அசோகர் - 11: கலிங்கப் போர்

அசோகர் - 11:  கலிங்கப் போர்

அசோகர் தொடுத்த ஒரே போர் இதுதான். அசோகர் கலிங்கத்தை என்ன செய்தார், பதிலுக்குக் கலிங்கம் அசோகரை என்ன செய்தது - இரண்டுமே ஆரம்பப் பள்ளிப் பாடப் புத்தகங்களில் இடம்பெற்றுவிட்ட செய்திகள். பண்டைய இந்திய வரலாற்றில் நமக்கு அறிமுகமாகும் முதல் பெரும் போர் இதுவே. இப்போர் குறித்து அசோகரே வாய் திறந்து பேசுகிறார் என்பதால், ஆதாரம் குறித்து அஞ்ச வேண்டியதும் இல்லை. இருந்தும் கலிங்கப் போர் குறித்து நம்மிடம் தெளிவைவிடத் தெளிவின்மையே மிகுதி. தெரிந்தது என்று நாம் உறுதியாக நம்பிக்கொண்டிருக்கும் பகுதிகளும்கூட விவாதத்துக்குரியவையாக மாறிவிட்டன.

அடுக்கடுக்கான கேள்விகள்

முடிசூடி 8 ஆண்டுகள் கழித்து கலிங்கத்தின்மீது போர் தொடுக்க வேண்டிய அவசியம் ஏன் வந்தது அசோகருக்கு? நந்தர் வம்சத்தினர் ஏற்கெனவே கலிங்கத்தைக் கைப்பற்றிவிட்டனர் என்று பார்த்தோம். எல்லையை விரிவாக்குவதுதான் நோக்கம் என்றால், மகதத்தின் பிடியில் இல்லாத ஒரு புதிய நாட்டையல்லவா அசோகர் நாடிச் சென்றிருக்க வேண்டும்? தன் ஆட்சியின் ஒரு பகுதியாக ஏற்கெனவே மாறிவிட்ட கலிங்கத்தை மறு ஆக்கிரமிப்பு செய்ய வேண்டிய அவசியம் ஏன் நேர்ந்தது அசோகருக்கு? கலிங்கத்தை ஆண்ட மன்னரோடு அசோகருக்குப் பகையா? போர் தொடுக்க வேண்டிய அளவுக்கு அப்படி என்ன பகை? கலிங்கத்தை அப்போது ஆண்டு வந்த மன்னர் யார்? அவரைப் பற்றி நமக்கு என்ன தெரியும்? கலிங்கப் போர் குறித்து நம்மிடமிருக்கும் ஒரே முக்கிய ஆதாரம் அசோகரின் கல்வெட்டு என்று பார்த்தோம். அது எந்த அளவுக்குத் துல்லியமானது? கலிங்கப் போர் ஏற்படுத்திய அழிவுகளைக் கண்டு மனம் கலங்கி அசோகர் பவுத்தத்தைத் தழுவினார் என்று சொல்லப்படுவதை, ஏன் சில வரலாற்றாசிரியர்கள் ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள்?

இந்தக் கேள்விகளில் சிலவற்றுக்கு ஊகங்கள் பதில்களாகக் கிடைக்கின்றன என்றால், சிலவற்றை ஊகிக்கக்கூட முடியவில்லை. அசோகர் ஏன் கலிங்கத்தின்மீது போர் தொடுத்தார் எனும் கேள்விக்கு ஹெச்.சி. ராய்சவுத்ரி முன்வைக்கும் ஊகம் பின்வருமாறு. கலிங்கம் மகதத்தின் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டிருக்க வேண்டும். அசோகரின் அதிகாரத்துக்குச் சவால்விடும் வகையில் தன்னை ஒரு சுதந்தர நாடாக அறிவித்துக்கொண்டிருக்க வேண்டும். பிந்துசாரர் காலத்தில் இது நடந்திருக்க வேண்டும். தந்தை இழந்த கலிங்கத்தை மீளவும் பிடிக்குள் கொண்டுவரும் பொருட்டு அசோகர் கலிங்கத்தை மறு ஆக்கிரமிப்பு செய்தார். இதை வேறு சிலரும் ஏற்கின்றனர். சந்திரகுப்தர் காலம் தொட்டே கலிங்கம் தன் பலத்தை வளர்த்துக்கொள்ளும் முயற்சிகளை மேற்கொண்டிருக்க வேண்டும். கலிங்கம் வளர்ந்துகொண்டே போனால், மவுரியப் பேரரசு தன் செல்வாக்கை இழக்க நேரிடும் என்பதை உணர்ந்து அசோகர் கலிங்கத்தைப் போரிட்டு அழித்தார்.

