உடலுக்குள் ஒரு ராணுவம் - 40: தயக்கத்தைத் தாண்டி மானுடம் காக்கும் தடுப்பூசி

உடலுக்குள் ஒரு ராணுவம் - 40: தயக்கத்தைத் தாண்டி மானுடம் காக்கும் தடுப்பூசி

தடுப்பூசி கண்டுபிடிப்பு தொடர்பில் ஆரம்பகால முயற்சிகளையும் முன்னெடுப்புகளையும் நாம் அவதானித்துக் கொண்டிருக்கிறோம். தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்ட காலத்திலிருந்தே அவற்றுக்கு ஒரு பகுதி மக்களிடமிருந்து மனத்தயக்கங்களும், மனத்தடைகளும், ஏன்… எதிர்ப்புக் குரல்களும் ‘உடன்பிறந்த’வையாகவே உலா வருவதை இந்தியாவில் மட்டுமல்ல, உலகளவிலும் கவனித்து வருகிறோம்.

தடுப்பூசிகளின் மகிமை!

இத்தனைக்கும் இந்தியாவில் பெரியம்மையையும் போலியோவையும் முற்றிலுமாக ஒழித்தது தடுப்பூசியும் போலியா தடுப்புச் சொட்டு மருந்தும்தான் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். பிளேக், காலரா போன்ற கொள்ளைநோய்கள் நாட்டைவிட்டு ஓடியதற்கு முழுக்காரணமும் தடுப்பூசிகளையே சேரும். தடுப்பூசிகளை முறையாகப் பயன்படுத்தினால் கக்குவான் இருமல், தொண்டை அடைப்பான், வில்வாத வலிப்பு (Tetanus) என மொத்தம் 27 தொற்றுநோய்களைத் தடுக்க முடிகிறது; ஏன், புற்றுநோய்கூட அடங்கிவிடுகிறது; மக்களின் பொது ஆரோக்கியம் காக்கப்படுகிறது; மனித குலத்தின் ஆயுள் அதிகரிக்கிறது; ஊனப் பிறப்புகள் தடுக்கப்படுகின்றன. ஆனாலும், தடுப்பூசிகளுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்யவும் ஒரு கூட்டத்தினர் இந்தியாவில் இருக்கத்தான் செய்கின்றனர். அவர்கள் தடுப்பூசிகள் குறித்து சமூகவலைதளங்களில் அறிவியலுக்குப் புறம்பாக வதந்திகளைப் பரப்புகின்றனர்; சமூகப் பொறுப்பில்லாமல் தவறான தகவல்களை முன்னனுப்புகின்றனர்.

சரி, இன்றைய கரோனா அச்சுறுத்தலை நாம் எப்படிக் கையாண்டோம்? உலகளவில் கரோனாவைக் கட்டுப்படுத்தியது கரோனா தடுப்பூசிகள்தான் என்பதை நாம் அனுபவத்தில் கண்டிருக்கிறோம். மருத்துவ வரலாற்றில் இதுவரைக் காணப்படாத அளவுக்கு, உலகம் முழுவதிலும் ஒரு பெருந்தொற்று பரவிய இரண்டே ஆண்டுகளில் ஊசி மூலமாக மட்டுமல்லாமல் மூக்கு வழியாகவும் செலுத்தப்படும் கரோனா தடுப்பு மருந்துவரை 34-க்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் மக்கள் பயன்பாட்டுக்கு வந்ததை நாம் அறிவோம்! அவற்றை இலவசமாகவே செலுத்தினாலும், ஒரு தவணைகூட இன்னமும் செலுத்திக்கொள்ளாமலும், ஊக்கத் தடுப்பூசி (Precaution dose) செலுத்திக்கொள்ளாமலும் லட்சக்கணக்கான  பேர்  நம்மிடம் இருக்கத்தானே செய்கிறார்கள்?

