உடலுக்குள் ஒரு ராணுவம் - 39: தடுப்பூசி கடந்து வந்த பாதைகள்

லூயி பாஸ்தர்
லூயி பாஸ்தர்

தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட ஆரம்ப காலத்தில் உயிருள்ள கிருமிகளை அப்படியே மனித உடலுக்குள் அனுப்பி, தடுப்பாற்றலைத் தூண்டும் விதமாகத் தடுப்பூசியை அமைப்பதுதான் நடைமுறையில் இருந்தது. எட்வர்டு ஜென்னர் காட்டிய வழி அது. அம்மாதிரியான செயல்பாட்டால், பயனாளிகளுக்குச் சில பக்கவிளைவுகளும் உண்டாயின. குறிப்பாக, பலருக்கு அந்தக் கிருமிகள் நோயையும் உற்பத்தி செய்தன; சிலருக்கு உயிரையும் பறித்தன. இந்தக் கொடுமையைச் சரிசெய்ய என்ன வழி எனத் தெரியாமல் மருத்துவ உலகம் விழித்தது.

அதற்கு ஒரு வழிகாட்டியவர் பாரிஸ் மருத்துவர் லூயி பாஸ்தர் (Louis Pasteur). அவர் புதிய தடுப்பூசியைக் கண்டுபிடிப்பது தொடர்பாகப் பலதரப்பட்ட ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வந்தார். அப்போது அவரது ஆய்வுக்கூடத்தில் நடந்த சிறு தவறுதான் தடுப்பூசி தயாரிப்பில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது.

உதவியாளர் செய்த தவறு

அது 1879-ம் ஆண்டு. லூயி பாஸ்தர் காலரா நோய்க்குத் தடுப்பூசி கண்டுபிடிக்கும் முனைப்பில் இருந்தார். அந்த ஆண்டுக் கோடை விடுமுறையில் வெளியூருக்குச் சென்றுவிட்டு ஆய்வுக்கூடத்திற்குத் திரும்பியிருந்த லூயி பாஸ்தர் கடுமையான கோபத்தில் இருந்தார். காரணம் இதுதான்: அவர் விடுமுறைக்குச் செல்வற்கு முன்பு அவருடைய உதவியாளர் சார்லஸ் சாம்பர்லேண்ட் (Charles Chamberland) என்பவரிடம் கோழிகளுக்கு காலரா கிருமிகளைச் செலுத்தச் சொல்லியிருந்தார். ஆனால், அவரோ அதைச் செய்திருக்கவில்லை; மறந்துவிட்டார். அதனால் கோபமடைந்த லூயி பாஸ்தர் தனது உதவியாளரைக் கடுமையாகச் சாடினார்.

“காலரா கிருமிகளைக் கோழிகளுக்குச் செலுத்த மறந்ததோடு மட்டுமல்லாமல், அந்தக் கிருமிகளைப் பாதுகாக்கவும் தவறிவிட்டாயே! காற்றில் படும்படி அவற்றை வைத்துவிட்டாயே… அவை அழிந்துபோகச் செய்துவிட்டாயே!” என்று கோபப்பட்டடார்.

அவரது கோபத்தைத் தணிப்பதற்காக, உதவியாளர் உடனடியாக அவர் கண்ணுக்கு முன்பாகவே கோழிகளுக்கு ஏற்கெனவே தயாரித்து வைத்திருந்த ‘பாஸ்தரெல்லா மல்டோசிடா’ (Pasteurella multocida) எனும் காலரா கிருமிகளைச் செலுத்தினார். அதைத் தடுத்தார் லூயி பாஸ்தர். “இந்தக் கிருமிகளை வளர்த்துப் பல மாதங்கள் ஆகிவிட்டன. அவற்றுக்கு வீரியம் குறைந்திருக்கும். இப்போது இந்தக் கிருமிகளைச் செலுத்தினால் பலன் இருக்காது” என்றார். ஆனால், நடந்ததோ வேறு விதம்.

