அசோகர்-26: உள்ளங்கையில் நெல்லிக்கனி

அசோகர்-26: உள்ளங்கையில் நெல்லிக்கனி

அசோகரின் கல்வெட்டுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாகத் தொடங்கினாலும் அநேகமானவை ஒரே இடத்தில்தான் நிறைவடையும். நம்பிக்கை. இனிவரும் காலங்களில் மக்கள் என் சொற்களைப் பொருட்படுத்துவார்கள். இனிவரும் காலங்களில் என் மகன்களும் பேரன்களும் நான் விட்ட இடத்திலிருந்து தொடர்வார்கள். இனிவரும் காலத்தில் மாற்றங்கள் நிகழும். எதிர்வரும் காலம் இன்றுள்ளதைப் போல் இருக்காது. தூண் கல்வெட்டுகளும் அதே நம்பிக்கையோடுதான் நிறைவுகொள்கின்றன. தூண் கல்வெட்டுகளைச் செதுக்கியபோது அசோகர் மூப்படைந்திருந்தார் என்றாலும் அவர் குரலில் எந்த மாற்றமும் இல்லை. கனவிலும்தான். தம்மம் தழைக்க வேண்டும். அது போதும் அவருக்கு.

அதிகாரிகள்மீதும் (ராஜுகர்கள்) நம்பிக்கையோடு இருந்திருக்கிறார். என் மக்கள் நலமாகவும் மகிழ்ச்சியோடும் வாழ்வதை அவர்கள் உறுதி செய்வார்கள். ‘என் குழந்தைகளை நல்ல செவிலியர்கள்போல் கவனித்துக்கொள்வார்கள்’ என்கிறார். யாருக்கு வெகுமதி தர வேண்டும், யாருக்கு என்ன தண்டனை விதிக்க வேண்டும் என்பதை அவர்கள் பொறுப்பில் விட்டு வைத்திருக்கிறேன். அச்சமின்றி, சுதந்தரமாகச் செயல்படுவதால் சரியானதையே அவர்கள் செய்வார்கள் என்று நம்புகிறேன் என்கிறார்.

ஆட்சிக்கு வந்தபிறகு 25 முறை சிறைக் கைதிகளுக்கு மன்னிப்பும் விடுதலையும் அளித்திருக்கிறார். மரண தண்டனை முற்றிலுமாக விலக்கிக்கொள்ளப்பட்டதுபோல் தெரியவில்லை. தண்டனையளிப்பதற்கு முன்பு மூன்று நாட்கள் காத்திருக்க வேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் அந்த மூன்று நாட்களுக்குள் அதிகாரிகளிடம் பேசி, தண்டனையை விலக்கிக்கொள்ளுமாறு செய்யலாம் என்கிறார். இந்த வாழ்வில் இல்லாதுபோனாலும் மறுவாழ்விலாவது தண்டனைக் கைதிகள் மகிழ்ச்சியோடு வாழ வேண்டும் என்பதே என் விருப்பம் என்கிறார்.

இறுதிக் கல்வெட்டுகளில்கூட விலங்குகளையும் பறவைகளையும் அவர் மறக்கவில்லை. வறியவர்களும் பலமற்றவர்களும் வலியோடு இருப்பவர்களும் ஒடுக்கப்பட்டவர்களும் அவர் நினைவுகளில் நிறைந்திருக்கிறார்கள். மக்களைத் தொடர்ந்து நேரில் சென்று சந்திக்க வேண்டும், உரையாட வேண்டும் என்கிறார். இவ்வாறு ஒரு பேரரசர் சொல்லிக்கேட்பது வரலாற்றில் இதுவே முதல் முறை என்கிறார் நயன்ஜோத் லாஹிரி. மாற்றங்களை இரு வழிகளில் கொண்டுவர முயன்றிருக்கிறேன். 1. ஆணையிடுவது மூலமாக. 2. பரப்புரை மூலமாக. இரண்டாவதே சிறந்தது என்பதை என் அனுபவத்தின் அடிப்படையில் கண்டறிந்திருக்கிறேன் என்கிறார். தம்மமாக இருந்தாலும் அதை மக்களே ஏற்கும்படித்தான் செய்ய வேண்டுமே தவிர, வலுக்கட்டாயமாகத் திணிக்கக் கூடாது என்கிறார்.

