அருள்தரும் சக்தி பீடங்கள் - 37

விந்தியா பர்வதம் நிதம்பை
அருள்தரும் சக்தி பீடங்கள் - 37

அம்மனின் சக்தி பீட வரிசையில், உத்தரப்பிரதேசத்தில் அமைந்துள்ள விந்தியவாசினி கோயில், நிதம்பை பீடமாக போற்றப்படுகிறது. யோகமாயா, தேவி, துர்கை, விந்தியவாசினி என்று போற்றப்படும் அன்னை, கங்கை நதிக்கரையில் உள்ள மிர்சாபூரில் இருந்து 8 கி.மீ தொலைவில் உள்ள விந்தியாஞ்சலில் கோயில் கொண்டுள்ளார். மற்றொரு சந்நிதி ஹிமாச்சல பிரதேசத்தின் பாண்ட்லாவில் உள்ளது.

விந்திய மலைத் தொடரில் வசிப்பதால் அன்னைக்கு விந்தியவாசினி என்ற பெயர் கிட்டியது. தேவி பிறந்த இடங்களே, சக்தி பீடமாக கருதப்பட்டாலும் இத்தலம், தேவி வசிப்பதற்கு விரும்பி தேர்ந்தெடுத்த இடமாகும்.

சிவபெருமானை வழிபட்ட திருமால், சுதர்சன சக்கரம் பெற்றதும், மகிஷாசுரனை பார்வதிதேவி வதம் செய்ததும், சிவபெருமானை அடைய அம்பிகை தவம் செய்ததும் இத்தலத்தில்தான். அதனால் அன்னை பராசக்தியின் புண்ணிய பூமியாக இத்தலம் கருதப்படுகிறது.

தல வரலாறு

தேவகி – வசுதேவரின் 8-வது குழந்தையாக கிருஷ்ணர் அவதரித்த தினத்தில், நந்தகோபன் – யசோதைக்கு மகளாகப் பிறந்தார் யோகமாயா. திருமால் அறிவுறுத்தலின்படி வசுதேவர், கிருஷ்ணருக்கு பதிலாக யசோதாவுக்குப் பிறந்த குழந்தையை இடம் மாற்றி வைத்தார். தேவகியின் ஒவ்வொரு குழந்தையையும் கொன்ற கம்சன், அவரது 8-வது குழந்தையையும் கொல்ல முயன்றான். அப்போது அக்குழந்தை, கம்சனின் கையில் இருந்து தப்பித்து, தேவி வடிவமாக மாறி, “உன்னைக் கொல்ல ஒருவன் ஏற்கெனவே பிறந்து பாதுகாப்பாக உள்ளான்” என்று கூறிவிட்டு மதுரா சிறையில் இருந்து மறைந்தது.

அப்படி மதுராவில் இருந்து புறப்பட்ட தேவி, விந்தியாஞ்சல் மலைகளை தனது இருப்பிடமாகத் தேர்ந்தெடுத்து அங்கேயே கோயில் கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

பாகவத புராணம்

ஸ்ரீமத் பாகவத புராணத்தில் யோகமாயா பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. திருமாலின் தங்கையான யோகமாயா தேவி, கம்சனின் கைகளில் இருந்து நழுவி வானத்தில் எழுந்தருளி, 8 கரங்களுடன் துர்கை வடிவத்தில் தோன்றினார். அப்போது, “என்னைக் கொல்வதால் உனக்கு எந்தப் பயனும் இல்லை. தொடக்கத்தில் இருந்தே உனக்கு எதிரியாக இருந்தவர், உன்னை மாய்க்காமல் விடமாட்டார். இறைவனின் உயர்ந்த ஆளுமை, அவருடைய பிறப்பை வேறு ஓர் இடத்தில் எடுத்துவிட்டார். அதனால் மற்ற குழந்தைகளை அழிக்க வேண்டாம்” என்று கம்சனிடம் கூறிவிட்டு, யோகமாயா மதுரா சிறையில் இருந்து மறைந்ததாக கூறப்பட்டுள்ளது.

(பாகவத புராணம், காண்டம் 10, அத்தியாயம் 4, வசனம் 9 – இந்த சம்பவம் பற்றிய கருத்தை விளக்குகிறது.)

மன்னருக்கு வாழ்வளித்த அம்பிகை

அயோத்தி மன்னர் திரிசந்தியின் மகன் துருவன் சந்தி. அவருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவியின் மகன் சுதர்சனா. இளைய மனைவியின் மகன் சத்ரஜித். இவர்களில் சத்ரஜித்தையே மன்னராக்கும் முயற்சி நடைபெற்றது, இதைத் தொடர்ந்து சுதர்சனா, அம்பிகையை நோக்கி தவத்தில் ஆழ்ந்தான். அம்பிகையும் அவனது தவத்தை மெச்சி, தேவையான ஆயுதங்களை வழங்கி, அவனை யாரும் வெல்ல முடியாது என்ற வரத்தை அளித்தார்.