ஊகங்கள்

கலிங்கத்தின் புவியியல் முக்கியத்துவத்தையும் அதன் வாயிலாக அதிகரித்த அதன் பொருளாதார பலத்தையும் சிலர் கவனப்படுத்துகின்றனர். மலாய், ஜாவா, இலங்கை போன்ற பகுதிகளோடு கலிங்கம் வணிகத் தொடர்பு கொண்டிருந்தது. கலிங்கத்தின் துறைமுகங்கள் பிற பகுதிகளைக் காட்டிலும் செழிப்பாக இருந்தன. நல்ல வரி வருவாயும் ஈட்டித்தந்தன. கங்கைப் பள்ளத்தாக்கை தக்காணத்தோடு இணைக்கும் வணிக வழித்தடங்களைக் கலிங்கம் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. இதனால் வணிகர்களின் விருப்பத்துக்குரிய ஒரு கேந்திரமாக கலிங்கம் திகழ்ந்திருக்க வேண்டும். துறைமுகங்களைப் பாதுகாக்க கப்பல் படைகள் நிறுத்தப்பட்டிருக்க வேண்டும். மேற்கூறிய காரணங்களால் மவுரிய அதிகாரத்துக்கு உட்பட்ட நாடுகளிலேயே பொருளாதார பலமும் ஆயுத பலமும் கொண்ட சக்தியாக கலிங்கம் மலர்ந்திருக்க வேண்டும். இந்தச் செல்வாக்கால் உந்தப்பட்டு மகதத்தின் மேலாதிக்கத்தை கலிங்கம் எதிர்த்திருக்கலாம். நாம் ஏன் மகதத்துக்குக் கட்டுப்பட வேண்டும், இவ்வளவு வளம் கொண்ட நாம் ஏன் தனி நாடாக இருக்கக் கூடாது என்று நினைத்திருக்கலாம். இந்த உணர்வு உள்நாட்டுக் கலகமாக வெடிப்பதற்கு முன்பு கலிங்கத்தை அழுத்தி அதனிடத்தில் வைக்க வேண்டிய அவசியம் அசோகருக்கு நேர்ந்திருக்கலாம்.

கலிங்கம் நினைத்திருந்தால், பாடலிபுத்திரத்துக்கும் மத்திய இந்தியாவுக்குமான தொடர்பைத் துண்டிக்கும் அளவுக்குச் சென்றிருக்க முடியும். அதற்கான வலுவை கலிங்கம் பெற்றிருந்தது. கலிங்கத்தோடு போரிடும் நோக்கம் அசோகரிடம் ஆரம்பத்தில் இருந்திருக்காது. பாடலிபுத்திரத்தோடு இணக்கமாக இருக்குமாறு அவர் கலிங்கத்து மன்னரைக் கேட்டுக்கொண்டிருக்க வேண்டும். அவர் வேண்டுகோளை கலிங்க மன்னர் ஏற்க மறுத்திருக்க வேண்டும். இதனால் சினம் கொண்ட அசோகர், கலிங்கத்தின்மீது படையெடுத்துச் சென்றதோடு பெரும் அழிவையும் அங்கே ஏற்படுத்தினார் என்பது இன்னொரு ஊகம்.

‘உள்ளதிலேயே பெரிய யானைப் படை கலிங்கத்தில்தான் இருக்கிறது. கலிங்கத்தின் பலம் இது. யானைப் படை இருப்பதால்தான் கலிங்கத்தை யாராலும் ஆக்கிரமிக்க முடியவில்லை’ என்கிறார் கிரேக்க வரலாற்றாசிரியர் டயோடரஸ் (பொஆமு 1-ம் நூற்றாண்டு). இந்திய யானைகளில் சிறந்தவை கலிங்கத்து யானைகள் என்கிறது அர்த்தசாஸ்திரம். கலிங்கம் பற்றிய குறிப்புகள் பண்டைய பர்மாவிலும் காணக்கிடைக்கின்றன என்றும் அவற்றின் அடிப்படையில் கலிங்கம் தன் ஆட்சி அதிகாரத்தை பர்மாவில் செலுத்தியிருக்கலாம் என்றும் சிலர் வாதிடுகின்றனர். இந்தியாவுக்கு மிக அருகில் இருந்ததால் கடல் வழியாகவும் நிலம் வழியாகவும் இந்திய வணிகர்கள் நீண்ட காலமாகவே பர்மாவுக்குச் சென்று வந்திருக்கின்றனர். கலிங்கம் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி பர்மாவின் சில பகுதிகளைத் தன் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வந்திருக்கலாம் என்பது இவர்கள் வாதம். கிரேக்கக் கணிதவியலாளரும் புவியியலாளருமான தாலமியின் குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டு இந்த முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.