நவீன மருத்துவத்தின் பெருவளர்ச்சியைக் கண்கூடாகக் காணும் 21-ம் நூற்றாண்டிலேயே இந்த நிலைமை என்றால், அறிவியல் ரீதியாகச் சிந்திக்கப் பழகாத சமூகம் இருந்த காலத்தில், தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்ட ஆரம்பகாலங்களை நினைத்துப் பாருங்கள்…

அன்றைய அறிவியலாளர்கள்  தடுப்பூசித் தடைகளைத் தாண்டி  இந்த மானுடத்தைக் காக்க எத்தனை எத்தனைச் சிரமங்களைச் சிரமேற்கொண்டிருப்பார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடியும். அதேசமயத்தில் தவறான தடைகளையெல்லாம் கட்டுடைத்து முன்னேறி வருவதுதான் நவீன மருத்துவத்தின் இயல்பு என்பதும் தெரியவரும். இதோ சாம்பிளுக்குச் சில…

நம்பிக்கை பிறக்க ஒரு மருத்துவ முகாம்!

1881 மே மாதம் 5-ம் தேதி. மருத்துவ வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட ஒரு முக்கியத் தினம். பிரான்ஸ் நாட்டில் ஒரு குக்கிராமம். அங்கிருந்த ஒரு கால்நடைப் பண்ணையில் அறிவியல் அறிஞர்கள், அரசு அதிகாரிகள், விவசாயிகள், பண்ணையாட்கள், கிராமத் தலைவர்கள், பத்திரிக்கையாளர்கள், சமூகத் தலைவர்கள் என ஒரு பெரும் கூட்டமே கூடியிருந்தது. அந்தக் கிராமத்தின் விவசாயக் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் எருமை மாடுகள், பசு மாடுகள், ஆடுகள் என மொத்தம் 60 பண்ணை கால்நடைகளை அங்கு கட்டிப்போட்டிருந்தார். இது  எதற்கு என்பதைத் தெரிந்துகொள்வதற்கு முன்னால் பாரிஸ் அறிவியலாளர் பாஸ்தரை மீண்டும் இங்கே நினைவு கூர்வோம்.

ரேபீஸ் நோய்க்குத் தடுப்பூசி கண்டுபிடித்த பாஸ்தர் அதற்கு முன்னரே ‘ஆந்த்ராக்ஸ்’ (Anthrax) எனும் நோய்க்கு ஒரு தடுப்பூசியைக் கண்டுபிடித்து வைத்திருந்தார். ‘ஆந்த்ராக்ஸ்’ என்பது ஆடு, மாடு போன்ற விலங்கினங்களையும் மனிதர்களையும் பாதிக்கிற ஒரு பாக்டீரியா தொற்று. அந்தக் காலத்தில் ‘ஆந்த்ராக்ஸ்’ நோய் மாடுகளிடம் பெருந்தொற்றாகப் பரவியதால், கொத்துக்கொத்தாக மாடுகள் பலியாகி வந்தன. விவசாயமும் பால் உற்பத்தியும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாயின. எனவே, மாடுகளின் உயிரிழப்புகளைத் தவிர்க்க வீரியம் குறைக்கப்பட்ட ஆந்த்ராக்ஸ் தடுப்பூசியை (Attenuated Anthrax Vaccine) பாஸ்தர் கண்டுபிடித்திருந்தார். ஆனால், அதை மாடுகளுக்குச் செலுத்திக்கொள்ள விவசாயிகள் யாரும் முன்வரவில்லை.

பாஸ்தர், தான் கண்டுபிடித்த தடுப்பூசியை மக்கள் முன்னால் மாடுகளுக்குச் செலுத்திக்காட்டி, அதன் மகத்துவத்தை நேரில் பார்த்துப் புரிந்துகொள்வதற்கு அந்த பிரான்ஸ் கிராமத்தில் ஒரு மருத்துவ முகாமுக்கு ஏற்பாடு செய்திருந்தார். அங்கு கட்டிவைக்கப்பட்டிருந்த 60 கால்நடைகளை அவர் இரண்டு பிரிவுகளாகப் பிரித்தார். ஒவ்வொரு பிரிவிலும்  ஒரு வெள்ளாடு உட்பட 24 ஆடுகள், 6 பசுக்கள் என வகைப்படுத்தியிருந்தார். ஒரு பிரிவை ஆய்வுக்குழு (Experimental group) எனவும், மற்றொரு பிரிவை நிலைக்குழு (Control group) எனவும் அழைத்தார்.