இதற்கிடையே, காசி மன்னரின் மகள் சசிகலாவுக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதற்காக சுயம்வரத்தை நடத்த காசி மன்னர் ஏற்பாடு செய்திருந்தார். இதில் சுதர்சனா கலந்துகொண்டால், அனைவரையும் கவர்ந்து, சசிகலாவை மணந்து விடுவான் என்று நினைத்து அவனை கொல்லத் துணிகிறான் சத்ரஜித். இதை உணர்ந்த சுதர்சனா, அம்பிகை அருளிய ஆயுதங்களால் அவனை வீழ்த்தினான். பிறகு, சுயம்வரத்தில் பங்கேற்று சசிகலாவை மணந்து, சுதர்சனா மன்னராகப் பதவி ஏற்றான்.

தனக்கு நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுத்த அம்பிகைக்கு நன்றி தெரிவிக்க நினைத்த சுதர்சனா, அவருக்கு ‘விந்தியாவாசினி’ என்ற பெயரில் கோயில் எழுப்பி வழிபட்டான். பின்னாட்களில் மேற்கு வங்க நடோர் பகுதியை ஆட்சிபுரிந்த ராணி பவானி, இக்கோயிலைப் புதுப்பித்தார்.

திரிலோகன் பரிக்ரமா

விந்தியாவாசினி கோயிலில் கருவறையில் வீற்றிருக்கும் அம்மன், பூக்கள், வண்ண ஆடைகள், ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருப்பதால், அவரது கண்களை மட்டுமே பக்தர்கள் காண முடியும். கோபுரங்கள், சிற்பங்கள் இன்றி பிரமிட் பாணியில் அமைந்துள்ளது இந்தக் கோயில்.

விந்தியவாசினி கோயிலில் இருந்து 3 கி.மீ தொலைவில் உள்ள குன்றில் மகா சரஸ்வதி கோயில் உள்ளது. இது அஷ்டபுஜ கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. அருகில் காளி கோயில் அமைந்துள்ளது. குகையில் காளி கோயில் கொண்டுள்ளதால் ‘காளி கோ கோயில்’ என்று அழைக்கப்படுகிறது. விந்தியவாசினி, மகா சரஸ்வதி, காளி கோயில்களை பக்தர்கள் ‘திரிலோகன் பரிக்ரமா’ என்று அழைத்து வழிபாடு செய்கின்றனர். இந்தக் கோயில்களில் அம்பிகையின் கண்கள் மட்டுமே தெரியும்படி அலங்காரம் செய்யப்படுகிறது. நேபாளத்தில் உள்ள போகாராவிலும் விந்தியவாசினிக்கு கோயில் அமைக்கப்பட்டுள்ளது.

கைலா தேவி

கஜலா தேவி, கைலா தேவி என்று அழைக்கப்படும் விந்தியவாசினி, காளி தேவியாகவும் வணங்கப்படுகிறார். கரவ்லி நகருக்கு அருகில் கோயில் கொண்டிருப்பதால், ராஜஸ்தான், மத்திய பிரதேச மாநில மக்களின் இஷ்ட தெய்வமாகவும் உள்ளார். நிங்கல மாதா என்று அழைக்கப்படும் கைலா தேவிக்கு பல இடங்களில் கோயில்கள் இருந்தாலும், இக்கோயிலே முதன்மைத் தலமாக கருதப்படுகிறது.

ஒருசமயம், நாகர்கோட்டில் இருந்து மகாமாயா சிலை, மாட்டு வண்டியில் கொண்டுவரப்பட்டது. அடர்ந்த காட்டுப் பகுதி வழியே வந்தபோது வண்டியை நகர்த்த முடியவில்லை. அப்பகுதியை ஆட்சிபுரிந்த மன்னரின் கனவில் தோன்றிய மகாமாயா, அங்கேயே தனக்கு கோயில் எழுப்ப கட்டளையிட்டார். அதன்படி கோயில் எழுப்பப்பட்டது, பின்னர் 1723-ல் மன்னர் கோபால்சிங் காலத்தில் கோயில் விரிவுபடுத்தப்பட்டது. தற்போது முன் மண்டப சுவர்களில் இறைவன் சிற்பங்கள் என்று சீரமைக்கப்பட்டு பெரிய மாளிகை போல் காட்சியளிக்கிறது, கருவறையில் கைலாதேவி, சாமுண்டா தேவி இருவரும் அமர்ந்த நிலையில் உள்ளனர். சிவபெருமான், அனுமனுக்கும் சந்நிதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

புண்ணிய பூமி

மத்திய பிரதேச மாநிலம், கஞ்சன்காட் மாவட்டம் ஓர்ச்சாதாமில் (பூந்தேல் கண்ட்) உள்ள மன்னர் குலத்தில், விந்தியவாசினி குலதெய்வமாக போற்றப்படுகிறார். 13-ம் நூற்றாண்டில் காசி குலத்தில் பிறந்த பஞ்சதேவ் என்ற மன்னர் தெய்வ நம்பிக்கை மிக்கவராக இருந்தார். ஒருசமயம் மிர்சாபூர் விந்தியாவாசினியை மனதில் நினைத்து, மன்னர் கடும் தவம் புரிந்தார். தவத்தின் இறுதியில் தன்னையே மாய்த்துக்கொள்ள துணியும்போது, அம்பிகை நேரில் தோன்றி அருள்பாலித்தார், அன்று முதல் அவரது குலத்துக்கே, விந்தியவாசினி குலதெய்வம் ஆனார்.