6 தூண் கல்வெட்டுகளையும் தன் வாழ்வை மொத்தமாகத் தொகுத்து அளிக்கும் ஏழாம் கல்வெட்டையும் வாசித்து முடித்துவிட்டு, அசோகர் அடுத்து என்ன சொல்கிறார் என்று தேடினால், பேரமைதி நம்மைச் சூழ்ந்துகொள்கிறது. அவர் பேச மறுக்கிறார். இறுதிக் கல்வெட்டுக்குப் பின்பும் பத்தாண்டுகள் அசோகர் ஆட்சியில் இருந்திருக்கிறார். ஆனால் ஒரு சொல்லும் இல்லை அவரிடமிருந்து. ஏன் இல்லை என்பதும் தெரியவில்லை. நோய் வாய்ப்பட்டிருந்தாரா? வலுவற்றவராக மாறியிருந்தாரா? அதிகாரம் அவர் கைவிட்டுப் போயிருந்ததா? அசோகரின் இறுதிக் கல்வெட்டு அவர் முடிசூடிய 27-ம் ஆண்டு பொறிக்கப்பட்டிருக்கிறது. பொஆமு 232-ம் ஆண்டு அசோகர் மரணமடைந்தார்.

அசோகரின் வாழ்வில் இடம்பெற்ற ஐந்து பெண்களின் பெயர்கள் நமக்குத் தெரியும். முதலாமவர், தேவி. அவரை ஏற்கெனவே சந்தித்துவிட்டோம். ‘ராணி கல்வெட்டு’ செதுக்கிய காருவாகியையும் பார்த்தோம். மூன்றாமவர், அசோகருக்குப் பிடித்தமானவராகக் கருதப்பட்ட அசந்திமித்ரா. இவரும் பவுத்த நாட்டம் கொண்டவர். அசோகர் முடிசூடிய 29ஆம் ஆண்டு இவர் மரணமடைந்திருக்கிறார். பத்மாவதி மூலம் குணாளன் எனும் மகன் பிறக்கிறான். அசந்திமித்ராவுக்குப் பிறகு திஸ்யரக்ஷா அசோகருக்கு நெருக்கமானவராக மாறுகிறார். மிகவும் அழகானவர் என்றும் மிகவும் பொறாமை குணம் கொண்டவர் என்றும் அசோகாவதானம் இவரை அழைக்கிறது.

திஸ்யரக்ஷாவுக்குப் போதி என்றால் என்னவென்று தெரியவில்லை. ஆனால் அசோகர் எந்நேரமும் போதி குறித்து சிந்தித்துக்கொண்டிருந்ததும், அவ்வப்போது போதிக்கு உயர்ந்த பரிசுகள் அளித்துக்கொண்டிருந்ததும் அவரை எரிச்சலடையச் செய்திருக்கிறது. நிச்சயம் போதி ஒரு பெண்ணாகவே இருக்க வேண்டும் என்று முடிவு செய்து, அப்பெண்ணை அழிக்க ஒரு சூனியக்காரியை நாடியிருக்கிறார். ஒரு முள்ளை எடுத்துக் குத்தியதைத் தொடர்ந்து போதி மரம் பட்டுப்போய் சரிந்துவிடுகிறது.

செய்தி அறிந்து துடிதுடித்துப்போன அசோகர், போதி இறந்தால் நானும் இறந்துவிடுவேன் என்று அரற்றியிருக்கிறார். அதனாலென்ன நான்தான் இருக்கிறேனே என்று திஸ்யரக்ஷா சமாதானப்படுத்தியபோதுதான் என்ன நடந்திருக்கிறது என்பதே அசோகருக்குப் புரிந்திருக்கிறது. ஒரு புனித மரத்தை அழித்துவிட்டாயே என்று அசோகர் கலங்கியதைக் கண்டு திஸ்யரக்ஷா மனம் வருந்தி மீண்டும் சூனியக்காரியிடம் ஓடியிருக்கிறார். மரம் மீட்கப்பட்டது.

