இதே தேதி... முக்கியச் செய்தி: எழுத்தை ஆயுதமாக்கிய அருந்ததி!

இதே தேதி... முக்கியச் செய்தி: எழுத்தை ஆயுதமாக்கிய அருந்ததி!

மனித உரிமைகள், ஜனநாயகம், பெண் விடுதலை எனப் பல்வேறு தளங்களில் சர்வதேச அளவில் செயல்படும் முக்கிய ஆளுமை அருந்ததி ராய். அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பவர், முதலாளித்துவத்தின் கடும் விமர்சகர், உலக வங்கி போன்ற சர்வதேச அமைப்புகளின் செயல்பாடுகளைக் கேள்விக்குட்படுத்துபவர் என அருந்ததி ராயின் விமர்சனக் களம் விரிவானது. காஷ்மீர், அப்சல் குரு, மகாத்மா காந்தி, அம்பேத்கர், சாதி ஒழிப்பு என அவர் தொடாத விஷயங்கள் இல்லை.

மாவோயிஸ்ட்டுகளுடன் வனப் பகுதிகளில் வலம்வந்தவர், எட்வர் ஸ்னோடனை ரஷ்யாவில் தனிப்பட்ட முறையில் சந்தித்தவர் எனப் பரபரப்பான வாழ்க்கைப் பின்னணியைக் கொண்டவர். ஆதரவற்றுக் கிடந்த தெருநாய்களைச் செல்லப் பிராணிகளாக வளர்ப்பவர். அதிகாரவர்க்கத்துக்கு எதிராக, எழுத்தையே ஆயுதமாக்கி எளிய மக்களின் பக்கம் நிற்பவர் அருந்ததி ராய்.

1961 நவம்பர் 24-ல், மேகாலாயா தலைநகர் ஷில்லாங்கில் பிறந்தவர் அருந்ததி ராய். அவரது தந்தை ரஜிப் ராய், கொல்கத்தாவைச் சேர்ந்தவர். தாய் மேரி ராய் கேரளத்தைச் சேர்ந்த கிறிஸ்தவர். மகளிர் உரிமைச் செயற்பாட்டாளரும்கூட. அருந்ததி ராய் இரண்டு வயது சிறுமியாக இருந்தபோது அவரது பெற்றோர் விவாகரத்து பெற்றனர். அதன் பின்னர், தமிழகம், கேரளம் என வெவ்வேறு பகுதிகளில் அருந்ததி ராயின் வாழ்க்கைப் பயணம் தொடர்ந்தது. டெல்லியில் கட்டுமானக் கலை பயின்றபோது, கட்டுமான வடிமமைப்பாளர் ஜெரார்டு டா குன்ஹாவைச் சந்தித்து காதல்வயப்பட்டார். 1978-ல் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். கோவாவில் வசித்துவந்தனர். எனினும், நான்கே ஆண்டுகளில் அந்த மணவாழ்க்கை முடிவுக்கு வந்தது. பின்னர் டெல்லி திரும்பிய அருந்ததி ராய், சுயாதீன திரைக்கலைஞர் பிரதீப் கிஷனைச் சந்தித்தார். பிரதீப் இயக்கிய ‘மஸ்ஸே சாஹிப்’ திரைப்படத்தில் நடித்தார். பின்னர் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். சில திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்களில் அருந்ததி ராய் பணியாற்றியிருக்கிறார்.

1997-ல் அவர் எழுதிய ‘தி காட் ஆஃப் ஸ்மால் திங்ஸ்’ நாவலுக்காக ‘புக்கர்’ பரிசு வழங்கப்பட்டபோது, இந்தியா முழுவதும் அவரது புகழ் பரவியது. எனினும், 1998-ல் வாஜ்பாய் அரசு மேற்கொண்ட பொக்ரான் அணுகுண்டு பரிசோதனை குறித்து அருந்ததி ராய் எழுதிய விமர்சனக் கட்டுரைகள், ‘அணு ஆயுதங்களைவிடவும் மனித உயிர்கள்தான் முக்கியம்’ எனும் கருத்தை வலியுறுத்தின. அதுதான் அரசு அதிகாரத்துக்கு எதிராக அவர் எழுப்பிய முதல் குரல். பாஜகவினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்துத்துவத்துக்கு எதிராக ஓங்கி ஒலிக்கும் குரல் அவருடையது. இலங்கையில் ஈழத் தமிழர்கள் மீது சிங்கள அரசு இனஅழிப்பு நடவடிக்கையில் இறங்கியதாக சர்வதேச அளவில் குரல் எழுப்பினார். காஷ்மீர் விடுதலை முழக்கத்தை எழுப்பியதால் தேசத்துரோக வழக்கு அவர் மீது பாய்ந்தது. காஷ்மீர் இந்தியாவின் அங்கமாக இருந்ததே இல்லை என்று வாதிடுபவர் அவர். ஊழலுக்கு எதிரான போராட்டம் எனும் பெயரில் உண்ணாவிரதம் இருந்த அண்ணா ஹசாரேவின் உண்மையான நோக்கம் என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

இப்படி பல முக்கிய விவகாரங்களில் வெளிப்படையாகப் பேசி விமர்சனங்களையும் கண்டனங்களையும் எதிர்கொண்டாலும், நாட்டைவிட்டு வெளியேற விரும்பாதவர் அருந்ததி ராய். அந்நிய நாட்டில் அடைந்துகிடப்பது அச்சமூட்டக்கூடியது எனும் எண்ணம் கொண்டவர். அதேசமயம், இந்தியாவின் தற்போதைய சூழல், லத்தீன் அமெரிக்க நாடுகளைப் போல மோசமாக இருப்பதாகவும் பதிவுசெய்திருக்கிறார்.