காருவாகி பற்றிய கல்வெட்டு, அலகாபாத்
காருவாகி பற்றிய கல்வெட்டு, அலகாபாத்

கல்வெட்டு சொல்லும் வரலாறு

பொருளாதாரம், அரசியல் பகை எல்லாவற்றையும் ஒதுக்கித் தள்ளிவிட்டு ஒரு கதை உலவிக்கொண்டிருக்கிறது. அதன்படி அசோகர், கலிங்கத்தைச் சேர்ந்த ஒரு மீனவரின் மகளான காருவாகியைக் காதலித்திருக்கிறார். ஆனால், கலிங்கத்து இளவரசருக்கு காருவாகியை ஏற்கெனவே பேசி முடித்திருக்கிறார்கள். இதனால் சினம் கொண்ட அசோகர் கலிங்கத்தோடு போரிட்டு, இளவரசனை அழித்துவிட்டு தன் காதலியைக் கவர்ந்துகொண்டு பாடலிபுத்திரம் விரைந்திருக்கிறார். சிறிதும் நம்பும்படியாக இல்லை என்பதால் இதை வரலாற்றாசிரியர்கள் பொருட்படுத்தவில்லை. ஆனால், கதையில் வரும் பெயர் உண்மை. காருவாகி என்றொரு ராணி அசோகருக்கு இருந்திருக்கிறார். இவரைப் பற்றிய கல்வெட்டுச் சான்றுகளும் இருக்கின்றன. ஆனால், கலிங்கப் போருக்கான காரணம் அவரல்ல. மற்றொரு கதையின்படி, சைவரான அசோகர், பவுத்தர்கள் நிரம்பிய கலிங்கத்துக்குப் பாடம் புகட்டும் வகையில் புனிதப் போரை நடத்தி பவுத்தர்களை அழித்திருக்கிறார். ஆதாரமற்ற இந்தக் கதையும் பொருட்படுத்தத்தக்கதல்ல.

தரவுகள்படி நமக்கு உறுதியாகத் தெரிந்தது ஒன்றுதான். அசோகரின் படைகள் பொஆமு 260 வாக்கில் கலிங்கத்தை நோக்கி முன்னேறத் தொடங்கியிருக்கின்றன. அசோகரின் வாழ்வில் துல்லியமான ஆண்டு கணக்கோடு நமக்குக் கிடைக்கும் முதல் குறிப்பு இதுவே. 13-வது பெரும்பாறை கல்வெட்டு என்று அழைக்கப்படும் அசோகர் கல்வெட்டின்மூலம்தான், கலிங்கப் போரை நாம் சற்றே விரிவாக அறிந்துகொள்கிறோம். அசோகரின் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்ட கதையையும் பெயரிடப்பட்ட முறையையும் பின்னால் பார்க்கப்போகிறோம் என்பதால், இப்போதைக்குப் போர் தொடர்பான கல்வெட்டை மட்டும் எடுத்துக்கொண்டு ஆராய்வோம். முடிசூடிக்கொண்ட (பொஆமு 269-268) ஒன்பதாம் ஆண்டு கலிங்கப் போரைத் தொடங்கியதாக, அசோகர் இந்தக் கல்வெட்டில் அறிவிக்கிறார்.

கலிங்கப் போரைக் குறிப்பிடும் கல்வெட்டு...
கலிங்கப் போரைக் குறிப்பிடும் கல்வெட்டு...