பாஸ்தர், தான் கொண்டுவந்திருந்த ஆந்த்ராக்ஸ் தடுப்பூசியை ஆய்வுக்குழுவில் இடம் பெற்றிருந்த மாடுகளுக்கு மட்டும் செலுத்தினார்; நிலைக்குழு மாடுகளுக்கு அதைச் செலுத்தவில்லை. அதே மாதம் 17-ம் தேதி மறுபடியும் ஆய்வுக்குழு மாடுகளுக்கு அந்தத் தடுப்பூசியைச் செலுத்தினார். அடுத்த 31-ம் தேதியில் அதே கூட்டம் மீண்டும் அங்கு கூடியது. இந்த முறை பாஸ்தர் ஆய்வுக்குழு மாடுகளுக்கும் நிலைக்குழு மாடுகளுக்கும் வீரியம் மிகுந்த ஆந்த்ராக்ஸ் கிருமிகளைச் செலுத்தினார். அதைப் பார்க்கக் கூடியிருந்தவர்களை அடுத்த இரண்டு நாட்களுக்குப் பிறகு அந்த இடத்துக்கு வரும்படி பணித்தார். அப்படி அவர்கள் திரும்பி வந்தபோது அங்கு ஓர் ஆச்சரியமும் ஓர் அதிர்ச்சியும் காத்திருந்தன. என்ன ஆச்சரியம்? என்ன அதிர்ச்சி?

இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தப்பட்ட ஆய்வுக்குழு மாடுகள் எப்போதும்போல் ஆரோக்கியமாக இருந்தன. ஆனால், தடுப்பூசி செலுத்தப்படாமல் இருந்த நிலைக்குழு மாடுகள் அத்தனையும் இறந்து கிடந்தன. அதைக் கண்கூடாகப் பார்த்த மக்கள் அந்த நிமிடத்தில் தடுப்பூசியின் மகிமையைப் புரிந்துகொள்ள, அடுத்த சில நாட்களில் அந்தக் கிராமத்தைச் சுற்றியிருந்த எல்லா மாடுகளுக்கும் ஆடுகளுக்கும் ஆந்த்ராக்ஸ் தடுப்பூசியை அவர்களாகவே முன்வந்து செலுத்திக்கொண்டனர். அதன் மூலம் ஆயிரக்கணக்கான மாடுகள் உயிர் பிழைத்தன.

நூலகர் விஞ்ஞானி ஆனார்!

ஆந்த்ராக்ஸ் தடுப்பூசிபோல், காலராவுக்குத் தடுப்பூசியைக் கண்டுபிடித்ததிலும் ஒரு சுவாரசியம் உண்டு. ரஷ்யாவைச் சேர்ந்த ஜோன் ஹாஃப்கின் (John Haffkine) என்பவர் நாட்டில் ஏற்பட்ட மதக்கலவரங்களால் தாய்நாட்டிலிருந்து துரத்தியடிக்கப்பட்டவர். 1888-ல் அவர் முதலில் சுவிட்சர்லாந்துக்குச் சென்று ஜெனிவா பல்கலைக்கழகத்தில் ஒரு வருடம் வேலை பார்த்தார். அங்கிருந்து பாரிஸ் நகரில் உள்ள பாஸ்தர் இன்ஸ்டிடுயூட்டில் 1889-ல் வேலைக்குச் சேர்ந்தார். அவர் முதலில் நூலகர் வேலைக்குத்தான் சேர்ந்தார். அவருடைய ஆராய்ச்சி மூளையைக் கண்டுகொண்ட அதன் நிறுவனத் தலைவர் எமைல் ரோச் என்பவர் அவரைத் தன்னுடைய உதவியாளராக அமர்த்திக்கொண்டார்.