பொறாமைக்காரி மட்டுமல்ல அறிவீனம் கொண்டவரும்கூட என்று அசோகாவதானம் கடிந்துகொண்டாலும் அசோகர் மீதான திஸ்யரக்ஷாவின் காதலையும் இக்கதையில் காண முடிகிறது. ஆனால் அவர் காதலும் மாசு கொண்டதுதான் என்கிறது அசோகாவதானம். மகனாகக் கருத வேண்டிய குணாளன்மீதும் காதல் வயப்படுகிறார் திஸ்கரக்ஷா. குணாளன் இசைந்து போகாததால் அவன்மீது சினம் கொள்கிறார். இதற்கிடையில் தட்சசீலத்தில் கலகம் வெடிக்க, அசோகர் குணாளனை அங்கே அனுப்புகிறார். அனுப்பிய கையோடு கடுமையான நோய் அவரைத் தாக்குகிறது. வயிற்று வலி, வாந்தி போன்றவை தீவிரமடைகின்றன. மரணம் நெருங்கிவருவதை உணர்ந்ததும் குணாளனுக்குச் செய்தி அனுப்புகிறார்.

மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் துக்கத்தை உணர்ந்தாக வேண்டும். பேரரசனாக இருந்தாலும் அரை நெல்லிக்கனியோடு (சில இடங்களில் அரை மாங்கனி) அசோகர் இறந்தாக வேண்டியிருக்கிறது.

குணாளன் அரசனாவதைத் தடுக்க ஆட்களை அனுப்பி அவர் கண்களைத் தோண்டுகிறார் திஸ்யரக்ஷா. அசோகர் செய்தி அறிந்து உன் விழிகளைத் தோண்டி, உன்னுடலைக் கிழிக்கிறேனா இல்லையா பார் என்று வீறுகொண்டு எழுகிறார். குணாளன் அப்பாவைச் சமாதானப்படுத்துகிறான். அவன் நல்ல குணத்துக்கு ஏற்ப பார்வை கிடைத்துவிடுகிறது. அசோகர் திஸ்யரக்ஷாவை எரித்துக்கொல்லுமாறு ஆணையிடுகிறார். எதற்கும் இருக்கட்டும் என்று தட்சசீலத்து மக்களையும் எரித்துக்கொல்கிறார்.

அசோகரின் மர்ம நோய் என்னானது? அசோகருக்கு ஏற்பட்ட அதே நோய் இன்னொருவனுக்கும் ஏற்படுகிறது. இதை அறிந்த திஸ்யரக்ஷா அந்த நோயாளியை வரவழைத்து அவனைக் கொல்கிறார். பிறகு வயிற்றைக் கீறிப் பார்க்கும்போது உள்ளே ஒரு பெரிய புழு தென்படுகிறது. மிளகு கொடுத்துப் பார்க்கிறார். அது சாகவில்லை. இஞ்சியும் மிளகும் அளிக்கிறார். அப்போதும் சாகவில்லை. இறுதியில் வெங்காயத்தைக் கொடுக்க அதைத் தின்று புழு செத்துப்போகிறது. ஓடோடிச் சென்று, அசோகருக்கும் வெங்காயத்தைக் கொடுக்க அவர் வயிற்றிலிருந்த புழு இறந்து, அவர் மீண்டுவருகிறார். உனக்கு என்ன வேண்டும் கேள் என்று அசோகர் சொன்னபோது, ஒரு வாரம் நான் அரசியாக இருக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார் திஸ்கரக்ஷா. அசோகரும் ஒத்துக்கொள்ள, பதவியில் அமர்ந்த கையோடு குணாளனின் கண்களைப் பறித்திருக்கிறார் தஸ்யரக்ஷா.