போருக்கான திட்டமிடல்கள், தயாரிப்புகள் ஆகியவற்றை முன்கூட்டியே அசோகர் தொடங்கியிருப்பார் என்கிறார் நயன்ஜோத் லாஹிரி. எதிரியின் பலம் என்ன, எதிர்கொண்டு வீழ்த்தும் மகதத்தின் பலம் என்னவாக இருக்கவேண்டும், எத்தகைய போர் உத்திகள் கையாளப்படவேண்டும் போன்றவை போக கலிங்கத்துக்கு எந்த வழித்தடத்தில் போகவேண்டும், எத்தகைய சவால்களை வழியில் சந்திக்கவேண்டியிருக்கும் என்பதையும் அசோகர் ஆலோசித்துத் திட்டமிட்டிருக்கவேண்டும். போர் எப்போது தொடங்கப்படவேண்டும் என்பதை முடிவு செய்வது எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு முக்கியம், பயணத்தை எப்போது தொடங்க வேண்டும் என்பதை முடிவு செய்வதும். கலிங்கம் வெப்பத்துக்குப் பெயர் போன இடம் என்பதால், பயணத்துக்கும் போருக்கும் அசோகர் குளிர்காலத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்கிறார் லாஹிரி.

படை பலம்

அசோகரின் படை பலம் என்னவென்று நமக்குத் தெரியாது என்பதால், சந்திரகுப்தரின் படை பலத்தைக் கொண்டே அசோகரின் வலிமை மதிப்பிடப்படுகிறது. குதிரைப் படை, யானைப் படை, வில்லாயுதமும் ஈட்டியும் ஏந்திய காலாட் படை மூன்றும் இருந்தன. 3 படைகளிலிருந்தும் போதுமான வீரர்களை அசோகர் திரட்டியிருப்பார். வாள் முதல் பெரும் பாறாங்கற்களை எய்தும் இயந்திரம்வரை அனைத்தும் வண்டிகளில் வைத்து எடுத்துச் செல்லப்பட்டிருக்கும். வீரர்களும் விலங்குகளும் அணி, அணியாகத் திரண்டு ஊர்வலம் போல் நடைபோட்டிருப்பார்கள். வீரர்களுக்கான உணவு, குதிரை, யானைகளுக்கான உணவு இரண்டும் தனியே சுமந்துச் செல்லப்பட்டிருக்கும். பாடலிபுத்திரத்திலிருந்து ஒரு பெரும்பகுதியே புறப்பட்டுச் சென்றது போல் இருந்திருக்கும். ஆட்களும் அதிகம், விலங்குகளும் அதிகம், சுமந்துச் செல்லும் எடையும் அதிகம் என்பதால் அசோகரின் ராணுவம் பொறுமையாகவே முன்னேறிச் சென்றிருக்கும் என்கிறார் நயன்ஜோத் லாஹிரி. பாடலிபுத்திரத்திலிருந்து சுமார் 900 கி.மீ தொலைவில் அமைந்திருந்தது கலிங்கம். அன்றுள்ள சூழலில் அசோகரின் படைகள் அதிகபட்சமாக ஒரு நாளைக்கு 20 கிலோமீட்டர் பயணம் செய்திருக்கலாம். கலிங்கத்தை அடைவதற்கு 5 அல்லது 6 வாரங்கள் தேவைப்பட்டிருக்கும் என்று கணக்கிடுகிறார் லாஹிரி.

அசோகரின் படைபலம் தெரியாவிட்டாலும் மெகஸ்தனிஸின் குறிப்புகள்மூலம் கலிங்கத்தின் படைபலம் நமக்குத் தெரியும் என்கிறார் ஆர்.கே. முகர்ஜி. ‘காலாட்படையில் 60,000 வீரர்கள், குதிரைப்படையில் 1,000 பேர், 700 போர் யானைகள்.’ மெகஸ்தனிஸ் காலத்துக்குப் பிறகு கலிங்கத்தின் பலம் மேலும் அதிகரித்திருப்பதை அசோகர் கல்வெட்டு அளிக்கும் இழப்பு எண்ணிக்கையை வைத்து அறிந்துகொள்ள முடிகிறது என்கிறார் முகர்ஜி.

கலிங்கத்துக்கு எந்த வழியைத் தேர்ந்தெடுத்திருப்பார்கள் என்பதையும் பலவிதங்களில் வரலாற்றாசிரியர்கள் கற்பனை செய்திருக்கிறார்கள். முதலாவது, பூரி ஜெகந்நாதர் கோயில் செல்வதற்கு, பிற்காலத்தில் யாத்திரிகள் பயன்படுத்திய பிரபலமான வழித்தடம். கங்கையின் வலதுபக்கக் கரையோரம் முன்னேறி வங்காளம் வழி மித்னாப்பூரை அடைந்து, அங்கிருந்து ஒடிசாவின் மகாநதி கழிமுகத்தை அடைவது முதல் வழி. 2-வது வழி, சத்தீஸ்கரை அடைந்து தெற்கு முனையிலுள்ள கஞ்சம்-ஸ்ரீகாகுளம் வழியே கலிங்கத்தை அடைவது. அநேகமாக இரண்டில் ஒன்றை அசோகரின் படைகள் பயன்படுத்தியிருக்கலாம் என்கிறார் லாஹிரி.

