அசோகர்- 27: வரலாற்று மனிதர்

அசோகர்- 27: வரலாற்று மனிதர்

பொஆ 1-ம் நூற்றாண்டில் சாஞ்சி தெற்கு நுழைவாயிலில் காணப்படும் தூணொன்றில் அசோகரை இரு மனைவிகள் தாங்கிப் பிடித்திருக்கின்றனர். திஸ்யரக்ஷிதாவால் போதி மரம் வீழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட சோகத்தைக் காட்சிப்படுத்தும் சிற்பம் இது. சிற்பத்துக்குக் கீழே அவர் பெயர் இடம்பெற்றிருக்கவில்லை. சாஞ்சி அசோகர் உருவான பிறகு சுமார் நூறு ஆண்டுகளுக்குப் பிறகு கர்நாடகத்தில் உள்ள கனகனஹள்ளி எனும் இடத்திலுள்ள தூணில் அசோகரின் உருவப்படம் பொறிக்கப்பட்டது. அசோகரின் பாறைக் கல்வெட்டுகளும் இதே இடத்தில்தான் கண்டெடுக்கப்பட்டன. இங்குள்ள சிலையில் அசோகரின் பெயர் பொறிக்கப்பட்டிருந்ததால் சாஞ்சியிலுள்ள சிற்பத்தில் இடம்பெற்றிருப்பவரும் இருவரும் ஒருவரே எனும் முடிவுக்கு வந்து சேர்ந்தனர். சாதவாகன மன்னர்களுக்கு மத்தியில் அசோகரும் தன் மனைவியோடும் பணிப்பெண்களோடும் இடம்பெற்றிருக்கிறார். அருகிலுள்ள மற்றொரு சிற்பத்தில் மற்றவர்களாடு சேர்ந்து அசோகர் போதி மரத்தை வணங்குகிறார்.

இரு சிற்பங்களுமே போதி மரத்தை மையப்படுத்தி வடிக்கப்பட்டுள்ளன. முதலாவதில் வாடிய போதி மரத்தைக் கண்டு வருந்துகிறார். இரண்டாவதில் போதியைத் தொழுகிறார். இரண்டுமே பவுத்தர்களின் பதிவுகளை மையப்படுத்தி அமைக்கப்பட்டுள்ளதைக் காணமுடிகிறது. இரண்டுமே பவுத்தர்கள் விரும்பும் அசோகரைக் காட்சிப்படுத்துகின்றன.

அசோகர் ஒரு வரலாற்று மனிதர் என்பதால் அவரை அவ்வாறு அணுகுவதுதான் சரியானது. பவுத்தத்தில் அல்லாது, வரலாற்றில் பொருத்திப் பார்க்கும்போதுதான் அவர் பற்றிய நம் பார்வை விரிவடைகிறது என்கிறார் ரொமிலா தாப்பர். நீண்டகாலம் காணாமல் போயிருந்த அசோகர் மீட்டெடுக்கப்பட்டபோது அவரை ஒரு பவுத்த அரசராகவே பலரும் முன்மொழிந்தனர். பின்னர்தான் வரலாற்றாசிரியர்கள் அவரை அகலமாக ஆராயத் தொடங்கினார்கள்.

பண்பாடு, சமயம், நம்பிக்கை, மரபு, தத்துவம் ஆகியவற்றை பண்பாடுகள், சமயங்கள், நம்பிக்கைகள், மரபுகள், தத்துவங்கள் என்று விரித்தெடுத்தார் அசோகர். வேறுபாடுகளை மதிக்க வேண்டும். வேறுபாடுகள் நம் அனைவரையும் கூட்டாக வளப்படுத்தும் என்றார். இந்தியா போன்ற பரந்து, விரிந்த ஒரு நிலப்பரப்பின் உயிர்நாடி பன்முகத்தன்மை. அதை நாம் கொண்டாட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