அவர்களை ஆச்சரியமூட்டும் வகையில் அந்தக் கோழிகளுக்கு காலரா நோயும் வரவில்லை. அவை இறக்கவுமில்லை. அப்படியானால், ‘கிருமிகளைப் பல மாதங்களுக்குக் காற்றில் படும்படி வைத்துவிட்டால் அவற்றின் வீரியம் குறைந்துவிடும்’ என்ற முடிவுக்கு வந்தார் லூயி பாஸ்தர். வீரியம் குறைந்த கிருமிகளைப் பயன்படுத்தி தடுப்பூசி தயாரித்தால், அது செலுத்தப்படும் பயனாளிக்கு நோயும் வருவதில்லை; அவருடைய உயிருக்கு ஆபத்தும் இல்லை’ என்பதும் அவருக்குப் புலன் ஆனது.

அதற்குப் பிறகுதான் தடுப்பூசி தயாரிப்புக்குத் தேவையான ‘ஆன்டிஜன்’ எனும் உயிருள்ள கிருமிகளை நோயாளியின் அம்மைப் பால் போன்ற உயிர்த் திரவங்களிலிலிருந்து நேரடியாக எடுக்காமல், ஆய்வுக்கூடங்களிலும் தயாரிக்க முடியும் எனும் புதிய உத்தி உதயமானது. அதிலும் வீரியம் குறைக்கப்பட்ட கிருமிகளை வளர்த்துத் தடுப்பூசியில் பயன்படுத்த முடியும் எனும் புதிய வழி கிடைத்தது. என்றாலும், லூயி பாஸ்தருக்கு அதில் முழு திருப்தி இல்லை. அவர் கண்டுபிடித்த அறிவியல் உண்மையைக் கோழிகளிடம்தானே பரீட்சித்துப் பார்த்திருக்கிறார்… அடுத்து மனிதர்களுக்குக் கொடுத்துப் பார்த்தால்தானே தன்னுடைய ஆராய்ச்சிக்கு முழுமையான பலன் கிடைக்கும் என்று யோசிக்கத் தொடங்கினார்.

அதற்கும் ஒரு நேரம் வந்தது. அதைத் தெரிந்துகொள்வதற்கு முன்பாக உங்களிடம் ஒரு கேள்வி! உலகில் நோயாகப் பரிணமித்துவிட்டால் மரணம் நிச்சயம் எனும் நிலைமை இன்றைக்கும் இருக்கிறது. அது எந்த நோய் என்பது உங்களுக்குத் தெரியுமா?

‘ரேபீஸ்’ (Rabies) எனும் வெறிநாய்க்கடி நோய் என்று சொன்னவர்கள் ‘சபாஷ்!’ போட்டுக்கொள்ளுங்கள்! ஆம், வெறிநாய் கடித்து பயனாளிக்கு நோயாக வெளிப்பட்டுவிட்டால் அடுத்த இரண்டு வாரங்களில் அவர் இறப்பு உறுதி. அதே சமயம் நாய் கடித்ததும் வெறிநாய்க்கடி தடுப்பூசியைப் போட்டுக்கொண்டால் 100 சதவீதம் உயிர் காக்கப்படுவதும் உறுதி. அந்த உயிர் காக்கும் தடுப்பூசியைக் கண்டுபிடித்தவர் வேறு யாருமில்லை, லூயி பாஸ்தர்!

வெறிநாய்க்கடி தடுப்பூசி

நாய்க்கடிக்குத் தடுப்பூசி கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் அவர் ஈடுபட்டபோது நடந்தவற்றின் சுருக்கம் இவை...லூயி பாஸ்தர் ரேபீஸ் கிருமிகளை ஒரு வளர் ஊடகத்தில் வளர்த்துக்கொண்டார். பிறகு அவற்றை முயல்களுக்குச் செலுத்தி நோயை ஏற்படுத்தினார். இவற்றின் தண்டுவடத் திரவத்தைப் பரிசோதித்தார் அதில் ரேபீஸ் கிருமிகள் இருந்தன. இவற்றை அப்படியே மனிதர்களுக்கோ மற்ற விலங்குகளுக்கோ செலுத்தினால் மனிதர்களுக்கும் சரி விலங்குகளுக்கும் சரி நோய் வந்துவிடும் எனக் கருதி, அந்தக் கிருமிகளின் வீரியத்தைக் குறைக்க முயன்றார்.

