ஓர் ஆங்கிலேய அதிகாரி. வரலாற்றில் ஆர்வம் கொண்டவர். மகாவசம்சத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர். பிரின்ஸெப் குறிப்பிட்ட தேவநாம்பிய பியதசி எனும் பெயர் பவுத்த இலக்கியங்களிலும் இடம்பெற்றிருப்பதை அவர் பகிர்ந்துகொண்டார். இந்தப் பெயரால் அழைக்கப்படுபவர் உண்மயில் ஓர் இந்திய மன்னர்தான் என்றும் பவுத்தத்தைப் பரப்புவதற்கு இலங்கைக்கு ஒரு தூதுக்குழுவை அனுப்பியவர் என்றும் அவர் தெளிவுபடுத்தினார். அந்த இந்திய மன்னருக்கு இன்னொரு பெயரும் இருக்கிறது என்று சொன்னார். அது - அசோகர்!

(விரியும்)

ஆதாரங்கள்:

1) Ashoka: The Search for India's Lost Emperor, Charles Allen, Little Brown and Company, 2012

2) Ashoka and His Inscriptions, B.M. Barua, New Age Publishers Ltd.

3) Ashoka and the Decline of the Mauryas, Romila Thapar, 3rd Edition, Oxford University Press, 2018

4) India : A History, John Keay, Harper Press

மருதன், எழுத்தாளர். ‘ரொமிலா தாப்பர்: ஓர் அறிமுகம்’, ‘ஹிட்லர்’, ‘ஹிட்லரின் வதைமுகாம்கள்’, ‘அகதிகள்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: marudhan@gmail.com

Related Stories

No stories found.