இழப்பின் கனம்

கலிங்கப் போர் எவ்வளவு காலம் நடைபெற்றது என்று தெரியவில்லை. அசோகரின் படைகளை கலிங்க மன்னர் எதிர்பார்த்திருந்தாரா அல்லது வந்தவுடன் கண்டு திகைத்து நின்றுவிட்டாரா? எவ்வளவு தீரத்தோடு அசோகரை எதிர்கொண்டு போரிட்டார் அவர்? கலிங்க மன்னரை அசோகர் தொடக்கத்திலேயே வென்றுவிட்டாரா அல்லது போராடி வீழ்த்தினாரா? எதுவும் தெரியாது. அசோகரின் கல்வெட்டு முழுக்க, முழுக்க இழப்பையே முதன்மைப்படுத்துகிறது. போரின் மையம் வெற்றியோ தோல்வியோ அல்ல, இழப்புதான் என்று அவர் சொல்வது போல் இருக்கிறது. மகதம் எவ்வாறு கலிங்கத்தை வென்றது என்று நான் விவரிக்கப்போவதில்லை. மகதம் எவ்வாறு வெற்றிகரமாக கலிங்கத்தை இணைத்துக்கொண்டது என்பதை நான் விவரிக்கப்போவதில்லை. எங்கள் வியூகங்களை நான் விவரித்துக்கொண்டிருக்கப்போவதில்லை. கலிங்க மன்னரின் தோல்வியைச் சிறுமைப்படுத்தியோ எங்கள் வீரர்களின் சாகசங்களை வானளவு உயர்த்தியோ நான் பேசப்போவதில்லை. இழப்புகளைப் பற்றியே பேசப்போகிறேன். நான் ஏற்படுத்திய சேதங்களிலிருந்து என்னால் மீண்டுவர முடியவில்லை. என் இதயம் நான் ஏற்படுத்திய வலிகளால் துவண்டுபோய்விட்டது. இதுதான் போர். இதை மட்டும்தான் நான் பேசப்போகிறேன்... என்று அசோகர் சொல்வது போல் இருக்கிறது.

அசோகர் அளிக்கும் இழப்பு எண்ணிக்கை பின்வருமாறு. ‘கலிங்கப் போரில் 1 லட்சம் பேர் கொல்லப்பட்டனர். இதைக் காட்டிலும் பல மடங்கு அதிக எண்ணிக்கையில் போருக்குப் பிறகு பலர் இறந்துபோயிருக்கின்றனர். 1,50,000 பேர் கலிங்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கின்றனர்.’ முதலாவது எண்ணிக்கை, நேரடியாகப் போர்க்களத்தில் அசோகரின் படைகளால் கொல்லப்பட்ட கலிங்கத்து வீரர்களின் எண்ணிக்கை என்பது புரிகிறது. கலிங்க மன்னரும் இதில் அடக்கம். 1 லட்சத்தைக் காட்டிலும் பல மடங்கு அதிகமானவர்கள் போருக்குப் பிறகு எப்படி இறந்திருப்பார்கள்? போர்க்காயங்களோடு தப்பிப் பிழைத்தவர்கள் அதன்பின் மருத்துவ உதவி கிடைக்காமல் இறந்திருக்கலாம். கலிங்கத்தின் பெரும் பகுதி அழிக்கப்பட்டதைத் தொடர்ந்து விவசாயம் பொய்த்திருக்கலாம். உணவுக் கிடங்குகள் சேதமடைந்திருக்கலாம். பசியும் நோயும் பெருகி, பஞ்சம் ஏற்பட்டிருக்கலாம். இவற்றின் காரணமாகப் பல லட்சம் பேர் இறந்துபோயிருக்கலாம்.