முதலில், கிருமிகள் கொண்ட அந்தத் திரவத்தை ஒரு சிறு பாத்திரத்தில் ஊற்றிக் காற்றில் காய வைத்தார். காற்றின் வெப்பத்தில் ரேபீஸ் கிருமிகளின் வீரியம் குறையத் தொடங்கியது. அடுத்து, இதைக் குரங்குகளுக்குச் செலுத்தி, அவற்றின் தண்டுவட திரவத்தைச் சேகரித்தார். இப்போது அந்தக் கிருமிகளின் வீரியம் இன்னும் நன்றாகவே குறைந்திருந்தது. இப்போது இதை வெறிநாய் கடித்த நாய்களுக்குச் செலுத்தினார். அந்த நாய்களுக்கு ரேபீஸ் வரவில்லை. மொத்தம் 50 நாய்களுக்கு இப்படித் தடுப்பு மருந்து கொடுத்துப் பார்த்தார். அவற்றுக்கும் நோய் வரவில்லை! இதில் மகிழ்ச்சி அடைந்த அவர் நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி கண்டுபிடித்துள்ள விவரத்தை வெளி உலகில் தெரிவித்தார். ஆனால், மனிதர்களுக்கு அதைப் பயன்படுத்திக்கொள்ள அப்போது யாரும் முன்வரவில்லை. அவர் மனம் தளரவில்லை. அதற்கு ஒரு நேரம் வரும் எனக் காத்திருந்தார். அந்த நேரமும் வந்தது.

சிறுவன் பிழைத்த வரலாறு

லூயி பாஸ்தர் கண்டுபிடிப்பின் அடுத்த முன்னேற்றம் 1885-ம் ஆண்டு ஜூலை 6-ம் நாள் நடந்தது. ஜோசப் மெய்ஸ்டர் (Joseph Meister) எனும் 9 வயது சிறுவனை அவரிடம் அழைத்து வந்தாள் அவள் அம்மா. அவனுக்கு இரண்டு நாட்களுக்கு முன்புதான் வெறிநாய் கடித்திருந்தது. அவன் அம்மா தன் பையனுக்குத் தடுப்பூசி போடும்படி வற்புறுத்தினாள். தான் கண்டுபிடித்த ரேபீஸ் தடுப்பூசியை இதுவரை மனிதர்களுக்குப் போடவில்லை என்பதால் முதலில் தயங்கினார், லூயி பாஸ்தர்.

என்றாலும், தடுப்பூசியைப் போடாவிட்டால் அவன் இறப்பது உறுதி என்பதால், பரீட்சார்த்தமாக தடுப்பூசியைப் போட்டுப் பார்ப்போம் என்று முடிவு செய்து, தினமும் ஒரு ஊசி வீதம் மொத்தம் 13 நாட்களுக்குத் தடுப்பூசி போட்டார்; அடுத்த மூன்று மாதங்கள் வரைக் காத்திருந்தார். இந்தச் சிறுவனுக்கு ரேபீஸ் நோய் வரவில்லை. இதைத் தொடர்ந்து 350 பேருக்கு இந்தத் தடுப்பூசியைப் போட்டு அவர்கள் எல்லோருக்கும் ரேபீஸ் வரவில்லை என்று உறுதியானதும்தான் தன் கண்டுபிடிப்பை உலகத்துக்கு அறிவித்தார். இதைத் தொடர்ந்து பல்வேறு உலக நாடுகளிலிருந்து நாய் கடித்தவர்கள் அவரைத் தேடிவர ஆரம்பித்தனர்.