இந்தக் கதைகளின் அடிப்படை எளிமையானது என்கிறார் ரொமிலா தாப்பர். யாரெல்லாம் பவுத்தத்தை ஆதரித்தார்களோ அவர்களெல்லாம் வானிலும் மேலானவர்கள். பவுத்தத்தை ஆதரிக்க மறுக்கும் அனைவரும் பாதாளத்துக்கும் கீழே இருக்க வேண்டியவர்கள். ஒரு பெண் போதி மரத்தை இலங்கை எடுத்துச்சென்று அங்கே செழிக்கச் செய்திருக்கிறார். இன்னொரு பெண்ணோ போதி மரத்தைக் குத்திக் கொன்றிருக்கிறாள். ஒரு பெண் கடவுளாகவோ சாத்தானாகவோ மட்டும் இருக்க முடியும் என்கிறது அசோகாவதானம். சிங்களப் பவுத்தப் பிரதிகளும் இதை ஒப்புக்கொள்கின்றன.

கலகத்தை அடக்க தட்சசீலம் சென்றவர் அசோகர். திரும்பி வந்தபோது நோயுற்றுக் கிடந்தவர் பிந்துசாரர். இரு கதைகளையும் குணாளனுக்கும் அசோகருக்கும் பொருத்திவிட்டார்கள். முள் குத்தி போதி மரம் பட்டுப்போகாது. அசோகரின் கரம் பழிவாங்க நீளாது என்று தெரிந்தும் போதி மரத்தைக் கொன்ற பெண்ணை அசோகரைக் கொண்டு தண்டித்திருக்கிறார்கள். மற்றபடி, கதையில் வருவதுபோல் அசோகர் வயிறு தொடர்பான உபாதைகளால் அவதிப்பட்டிருப்பாரா என்று தெரியவில்லை.

அசோகர் தன் சொத்து சுகங்களையெல்லாம் ஒரு மடாலயத்துக்கு அர்ப்பணித்துவிட்டு, குணாளனுக்குப் பொறுப்புகளை வழங்கிவிட்டு முழு ஓய்வில் இருந்தார் என்கின்றன வேறு பதிவுகள். ஒரு நாள் பிக்கு ஒருவர் அசோகரை நாடிவந்தபோது அவருக்கு அளிக்க அசோகரிடம் நெல்லிக்கனி மட்டுமே, அதுவும் பாதி மட்டுமே இருந்ததாம். இறக்கும்போது ஏதுமற்றவராக மட்டுமின்றி மனமுடைந்தவராகவும் அசோகர் இருந்தாராம். அசோகருக்கு உள்ளிருந்தே எதிர்ப்புகள் கிளம்பின. அதிகாரத்தைக் கைப்பற்ற சதி நடந்தது போன்ற கதைகளும் காணக்கிடைக்கின்றன.

பல்வேறு நோக்கங்களோடு எழுதப்பட்டுள்ள பவுத்தப் பதிவுகளைக் கொண்டு அசோகரின் இறுதிக்காலம் குறித்து எந்த முடிவுக்கும் வர முடியாது என்கிறார் ரொமிலா தாப்பர். அசோகர் அல்ல, பவுத்தமே அவர்களுக்கு முக்கியம். பவுத்தத்துக்காக அசோகர் முக்கியம், அவ்வளவுதான். கொடூரமாக இருந்தவர் பவுத்தத்தைத் தழுவிய பின் கடவுளாக உயர்ந்தார் எனும் ஒற்றை வரி அதிசயமே போதும் அவர்களுக்கு. புத்தர் சுழலவிட்ட தர்மசக்கரத்தை ஒரு சக்கரவர்த்தியாக அசோகர் உயர்த்திப் பிடித்ததே போதும் அவர்களுக்கு. அவர் எந்த அளவுக்குப் பவுத்தத்தோடு நெருக்கமாக இருந்தார் என்பது மட்டுமே அவர்களுக்கு முக்கியமானது. அவர் பவுத்தத்திலிருந்தும் நீண்டு, விரிவடைந்துகொண்டே சென்றது அவர்களுக்குப் பொருட்டல்ல.

துக்கம் தவிர்க்க முடியாதது என்கிறது பவுத்தம். மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் துக்கத்தை உணர்ந்தாக வேண்டும். பேரரசனாக இருந்தாலும் அரை நெல்லிக்கனியோடு (சில இடங்களில் அரை மாங்கனி) அசோகர் இறந்தாக வேண்டியிருக்கிறது. உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் அவர் அவதிப்பட்டார் என்று காட்டுவது ஒருவித நிறைவை பவுத்தர்களுக்கு அளித்திருக்கும் என்கிறார் ரொமிலா தாப்பர்.