அழித்தொழிக்கும் போர்

அசோகரின் வாழ்வையும் சிந்தனையையும் புரட்டிப்போட்ட போர் என்பதால், அதைப் பேசும் கலிங்கத்துக் கல்வெட்டுக்குக் கூடுதல் கவனம் கொடுத்து வரலாற்றாசிரியர்கள் ஆராய்ந்திருக்கிறார்கள். ராதாகுமுத் முகர்ஜியின் பார்வையை முதலில் எடுத்துக்கொள்வோம். ஒரு போர் மனிதர்களை எப்படியெல்லாம் அழிக்கும் என்பதை விரிவாக நமக்கு வெளிப்படுத்தும் முதல் பெரும் சாட்சியமாக அசோகரின் கல்வெட்டு திகழ்கிறது. போரின் கரங்கள் நேரடியாக மட்டும் மனிதர்களைத் தாக்கியழிப்பதில்லை. மறைமுகமாகவும் அது நீண்டு சென்று பலரை அழிக்கிறது. வாளேந்தியர்களை மட்டுமல்ல, போர்க்களத்தையே நெருங்காதவர்களையும் அது அழிக்கிறது. முறையாகப் பயிற்சிகள் எடுத்துக்கொண்டு ஆயுதங்களோடு திரண்டு வரும் வீரர்களை மட்டுமல்ல; எந்த வகையிலும் போரில் ஆர்வம் காட்டாத, எந்த வகையிலும் போரோடு தொடர்புகொள்ளாத, போரை வெறுக்கும், போரின் நிழலையும் கண்டு அஞ்சியொதுங்கி ஓடும் சாமானிய, எளிய, அப்பாவி மக்களையும் போர் கண்டுபிடித்து அழிக்கிறது. இந்த உண்மையை உணர்ந்த முதல் பேரரசர் அசோகர்.

மனிதர்களை மட்டுமல்ல அவர்கள் உண்டாக்கி வைத்திருக்கும் அமைப்புகளையும் அவர்கள் ஏற்படுத்தி வைத்திருக்கும் உறவுகளையும் போர் அழிக்கிறது. குடும்பத்தை அழிக்கிறது. சமூகத்தைக் குலைக்கிறது ஒருவருக்கு நெருக்கமான அனைவரையும் அவரிடமிருந்து பறித்தெடுக்கிறது. பிராமணர், சிரமணர், நாத்திகர் என்று பாகுபாடு காட்டுவதில்லை போர். ஆண், பெண், முதியோர், நண்பர், உறவினர், பணியாளர் அனைவரையும் ஒன்றுபோல் பாவித்து, ஒன்றுபோல் கொல்கிறது போர். மகிழ்ச்சியோடு வாழ்பவர்களை, சமூகத்தோடு இணக்கமாக இருப்பவர்களைத் தேடிப்பிடித்துக் கொல்கிறது போர். உடலை மட்டுமல்ல ஒருவருடைய உள்ளத்தையும் சேர்த்தே காயப்படுத்துகிறது போர். இதை நுணுக்கமாக அசோகர் உணர்ந்திருப்பதை அவர் கல்வெட்டு வெளிப்படுத்துகிறது என்கிறார் முகர்ஜி. பிழைத்திருப்போர் உடலால் பிழைத்திருந்தாலும், மனதால் வெகுவாகக் காயமடைந்திருப்பதை அசோகர் நேரடியாகவே கண்டிருக்கிறார். அந்தத் தரிசனம் அவரை உலுக்கியெடுத்திருக்கிறது. போர் எவ்வளவு குரூரமானது, எவ்வளவு ஆழமான அழிவை ஏற்படுத்தக்கூடியது என்பதை கலிங்கத்தின்மூலம் அசோகர் உணர்ந்திருக்கிறார். அவர் ஆளுமையில் புரட்சிகரமான மாற்றமொன்றை கலிங்கம் ஏற்படுத்திவிட்டது என்கிறார் முகர்ஜி.

அசோகரின் கலிங்கப் போர் கல்வெட்டையும் அவருக்கு நிகழ்ந்ததாகச் சொல்லப்படும் மனமாற்றத்தையும் இன்னமும் விரிவாகப் பார்க்க வேண்டியிருக்கிறது.

(விரியும்)

ஆதாரங்கள்:

1) Ashoka in Ancient India, Nayanjot Lahiri, Harvard University Press, 2015

2) Ashoka, R.K. Mookerjee, Motilal Banarsidass Publications, 1962

3) Ashoka and the Decline of the Mauryas, Romila Thapar, 3rd Edition, Oxford University Press, 2018

மருதன், எழுத்தாளர். ‘ரொமிலா தாப்பர்: ஓர் அறிமுகம்’, ‘ஹிட்லர்’, ‘ஹிட்லரின் வதைமுகாம்கள்’, ‘அகதிகள்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: marudhan@gmail.com

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in