அசோகரின் தம்மத்திலும் இந்தப் பன்முகத்தன்மையைக் காண முடியும் என்கிறார் தாப்பர். அசோகரின் தம்மத்துக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட அர்த்தங்கள் இருக்கின்றன. பவுத்தம் அவற்றுள் ஒன்று மட்டுமே என்கிறார் தாப்பர். கடவுள், மறுபிறப்பு என்றெல்லாம் பேசியிருக்கிறார் என்றாலும் தனது தம்மத்தை அவர் எந்தவோரிடத்திலும் கடவுளோடு முடிச்சுப்போடவில்லை என்கிறார் தாப்பர். தம்மத்தைப் பின்பற்றினால் மேலுலகம் போகலாம் என்று ஆசை காட்டுவாரே தவிர, கடவுளிடமிருந்துதான் தம்மத்தைப் பெற்றேன் என்று எங்கும் சொல்லவில்லை அவர். ஏற்றத்தாழ்வுமிக்க சமூகத்தில் ஒழுங்கைக் கொண்டுவரும் குறிக்கோளோடு தம்மத்தை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார் அவர். தனிநபர் அறத்தைச் சமூக அறமாக உயர்த்தினார்.

பெற்றோர், குழந்தைகள். மரபு, மரபு எதிர்ப்பு. ஆத்திகம், நாத்திகம். ஆசிரியர், மாணவர். பிராமணர், சிரமணர். செல்வந்தர், வறியவர். எஜமானர், அடிமை - இப்படி முரண்பட்டிருந்த அம்சங்களை எதிரெதிர் நிறுத்தாமல் ஓயாமல் இணைத்துக்கொண்டே இருந்தது அசோகரின் தனித்துவம் என்கிறார் தாப்பர். அவருடைய கல்வெட்டுகளில் இந்தப் பதங்கள் பல இடங்களில் இணைந்து வருவதைக் காணலாம். வர்ண வேறுபாடுகள் இயல்பானவை, ஏற்றத்தாழ்வுகளை ஒன்றும் செய்ய முடியாது என்று கருதப்பட்ட காலத்தில் இரண்டும் இயல்பானவையல்ல என்று சொல்லி சமத்துவத்தை ஒரு மாற்றாக முன்மொழிந்தார்.

நம்மைப் போல் இல்லாதவர்களிடம் கரிசனம் கொள்ள வேண்டும்; அவர்களோடு நெருங்கி உறவாட வேண்டும் என்பது அசோகரின் அணுகுமுறை.

அரசமைப்பில், ஆட்சிமுறையில், நிர்வாகத்தில் அவர் கொண்டுவந்த மாற்றங்கள் புதியவை. தம்மத்தை அவர் அரசியலோடு கலந்தார். போர் தவிர்க்கக்கூடியது. அதிகாரம் இருப்பதால் மேலிழுந்து கீழாக எதையும் திணிக்க முடியும் என்று நம்புவது தவறானது. ‘ராஜா-பிரஜா’ உறவுமுறை ஆண்டான் அடிமை உறவு போல் இருக்க வேண்டியதில்லை. ஓர் அரசர் மக்களை நெருங்கிச் செல்வது சாத்தியம். மக்கள் சுலபமாக அணுகும் இடத்தில்தான் அரசர் இருக்க வேண்டும். பலம் என்பது ஆயுதபலம் மட்டுமல்ல, அன்பும் பலம்தான். வலிமை என்பது வக்கற்றவர்மீது அதிகாரத்தைச் செலுத்துவது அல்ல. அவர்களை மீட்பது.