தடுப்பூசி தயாரிப்பில் நவீன உத்திகள்

அவர் கண்டுபிடித்த ரேபீஸ் தடுப்பூசி விலங்குகளின் தண்டுவட நரம்புத் திசுவிலிருந்து தயாரிக்கப்பட்ட காரணத்தால், அதைப் போட்டுக்கொண்ட பலருக்கு நரம்பு தொடர்பான பக்க விளைவுகள் ஏற்படுவதை அவருக்குப் பிறகு வந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர்.

எனவே, அதற்குத் தீர்வு தரும் வகையில் நவீன மருத்துவத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி புது வகைத் தடுப்பூசிகளைத் தயாரிக்கத் தொடங்கினர். இப்போது நாம் பயன்படுத்தும் ரேபீஸ் தடுப்பூசிகள் கோழிக் கரு செல்களிலிருந்தும் (Purified Chick Embryo Cell Vaccine), மனித இரட்டைக் கரு செல்களிலிருந்தும் (Human Diploid Cell Vaccine), குரங்குச் சிறுநீரக செல்களிலிருந்தும் (Purified Vero Cell Vaccine) தயாரிக்கப்படுகின்றன. இவற்றுக்கு அவ்வளவாகப் பக்கவிளைவுகள் இல்லை. இவற்றைத் தொப்புளைச் சுற்றிப்போடவேண்டியதும் இல்லை; 14 முறை போடப்பட வேண்டிய அவசியமும் இல்லை. பதிலாக, நாய் கடித்தவுடன் ஒரு ஊசி, அடுத்ததாக 3-வது நாள், 7-வது நாள், 14-வது நாள், 28-வது நாள் என மொத்தம் 5 ஊசிகள் ( 0, 3, 7, 14, 28 ) புஜத்தில் போட்டுக்கொண்டால் போதும்; வெறிநாய் கடித்தாலும் பயமில்லை. முக்கியமாக உயிருக்கு ஆபத்தில்லை! தடுப்பூசி கண்டுபிடிப்பில் ஏற்பட்டுள்ள மகத்தான மாற்றங்கள் இவை. கிருமிகள் சூழ்ந்துள்ள இப்பூவுலகில், மனித குலத்தைக் காக்க நவீன அறிவியல் கொடுத்துள்ள ஒரு பேராயுதம் ரேபீஸ் தடுப்பூசி என்றால் அது மிகையில்லை.

(போர் ‘புரி’வோம்)

ரேபீஸ் தடுப்புப் புரதம்

ரேபீஸ் நோயைத் தடுக்க ' ரேபீஸ் தடுப்புப் புரதம்' (Human Rabies Immunoglobulin) ஒன்றும் உள்ளது. ரேபீஸ் கிருமிகள் உடலுக்குள் நுழைவதற்கு முன்பே அவற்றை அழித்துவிடும் தன்மை உடையது இது. நாய் கடித்தவுடன், கடிபட்ட காயத்திலும், அதைச் சுற்றிலும் இது செலுத்தப்பட வேண்டும். நாய் கடித்த 7 நாட்களுக்குள் இதனைப் பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும். அதேநேரத்தில், ரேபீஸ் தடுப்பூசியையும் போட்டுக்கொள்ள வேண்டும்.

நாய் கடித்தவுடன் செய்ய வேண்டியவை

· காயத்தைக் குறைந்தது 10 நிமிடங்களுக்கு சோப்புத் தண்ணீரால் நன்றாகக் கழுவ வேண்டும். வேகமாக விழுகிற குழாய்த் தண்ணீரில் கழுவுவது மிகவும் நல்லது.

· காயத்தின்மீது ஏதாவது ஒரு 'ஆன்டிசெப்டிக்' மருந்தைத் தடவலாம். (எ-டு: பொவிடின் அயோடின், ஸ்பிரிட், டெட்டால், சாவ்லான்).

· காயத்துக்குக் கட்டுப் போடுவதையும், தையல் போடுவதையும் தவிர்க்க வேண்டும்.

· தையல் போடுமளவுக்குக் காயம் மிகப் பெரிதாக இருக்குமானால், காயத்திலும் காயத்தைச் சுற்றிலும் தடுப்புப் புரதம் போட்டபிறகே தையல் போடப்பட வேண்டும்.