எல்லாவற்றையும் சங்கத்துக்கு அள்ளித்தந்துவிட்டு வறுமையைப் பூண்ட வள்ளலாக அசோகரை அசோகாவதானம் காட்ட விரும்பியிருக்கிறது என்கிறார் நயன்ஜோத் லாஹிரி. தன்னிடமிருப்பதை மட்டுமல்ல பூமியையே அவர் சங்கத்திடம் கொடுத்துவிட்டாராம். எழுதிக்கொடுப்பதற்குக்கூட எதுவும் இல்லை என்பதால் தன் பற்களைக் கொண்டு எழுத்துகளை அசோகர் கீறினார் என்கிறது அசோகாவதானம். எழுதிக்கொடுத்த கையோடு மரணத்தையும் தழுவிவிட்டாராம். அனைத்தையும் துறந்த புத்தரின் சாயலை அவர் அப்போது பெற்றிருக்கக்கூடும்.

என் குழந்தைகளும் அவர்கள் பேரன்களும் என் வழியில் தொடர்ந்து செல்வார்கள் என்று அசோகர் சொல்லியிருந்தாலும் அப்படி யாரும் செய்தது போல் தெரியவில்லை. அரசியல் களத்தில் அதுவரை ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருந்த தம்மம் அதை அறிமுகப்படுத்தியவர் போலவே அமைதியாக மறைந்து சென்றிருக்கிறது. அசோகருக்குப் பிறகு ஆட்சியில் அமர்ந்தவர் யார் என்பதில்கூட தெளிவில்லை. ஆனால் மவுரியர் ஆட்சி பல ஆண்டுகளுக்கு நீடித்திருக்கிறது. எவ்வளவு பேர் ஆண்டார்கள், அவர்களெல்லாம் யார் என்பது தெரியவில்லை. ஆனால் வாரிசுகள் யாரும் அசோகர் போல் பாறைகளிலும் தூண்களிலும் எழுதும் ஆர்வம் கொண்டிருக்கவில்லை என்பது தெரிகிறது.

அசோகர் காலத்திலும் சரி, பிறகும் சரி மெகஸ்தனிஸ் போல் எந்த அயல்நாட்டுப் பயணியும் இந்தியாவுக்கு வரவில்லை. பதிவுகளும் எழுதிவைக்கவில்லை. பவுத்தப் பதிவுகளும் அசோகரோடு மவுரியரைப் பின்தொடர்வதை நிறுத்திக்கொள்கின்றன. அசோகருக்குப் பிறகு யாரும் பவுத்தத்தை நாடவில்லை என்பது தெரிகிறது. 2 பேர் முதல் 7பேர் வரை மவுரியப் பேரரசின் முடிவுக்காலம் வரை ஆண்டிருப்பதாக முரண்பட்ட குறிப்புகள் கிடைக்கின்றன. சந்திரகுப்தர், பிந்துசாரர், அசோகர் மூவரும் 85 ஆண்டுகள் ஆண்டிருக்கிறார்கள் என்றால் பின்னால் வந்தவர்கள் 32 ஆண்டுகள் ஆண்டிருக்கிறார்கள் என்கிறார் லாஹிரி.

(விரியும்)

ஆதாரங்கள்:

1. Revenge & Reconciliation : Understanding South Asian History, Rajmohan Gandhi, Penguin

2. Ashoka in Ancient India, Nayanjot Lahiri, Harvard University Press

3. Ashoka and the Decline of the Mauryas, Romila Thapar, 3rd Edition, Oxford University Press, 2018

4. Ashoka and His Inscriptions, B.M. Barua, New Age Publishers Ltd.

மருதன், எழுத்தாளர். ‘ரொமிலா தாப்பர்: ஓர் அறிமுகம்’, ‘ஹிட்லர்’, ‘ஹிட்லரின் வதைமுகாம்கள்’, ‘அகதிகள்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: marudhan@gmail.com

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in