அப்போது பாஸ்தர் நிறுவனம் காலராவுக்குத் தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கி இருந்தது. அதில் தன்னை இணைத்துக் கொண்ட ஹாஃப்கின், காலரா கிருமிகளைக்  கடுமையான வெப்பத்தில் பலமுறை உட்படுத்தி அவற்றின் வீரியத்தைக் குறைத்துவிட்டால், அந்தக் கிருமிகளைத் தடுப்பு ஊசிக்குப் பயன்படுத்த முடியும் என்பதை 1892-ல் கண்டுபிடித்தார். அதன் மூலம் அவர் விஞ்ஞானி ஆனார். 

தனக்குத்தானே போட்டுக்கொண்ட தடுப்பூசி

ஹாஃப்கின் முதலில் விலங்குகளுக்கு அந்தத் தடுப்பூசியைச் செலுத்தினார். பிறகு, மனிதர்களுக்கு அதைப் பரிசோதித்துப் பார்க்க விரும்பினார். அதற்கு அப்போது யாரும் உடன்படவில்லை. ஆனாலும், மனம் தளரவில்லை. தனக்குத்தானே தடுப்பூசி போட்டுக்கொண்டார். ஒரு முறை இல்லை; இரு முறை இல்லை; மொத்தம் நான்கு முறை அப்படிப் போட்டுக்கொண்டார். பிறகு, சக விஞ்ஞானிகளைச் சரிக்கட்டி 6 பேருக்கு அதைச் செலுத்தினார். அதன் மூலம் அதை மனிதர்களுக்கும் பயன்படுத்தலாம் என்பதை உறுதி செய்தார். என்றாலும், பொது மக்கள் யாரும் அதைச் சீண்டவில்லை. நாட்டில் காலரா நோய் ஒரு கொள்ளை நோயாகப் பரவும் காலத்தில் இதைப் பயன்படுத்திப் பார்க்க ஒரு வாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருந்தார். அந்த வாய்ப்பு இந்தியாவிலிருந்து வந்தது.

1893-ல் இந்தியாவின் பல பகுதிகளில் காலரா மோசமாகப் பரவி பல்லாயிரக்கணக்கில் மக்கள் பலியாகிக் கொண்டிருந்தனர். அப்போது பாரிஸில் இருந்த முன்னாள் இந்திய வைஸ்ராய் ஃபிரட்ரிக் டுஃபரின் (Fredrick Dufferin) என்பவர் காஃப்கினை இந்தியாவுக்கு அனுப்பப் பரிந்துரைத்தார். அதன்படி கல்கத்தாவைத் தலைமை இடமாகக் கொண்டு மேற்கு வங்காளம், பஞ்சாப், அஸ்ஸாம் எனப் பல மாநிலங்களில் காஃப்கின் தான் கண்டுபிடித்த தடுப்பூசியைப் பொதுமக்களுக்குச் செலுத்தினார். அதைச் செலுத்திக்கொண்ட சுமார் 25 ஆயிரம் பேருக்கு காலரா வரவில்லை என்பதையும், இதைச் செலுத்திக்கொள்ள மறுத்தவர்களில் நூற்றுக்கணக்கான பேர் அந்த நோயால் மரணமடைந்தனர் என்பதையும் அரசுக்குப் புள்ளிவிவரம் தந்தார். 1896வரை இந்தியாவில் காலரா தடுப்பூசியைப் பயன்படுத்தி வெற்றியை உறுதி செய்த பிறகுதான் அதை விற்பனை செய்ய பாஸ்தர் நிறுவனத்துக்கு அவர் அனுமதி கொடுத்தார். பாக்டீரியா கிருமிகளுக்கு எதிராக முதன் முதலில் உலகில் ஒரு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது என்றால், அது காலரா நோய்க்குத்தான். அந்தச் சாதனையைச் செய்தவர் காஃப்கின். அந்த நேரத்தில் அவருக்கு மலேரியா தாக்கியதால் நாடு திரும்பினார்.

இந்தியாவில் தயாரான முதல் தடுப்பூசி!