ஒரு கட்டத்தில் பாஜக தலைமையிலான மத்திய அரசின் பிரதான விமர்சகராக ஆனார். அதேசமயம் அபுனைவு எழுத்துக்கள் - கட்டுரைத் தொகுப்புகள் அவரிடமிருந்து வெளிவந்தன. போராட்டக் குரலை வெளிப்படுத்தும் எழுத்து என்றாலும் அதில் பிரச்சார நெடி தூக்கலாக இருப்பதைத் தவிர்ப்பார். மாறாக, கவித்துவமான வாசகங்களை எழுதுவது அவரது தனிச்சிறப்பு. டெல்லியில் கட்டிடக் கலை பயின்ற அனுபவம் அவரது எழுத்தின் கச்சிதத்தன்மைக்கு உதவியது. நேர்த்தியான எழுத்து வடிவம், சித்தாந்த வேறுபாடுகளைக் கடந்து பரவலான வாசகப் பரப்பை வசீகரித்தது.

அணைகள் கட்டுமானத்துக்காக, சாமானிய மக்கள் தங்கள் வாழிடங்களைவிட்டு வெளியேற்றப்படுவது தவறு என்று தொடர்ந்து வலியுறுத்திவருகிறார். 2002-ல், நர்மதா அணையின் உயரத்தை அதிகரித்துக்கொள்ள உச்ச நீதிமன்றம் அனுமதித்ததை விமர்சித்து அவர் தெரிவித்த கருத்து, அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வழிவகுத்தது. ஒருநாள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, திஹார் சிறையில் அவர் அடைக்கப்பட்டார். கூடவே, அபராதமும் விதிக்கப்பட்டது. அதைக் கட்டத் தவறினால் மேலும் 3 மாதங்களுக்குச் சிறைவாசம் அனுபவிக்க வேண்டியிருக்கும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. எனினும், அபராதத்தைச் செலுத்திவிட்டு ஒரே நாளில் விடுதலையானார் அருந்ததி.

சிறை சென்ற அனுபவம் குறித்து பேட்டி ஒன்றில் பகிர்ந்துகொண்ட அவர், ஒரு நாள் மட்டும் தான் சிறையில் இருந்தது பெரிய விஷயமல்ல என்றார். “எத்தனையோ பேர் தங்கள் மீது என்ன வழக்கு தொடரப்பட்டிருக்கிறது என்றுகூட தெரியாமல் சிறையில் உள்ளனர். காரணமே இல்லாமல் ஆண்டுக்கணக்கில் சிறையில் பலர் இருக்கிறார்கள்” என்று வேதனை தெரிவித்தார். அதற்குப் பின்னரும், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பாயும் எனும் கவலை இல்லாமல், தன் மனதில் பட்டதைத் துணிச்சலாகப் பதிவுசெய்துவருகிறார்.

பாஜகவின் இந்துத்துவக் கொள்கையை மட்டுமல்ல, காங்கிரஸ் அரசின் பொருளாதாரக் கொள்கைகளையும் எதிர்த்தவர். 2006-ல், அவர் எழுதிய ‘தி அல்ஜீப்ரா ஆஃப் இன்ஃபினைட் ஜஸ்டிஸ்’ எனும் கட்டுரைத் தொகுப்புக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டது. எனினும், தொழிலாளர்கள் மோசமாக நடத்தப்படுவது, ராணுவமயம் அதிகரிக்கப்படுவது, நவ தாராளமயம் ஆகியவற்றைக் கண்டித்து அந்த விருதை ஏற்க மறுத்துவிட்டார். புக்கர் பரிசுடன் அவருக்கு வழங்கப்பட்ட 30,000 அமெரிக்க டாலர் பரிசுத் தொகையை மனித உரிமை அமைப்புகளுக்கு வழங்கிவிட்டார்.

பின்குறிப்பு:

அருந்ததி ராயின் ‘தி காட் ஆஃப் ஸ்மால் திங்ஸ்’ நாவல், தமிழில் ‘சின்ன விஷயங்களின் கடவுள்’ எனும் தலைப்பிலும், ’தி மினிஸ்ட்ரி ஆஃப் அட்மோஸ்ட் ஹேப்பினஸ்’ நாவல், ‘பெருமகிழ்வின் பேரவை' எனும் தலைப்பிலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. புகழ்பெற்ற மொழிபெயர்ப்பாளர் ஜி.குப்புசாமி இந்த இரு நாவல்களையும் தமிழுக்குத் தந்திருக்கிறார். அருந்ததி ராயின் ‘ஆஸாதி’ கட்டுரைத் தொகுப்பையும் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in