அசோகர் கல்வெட்டுகளில் மொழிந்தவாறே ஒவ்வொரு முறையும் நடந்துகொண்டார் என்று சொல்ல முடியாது. நடைமுறைக்கும் கனவுக்கும் இடைவெளி இருந்தது. அதை அவர் உணர்ந்திருந்தார். அது அவரைப் பாதித்தது. இடைவெளியை இட்டு நிரப்புவதற்கான முயற்சிகளை விடாமல் மேற்கொண்டாரே தவிர, கனவைத் தூக்கி எறிந்துவிடத் தயாராக இல்லை அவர். தம்மம் கைகொள்வதற்கு கடினமானது என்பதை ஒப்புக்கொண்ட முதல் பேரரசர் அவரே. கடினமாக இருந்தாலும் அதுதான் இலக்கு என்று அறிவித்தவரும் அவரே.

பரந்து விரிந்த தன் ஆட்சிப்பரப்பில் எல்லா இடங்களிலும் ஒரே நிர்வாக முறையைக் கையாள முடியாது என்பதை அசோகர் உணர்ந்திருப்பார். இடத்துக்கு ஏற்றாற்போல், மக்களுக்கு ஏற்றாற்போல் அவர் நிர்வாக முடிவுகளை மாற்றியமைத்திருப்பார் என்று நம்புவதற்கு இடமிருக்கிறது என்கிறார் தாப்பர். மவுரியப் பேரரசு மையப்படுத்தப்பட்ட அரசாக இருந்தது என்பதுதான் தாப்பரின் ஆரம்பக்கட்ட பார்வையாக இருந்தது. அதை அவர் பின்னர் மாற்றிக்கொண்டார். இவ்வளவு பெரிய நிலப்பரப்பை மகதத்தை மட்டும் மையமாகக் கொண்டு ஆண்டிருப்பது சாத்தியமில்லை. கங்கைச் சமவெளி வேண்டுமானால் மையப்படுத்தப்பட்ட அரசின்கீழ் வந்திருக்கும். மையத்தைவிட்டு விலகியுள்ள காந்தாரமும் கலிங்கமும் கர்நாடகமும் சௌராஷ்டிரமும் மையத்தோடு இயல்பாகச் சேராது. சற்றே இளகிய முறையில் அவற்றைக் கையாள வேண்டும் என்பதை அசோகர் உணர்ந்திருப்பார் என்கிறார் தாப்பர். வனத்தில் வசித்த பழங்குடி மக்களை இறுதிவரை அசோகரால் பிடிக்குள் கொண்டுவர முடியவில்லை.

நம்மைப் போல் இல்லாதவர்களிடம் கரிசனம் கொள்ள வேண்டும்; அவர்களோடு நெருங்கி உறவாட வேண்டும் என்பது அசோகரின் அணுகுமுறை. கிரேக்க, அராமைக் மொழி பேசுபவர்களையும் உள்ளடக்கிய இந்தியா அவருடையது. பெரும்பான்மை மொழி, பெரும்பான்மை பண்பாடு, பெரும்பான்மை சமயம் போன்ற அடையாளங்களுக்குக் கூடுதல் முக்கியத்துவம் அளிக்க மறுத்தார். வம்சம், இனம், தகுதி போன்றவற்றை நாம் கடந்து செல்ல வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

பவுத்தத்தைக் கடந்தும் அசோகரின் தாக்கம் பரவியிருந்தது. மகாபாரதத்தில் வன்முறைக்கு எதிராக யுதிஷ்டிரர் முன்வைக்கும் வாதங்கள் அசோகரின் 13-ம் பெரும்பாறைக் கல்வெட்டை நினைவுபடுத்துகிறது என்கிறார் தாப்பர். சத்திரிய தர்மத்தைக் காட்டிலும் பாவகரமான இன்னொன்று உலகில் இல்லை; எண்ணிலடங்கா மக்களை ஒரு மக்கள் கொல்வது ஏற்கத்தக்கதே அல்ல என்று யுதிஷ்டிரர் சொல்லும்போது கலிங்கப் போரைக் கண்ட அசோகரின் கலக்கம்தான் அவர் குரலில் வெளிப்படுகிறது.