அவருக்கு பின்னர் வந்த வம்சமும் பூந்தேல் கண்ட் என்ற பெயரில் வழங்கப்படலாயிற்று. விந்தியவாசினிக்கு கோயில் எழுப்பப்பட்டது. வேத்வா நதி அருகே ஓர்ச்சா நகரம் அமைந்துள்ளது. இங்கு துங்கமுனி வசித்ததாகக் கூறப்படுகிறது. சிறிய கங்கா (பைன் கங்கா) என்று அழைக்கப்படும் வேத்வா நதி, கங்கை நதிக்கு இணையாகப் போற்றப்படுகிறது. தண்டகாரண்யப் பகுதியில் இந்த நதியைக் கடந்து ராமபிரான், சுதீக்‌ஷண முனிவர் ஆசிரமத்தை அடைந்ததாக ராமாயணத்தில் கூறப்பட்டுள்ளது. புராண காலத்தில் விருத்தாசுரன், மஹாகம்பீர் என்ற குளத்தை வெட்டினார். அதில் நீர் நிரம்பியபோது, அது வேத்வா நதியாகப் பெருகி ஓடத்தொடங்கியது. முப்பெரும் தேவர்களையும் வணங்கும் தேவர்கள் வாசம் புரியும் பகுதியாக உள்ள வேத்வா நதிக்கரையில் அமைந்துள்ள ஓர்ச்சாதாம் புண்ணிய பூமியாக கருதப்படுகிறது. இதன்மூலம், விந்தியவாசினி உறையும் அனைத்து இடங்களும் புண்ணிய பூமியாக கருதப்படும் என்பது ஐதீகம்.

விந்தியவாசினி பூஜை

வைகாசி மாதம் அமாவாசைக்குப் பிறகு வரும் சஷ்டி தினத்தில் விந்தியவாசினி பூஜை செய்யப்படுகிறது. ஆந்திரப் பிரதேசத்தில் இவ்விரதம் ஆரண்ய கௌரி விரதம் என்றும், மேற்குப் பகுதிகளில் ஆரண்ய சஷ்டி விரதம் என்றும் அழைக்கப்படுகிறது.

முப்பெரும் தேவியர் வடிவில் உள்ள அன்னை, வாமன புராணத்தின்படி, ‘சசி முகி’ (பூரண சந்திரனைப் போன்ற முகம் கொண்டவர்) என்று போற்றப்படுகிறார். பத்ம புராணத்தின்படி, அசுர வதம் செய்த பார்வதி தேவியை இந்திரன் பூஜிக்கிறான். அதில் மகிழ்ந்த தேவி, அவனுக்கு வரம் அளிப்பதாக உறுதியளிக்கிறார். தேவி, விந்திய மலையிலேயே கோயில் கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலிக்க வேண்டும் என்று இந்திரன் வேண்டுகோள் விடுக்க, தேவியும் அதற்கு சம்மதம் தெரிவித்து, இங்கேயே வாசம் செய்கிறார், அசுர வதத்துக்குப் பிறகு தேவி, ஓய்வு கொண்ட இடம் என்பதாலும், உக்கிரமாக இருந்து அமைதி கொண்ட இடம் என்பதாலும் இத்தலம் சிறப்பானதாகக் கருதப்படுகிறது.

விந்தியவாசினி பூஜை தினத்தில், மிர்சாபூரில் சிறப்பு ஆராதனைகள், ஹோமங்கள், விந்தியவாசினியின் பெருமைகள எடுத்துரைக்கும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறுவதற்காக சதசண்டி ஹோமம் செய்வதுண்டு. விந்தியமலை விந்தியவாசினி, ஒடிசா சுபத்திரா தேவி, பெரிய பாளையம் பவானி அம்மன் மூவரும் ஒருவரே என்பது ஐதீகம்.

திருவிழாக்கள்

சைத்ர (மார்ச் – ஏப்ரல்), அஸ்வின் (புரட்டாசி – ஐப்பசி) நாட்களிலும் நவராத்திரி, மகா சிவராத்திரி, செவ்வாய், சனிக்கிழமைகளிலும் இங்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

நவராத்திரி, ஐப்பசி, சித்திரை மாதங்களில் பக்தர்கள் இங்கு வந்து வழிபாடு செய்கின்றனர். கன்யா பூஜையும் செய்வதுண்டு. ஆனி மாதத்தில் நாட்டுப்புற கலைகளை வெளிப்படுத்தும் கஜலி போட்டி நடத்தப்படுகிறது. ஸ்ரீராம நவமி, கிருஷ்ண ஜென்மாஷ்டமி தினங்களிலும் ராமர் கோயிலில் விந்தியவாசினிக்கு விழா எடுக்கப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in