· இதைத் தொடர்ந்து ரேபீஸ் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும்.

· எந்த ஒரு காயத்துக்கும் 'டெட்டனஸ் டாக்சாய்டு' (Tetanus Toxoid) தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டியது அவசியம்.

· காயம் குணமாகத் தகுந்த 'ஆன்டிபயாடிக்' மருந்துகளையும் சாப்பிட வேண்டும்.

வீட்டு நாய் கடித்துவிட்டால், என்ன செய்வது?

வீட்டு நாய்க்கு முறைப்படி ரேபீஸ் தடுப்பூசி போடப்பட்டிருந்தால்கூட, அந்த நாயால் கடிபட்டவர் ரேபீஸ் தடுப்பூசியைப் போடத்தொடங்கிவிட வேண்டும். அதேநேரத்தில் அந்த நாயைப் பத்து நாட்களுக்குக் கண்காணிக்க வேண்டும். நாயின் குணத்தில் எவ்வித மாறுதலும் தெரியவில்லை என்றால், முதல் மூன்று தடுப்பூசிகளுடன் (0, 3, 7) நிறுத்திக்கொள்ளலாம். நாயிடம் மாறுதல்கள் தெரிந்தால், மீதமுள்ள தடுப்பூசிகளையும் (14, 28) போட்டுக்கொள்ள வேண்டும்.

கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்
தொடர்புக்கு: gganesan95@gmail.com

படித்தவரின் பதிவு

தடுப்பூசியின் மகிமையை நினைவு கூர்ந்தேன்!

டாக்டர் கு. கணேசன் தனது தொடரில் எத்தனை அருமையான மருத்துவ அறிவியல் தமிழ்ச் சொற்களை அறிமுகப்படுத்துகிறார்! ‘முறிக்கப்பட்ட நச்சு’ என்று தமிழ் வாசகருக்குப் பழக்கமான பதத்தைக் கொண்டு antigen ஐ விளக்கும் அவரின் உத்தி அசத்துகிறது! ஒற்றைத் தடுப்பூசி, கூட்டுத் தடுப்பூசி, வாய்வழி தடுப்பு மருந்து, முதன்மைத் தடுப்பூசி, ஊக்கத் தடுப்பூசி என்ற புதிய தமிழ்ப் பதங்கள் கச்சிதமாகப் பொருந்துகின்றன! அவை கட்டுரையின் ஊடே நர்த்தனமாடுகின்றன. வீரியம் நீக்கப்பட்ட, வீரியம் குறைந்த என்ற வார்த்தைகளில் தமிழ் மொழியின் வீரியம் திகைக்க வைக்கிறது! தடுப்பூசி ஒரு தாழ்ப்பாள் போல், ஓர் அலாரம் போல், ஒரு சோளக் கொல்லை பொம்மை போல் செயல்படுகிறது என்று அவருக்கே தனித்துவமான உவமைகளைப் பயன்படுத்தி வாசகர்களின் சந்தேகத்தைப் போக்குகிறார்!

கரோனா பரவத் தொடங்கியபோது என் பெற்றோரின் நலம் குறித்து பயந்து மனஉளைச்சலுக்கு ஆளானேன். முதன்மைத் தடுப்பூசிகளையும் ஊக்கத் தடுப்பூசியையும் செலுத்திக் கொண்டபின்னும் அவர்கள் கரோனா தொற்றுக்கு ஆளானபோது நான் துளிகூடக் கலங்கவில்லை. அப்போது தடுப்பூசியின் மகிமையை நினைவு கூர்ந்தேன். இந்தத் தொடர் நூலாக வெளிவரும்போது வாசிக்கத் தெரிந்த அனைவர் வீட்டிலும் இருக்க வேண்டிய அத்தியாவசியமான நூலாக ‘உடலுக்குள் ஒரு ராணுவம்’ கருதப்படும்! பாராட்டுகள்!

- டாக்டர் வித்யா சங்கரி, ஆத்தூர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in