காஷ்மீரின் வரலாற்றைச் சொல்லும் ராஜதரங்கிணியை இயற்றிய கல்ஹனர் (12-ம் நூற்றாண்டு) அசோகரைக் குறிப்பிடுவதை தாப்பர் சுட்டிக்காட்டுகிறார். சமணக் கொள்கைகளைப் பின்பற்றியவர், முழு பூமியையும் ஆண்டவர், தூபிகள் பல எழுப்பியவர் என்று அசோகரை அழைக்கிறார். செல்வச்செழிப்புள்ள ஸ்ரீநகரை நிர்மாணித்தவர். சைவக் கோயிலொன்றை அழிவிலிருந்து மீட்டவர் என்றும் குறிப்பிடுகிறார். குப்தர் காலத்திலும் அதன் பின்னரும் மறக்கடிக்கப்பட்டிருந்த அசோகரை மீண்டும் மக்களுக்கு நினைவூட்டியவர் என்று கல்ஹனரைச் சொல்லலாம் என்கிறார் தாப்பர்.

மவுரியப் பேரரசின் வீழ்ச்சிக்கு அசோகரின் மென் அணுகுமுறைதான் காரணம் என்கிறார் டி.ஆர்.பண்டார்கர். தம்மம் என்னவோ உயர்வானதுதான். ஆனால் அதை அரசியல் கொள்கையாக அசோகர் வரித்துக்கொண்டது பெரும் அழிவை ஏற்படுத்திவிட்டது என்கிறார் அவர். அமைதி, அகிம்சை, அறம் போன்ற அசோகரின் விழுமியங்களை இந்தியா ஏற்றுக்கொண்டதால்தான் அந்நியர்களின் படையெடுப்புகளை அவர்களால் எதிர்க்க முடியாமல் போய்விட்டது என்று குறைபட்டுக்கொள்பவர்களும் உள்ளனர்.

ஆனால் பி.என்.பருவா இதனை ஏற்கவில்லை என்கிறார் ராஜ்மோகன் காந்தி. மவுரியப் பேரரசின் வீழ்ச்சிக்கு அசோகர் முன்வைத்த அகிம்சைதான் காரணம் என்று ஒரு வாதத்துக்கு ஒப்புக்கொண்டால் குப்தர்களின் அழிவுக்கு என்ன காரணம்? முகலாயப் பேரரசு ஏன் சரிந்தது? அவர்களெல்லாம் போரிடத் தயங்கியவர்களா? ஔரங்கசீப் அகிம்சையை முன்வைத்தவரா? அசோகர் இந்தியாவைப் பலவீனப்படுத்திவிட்டார் என்பது ஏற்கத்தக்க வாதமல்ல. அசோகர் தன் படைகளைக் கலைத்தவரல்லர் என்கிறார் பருவா.

பேரரசுகள் உருவாவதும் சரிவதும் இயல்பானவை அல்லவா? அசோகரின் காலத்துக்குப் பிறகு ஏற்பட்ட சரிவுக்கு அசோகரை எப்படிப் பொறுப்பாக்கமுடியும்? போர் வேண்டாம் என்று சொல்வது பலவீனமா? அமைதியை முன்னிறுத்துவது அழிவை ஏற்படுத்துமா?

(அடுத்த பகுதியுடன் நிறைவுபெறும்)

ஆதாரங்கள்:

1. Revenge & Reconciliation : Understanding South Asian History, Rajmohan Gandhi, Penguin

2. Ashoka in Ancient India, Nayanjot Lahiri, Harvard University Press

3. Ashoka and the Decline of the Mauryas, Romila Thapar, 3rd Edition, Oxford University Press, 2018

4. Ashoka and His Inscriptions, B.M. Barua, New Age Publishers Ltd.

மருதன், எழுத்தாளர். ‘ரொமிலா தாப்பர்: ஓர் அறிமுகம்’, ‘ஹிட்லர்’, ‘ஹிட்லரின் வதைமுகாம்கள்’, ‘அகதிகள்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: marudhan@gmail.com

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in