அடுத்து, சமீபத்தில் கரோனாவுக்கு உள்நாட்டிலேயே கரோனாவுக்குத் தடுப்பூசி (கோவேக்சின்) கண்டுபிடித்துவிட்டதை நினைத்துப் பெருமைப்படுகிறோம். இந்த மாதிரியான சாதனையை இரு நூற்றாண்டுகளுக்கு முன்பே இந்தியா சாதித்துள்ள விவரம் உங்களுக்குத் தெரியுமா?

1896-ம் ஆண்டு செப்டம்பரில் இந்தியாவில் பம்பாய் என அழைக்கப்பட்ட இன்றைய மும்பையிலும், இந்தியாவின் பல பகுதிகளிலும் பிளேக் நோய் கடுமையாகப் பரவியது. ஒரு வணிகக் கப்பல் வழியாக அது பிரிட்டனிலிருந்து பம்பாய்க்கு வந்திருக்கக்கூடும் என அறியப்பட்டது. நிலைமை மோசமானதும் ஏற்கெனவே காலரா தடுப்புப் பணியில் காஃப்கினின் அறிவாற்றலை உணர்ந்திருந்த அன்றைய ஆங்கில அரசு மீண்டும் அவரை இந்தியாவுக்கு வரவழைத்தது.

பம்பாயில், ஒரு சிறிய அறையில் தங்கிக்கொண்டு இரண்டே உதவியாளர்களின் உதவியுடன் மூன்றே மாதங்களில் பிளேக் நோய்க்கும் அவர் தடுப்பூசி கண்டுபிடித்து ஆச்சரியப்படுத்தினார். அதையும் தனக்குத்தானே முதலில் செலுத்திக்கொண்டார். சில நாள் காய்ச்சலுக்குப் பிறகு அவர் உடல் தேறினார். அந்தச் செயல்முறை தடுப்பூசி செயல்படுவதை உறுதி செய்தது. அதைத் தொடர்ந்து 1897 ஜனவரி கடைசி வாரத்தில் பம்பாய் பைகுல்லா சிறை (Byculla Jail) கைதிகளிடம்  அதைச் செயல்படுத்தினார். காஃப்கின் முதலில் 147 கைதிகளுக்கு பிளேக் தடுப்பூசியைச் செலுத்தினார். 172 பேர் அதைச் செலுத்திக்கொள்ளவில்லை. 

அப்படிச் செலுத்திக்கொள்ளாதவர்களில் 12 பேருக்கு பிளேக் நோய் வந்தது. 6 பேர் இறந்துபோயினர். அதேநேரம் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களில் எவருக்கும் பிளேக் நோய் வரவில்லை. எனவே காஃப்கின் பிளேக் தடுப்பூசியை மக்களிடம் கொண்டுவந்தார்.

இப்படி, இந்தியாவில் அவர் மேற்கொண்ட மருத்துவச் சேவையை நினைவுபடுத்தும் விதமாக மும்பையில் இருக்கும் பிளேக் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு காஃப்கின் பெயர் சூட்டப்பட்டது.

 (போர் ‘புரி’வோம்)

கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்
தொடர்புக்கு: gganesan95@gmail.com

ஆர். செந்தில்குமார்
ஆர். செந்தில்குமார்

படித்தவரின் பதிவு

இலவச யோசனைகளுக்கு நன்றி!

 லூயி பாஸ்தர் வெறிநாய்க்கடிக்கு எப்படித் தடுப்பூசி கண்டுபிடித்தார் என்பதை தனக்கே உரித்தான எளிய நடையிலும் சுவாரசியம் நிறைந்த எழுத்து நடையிலும் டாக்டர் கு. கணேசன் சொன்ன விதம் மிக அருமை. அதோடு வெறிநாய் கடித்தால் என்ன செய்வது, தடுப்புமுறை என்ன என்பது போன்ற தகவல்களையும் இணைத்திருப்பது என்னைப் போன்ற கிராமப்புற வாசகர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. வீட்டு நாய் கடித்தாலும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று சொன்னது எனக்குப் புதிய தகவல்! இலவசமாக யோசனை சொல்லும் டாக்டருக்கு மிக்க நன்றி.

 -  ஆர். செந்தில்குமார், மல்லாங்கிணர், விருதுநகர் மாவட்டம்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in